இலங்கையில் அகதிகள்


ஸர்மிளா ஸெய்யித்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலினால் நீர் கொழும்பில் அகதியாக்கப்பட்டிருக்கும் பாக்கிஸ்தான் அகதிகள் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் பெண்களின் கூட்டு முயற்சியால் ஏற்பாடாகியிருக்கிறது. மூன்று இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 1200 பாக்கிஸ்தான் அகதிகளில் சில ஆப்கானிஸ்தானியர்களும் அடங்குவதை அங்கு சென்றபோதுதான் அறிய முடிந்தது.

அகதி அந்தஸ்த்துக் கோரி இரண்டு ஆண்டுகளாகியும் அரசு அவர்களுக்கான எந்தவொரு வசதியையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. UDHR நிறுவனம் ஒரு நபருக்கு ரூபாய் 10,000 வீதமும் இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 22,000 வீதமும் வழங்கும் நன்கொடையில் எந்தவித தொழில் செய்வதற்குமான வாய்ப்புகளும் இல்லாமல் வாழ்ந்த இவர்கள் வெறும் கூடாரங்களில் மந்தைகளைப்போலத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகளற்று பெண்களும் குழந்தைகளும் சோர்ந்து வெட்கித்துக் கிடப்பதைக் காணுகையில் நெஞ்சு பதறுகிறது.

சொந்த நாட்டைவிட்டு அகதியாக வந்து அடைக்கலம் கோரிய நாட்டிலேயே அகதிகளாக கைவிடப்பட்டிருக்கும் இவர்கள் முன்னால் கையறுநிலையில் நிற்பது மனதை என்னவோ செய்கிறது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குறிப்பாக பெண்களே களத்தில் நின்று தொடர்ந்தும் செயற்படுகின்றனர். இவர்களுக்கான உணவு, மருத்துவம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளை நன்கொடையாகப் பெற்றே செய்யவேண்டியிருக்கிறது.

சொந்த நாட்டைவிட்டுச் சென்று வேறொரு தேசத்தில் யாருமற்றவர்களாய் எதுவுமற்றவர்களாய் வாழ்வதன் வலியை சில காலம் அனுபவித்தவள் என்பதால் மட்டுமேயல்ல, எந்தவொரு சாதாரண மனிதரும் கசிந்துருகும் நிலையிலேயே இவர்கள் முடக்கப்பட்டுள்ளனர்.

IS வெறியர்கள் குண்டுகளோடு அப்பாவி மக்களையும் கொன்று வெடித்துச் சாக எளியவன் தலையில் பொழுது விடிந்த கதையாக இவர்களைத் தீவிரவாதிகள் என்று சொல்லித் தாக்கி விரட்டி வெளியேற்றினார்கள் நீர்கொழும்பு மக்கள். இழப்பும், ஆற்றாமையும் இதனைச் செய்ய அவர்களைத் தூண்டியிருக்கலாம். இலங்கை சோனக முஸ்லிம்களாலும் நேரடியாக முன்வந்து இவர்களுக்கு உதவ முடியாத சூழல். போதாக்குறைக்கு இவர்களுக்கு உதவக்கூடாதென்று கொம்புசீவும் சில அரசியல்வாதிகள்.

என்ன நாடு இது? நாமெல்லாம் இன்னும் இங்குதானா வாழ்கிறோம் என்ற பெருமூச்சோடு வீடு வந்து சேர்ந்திருக்கிறேன். வழியில் அசம்பாவிதங்கள் வேறு. ஆ ஊ என்றால் மோட்டார்சைக்கிள், ஆட்டோ எரிப்பு என்று குதிக்கவொரு கூட்டம். பத்திரமாக வந்து சேர்ந்ததே போதுமென்றாகியது.

ஒரு நாள் கழிந்தது.

பேரினவாதம் திருப்பி அடிக்கத் தொடங்கியிருக்கிறது.

Hope we survive!

Series Navigationநாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை”