நீங்காத நினைவுகள் – 48

This entry is part 25 of 26 in the series 1 ஜூன் 2014

ஜோதிர்லதா கிரிஜா

எங்கள் அலுவலகத்தில் எனது பிரிவில் புதிதாக ஓர் இளைஞர் வேலையில் சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பானவர். என்றோ படித்தவற்றை யெல்லாம் சொல்லுக்குச் சொல் நினைவுகூரும் ஆற்றலும் படைத்தவர். முக்கியமாய்த் தாம் படித்த நகைச்சுவைத் துணுக்குகளை எல்லாருக்கும் சொல்லித் தாம் இருக்கும் இடத்தைக் கலகலப்பாக்கும் தன்மையுள்ளவர்.
வேலையில் சேர்ந்த பின் வந்த முதல் ஜூன் மாதம் முதல் தேதியன்று, ”இன்றைக்கு என் பிறந்த நாள்!” என்று சொல்லிக்கொண்டு என் இருக்கைக்கு வந்து சாக்கலேட் கொடுத்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஜூன் மாதம் முதல் நாளன்றும் அவர் என் இருக்கைக்கு வருவதற்கும் முன்னால் நானே அவரைப் பார்த்துப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சுருக்கெழுத்தாளர் அனைவரும் எங்கள் அலுவலகத்துக்கு எதிரே இருந்த பெரிய ஓட்டல் ஒன்றுக்குச் சென்று பிற்பகல் உணவை அருந்துவதை வழக்கமாய்க் கொண்டிருந்தோம். முதல் தேதியன்றுதான் எல்லாரும் ஆஜராகி யிருப்பார்கள். மற்ற நாள்களில் ஓரிருவரேனும் பெரும்பாலும் அலுவலகப் பணி சார்ந்த பயணத்தில் வெளியூர்களில் இருப்பார்கள். எனவேதான் முதல் தேதியில் வெளியே போய் அனைவரும் விருந்துண்னலைப் போல் களிப்புடன் சாப்பிடுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தோம். அவர்தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். தாமே பணம் கொடுத்துவிட்டுப் பின்னர் எல்லாரிடமிருந்தும் அவரவர்க்கான தொகையை வசூல் செய்துகொள்ளுவார்.
அவரது பெயர் வேண்டாம். ராமதுரை என்று வைத்துக்கொள்ளுவோம்.
ஒரு பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்துச் சொன்ன போது, அவர் உற்சாகமாக இராதது அவரது வாடிய முகத்தோற்றத்திலிருந்து தெளிவாய்த் தெரிந்தது. ‘ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘என்ன, வாழ்க்கை இது! … ஒன்றுமே பிடிக்கவில்லை,’ என்பதோடும் ஒரு பெருமூச்சுடனும் நிறுத்திக்கொண்டார். வேறு எதுவும் தாமாக அவர் சொல்லாததால் தூண்டித் துருவிக் கேட்பது தரக்க்குறைவாக இருக்கும் என்றெண்ணி எந்தக் கேள்வியும் கேட்காமல் இருந்துவிட்டேன். எனினும் அவரது சோர்ந்த முகம் அன்று முழுவதும் நெருடிக்கொண்டே இருந்தது. எங்கள் அலுவலகத்துக்கு எதிரே ப்ளாஸா ஸ்டோர்ஸ் என்று ஒரு புத்தகக் கடை இருந்தது. அன்று பிற்பகலில் சாப்பாட்டு வேளையின் போது அங்கே போய்ச் சில புத்தகங்களைப் புரட்டியதில், ‘தி பவர் அவ் பாஸிட்டிவ் திங்க்கிங்’ – The Power of Positive Thinking – எனும் புத்தகம் கவனத்தைக் கவர்ந்தது. Norman Vincent Peale என்பவர்ர் எழுதியது என்று நினைவு. தன்னம்பிக்கை யூட்டும் சுய முன்னேற்ற நூல். அதை வாங்கிக்கொண்டு போய், ‘இதை என் பிறந்த நாள் பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி அவரிடம் கொடுத்தேன். நன்றி கூறி மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். மறு நாள் சனிக்கிழமை. எனவே சனி, ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை நாள்\களில் அதை முழுவதுமாய்ப் படித்துவிட்டுத் திங்களன்று காலை அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக என்னிடம் வந்து, ‘அருமையான புத்தகம். என் மனம் அமைதியுற்றது. மிக்க நன்றி!’ என்றார்.
ஓய்வு பெறுவதற்கு இன்னும் பத்தாண்டுப் பணிக்காலம் இருந்த நிலையில் பலரது அறிவுரையையும் ஏற்காமல் இலக்கியப் பணி செய்யும் நோக்கத்தில் நான் வேலையை விட்டதன் பின் சில ஆண்டுகள் கழித்து ராமதுரையும் விருப்ப ஓய்வு பெற்றதாய்க் கேள்விப்பட்டேன். எங்களுக்குள் அப்போது தொடர்பு விட்டுப் போயிருந்தது.
அதன் பின் சிலகாலம் கழித்து அவர் காலமான செய்தியும் தெரியவந்தது. அப்போது அவருக்கு 50 வயதுக்குக் கீழேதான் இருக்கலாம். வேதனையாக இருந்தது. அவருடைய நண்பர் ஒருவர் அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் என்று தெரிவித்த போது வேதனை இன்னும் அதிகமாயிற்று.
என்ன காரணத்தால் என்பதையும் அவர் சொன்னார். அவருடைய நண்பர் ஒருவர் சொன்ன யோசனையின் பேரில் அவருடன் சேர்ந்து ஏதோ தொழிலை இவர் ஆரம்பித்தாராம். விருப்ப ஓய்வின் விளைவாய்க் கிடைத்த பெருந்தொகை முழுவதையும் அந்தத் தொழிலில் ராமதுரை முதலாய்ப் போட நண்பனிடம் கொடுத்துள்ளார். தொழிலில் இழப்பு ஏற்பட்டதா, இல்லாவிட்டால் அந்த நண்பர் இவரை ஏமாற்றிவிட்டாரா என்று தெரியவில்லையாம். வேலையில் இல்லாத அவர் மனைவிக்கும் அவருக்குமிடையே இதனால் அடிக்கடி தகராறு ஏற்படலாயிற்றாம். வயதும் ஆகிவிட்டதால் ராமதுரைக்கு வேறு வேலையும் கிடைக்கவில்லை. மன அமைதி போய்விட்டது. எனவே குடும்பச் சுமையைத் தாங்கிச் சமாளிக்க முடியாமல் அவர் தூக்குப் போட்டுக்கொண்டுவிட்டார் என்று அவர் தெரிவித்த போது என்னால் தாங்கமுடியவில்லை.
சிரிப்பும் கலகலப்புமாய் வளைய வந்துகொண்டிருந்த ராமதுரை தற்கொலை செய்துகொண்டதை இன்றள வும் செரிக்க முடியவில்லை. உயிர் அவ்வளவு அற்பமானதா? வாழ முயல்வதை விடுத்து இப்படி உயிரை விடலாமா?
………

Series Navigationபயணச்சுவை ! 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை முரண்கோள்கள் பன்முறைத் தாக்கிய யுகத்தில், நுண்ணுயிர் மலர்ச்சி துவங்கியது
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *