அடையாளங்களும் அறிகுறிகளும்

 

ரிஷி

 

தன் கடிவாளப் பார்வைக்குள்ளாகப் பிடிபடும் உலகின்

ஒரு சிறு விள்ளலையே அண்டமாகக் கொண்டவர்

 

காலம் அரித்து ஆங்காங்கே இடிந்துகிடக்கும்

குட்டிச்சுவரின் மேலேறியபடி

அபாயகரமான மலையேற்றத்தை மேற்கொண்டிருப்பதாக

அறிவிக்க,

 

கைக்கெட்டிய பரிசுகளையெல்லாம் அள்ளியவாறே

அடுத்தவரை விருதுக்கேங்கியாக எள்ளி நகையாடியபடி.

 

’அ’ முதல் ஃ வரையான எழுத்துகளைக் குலுக்கிப் போட்டு,

கைபோன போக்கில் கொஞ்சம் அள்ளியெடுத்துக்கொண்டு

கச்சிதமாய் ஒத்திகை பார்த்துத் தரித்த புன்னகையோடு

அரங்கேறி கவிதையை போதிக்க,

 

தமது தொடர்புகளை ஆன்மத்தேடலாக அறைகூவியவாறே

தன்னொத்தவருடையதை அவிசாரித்தனமாக அடையாளங்காட்ட

 

தமது கருத்துக்கு உடன்பட மறுக்கும் எல்லாரையும்

மோச, மிக மோச, அதி மோச மொழியில் பொல்லாங்குரைக்க

 

தாக்கப்படும் நபர் எதிர்க்கத் துணிந்தாலோ

துளியும் சகிப்புத்தன்மையற்ற மூர்க்கன் என்று முன்மொழிய,

முத்திரை குத்த _

 

பறவைப் பார்வையில் பிற பலவும் தெரிந்தவாறே…….

Series Navigationஇந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்