நானும் நீயும் பொய் சொன்னோம்..

 

 

நீ என் வீட்டிற்கு வந்தபோது,

வசந்தம் வரவேற்க காத்திருப்பதாகச் சொன்னேன்..

வாழ்வில் வறட்சியை மட்டும் நான் காட்டிய போதும்

நீ வாழ்வில் வசந்தத்தை மட்டும்தான்

பார்த்ததாகச் சொன்னாய்..

 

நம் வீட்டுத்தோட்டத்தில் குயில்களின் கானம் மட்டும்தான்

கேட்கும் என்று கூசாமல் பொய் சொன்னேன்..

ஆந்தைகளின் அலறல் கேட்டபோதும்

உன் காதில் குயில்களின் இனிய கீதமே கேட்பதாகச் சொன்னாய்..

 

தென்றல் சுகமாய் நம்மை தாலாட்ட தவம் கிடப்பதாக

கையில் அடித்து சத்தியம் செய்தேன்..

ஓங்கி அடித்த புயிலில் நாம் தத்தளித்த போதும்

தென்றலே தீண்டுவதாக தினமும் சொன்னாய்..

 

உன்னை ஏமாற்ற நான் சொன்ன பொய்களை விட

என்னை மகிழ்விக்க நீ சொன்ன பொய்கள் அதிகம்..

 

எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும்

நான் சொன்ன பொய்கள் மன்னிக்க முடியாதவை.

இன்று நான் வேண்டுவது உன் மன்னிப்பைதான்..

 

 

 

Series Navigationநதிக்கு அணையின் மீது கோபம்..முதல் பயணி