அம்ம வாழிப் பத்து—1

This entry is part 8 of 9 in the series 16 செப்டம்பர் 2018

அம்ம வாழிப் பத்து
இப்பகுதியின் பத்துப் பாடல்களும் ‘அம்ம வாழி’ எனத் தொடங்குவதால் இப்பகுதி “அம்ம வாழிப் பத்து” என்று பெயர் பெற்றது.
=====================================================================================
அம்ம வாழி, தோழி! காதலர்
பாவை அன்னஎன் ஆய்கவின் தொலைய,
நன்மாமேனி பசப்பச்
செல்லல் என்பதம் மலைகெழு நாட்டே!
[பாவை=தெய்வப் பாவை; ஆய்கவின்=ஆய்ந்த அழகு; தொலைய=நீங்க; மாமேனி=மாந்தலிர் போன்ற உடல்]
”கொஞ்ச நாள் பொறுத்துகிட்டு இரு; கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு வரேன்”னு சொல்லிட்டு அவன் போறான்; அப்ப அவனும் கேக்கற மாதிரி தோழிகிட்டச் சொல்ற பாட்டு இது.
”தோழியே! வாழ்க! நம்ம தலைவன் தெய்வப் பாவையைப் போல இருக்கற என் அழகெல்லாம் தொலைஞ்சு போகவும், என் அழகான ஒடம்பு பசலையாப் போகவும், நான் என் நாட்டுக்குப் போறேன்னு சொல்றாரே! நான் என்ன செய்வேன்?
அவ அப்படிச் சொல்றதால அவன் சீக்கிரம் வந்துடணும்னு மறைமுகமாச் சொல்றா.
=====================================================================================
அம்ம வாழிப் பத்து—2
அம்ம; வாழி! தோழி! நம்மூர்
நளிந்துவந்து உறையும் நறுந்தண் மார்பன்
இன்னினி வாரா மாறுகொல்
சில்நிரை ஓதி! என் நுதல்பசப் பதுவே!
[நளிந்து=அடுத்தடுத்து; உறையும்=தங்கும்; ஓதி=கூந்தல்]
பகல்லயும், ராத்திரியிலயும் வந்துட்டுப் போற அவன் இப்ப வந்து மறைவா நிக்கறான். அப்ப தோழி அவ சொல்ற பாட்டு இது.
”தோழி! வாழ்க! நம்ம ஊர்ல அடிக்கடி வந்து நம்மோட தங்கிட்டுப் போகற, குளிர்ச்சியான மார்பைக் கொண்ட அவன், இப்ப அதுபோல வராததால கொஞ்சமா வரிசையா இருக்கற கூந்தல் விழற என் நெத்தி இப்பப் பசலை பூக்குதடி”
=====================================================================================அம்ம வாழிப் பத்து—3
அம்ம வாழி! தோழி! நம்மலை
வரைஆம் இழியக், கோடல்நீட
காதலர்ப் பிரிந்தோர் கையற, நலியும்
தண்பனி வடந்தை அற்சிரம்
முந்துவந் தனர்நம் காத லோரே
[வரை=மலை; ஆம்=தண்ணீர்; கோடல்=காந்தள்; கையற=செயலற்றுப் போக; நலியும்=துயருறும்; வடந்தை=வாடைக் காற்று; அற்சிரம்=முன்பனிக்காலம்]
அவன் அவளை விட்டுப் பிரிஞ்சிப் போனான்; ஆனா தான் வரேன்னு சொன்ன காலத்துக்கு முன்னாடியே வந்துட்டான். தோழிக்கு இது தெரிஞ்சுது. அவ மகிழ்ச்சியோட அவகிட்டச் சொல்ற பாட்டு இது.
”தோழி வாழ்க! நம்ம மலையில் அருவி எல்லாம் பாஞ்சு வழியவும், காந்தள் பூவெல்லாம் பூத்துக் குலுங்கவும், காதலனைப் பிரிஞ்சு கெடக்கறவங்க ஏதுவுமே செய்ய முடியாம கெடக்கவும் செய்யற அந்தக் குளிர் தர்ற வாடைக் காத்து வீசற பனிக்காலம் வர்றதுக்கு முன்னாடியே அவன் வந்துட்டாண்டி”
=====================================================================================அம்ம வாழிப் பத்து—4
அம்ம, வாழி! தோழி! நம்மலை
மணிநிறம் கொண்ட மாமலை வெற்பில்
துணிநீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய மன்னால், அவர்க்கு; இனி,
அரிய ஆகுதல் மருண்டனென், யானே
[வெற்பு=பக்கமலை; துணிநீர்=தெளிந்த நீர்; மருண்டனென்=மயங்கினேன்]
அவளுக்குக் காவல் அதிகமாயிட்டுது; அவனப் பாக்க அவளால முடியல; வருந்தறா; அவனும் வந்து மறைவா நிக்கறான். அவனுக்கும் கேக்கற மாதிரி அப்ப அவ தோழிகிட்டச் சொல்ற பாட்டு இது.

