இரு கவிதைகள்

ஸிந்துஜா

 

1.

நிழல்கள்

 

இருளின் பிரம்மாண்டம் 

இருளில் இருக்கிறது.

ஒளிக் கத்தி  

எதிர்பாரா வலிமையுடன்

கூராகப் பாய்ந்து  

பிளக்க வருகிறது இருளை.

 

ரத்தமின்றி 

ரணகளம் அடைந்து 

சாய்கிறது இருள்.

சாய்வு மட்டும்தான்.

சாவு அல்ல.

 

வெட்டுப்பட்டுத் தடுமாறி

அலைக்கழியும்  தருணம் 

ஒளியின் கீழ்ப் படரும் 

இருளின் குழந்தைகள்.

 

ஒளி அவற்றை 

விரட்டிப் பிடிக்க 

ஓடி வரும் பொழுதில் 

சிக்காமல் 

முன்னேயும் 

பின்னேயுமாய் 

நகர்ந்து ஆர்ப்பரிக்கின்றன 

மழலைக்  கூட்டம் .

—————————————

2.

ஒருதலைக் காதல்

 

 

என் பார்வை நெருங்கும் போதெல்லாம்

உன் கண்களில் தானாகவே ஒரு

திரை விழுந்து விடுகிறது .

 

விடைப்பதெற்கென்றே ஜென்மம்

எடுத்தது போல உன் நாசி

கூர்மையாகிறது என் நிழலைக் கண்டால் கூட .

 

அருகில் நெருங்கி வந்து விடக்

கூடாது என்று வரட்சியில்

காய்ந்தாற்போல் உன் உதடுகள்

 

வாயைத் திறந்தால் வார்த்தைகளுடன்

பற்களும் விழுந்து விடுமோ என்று

அஞ்சுவது போல் இறுக நீ

மூடிக் கொள்கையில்

மௌனத்துடன் என் உரையாடல் நடக்கிறது

மௌனமாக .

 

இவ்வளவு இருந்தாலும்

‘ நம்பிக்கைதான் வாழ்வை

எடுத்துச் செல்லும் ‘

என்று எவனோ சொன்னதை

இறுக்கப் பற்றிக் கொண்டு

ஒவ்வொரு நாளும்

தூரத்துத் தெரு முனையில்

உன் சேலை நுனி தெரியும் போதே

நான் ஆடா விட்டாலும்  என்

சதை ஆடுவதைத்

தடுக்க முடியாமல்

தவிக்கிறேன் .

 

Series Navigationதொடுவானம் 227. ஆலய அர்ப்பணிப்பு