தொலைத்த கதை

Spread the love

விதையிலிருந்து பிறந்தோம்

உமிகளைத் தொலைத்துவிட்டோம்

நம் மரப்பாச்சி பொம்மைகளைக்

கறையான் தின்றுவிட்டது

மழலையைத் தொலைத்துவிட்டோம்

புத்த்க மூட்டைகளில் நம்

மயிலிறகைத் தொலைத்துவிட்டோம்

‘ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ராசா…….’

நாம் சொன்ன கதைகளின் ராசாராணிகள்

எங்கோ அனாதைகளாய் அலைகிறார்கள்

பாரம்பரியம் தொலைத்துவிட்டோம்

மண் தொட்டிகளில் வாழைக்கன்றுகள்

நிலங்களைத் தொலைத்துவிட்டோம்

மின்மயச் சந்தையில்

உழைப்பைக் கேட்பாரில்லை

வியர்வையைத் தொலைத்துவிட்டோம்

செடிகளுக்கெல்லாம் செயற்கைச் சினைகள்

இயற்கையைத் தொலைத்துவிட்டோம்.

சர்க்கரையை விட

சர்க்கரை மாத்திரைகள் அமோக விற்பனை

நோயிடம் உடலைத் தொலைத்துவிட்டோம்.

சிட்டுக்குருவி தேடல்கூட இல்லை

சிந்தனையைத் தொலைத்துவிட்டோம்.

உரித்து உரித்துப் பார்த்து

உறவுகளைத் தொலைத்துவிட்டோம்.

அரைவேக்காட்டு வார்த்தைகளால்

நட்பு ருசிகளைத் தொலைத்துவிட்டோம்.

எருதுகளை இனி சிங்கம் வேட்டையாடலாம்

ஒற்றுமையைத் தொலைத்துவிட்டோம்.

வேடங்களே முகங்களானதால்

அசல் முகம் தொலைத்துவிட்டோம்

அமீதாம்மாள்

Series Navigationபுறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்மீளாத துயரங்கள்