அருளிசெயல்களில் பலராம அவதாரம்

இந்துமதத்தில்பலராமன் கிருஷ்ணரின் அண்ணன்ஆவார்.இவர் பலதேவன் , பலபத்திரன்கலாயுதன் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமன் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதிசேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவருக்கு சங்கர்ஷனர் என்ற பெயரும் உண்டு. இவர் வசுதேவருக்கும் ரோகிணி தேவி என்ற அவரின் முதல் மனைவிக்கும் பிறந்தவர். இவரது மனைவியின் பெயர் ரேவதி, இவரின் தங்கையின் பெயர் சுபத்திரை ஆவாள்.

ஆழ்வார்கள் தம் அருளிச்செயல்களில் ஒரு சில இடங்களில் பலராம அவதாரத்தைப் போற்றுகின்றனர். பெரியாழ்வார் பலராமனை “வெள்ளிப் பெருமலைக் குட்டன்” என்று குறிப்பிடுவார்.

திருமங்கையாழ்வார் திருநறையூர் திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது பலராமனின் நிறத்தைப் போற்றுகிறார். ”திருநறையூர் நிறைய சோலைகளை உடையதாகும். அச்சோலைகளில் பல சுளைகளை உடைய பலாப்பழங்களும், தேன் பெருகும்படியான வாழைப்பழங்கள் கொண்ட வாழை மரங்களும் விளங்கிக் கொண்டிருக்கும். அத்திவ்யதேசத்தில்தான் மூன்று உலகங்களையும். தயிர் வெண்ணெயையும், திருஅமுது செய்தவனான கண்ணபெருமான் எழுந்தருளியிருக்கிறார். அவருடைய திருவடிகளை நெஞ்சே அடைவாயாக” எனப் போற்றுகிறார்.கண்ணனைப்பற்றிப் பாடும்போது, ”சங்குபோல வெளுத்த நிறம் கொண்ட பலராமனின் தம்பியாக விளங்கக் கூடியவர்” எனப் பலராமனின் நிறத்தையும் சேர்த்து அருளிச்செய்கிறார்.

            களைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின்

            திளைகொண்ட பழம்கெழுமித் திகழ்சோலைத் திருநறையூர்

            வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு

            அளைவெண்ணெய் உண்டான் அடியினையே அடைநெஞ்சே!

                                                         [6-9-3]

என்பது பாசுரம்.

தலைவி ஒருத்தி கண்ணனிடத்தில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டாள். அவனைப் பிரிந்திருக்கிறாள், அந்திப்பொழுதிலும் அவன் வரவில்லை. மனம் வருந்திக் கூறுகிறாள். “மேகம் போன்றவனும், நீலக்கடல் போன்றவனும் ஆகிய,கண்ண பெருமானின் திருமார்பில் அணிந்து உள்ள மாலையின் மீது கொண்ட ஆசையினால் என் மனம் என்னைவிட்டு நீங்கி அவரிடத்தே சென்றது. அங்கேயே தங்கிவிட்டது. இன்னும் வராமல் தாமதம் செய்கிறது. எனக்குத் துணையாக ஆறுதல் சொல்ல யாரையும் காணேன்; ஊர் முழுதும் உறங்கிப் போயிற்று. உலகமக்களும் உறங்கிவிட்டார்கள். ஆகாயத்தில் உலவி இயங்கும் கதிரவனின் தேரும் மறைந்ததே! எல்லாத் திசைகளும் மறைந்துவிட்டன. இச்சூழலில் என்ன செய்வதென்று அறியாமல் இருக்கின்றேனே!” என்று அவள் வருந்துகிறாள். அவள் கண்ணனைக் குறிப்பிடும்பொழுது. “சங்கு போன்ற நிறம் உடைய பலராமனின் பின்பிறந்த இளையவன்” என்று போற்றுகிறாள் என்று திருமங்கைமன்னன் காட்டுகிறார்.

            மாரி மாக்கடல் வளைவணற் கிளையவன்

                  வரைபுரை திருமார்பில்

            தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்

                  தாழ்ந்தது ஓர்துணை காணேன்

            ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது

                  ஒளியவன் விசும்பி யங்கும்

            தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன

                  செய்வ தொன்ற றியேனே.                   [8-5-2]

இப்பாசுரமானது ஓர் வரலாற்றையும் காட்டுகிறது என்று பெரியோர் கூறுவார்கள். இராமானுஜர் திருவடிகளையே தஞ்சம் என்றடைந்த பிள்ளை உறங்கா வில்லி தாசர் திருநாடு அலங்கரித்து விடுகிறார். அவரைப் பிரம்மரதத்தில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்கிறார்கள். அவர் பிரிவைத் தாங்க இயலாப் பொன்னாச்சி பிரிவாற்றாமையைச் சொல்லும் இத்திருமொழியை அனுசந்திக்கிறார். அத்திருமொழியின் முதல் பாசுரம் சொல்லிவிட்டு இரண்டாவதான இப்பாசுரம் சொல்லும்போது. திருத்தேரான பிரம்மரதம் மறைகிறது. செய்வதொன்றறியேனே என்று சொன்ன உடனேயே பொன்னாச்சியின் உயிரும் அவ்விடத்தே நீங்கியது என்பது பெரியோர்களின் வியாக்கியானமாகும்.               

திருமங்கையாழ்வார் மற்றொரு பாசுரத்திலும் பலராமன் நிறம் பற்றிப் பாடுகிறார். ஆயர்பாடியில் கண்ணன் செய்யும் குறும்புகள் பற்றி இடைச்சியர்கள் முறையிடுகிறார்கள். அப்பொழுது அவர்கள், “முன்பு சங்குபோல வெண்ணிறம் கொண்ட அழகான திருமேனியை உடைய பலராமனும் இந்த ஆயர்பாடியில் வளர்ந்தது உண்டு. அப்பலராமன் இவை போன்ற குறும்புகள் செய்தது இல்லை. பொய்யே மொழிபவனாய், வஞ்சகமும், கள்ளத்தனமும் கொண்டு ஆனால் ஒன்றும் தெரியாதவன் போல இதோ கண்ணன் தவழ்நடை இட்டுப் போகின்றான். இந்த ஆய்ச்சியர்களுக்குப் பிழைக்க வழியில்லையே; என் செய்கேன்? என்செய்கேன்?” எனப் பாடுகிறாள் ஒருத்தி.

            மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற

                  வளைவண்ண நன்மா மேனி

            தன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது

                  அவனிவை செய்வ தறியான்

            பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை

                  போகின்ற வாதவழ்ந் திட்டு

            இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை

                  என்செய்கேன்? என்செய்கேன்?                [10-7-4]

இப்பெண் முறையிடுவது “மைந்நம்பு வேல்கண் நல்லாள்” என்னும் ஒருத்தியிடம். அது யார் தேவகியா யசோதையா என்று ஆராய்ந்தால் வியாக்கியானம் செய்பவர்கள் இரண்டு பேரிடமும் என்கிறார்கள். அதாவது கோகுலத்தில்  நந்தகோபர் மனைவி ரோகிணியின் வயிற்றில் வாயு ரூபமாக ஆறு திங்கள்கள் இருந்த கர்ப்பம் கலைக்கப்பட்டு அந்த வயிற்றில் தேவகியின் வயிற்றிலிருந்த ஆதிசேஷன் அம்சமான கர்பம் கொண்டுபோய் வைக்கப்பட்டது. எனவே தேவகியின் கர்பத்தில் ஆறு மாதங்களும், ரோகிணியின் கர்ப்பத்தில் மற்றோர் ஆறு மாதங்களும் இருந்து பலராமன் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. ஆதலால் ”மைந்நம்பு வேற்கண் நல்லாள்” என்றது இருவரையுமாம்.

திருமங்கையாழ்வார் திருக்கண்ணபுரம் திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்கையில் கீழ்க்கண்ட பாசுரத்தைச் சேவிக்கிறார்.

            ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்

                  ஒருபால் தோன்றத் தான்தோன்றி

            வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்

                  விண்பால் செல்ல வெஞ்சமத்து

            செற்ற கொற்றத் தொழிலானைச்     

                  செந்தீ மூன்றும் இல்லிருப்ப

            கற்ற மறையோர் கண்ணபுரத்து

                  அடியேன் கண்டு கொண்டேனே               [8-8-8]

இப்பாசுரத்தில் திருமங்கையாழ்வார் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி உள்ள பெருமாளைப் பலராமனாகவே அனுபவிக்கிறார். ஒருகாதில் குண்டலமும் ஒரு காதில் நாஞ்சிலும் தோன்றுமாறு பலராமன் அவதரித்தார். ஒருகாதில் குண்டலம் என்பது ஏனெனின் மற்றொரு தோளில் கலப்பை இருப்பதால் அக்காதின் குண்டலம் வெளித் தெரியாதாம். வெற்றி பெறுவதையே அவர் இயல்பாகக் கொண்டவர். வேற்படையை உடைய அரசர்கள் வீர சுவர்க்கம் செல்லுமாறு போர்க்களத்தில் அவர்களை அழித்தவர். அத்தகைய பெருமானை மூன்று ஓமத்தீயும்  எல்லாத் திருமாளிகைள் தோறும் விளங்கும் கற்ற வைதிகர்கள் திகழும் திருக்கண்ணபுரத்தில் கண்டுகொண்டேன் என்று மங்கைமன்னன் அருளிச்  செய்கிறார்.

இவ்வாறாக ஆழ்வார் பெருமக்கள் தம் அருளிச்செயல்களில் பலராம அவதாரத்தை

அனுபவித்துப் போற்றி மகிழ்கின்றனர் எனலாம்.

Series Navigation‘ஆறு’ பக்க கதைகவிதைகள்