நாம்

author
0 minutes, 51 seconds Read
This entry is part 8 of 11 in the series 13 செப்டம்பர் 2020

புஷ்பால ஜெயக்குமார்

தெருவில் நடந்தவன்

நட்ட மரத்தில் வீசும் காற்றில்

தென்றல் எனும் பழைய வார்த்தை

சாட்டிலைட் படத்தில் தெரியாது

நடப்பது உருளும் பூமி நகரும் நிலவு

என்றுமே இருக்கிற காலம்

சாலையாய் விரித்த பாய் கால்களை மிதிக்கும்

ஓடும் வண்டியின் அனைத்து கோளாறுகளையும்

உலோக ஜாஸ்  இசைப் பாட்டினை பதிவு செய்யும்

வாலென வளைந்து  நீளும் என் அயர்ச்சி

பயணத்தில் கப்பல் தரும் தனிமை மற்றும் எதிர்பார்ப்பு

அதுதான் வழி அதுதான் திசை

என முரசு கொட்டும் பாகை மானியின்

பல்சக்கரத்தை விழுங்கிவிட்ட தலையுடன்

உயிருள்ள இதயமென சமூக மிருகத்தின் வேடம் தான் நாம்

கொடுங்கோலன் காத்த பேரழிவில்

என் ஞாபகத்தைப் போல் நிச்சயமின்மையுடன்

இருந்து இறக்கும் சாட்சியங்களின் புலன்

பிடியிலிருந்து மீள்கிறேன் நான்

                                         — புஷ்பால ஜெயக்குமார்

ஒன்றுமில்லை

எல்லாமும் அது அது

அப்படியே இருக்கின்றது

நான் போகிறேன்

நீ வருகிறாய்

ஒன்றும் இல்லாதது போல்

காலம் கரைத்துத் தள்ளுகிறது

எம்மாதிரியான  உயிரியக்கம்  இது

கடிகாரத்தின் ஒளி

வானத்தின் மௌனம்

யாருமில்லாத சாலை

எவ்வளவு பெரிய இடம்

இதில் நான் இங்குமங்கும் போய்வருகிறேன்

அதே நேரம் இடத்தையும் அடைத்துக்கொண்டிருக்கிறேன்

நெஞ்சம் கொள்ளும் சிந்தனையில்

கிடைக்கும் வாழ்க்கை விடையாக

ஏதோ ஒன்று நானே என்று

விஞ்சும் தீரம் காவல் காக்கப்

பேரிடியெனப் போர் நிகழச்

சரித்திரத்தில் சொல்ல மறந்த

சூழ்நிலை தனிமனிதனிடம் வெடித்தது

                                         — புஷ்பால ஜெயக்குமார்

                        நடனம்

அவனும் அவன் நடனமும் வெவ்வேறானபோது

அவன் மட்டும் இருந்தான் அந்த நடனத்தைப் போல்

அந்த கவிஞன் எழுத வெண்டும் என்று அதைப் போல்

முன்பே அவன் மனதில் அது நிகழ்ந்திருந்தது

இதற்கு முன்பும் எதோ மொழியில் எழுதப்பட்டிருக்கிறது

அந்த நடன அரங்கு காட்டிலே மனிதன் கண்டுபிடித்த

நெருப்பிலே ஒளிர்ந்து கொண்டிருந்தது

நூற்றாண்டின் அடையாளங்கள் மனிதர்களிடமும்

திரைசீலையீலும் பொருட்களிடமும் தெரிந்தது

அவனிடமிருந்து அன்று அவ்வளவே நடந்தேறியது

அவனைக் காட்டிலும் அந்த நடனம் நடந்து விட்டது

பார்வையாளர்கள் மண புழுக்கத்திலிருந்து விடுபட்டார்கள்

நிலைமையில் சலசலக்கும் கெளரத்தில் பொய் எழுதிக் கொண்ட

பகட்டு அன்றோடு அழிந்து போனது

தொடர் ஆட்டத்தில் வெற்றி கண்டான் நாட்டியக்காரன்

                                                      — புஷ்பால ஜெயக்குமார்

Series Navigationப.தனஞ்ஜெயன் கவிதைகள்செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *