காணாமல் போகும் கிணறுகள்

 

 

வைகை அனிஷ்
நாகப்பட்டினம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீடுகள் மற்ற மாவட்ட வீடுகளை விட மாறுபட்டு இருக்கும். வீட்டின் முன்புறம் தாழ்வாரம், வீட்டிற்கு வருவபவர்களை உட்கார வைப்பதற்கு திண்ணை. மாலை வேளைஆனால் மாடக்குளம் என்ற விளக்கு வைக்கும் பகுதி. மழை நீர் வழிந்தோடும் வகையில் கட்டைகள் செய்யப்பட்டு நேரே ப+மிக்கடியில் செல்லுமாறு அமைக்கப்பட்டு இருக்கும். இவை தவிர நிலைகள் 7, 9, என்ற அடிப்படையில் அழகிய நுட்பத்துடன் பர்மா தேக்குகளில் கட்டப்பட்டிருக்கும். வீடுகளில் பழங்கால ஓவியங்கள், நடுவில் மழைத்தண்ணீர் வருவதற்கு தாழ்வாரம் என கட்டிடக்கலையே வித்தியாசமாக இருக்கும். அதன்பின்னர் வீட்டிற்கு பின்னர் கொல்லைப்புறம் என்று இருக்கும். நானும் எனது நண்பர் சாந்தகுமாரும் ஆய்வுப்பணிக்காக நாகப்பட்டினம் மாவட்டத்தைi சுற்றுப்பயணம் செய்தபோது கடந்த பத்தாண்டுகளில் இருந்த வீடுகளின் அமைப்பு அனைத்தும் மாறியிருந்தது. வீட்டின் முக்கியமான கிணறுகள் மூடப்பட்டு போர்வெல் முக்கிய பங்கு வகித்திருந்தது. இருக்கின்ற பழைய வீடுகளை தேடி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். எஞ்சிய கிணறுகள் நம்புகைப்படத்தில் சிக்கியது. கையில் தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிய காலம் போய் எட்டிப்பார்த்து வறண்ட கிணறை கண்டு வருத்ததுடன்  திரும்பினோம்.
கிணறு எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறது. கிணறு ஒன்று இருந்ததா என வருங்கால சந்ததியினர் கேள்வி கேட்கும் நிலைக்கு ஆளக்கப்பட்ட பொருள்களில் கிணறும் ஒன்று. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களிலும், வான்புகழ் வள்ளுவர் கூட கிணற்றைப்பற்றி எழுதியுள்ளார். இவ்வளவு பெருமை வாய்ந்த கிணறு தற்பொழுது நீரின்றி உள்ளதால் ஊராட்சிகளில் உள்ள குப்பைகளை போடும் இடமாகவும், இறந்த நாய்கள், இறந்த பொருட்களை மூடும் பொருளாகவும் மாற்றப்பட்டுவிட்டது. விஞ்ஞான யுகத்தில் போர்வெல் ஆதிக்கம், இடப்பற்றாக்குறை காரணம் ஆகியவற்றை காரணம் காட்டி கிணறுகள் மூடப்பட்டு வரும் நிலையில் உள்ளது. இஸ்லாமியர்கள் மதத்தில் புனித மெக்கா நகர் அமைந்துள்ள பகுதி பாலை நிலமாகும். அப்போது தாய் தன்னுடைய குழந்தையுடன் பாலை நிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அதிக வெப்பத்தால் உருவான கானல் நீர் குழந்;தைக்கு தண்ணீரின் தாகத்தை உணர்த்துகிறது.அப்பொழுது தண்ணீர் கேட்டு குழந்தை காலை உரசி உரசி அழுதுள்ளது. அந்தத்தாய் தண்ணீருக்காக முஸ்லிம் மதப்படி தலையில் இருந்த துப்பட்டா கீழே விழுந்தது கூட தெரியாமல் தண்ணீருக்காக அங்கும் இங்கும் ஓடி அலைகிறார். எங்கேயும் தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தை காலை உரசிய இடத்தில் திடீரென்று ஊற்றுப்பெருக்கெடுத்து தண்ணீர் ஊறியுள்ளது.அப்பொழுது அந்தத்தாய் ஜம்ஜம் என்று கூறி தண்ணீரை வாரி வாரி குடித்து குழந்தைக்கும் ;கொடுத்துள்ளார். ஜம் ஜம் என்றால் நில் நில் என்று அரபியில் பொருள். இப்பொழுது புனித மெக்கா பயணம் மேற்கொள்ளப்படும் பயணிகள் அந்த ஜம்ஜம் தண்ணீரை கேன்களில் வாங்கி வருகிறார்கள். இராமேஸ்வரத்தில் உள்ள புனித தீர்த்தங்கள் 21 உள்ளது. அதுவும் கிணறுதான். ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டயர் சுட்டுக்கொள்ளப்பட்டபோது தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஏராளமானவர்கள் கிணற்றில் குதித்தனர். அது வரலாற்றுப்புகழ்மிக்க கிணறு.  வறுமையின் கோரப்பிடியில் சிக்கியும் தன்னுடைய உடன்பிறந்தவர்களின் கொடுமையாலும் ஏழு பிள்ளைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் உயிர்துறப்பாள் நல்லதங்காள் என்ற பெண். அக்கதையும் கிணறை ஒட்டியே அமைந்துள்ளது. தலைநகரான சென்னையில் ஏராளமான கிணறுகள் இருந்துள்ளது. அதில் ஏழுகிணறு மிகவும் புகழ்பெற்றது. திருச்செந்தூரில் நாலிக்கிணறு என்ற கிணறு உள்ளது. வள்ளி நாழிகை நேரத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. அதனால் இதன் பெயர் நாழிகைக் கிணறு என்று அழைக்கப்படுகிறது. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையிலும், நாகூரில் சில்லடி என்ற பகுதியிலும் கிணறு புனிதமாக மதிக்கப்படுகிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்க ஆதிக்க சாதியினர் அனுமதிக்க வில்லை. கடந்த 1935 ஆம் ஆண்டு மானாமதுரையில் காந்தி பொதுக்கிணறு என்ற பெயரில் அரிஜனங்களும் பயன்படுத்தும் வகையில் கிணறு தோன்றப்பட்டது. இதற்கு நன்கொடையாக காந்தியும் நூறு ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். இராஜாஜி முன்னிலையில் அக்கிணற்றை பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.
வள்ளுவர் கூட
 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குத்
கற்றணைத் தூறும் அறிவு
என்கிறார்.  இவ்வளவு பெருமை வாய்ந்த கிணறுகள் தற்பொழுது மூடப்பட்டு வருவது நமக்கு கவலையை அளிக்கிறது. தஞ்சாவ+ர் மாவட்டம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், பார்ப்பனர்கள் வாழும் அக்கிரஹாரம், நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளின் பின்புறம் கிணறு கண்டிப்பாக இருக்கும். கிணறு தோண்டிய பின்னர்தான் வீடு கட்டும் பழக்கத்தையும் வைத்துள்ளனர். அதற்கு கொல்லைப்புறம் என்றும் கொல்லை எனவும் விளிப்பது வழக்கம்.
கிணற்றை ஒட்டிய பகுதி கிணற்றடி என அழைக்கப்படும். கிணற்றின் அருகாமையில் பட்டியக்கல் என்ற கல் ஒன்றையும் துணிதுவைக்க கட்டியிருப்பார்கள். கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் எழுப்பி  இரண்டு தூண்களையும் நீண்ட சட்டத்தால் இணைத்திருப்பார்கள். அந்தச் சட்டத்தில் மரத்தால் ஆன உருளை இருக்கும். காலம் மாற மாற இரும்பாக மாற்றப்பட்டது. அதில் நீண்ட கயிற்றினைப் போட்டு நுனியில் வாளியைக்கட்டி கிணற்றில் இருந்து நீரை இறைப்பர். இதனை கடகா என்று அழைப்பார்கள். அதிகாலையில் ச+ரிய உதயத்திற்கு முன்னர் ஆண்களும், பெண்களும் குளிப்பது நல்ல உடற்பயிற்சியாகவும் ச+ரிய நமஸ்காரம் கிணற்றில் அருகாமையில் உள்ள துளசிசெடி உள்ளிட்ட செடிகளை ப+ஜை செய்து தங்கள் அன்றாட பணியை ஆரம்பித்தார்கள். இவ்வாறு பயன்படுத்தப்படும் கிணறு கோடை காலத்தில் தூர்வாரப்படும். தூர்வாருவதற்கு தனியாக ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் இந்தந்த வீடுகள் இந்தத்தேதியில் தூர்வாரவேண்டும் என கணக்கில் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு திருவிழா மற்றும் பண்டிகைகளுக்கு துணியும் கூலியும் கொடுக்கப்படும்.
மாலை வேளையில் திருமணம் ஆன புதுமனத்தம்பதிகள் கிணற்றடியில் பேசி மகிழ்வது வழக்கம். பண்டைய காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கிணற்றடியில் பாடல்கள்கள் படமாக்கப்பட்டது. பெண்ணைத்திருமணம் செய்து கொடுத்து புகுந்தவீடு சரியில்லை என்றால் அக்கம்பக்கத்தினர் பாழுங்கிணற்றில் பெண்ணைத் தள்ளிவிட்டோம் என எண்ணி புலம்பி திரிவது வழக்கம். கணவன், மனைவி சண்டை, மாமியார், மருமகள் சண்டையில் கூட பெண்கள் தற்கொலைக்கு செய்வதற்கு கிணற்றை பயன்படுத்துவது கிராமப்புறங்களில் வழக்கம்.
கிணறுகளை நினைவு படுத்தும் விதமாக ஊர்ப்பெயர்கள் பல உள்ளன. கிணத்துக்கடவு, மல்லாங்கிணறு, காவல்கிணறு, கிணற்று மங்கலம் என பல பெயர்களில் உள்ளது. இவ்வளவு பெருமை வாய்ந்த கிணறுகள் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் ஏராளமாக இருந்தது. கிணறுகள் மூடப்பட்டதால் ஊற்றுகள் அடைக்கப்பட்டது.ஊற்றுகள் அடைக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இருப்பினும் அண்டை மாநிலமான கேரளாவில் இன்றுவரை கிணற்றை போற்றி பாதுகாத்து வருகின்றனர். தற்பொழுது தீப்பெட்டிகள் போன்ற வீடுகளும், போர்வெல் கிணறுகள் அமைக்கப்பட்டபின் கிணறு என்பது எதிர்கால சந்ததியினர் வரலாற்றுப்பாடப்புத்தகங்களில் காணும் நிலை ஏற்பட்டுவிட்டது.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
தேனி மாவட்டம்.
செல்:9715-795795
Series Navigationமறைந்து வரும் குழந்தைகள் விளையாட்டுக்கள்வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்