சுந்தோப சுந்தர் வரலாறு

Spread the love

வளவ. துரையன்
கம்பராமாயணத்தில் கிட்கிந்தாகாண்டம் வாலி வதைப் படலத்தில் ஒரு பாடல் உள்ளது. வாலியும் சுக்ரீவனும் போர் புரிவதைக் கம்பர் அப்பாடலில் கூறுகிறார்.
“தந்தோள் வலிமிக்கவர் தாமொரு தாய்வயிற்றின்
வந்தோள் மடமங்கை பொருட்டு மலைக்க லுற்றார்
சிந்தோ[டு] அரியொண்கண் திலோத்தமை காதல்செற்ற
சுந்தோப சுந்தப்பெயர்த் தொல்லையி னோருமொத்தார்”
[கிட்காந்தா காண்டம்—274]
இப்பாடலில் கம்பர் உவமையாகக் கூறும் ஒரு வரலாறு அவர்தம் புராண அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இப்பாடலின் பொருளைப் பார்ப்போம்.
”தமது தோள்வலியால் மிக்கவர்களும், ஒருதாயின் வயிற்றிலிருந்து பிறந்தவர்களும், மடமைக்குணமுள்ள ஒரு பெண்ணின் நிமித்தமாய், தமக்குள் போர் செய்ய்த் தொடங்கியவர்களுமான அவ்வாலி சுக்கிரீவர், சிதறிப் பரந்த, சிவந்த ரேகைகளையுடைய, திலோத்தமை என்பவளிடத்துக் கொண்ட ஆசையினால் பகைமை கொண்டு ஒருவரோடு ஒருவர் போர் செய்த “சுந்தன், உபசுந்தன்” என்னும் பெயரை உடைய பழமையான அசுரர்களைப் போன்றிருந்தனர்”
இப்பாடலில் வாலியும் சுக்கிரீவனும் போரிட்டது சுந்தோப சுந்தர் போரிட்டதைப் போலிருந்தது என்று கமபர் கூறுகிறார்.
இப்பாட்டில் காணப்படும் சுந்தோப சுந்தர் வரலாற்றை வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் தம் உரையில் எடுத்துக் காட்டுகிறார்.
திருமால் நரசிம்மமாகத் தோன்றி இரணியனை வதம் செய்கிறார். அந்த அசுரனின் வம்சத்தில் நிகும்பன் என்பவனின் மகனாகச் சுந்தன், உபசுந்தன் என்ற இருவர் தோன்றுகின்றனர். அவர்கள் இருவரும் மிகவும் மன ஒற்றுமை உடையவராய் எல்லாச் செயல்களிலும் எப்பொழுதும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருக்கின்றனர். மூவுலகத்தையும் வெல்ல வேண்டுமெனக் கருதிய அவர்கள் இருவரும் அதற்காகத் கடுந்தவம் புரிய விந்தியமலையை அடைகின்றனர்.
அவர்களது கடுந்தவத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் அத் தவத்தைக் கலைக்கப் பல மகளிரை ஏவியும் பயன் இல்லை. அவர் தம் தவத்தை மெச்சிய மும்மூர்த்திகளும் தோன்றும்போது, எம்மை யாராலும் வெல்ல முடியா வரம் வேண்டுகின்றனர். தோன்றிய திரிமூர்த்திகளும் “உங்களிருவர்க்கும் பிற எவ்வுயிர்களாலும் மரணம் இல்லை” என வரமளித்தனர்.
அவ்வரத்தால் ஏற்பட்ட செருக்கினால் அவர்களிருவரும் மூவுலகையும் வென்று தேவருக்கும், முனிவருக்கும், பிற எல்லா உயிர்களுக்கும் பல துன்பங்கள் விளைவித்தனர். தேவர்களும் முனிவர்களும் பிரமனைச் சரணடைந்து செய்தி கூறினர்.
உடனே பிரம்ம தேவன் உலகில் அழகாக இருக்கும் எல்லாப் பொருள்களிலிருந்தும் எள்ளளவு, எள்ளளவு எடுத்து ஓர் அழகான பெண்ணை உருவாக்கினான். அவள் எள்ளளவு எடுத்தெடுத்து உருவாக்கப் பட்டதால் திலோத்தமை எனப் பெயரிடப்பட்டாள். திலம் என்பது எள்ளைக் குறிக்கும்.
விந்திய மலைச்சாரலில் மலர் பறித்துக் கொண்டிருந்த அம்மங்கையைக் கண்ட சுந்தனும், உபசுந்தனும் அவள் மீது காமமுற்றனர். அவள் வலக்கையைச் சுந்தனும், இடக்கையை உபசுந்தனும் பிடித்து இழுத்தனர். இருவர்க்குமே மோகவெறி அதிகமாகியது. அண்ணன் தம்பியை நோக்கி
“என்னால் காதலிக்கப் பட்ட இவள் உனக்குத் தாய் முறையன்றோ?”
எனச் சினத்துடன் கேட்டான்.
தம்பியோ அண்ணனைப் பார்த்து,
”நான் காதலிக்கும் இவள் உனக்கு மருமகள் முறையன்றோ?”
எனக் கோபத்துடன் கேட்டான். இருவர்க்கும் பூசல் முற்ற சினம் அதிகமாகியது. அந்த அண்ணன் தம்பி இருவரும் தம் கையில் உள்ள கதாயுதத்தால் அடித்துக் கொண்டு கடுமையாகப் போரிட்டு ஒருவரை ஒருவர் கொன்று மாய்த்தனர்.
அந்தக் கடுமையான போரையே வாலியும் சுக்கிரீவனும் புரிந்த போருக்குக் கம்பர் உவமையாக்குகிறார். இருவரும் பாடலின் இரண்டு அடிகளிற் கூறப்பட்ட அடைமொழிக்கு ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஒன்று, இருவருமே சுந்த உபசுந்தர் போல் தோள்வலி மிக்கவர்; இரண்டாவது, அவர் தம்மைப் போலவே ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் ஆவர். மூன்றாவது, அங்கு திலோத்தமையால் போர் மூண்டது போலவே இங்கும் ருமையின் பொருட்டுத்தான் போர் மூண்டது.
பாடலில் உள்ள மடமங்கை என்பது ’ருமை’ யைக்குறிப்பதாக உரை
ஆசிரியர் கூறுகிறார். இவ்வாறு மிகச் சிறந்த உவமை கூற ஒரு வரலாற்றைப் புராணத்திலிருந்து உவமை எடுத்துக் காட்டி இருப்பது கம்பரின் பரந்த படிப்பறிவை எடுத்துக் காட்டுகிறது என நாம் மகிழலாம்.

Series Navigation