This entry is part 1 of 15 in the series 18 மார்ச் 2018

கவிதை பிறக்குமுன்
தாளில்‘ஒன்றுமில்லை’

காதலைச் சொல்ல
சொற்கள் ‘ஒன்றுமில்லை’

மதிப்பைக் கூட்டும்
பூஜ்யங்கள்
‘ஒன்றுமில்லை’

அம்மா இன்று இல்லை
அந்த ‘ஒன்றுமில்லை’ யில்
அவர் வாழ்கிறார்

வாழ்க்கை வரவு செலவில்
மீதம் ‘ஒன்றுமில்லை’

சமநிலையில் தராசு
தட்டுக்களில் ‘ஒன்றுமில்லை’

இமய யாத்திரைகள்
இலக்கு ‘ஒன்றுமில்லை’

மரணத்தில் புரிகிறது
‘ஒன்றுமில்லை’

‘ஒன்றுமில்லை’ புரிந்தது
மனிதன் புத்தனானான்

ஆகாயம் என்பது
‘ஒன்றுமில்லை’ யே

புயல்களின் கர்ப்பம்
‘ஒன்றுமில்லை’

உலகம் பிறந்தது
‘ஒன்றுமில்லை’ யில்

விதையின் விதை
‘ஒன்றுமில்லை’

அவர் இப்போது மகான்
பேச ‘ஒன்றுமில்லை’

கோளங்களின் கவசங்கள்
‘ஒன்றுமில்லை’

‘ஈகோ’ செத்தபின்
‘நான்’ என்பதும் ‘ஒன்றுமில்லை’

அமீதாம்மாள்

Series Navigationகடல் வந்தவன்மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….