ஒப்பீடு ஏது?

முகில்கள் மறைத்த பாதி நிலா

உன் கவச முகம்

இடைவெளி தேவையாம்

பறவையின் சிறகுகளாய்

நாம் இனி

அவர்கள் பார்ப்பது

உடல் உஷ்ணம்

காதல் உஷ்ணம் பார்த்திருந்தால்

தெறித்திருக்கும் வெப்பமானி

தூறலும் வானவில்லும்

தனித்தனி அல்லவே

ஒன்றும் ஒன்றும்

இரண்டு சிலருக்கு

பதினொன்று சிலருக்கு

பெருக்கல் நமக்கு

நாவலாகக் கிடைத்தாய்

அட்டைப் படத்தையே

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

எப்போது பிரிப்பது

எப்போது படிப்பது

வண்ணங்களும்

தூரிகைகளும் தயார்

இனிமேல்தான் உன்னைக்

கண்டெடுக்க வேண்டும்

இரவுக்காக காத்திருக்கிறேன்

ஓர் ஆந்தையாக

நிலா உன்னைக் காண

வெல்லக்கட்டி நீ

எங்குவேண்டுமானாலும்

ஒளிந்துகொள்

சிற்றெறும்பு அறியும்

உயரே இருந்து

நீராய் நீ விழுந்ததில்

சக்கரமாய்ச் சுற்றினேன்

‘ஷாக்’ அடிக்கிறது

நீ ஒரு பட்டுப்புழு

அந்த உலக அழகியை

உன் எச்சில்தான்

அலங்கரிக்கிறது

சிறுகதை நான்

நீ நுழைந்தாய்

காப்பியமாகிவிட்டேன்

சிவப்பும் பச்சையும்

இருவருக்குமே தெரியும்

இல்லாவிட்டால்

எப்போதோ விபத்து

நடந்திருக்கும்

ட்ரக்கும் காரும் மோதியதில்

காவலர் கூட்டம், கலவரம்

அந்த வண்டுக்கு கவலையில்லை

சாலையோர ஊதாப்பூவை

சுற்றுகிறது

கிணறாக நீ இரு

கிணற்றுத் தவளையாய்

என் ஆயுள் முடியட்டும்

வெயிலும் மழையும்

சேர்ந்தே நிகழ்ந்தால்

காக்காய்க்கும் நரிக்கும்

கல்யாணமாம்

அந்த காக்கை நரி நாம்தான்

எதோடு உன்னை ஒப்பிடுவது

மின்னலும் மின்மினியும் கூட

அற்பமாகிவிட்டன

அமீதாம்மாள்

Series Navigationபரகாலநாயகியும் தாயாரும்புஜ்ஜியின் உலகம்