காலாதீதத்தின் முன்!


                      செந்தில்

நிலத்தை வெற்றி கொள்ள
பந்தயமிட்டு பற்றிப் பரவும்
பாதங்கள் அற்ற பாம்பும்,
மண் புழுவும் காலத்தின் குறியீடு!

வேர்கள் விலங்கிட்டாலும்
விசும்பை வெற்றி கொள்ள
விண்ணோக்கி உயரும் மரம் செடி கொடியும் காற்றின் குறியீடு!

காலத்தை வெற்றி கொள்ள இரவும் பகலும் எந்நாளும்  திசை மாறாது சுழலும் திங்களும் ஞாயிறும் நிலத்தின் குறியீடு!

பால் (ழ்) வெளியில் பலகோடி நூறாண்டு பரமபதம் விளையாடும் விண்மீன்கள்
காலாதீதத்தின் குறியீடு!

கண்ணுக்குத் தெரியாத காலாதீத கணங்களை குறிக்க கணக்கில் அடங்கா தெய்வங்கள்!

காற்றில் ஒருகாலும், சேற்றில் ஒருகாலுமாக காலாதீதத்தைக்
கண்டு கதிகலங்கி கனவுகளுடன் நிற்கும் மனிதன் ஒரு கல்  (அல்லது) கடவுள்! 

Series Navigationஇன்னும் சில கவிதைகள்மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………