நகுலனிடமிருந்து வந்த கடிதம்

author
1
2 minutes, 4 seconds Read
This entry is part 8 of 13 in the series 6 செப்டம்பர் 2020

01.09.2020



      அழகியசிங்கர்


    ஒரு நாள் நகுலனிடமிருந்து கடிதமொன்று வந்தது. எனக்கு ஆச்சரியம்.  கடிதத்தில்,  ‘ இனிமேல் எனக்குப் பத்திரிகை, புத்தகங்கள் அனுப்பாதீர்கள். நான் காத்துக் கொண்டிருக்கிறேன்,’ என்று எழுதி  இருந்தார்.  நகுலன் கையெழுத்து சிலசமயம் புரியும், சிலசமயம் புரியாது.  அவருடைய மனநிலையை அந்தக் கடித வரிகள் பிரதிபலிப்பதாகத் தோன்றும்.
    அக் கடிதத்தைப் பார்த்தவுடன் எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது.  நான் அன்றிலிருந்து அவருக்குப் பத்திரிகையும் நான் வெளியிடும் புத்தகங்களையும் அனுப்புவதை நிறுத்திக் கொண்டேன்.


    இப்படித்தான் ஆகிவிடுகிறது நாம் நேசிக்கிற ஒருவரிடமிருந்து கடிதம் வந்தால், ஆனால் உண்மையில் 10ஆண்டுகளுக்கு மேல் அதன்பின் உயிரோடிருந்தார்.  அவர் சொன்னதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு விட்டேன்.  அவருக்குப் புத்தகங்கள், பத்திரிகை அனுப்பவில்லை. அவருடன் கடிதத் தொடர்புகூடப் போய்விட்டது.


    நகுலன் சென்னைக்கு வந்தால் என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டார்.  ஏன் எனில் அவர் தங்கியிருந்த அசோக்நகர் வீடு மேற்கு மாம்பலத்தில் உள்ள என் வீட்டிலிருந்து நடக்கிற தூரத்திலிருந்தது.
    நாம் சில அபிமான எழுத்தாளர்களுடன் பேசும்போது கிட்டத்தட்ட அவர் மாதிரியே மாறி விடுவோம்.  நம்மை அறியாமலேயே நடக்கிற விஷயம் இது.  நகுலனைப் பார்க்கும்போது எனக்கு அதுமாதிரியான உணர்வு ஏற்படும்.

 கையில் ஒரு நோட்புக் வைத்துக்கொண்டு தோன்றுவதெல்லாம் எழுதிக்கொண்டிருப்பார் நகுலன்.  தன்னைச் சந்தித்த மனிதர்கள், படிக்கிற புத்தகங்கள் இவற்றைப் பற்றி எழுதிக்கொண்டு போவார் நகுலன்.
    நகுலன் எழுத்து என்பது தன்னையே எழுதுதல் முறையைச் சார்ந்தது.  இன்னும் கேட்டால் தன்னையே வியந்து எழுதுதல் என்று சொல்லலாம்.  என் வீட்டிற்கு அவர் வந்தால் என்னுடைய அப்பாவுடன் பேசிக்கொண்டிருப்பார்.  என்னுடன் பேசுவதை விட.
    அவருடைய எழுத்தில் ஒருவித தத்துவப் போக்கும், வாழ்க்கையைப் பற்றிய விஜாரனை இருக்கும்.  அதனால்தான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று ஒரு கடிதம் எழுத முடிந்தது.  தனிமையிலிருந்ததால் வாழ்க்கையைப் பற்றி அளவு கடந்த அயர்ச்சி இருந்ததாக எனக்குத் தோன்றுகிறது.
    அவர் என்னிடம் கேட்பார்.  ‘நீங்கள் என்ன எழுதினீர்கள்?  அதைக் கொண்டு வாருங்கள்..படிக்கலாம்.’
    எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது.  எவ்வளவு பெரிய மூத்தப் படைப்பாளி அவர்.  நான் எழுதியதைப் படிக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறாரே என்று.
    அவர் வந்தபோது ஒருமுறை என் கவிதை ஒன்றைக் காட்டினேன்.  அதை வாசித்த பின் அதை எப்படி வேற மாதிரி எழுதலாமென்று குறிப்பிட்டார்.
     இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் மூத்த எழுத்தாளர் யாரும் இது மாதிரியான முயற்சியைச் செய்வதில்லை.  தான் எழுதுவதே முக்கியம் என்று நினைக்கும் படைப்படாளகள்தான் இன்று அதிகம்.
    நகுலனுடைய இன்னொரு நல்ல பழக்கம்.  நவீன விருட்சம் பத்திரிகையை அனுப்பினால், அதைப் படித்து தன் கருத்தைப் பதிவு செய்வார்.  இதையும் பெரும்பாலோர் செய்வதில்லை.  அவர்களுக்குப் பத்திரிகை அனுப்பினால், அவர்களுக்குப் பெரிய தண்டனையைக் கொடுத்துவிட்டோம் என்ற உணர்வைப் பத்திரிகையை அனுப்பியவர்களுக்கு ஏற்படுத்தி விடுவார்.
    நகுலனின் கவிதைகளைப் படிக்கும்போது ஒரு முறைக்கு இருமுறை அந்தக் கவிதையைத் தொடர்ந்து படிக்க வேண்டும்.  அப்போதுதான் அதில் நாம் ஈடுபட முடியும்.
    நான் இங்கு சில உதாரணங்களைக் காட்ட விரும்புகிறேன். 
    நவம்பர் 1970 கசடதபற இதழில் நகுலன் கவிதையை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
            வட்டம் (1)
        வாழ மனமில்லை
        சாக இடமில்லை
        வானில் மேகமில்லை
        ஆனால்
        வெயிலும் மடிக்கவில்லை
        கந்தைக் குடைத்துணியெனக்
        கிடக்கும்
        தன்னினமொன்றைச்
        சுற்றி சுற்றி வருமிக்
        கறுப்பின் ஓலம் போல்

