கோணங்கள்

 

அழகர்சாமி சக்திவேல்

 

சிவப்பு நிறத்தை ஆபாசமாக்கியது

அந்த கேளிக்கை விடுதி.

நானும் என் அலுவலக முதலாளியும்

எங்கள் முக்கிய வாடிக்கையாளர் கம்பெனியின் அதிகாரியை

வியாபார விபச்சாரத்துக்காய்

அழைத்து வந்திருந்தோம்.

 

விடுதியின் சொந்தக்காரன் வரவேற்றான்…

அவன் புன்னகையின் உள்வரைக் கோணத்துக்குள்

எங்கள் பணப்பைகள் சிக்கிக் கொண்டது

 

மேடை வாணலியில் ஆட்டக்காரிகள்.

அரைகுறையாய் பிதுக்கிய அவரை விதைகளாய்…

இசை நெருப்பின் மேல் வாணலி கொதித்தது…

காமப் பசியில் எல்லா ஆண்களும்…

அந்த அதிகாரியின் ஆண்மைக் கவர்ச்சியில் மயங்கிய

நானும் ஓர் உறவுப் பசியில்.

 

360 பாகைகளிலும்

சுழன்று சுழன்று ஆடினர் ஆட்டக்காரிகள்.

ஆட்டத்தைப் பார்த்த என் காம உணர்ச்சிகள் மட்டும்

ஒரு பாகை கூட கூடவில்லை.

 

அவர்தம் குலுக்கலில் ஒரு கவர்ச்சி ஏலம்.

அதிகாரியும் அந்த ஏலப் போட்டிக்குள்…

நானும் அந்த அதிகாரியின் தினவெடுத்த உடம்பை

போட்டியின்றி ஏலம் எடுத்தேன்..கற்பனையில்

அவனைப் பார்த்த என்

பார்வைக்கோணத்திற்குள் ஒரு பரவசம்.

 

இடையில் ஒரு ஆபாச டூயட் பாட்டு..

ஒரு ஆட்டக்காரி இன்னொருத்தியை

பிழிந்து எடுத்தாள்

இருவரும் நேர்கோணத்தில்

இடித்து இடித்து காயமுற்றனர்..

பூ ஒன்றே பூவைக் கசக்கியது.

ஆனால் ஆண் கூட்டம்

அந்தக் குத்துக் கோணத்தையும் ரசித்தது..என்னைத் தவிர.

 

ஆடிய பெண்டிரின் விரிகோணங்களுக்குள்

விழுந்தான் அதிகாரி.

அவன் குறுகுறுப் பார்வை குறுங்கோணத்திற்குள்

ஆட்டக்காரிகளின் கவர்ச்சி அங்கங்கள்.

வியர்த்து நின்ற அவன் உடம்பை

என் கற்பனைக் கைக்குட்டையால்

துடைத்து விட்டேன்.

மூன்று இனங்களுக்குள்

உருவானது ஒரு காம முக்கோணம்.

 

கூட்டம் குறைகிறதே?

ஆட்டக்காரிகளின் ஆடையை

இன்னும் குறைக்க வேண்டியதுதான்..

விடுதி சொந்தக்காரனின்

சிந்தனை வர்ணத்தில் ஒரு செங்கோணம்.

 

எப்படியும் இன்று

காண்ட்ராக்ட் கோப்பில்

கையெழுத்து வாங்கிவிடவேண்டும்..

என் முதலாளியின் முடிவுக் கோணம்.

 

என் இரவு சுகத்திற்காய்

அந்த ஆட்டக்காரியை ஏற்பாடு செய்யுங்களேன்..

வளை கோணத்தில் வேண்டினான் அதிகாரி.

கோப்பில் கையெழுத்தும் இட்டான்.

நிச்சயமாய் சார்..

மிகை நிரப்புக் கோணத்தில்

பல்லிளித்தான் என் முதலாளி

 

சர்வரைக் கூப்பிட்டோம். டிப்ஸ் கொடுத்தோம்

மிகக்  குனிந்து நன்றி சொன்னான்.

வாழ்க்கை முழுதும் வளைந்த நெஞ்சு.

அந்த ஏழைக்குத் தெரிந்த

ஒரே கோணம்… சாய் கோணம்.

 

அன்று எல்லாம் முடிந்தது..

ஆறு கோணங்களும் பிரிந்தோம்.

அல்லாடும் வாழ்க்கையில்

அறுந்த அறுகோணங்களாய்.

 

ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல்

 

 

Series Navigationசிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்பிரிவின் சொற்கள்