”தோழியே! கேளு; நம்ம மலையோட பக்கத்திலிருக்கற மலையெல்லாம் நீல நெறமா இருக்கு; அதிலிருந்து விழற அருவியில என்னோட சேந்து குளிக்கறது அவருக்கு முன்ன சுலபமா இருந்திச்சு; இனிமே அது ரொம்ப கஷ்டமாப் போகப் போறதை நெனச்சுநான் மயங்கிப் போயி வருந்தறேன்”
அதால அவன் என்னை சீக்கிரமா கல்யாணம் செஞ்சுக்கணும்னு மறைமுகமா சொல்றா.
=====================================================================================அம்ம வாழிப் பத்து—5
அம்ம, வாழி! தோழி! பைஞ்சுனைப்
பாசடை நிவந்த பனிமலர்க் குவளை
உளகங் கமழும் கூந்தல் மெலியல்
ஏர்திகழ் ஒள்நுதல் பசத்தல்
ஓரார் கொல்லோ காதலோரே
[பைஞ்சுனை=பசுமையான சுனை; பாசடை=பசுமையான இலை;
நிவந்த=உயர்ந்த; குவளை=குவளை மலர்; ஏர்=அழகு; ஓரார்=நினைக்க மாட்டார்]
கல்யாணத்துக்குப் பொருள் தேடப் போன அவன் வராம இருக்கவே அவ வருந்தறா; அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”தோழி! பசுமையான சுனையில பச்சையான இலைகளுக்கு நடுவில இருக்கற குவளைப் பூப் போல வாசனை வீசற கூந்தலையும், நல்ல அழகா இருக்கற ஒன் நெத்திப் பசப்பு கொள்ளறதையும், அவரு நெனச்சிப் பாக்க மாட்டாரோ?
=====================================================================================