        செத்துக் கிடக்கும்
        சுசீலாவை
        வட்டமிட்டு
        வட்டமிட்டு
        வட்டமிட்டு…

    இதுமாதிரி வட்டம் 1, 2, 3 என்று எழுதி உள்ளார்.  இதில்     சுசீலா என்பவள் செத்துக் கிடக்கிறாள் என்பதுதான் கவிதையின் மையப் புள்ளி.

   சுசீலா செத்துக் கிடக்கிறாள் என்பதால், வாழ மனமில்லை என்கிறார்.  ஆனால் சாவதற்கு விருப்பமில்லை என்பதால் சாக இடமில்லை என்றும் சொல்கிறார்.

    இப்போது வட்டம் 2 பார்ப்போம்.
    
    பேனாவுக்கு மையிட்டு
    அதன் முனைத்தீட்டி
    வெள்ளைக் காகிதத்தை
    மேசை மீது விரித்து;
    எழுத வருங்
    கால்
    பேனாவின் முனை
    மூளையின் மண்டைக்
    கனத்தின்
    குடை சாயும்;
    வெள்ளைக் காகிதத்தின்
    வைரத் திண்மையில்
    அதன்
    கூர் மழுங்கும்;

    சேலை அவிழ்க்
    காலாமென்றார
    லோ
    சுசீலாவும் செத்துக்
    கிடக்கின்றாள்.

    சுசீலா செத்துக் கிடப்பதால், பேனாவின் முனை குடை சாய்ந்து விடுகிறது.  வெள்ளைக் காகிதத்தின் வைரத் திண்மையில் கூர் மழுங்கி விடுகிறது.
    இப்போது வட்டம் 3 என்ற தலைப்பில் நகுலனின் கவிதையைப் பார்ப்போம்.

    என் எழுத்து
    நேற்றில்லை
    இன்றில்லை
    நாளையில்லை
    ஏதோ நாவல்
    ஏதோ கதை
    என்றெழுதிய
    வையும்
    குப்பைக் கூடையின்
    ஏக வாரிசு;
    என்றாலும் என்ன?

    சுசீலாவே
    செத்து விட்டாள்
    என் எழுத்து மறைந்தபின்
    நான்
    இருந்தென்ன
    இல்லாமல் போனால்
    தான் 

    இந்த மூன்று கவிதைகளிலும் சுசீலா இறந்து விட்டாள் என்ற கருத்து அடிநாதமாக ஒலிக்கிறது. 

    சுசீலாவின் மரணத்தால் எதுவும் செயல்பட முடியாமல் எல்லாம் முடங்கிப் போய் விடுகிறது. ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டியும் அது நிறைவேறாத நிலையில் மரணம் ஒரு இணைப்புக் கோடாய் வருகிறது.
    நெகிழ வைக்கும் கவிதைகள் இவை.
    மரணத்தைக் குறித்து பெரும்பாலான கவிதைகள் நகுலன் எழுதியிருக்கிறார்.  நிலையில்லாத வாழ்வைக் குறித்து அவர் சதா யோஜனைசெய்து கொண்டே இருப்பவர் போல் தோன்றுகிறது.
    நானுமென்னெழுத்தும் என்ற தலைப்பில் ‘கசடதபறவி’ல் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
    அக் கவிதையின் இறுதி வரிகளைத் தருகிறேன்.

    மாமுனி பரமஹம்ஸன்
    அவன் மாபெரும் சீடன்
    சொன்னான்
    “மாயை யென்பது
    மன்பதையனுபவம்”
    மாயையென்னெழுத்து
    மாமாயை
    என் வாழ்வு
    என்றாலுமென்ன
    இது வெண்ணூல்
    இதுவென்பெயர்
    இது வெண்ணெழுத்து
    இதுதான் நகுலன்.  அவர் படிக்கிற புத்தகங்கள், அவர் சந்திக்கிற மனிதர்கள் கூடவே மரணம் பற்றிய சிந்தனை, இதுதான் அவர் எழுத்து.
    இவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது.  ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கும்.
    
                


    

    
    
    
   

Series Navigationகவிதைஅயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …
author

Similar Posts

Comments

  1. Avatar
    Yousuf Rowther Rajid says:

    இன்னும் பல நகுலன் கவிதைகளை மேற்கோள் காட்டியிருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *