காதலின் தற்கொலை

புதியமாதவி, மும்பை

நான் பறவையைக் காதலித்தேன்

அது தன் சிறகுகளில்

என்னை அணைத்து

வையகமெங்கும்

வானகமெங்கும்

பறந்து திரிந்தது.

விட்டு விடுதலையானக்

காதலின் சுகத்தை

அப்போதுதான் அனுபவித்தேன்.

நான் ஆமையைக் காதலித்தேன்

அவசரப்படாமல் அருகில் வந்தது.

தேரில் பவனிவரும்

மதுரை மீனாட்சியைப் போல

அதன் ஒடுகளே சிம்மாசனமாய்

கம்பீரமாக அசைந்து நடந்தேன்.

கடல் அலைகளில்

பாய்மரக்கப்பலாய்

பவனி வந்தேன்.

நேற்று

கோபியர் கூட்டத்தில்

நானும் நுழைந்தேன்.

அப்பத்தைப் பங்குவைத்த

பூனையின் கதையாய்

காதலைக் கூட

கண்ணா.. நீ

பங்கு வைத்தாய்

எப்படியும்

என்முறை வந்தே தீருமென

காத்திருந்தக் காலத்திலும்

காதல் என்னுடன் வாழ்ந்தது.

நான் காதலில் வாழ்ந்தேன்.

அப்போதெல்லாம்

நானும் என் காதலும்

இணைப்பிரியாமல்

இருந்தோம்.

இப்போது

என்னைப் போலவே

மண்ணில் வாழும்

மனிதா

உன்னைக் காதலித்தேன்.

காதல் என் னைக் கொலைசெய்தது.

தானும் தற்கொலை செய்து கொண்டது.

மறுநாள் பத்திரிகையில்

காதலின் முகவரி

சாதி அட்டையிலும்

கடவுளின் கட்டைவிரல்

அடையாளத்திலும்

பத்திரமாக

சிவப்பு மையால்

எழுதப்பட்டிருந்தது.

————————————————–

Series Navigationமாஞ்சோலை மலைமேட்டில்…..