கவிதை

1.நாள் தோறும் அண்மிக்கின்றேன்…

இரக்கமுள்ள மனசே!

உன்

இருதயத்தில் விழுந்தேன்

இறகில்லாமல்

பறக்க வைத்தாயே…

கருணையின் கடல் நீ

என்று

தெரிந்த பின்னால் தான்

என்

வாழ்வெனும் படகில்

மிதந்து வந்தேன்

உனக்குள்…

ஆயினும் தோழி

எனக்குமட்டும்

உன்

அன்பினில் ஒரு துளி

தரமறுத்தாய்..!

சிலருக்கு கடல் நீ,

எனக்கொரு துளியாய்

சுருங்கி விட்டாய்!

வாழ்வது சில நாள்

அதற்குள்ளே

பாசத்தைப் புரிவது

சிலர் தான்..!

நீ தூரத்திலே

ஒரு

புள்ளியாய் போனாய்,

என் வானத்திலே

நீ தான்

நிலவானாய்..!

உன் பாதத்தின்

தடம் பார்த்து நான்

ஒவ்வொரு நாளிலும்

வருகிறேன்..

என் வருகையை

எதிர்பார்த்து நீ

என்றாவது

நிற்பாயா சொல்லு..?

சம்பூர் சனா.

2.இனி நீயே கதையெழுது…

பிரிவைப் பற்றி

நாம் கதைத்தால்

நீ அழுதிட முன்பே

உன் கண்களில் நீர் வடியுமே

அதை மறந்து போனாயா..?

உன் வார்த்தைகளை

நேசித்தேன்-

அது தெரிந்தும் நீ

சொற்களில் ஏன்

முட்களை வைத்தாய்..?

உன் நிழலாக

நானும்

என் நிழலாக

நீயும்

தொடர்ந்ததை தான்

மறந்து போனாயா?

தொடர்கதை தான்

எழுதுகிறாயா?

நீயும் ஒரு

தூரத்து “மை”ப்போத்தலா..?,

ஆறாம் விரல் தந்தாய்

அதனாலா?

இல்லை

இனி நீயே கதையெழுது

இதோ

வந்துவிடுகிறேன்

ஒரு கருவாக நானும்…

உன் கதைக்குள்

உருவாக..!

அழுதாலும்

அழவேண்டும்

உன்னைப்போல்!,

சிரித்துக்கொண்டே…

நீ அழுதாலும்

நீர் வரும்

சிரித்தாலும்

நீர்வரும்

எப்போது அழுதாயோ

உண்மையாக!?

உனக்காக

வெள்ளைத் தாள்கள்

வானம் நிறைய…

இனி

நீயே கதையெழுது

விரைவாக…

பனிக்காற்றில்

உன் வார்த்தை

பூப்போல

பறக்கட்டும்

சிறக்கட்டும்

ஜொலிக்கட்டும்!!

சம்பூர் சனா, இலங்கை.

Series Navigationஜென் ஒரு புரிதல்- பகுதி 18அமீதாம்மாள்