சிப்பியின் செய்தி

 

 – மனஹரன்

 

தெலுக் செனாங்ஙின்

கடற்கரை மணலில்

பதுங்கி வரும்

சிப்பிகளைக்

காலால் கிளறி

சேகரித்தேன்

 

ஒன்று இரண்டு மூன்று

இப்படியாக

எண்ணிக்கை வளர்ந்தது

 

உள்ளங்கை

ரேகையைப்

பார்த்த வண்ணம்

எழும்ப முடியாமல்

மௌனம் காத்தன

சிப்பிகள்

 

கீழே கிடந்த

நெகிழிப்புட்டியில்

கடல் நீர் நிரப்பி

சிப்பிகளுடன்

இல்லம் வந்தேன்

 

இரவெல்லாம்

மேனி எங்கும்

சிப்பிகள் ஊர்ந்து

தூக்கம் கெடுத்தன

 

மறுநாள் காலையில்

சேகரித்து வந்த

சிப்பிகளை

மீண்டும்

அதே கடற்கரையில்

விட்டு வந்தேன்

 

பொறுக்கி வந்த

12 சிப்பிகளில்

2 உயிர் பிழைத்தால்கூட

மனம் நிம்மதிக்கும்

 

புட்டியிலேயே

வளர்க்க எண்ணி

இருந்தால்

சிப்பிகளோடுதான்

தினம் தூக்கம்

தொடர்ந்திருக்கும்.

 

Series Navigationயாரோடு உறவுதமிழர்களின் புத்தாண்டு எப்போது?