அம்ம வாழிப் பத்து—6
அம்ம, வாழி! தோழி! நம்மலை
நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள்
கொங்குண் வண்டின் பெயர்ந்துபுறம் மாறிநின்
வன்புடை விறற்கவின் கொண்ட
அன்பி லாளன் வந்தனன் இனியே!
[நறுந்தண்=குளிர்ச்சி; சிலம்பு=பக்கமலை; நாறு=மணம்கொங்கு=தேன்; வன்புடை=மாறாத வலிமையுடைய; விறல் கவின்=மிகுந்து தோன்றும் அழகு; மாறி=விலகி]
வரேன்னு சொல்லிட்டுப் போனவன் ரொம்ப நாளா வரல; அதால அவ வருந்தறா. அவன் வந்த ஒடனே தோழி சொல்ற பாட்டு இது.
”தோழி! கேளு; நம்ம மலையில வாசனையோட குளிர்ச்சியான பக்கமலை இருக்கு; அதுல கொத்துக்கொத்தா பூத்திருக்கற செங்காந்தள் பூவுல தேன் குடிக்க வர்ற வண்டினைப் போல நம்மை உட்டுட்டுப் பிரிந்து போயி ஒன் அழகையும் எடுத்துக்கிட்டுப் போன அந்த அன்பில்லாதவன் வந்திருக்கான் பாரு”
=====================================================================================அம்ம வாழிப் பத்து—7
அம்ம, வாழி! தோழி! நாளும்
நல்நுதல் பசப்பவும், நறுந்தோள் ஞெகிழவும்.
’ஆற்றலம் யாம்’என மதிப்பக் கூறி
நப்பிரிந்து உறைந்தோர் மன்ற;நீ
விட்டனை யோஅவர் உற்ற சூளே?
[ஞெகிழவும்=மெலியவும்; நப்பிரிந்து=நம்மைப் பிரிந்து; சூள்=உறுதிமொழி; ஆற்றலம்=பொறுக்க மாட்டோம்]
கொஞ்ச நாளா வராதவன் இப்ப வந்து மறைஞ்சு நிக்கறான். அப்ப அவனுக்கும் கேக்கற மாதிரி தோழி சொல்ற பாட்டு இது.
”தோழி! வாழ்க; ஒவ்வொரு நாளும் ஒன்னை உட்டுட்டுப் போகச்சே ’ஒன் நெத்தி பசலை நெறத்துக்கு மாறவும், ஒன் தோள் மெலியவும் ஆகற மாதிரி ஒன்னைப் பிரிஞ்சு இருக்கறதை நான் பொறுக்க மாட்டேன்”னு உறுதிமொழி சொல்லிட்டு அப்பறம் நம்மைப் பிரிஞ்சு போயி வேற எடத்துல இருக்காரே! அவர் சொன்ன உறுதிமொழியை அப்பவே உண்மையில்லன்னு தள்ளிட்டயா?
=====================================================================================அம்ம வாழிப் பத்து—8
அம்ம, வாழி! தோழி! நம்மூர்
நிரந்துஇலங்கு அருவிய நெடுமலை நாடன்
இரந்து குறைஉறாஅன் பெயரின்,
என்ஆவது கொல்நம் இன்உயிர் நிலையே?
[நிரந்து=இடைவிடாது; இலங்கு=ஒளிவிளங்கும்; குறை=காரியம்; பெயரின்=நீங்கினால்]
அவன் ஊட்லேந்து அவளப் பொண்ணு கேட்டு வராங்க. ஆனா அவளோட அப்பா அம்மா மறுத்திடறாங்க. அதைக் கேட்ட தோழி எப்படியாவது அவளோட ஊட்டைச் சேந்தவங்க சம்மதிக்கணும்னு நெனச்சுச் சொல்ற பாட்டு இது.
”தோழி! வாழ்க! ஒளி வீசற அருவி துளி கூட நிக்காம விழற மலைநாட்டைச் சேந்தவனான அவன் நம்ம ஊட்டுக்கு வந்து ஒன்னைக் கல்யாணத்துக்குப் பொண்ணு கேட்டான். ஆனா இவங்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களே! அவன் வந்த காரியம் கைகூடாம ஊருக்குப் போயிட்டா நம்ம உயிர் என்னாகும்டி?”
இதைக் கேட்டதும் அவ ஊட்ல அவளைத் தர சம்மதிச்சிடுவாங்கன்றது மறைபொருளாம்
=====================================================================================அம்ம வாழிப் பத்து—9
அம்ம, வாழி! தோழி! நாம் அழப்
பல்நாள் பிரிந்த அறனி லாளன்
வந்தன னோமற்று இரவில்?
பொன்போல் விறல்கவின் கொள்ளும்நின் நுதலே!
[அறனிலாளன்=அன்பில்லாதவன்; விறல்=வெற்றி; கவின்=அழகு; நுதல்=நெற்றி]
கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறேன்னுப் போனவன் ரொம்ப நாளு வரல; அப்பறம் அவன் வந்திட்டான்னு சேதி கெடச்சுது; அவ மகிழ்ச்சியா இருக்கறா; அப்ப தோழி சொல்றபாட்டு இது.
”தோழி! வாழ்க! நம்ம அழவிட்டுப் போயிப் பல நாளு பிரிஞ்சிருந்தவன் ராத்திரி வந்தானோ? ஒன் நெத்தி எல்லாம் பொன்னைப் போல அழகா இருக்குதே!”
=====================================================================================
அம்ம வாழிப் பத்து—10
அம்ம, வாழி! தோழி! நம்மோடு
சிறுதினைக் காவலன் ஆகிப் பெரிதுநின்
மென்தோள் ஞெகிழவும், திருநுதல் பசப்பவும்
பொன்போல் விறற்கவின் தொலைத்த
குன்ற நாடற்கு அயர்வர்நன் மனனே!
[சிறுதினை=தினைவகைகளில் ஒன்று; நுதல்=நெற்றி;
தொலைத்த=போக்கடித்த; அயர்வர்=கொண்டாடுவர்; நன் மணம்=திருமணம்]
அவன் ஊட்டைச் சேந்த பெரியவங்க எல்லாரும் வந்து அவளைப் பொண்ணு கேக்கறாங்க. நம்ம ஊட்ல எங்க இல்லன்னு சொல்லிடுவாங்களோன்னு அவ பயப்படறா; அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”தோழி! வாழ்க! நம்ம கூட இருந்து தெனைப் பயிரைக் காவல் காத்தவன் ஒன்னோட தோள் எளச்சுப் போகவும், நெத்தியில் பசலை பூக்கவும், ஒன்னோட அழகெல்லாம் போக்கடித்த அந்த மலைநாட்டைச் சேந்தவனுக்கு ஒன்னைக் கட்டாயம் ஒன் ஊட்ல கல்யாணம் செஞ்சு குடுப்பாங்க பயப்படாதே!”
=====================================================================================

Series Navigationதர்மம் தடம் புரண்டதுமருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *