பண்டைய தமிழனின் கப்பல் கலை

Spread the love

வைகை அனிஷ்
கடல் மேல் பிறக்க வைத்தாய். எங்களை கண்ணீரில் மிதக்கவைத்தாய் என கடலில் மீனவர்கள் பற்றிய நிகழ்வுகளை நிஜங்களாக்கி திரைப்படப்பாடல் ஒன்று பாடப்பட்டது. சுனாமி என்ற கடல்கோள் ஏற்பட்ட பின்பு தான் மீனவர்களின் வாழ்க்கை பற்றி வெளி உலகிற்து தெரியவந்தது. தமிழகத்தை ஒட்டியுள்ள இலங்கைத் தீவின் வரலாற்றில் மூன்று கடல்கோள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதலாவது கடல்கோள் கி.மு.2837 ஆம் ஆண்டிலும், இரண்டாவது கடல்கோள் கி.மு.504 ஆம் ஆண்டிலும், மூன்றாவது கடல்கோள் கி.மு.306 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தவையாகும். கடலுக்கு பின்னே ஓராயிரம் நிகழ்வுகளும், கல்வெட்டுக்களும் காலம் காலமாக உண்மையை கூறிக்கொண்டிருக்கிறது.
கடலுக்கு ~முந்நீர்~ என்பது காரணப்பெயர். ஆற்று நீர், மழை நீர், ஊற்று நீர் ஆகிய மூன்று நிரையும் உடையது கடல் என்பதால் அது முந்நீர் என பெயர்பெற்றது என ஒரு சாராரும், மண்ணைப் படைத்தலும், மண்ணையழித்தலும், மண்ணைக் காத்தலும் ஆகிய முத்தொழிலுடைமையால் கடல் நீர் முந்நீர் என பெயர் அழைக்கப்பட்டதாக மற்றொரு சாராரும் கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்கள். சங்ககாலத்தில் வசவசமுத்திரம், அரிக்கமேடு, மரக்காணம், காரைக்காடு அல்லது குடிகாடு, காவிரிப்ப+ம்பட்டினம், அழகன்குளம், கொற்கை போன்ற துறைமுகங்களும், இடைக்காலத்தில் பெரியபட்டினம், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் துறைமுகங்கள் இருந்தன.
நாகப்பட்டினம் மாவட்டம், ப+ம்புகார் கடற்கரையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் அது ஏறத்தாழ 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் உள்ள எழுத்துக்கள் யாவும் சங்கத்தமிழ் எழுத்துக்களுடன் ஒத்துப்போகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதே போல தென்பசுபிக் கடலில், ஆஸ்திரேலியா கடல்பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்கு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் 2,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், அது தமிழருடையது எனவும் தெரிவித்தனர். லெப்டினன்ட் வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கி.பி.1811 ல் தமிழர்களுடைய கப்பல்களை கண்டு வியந்து பாராட்டியுள்ளார். ஆங்கிலேயர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருமுறை பராமரிக்கவேண்டும் என்றும் தமிழர்கள் கட்டிய கப்பல்கள் 50 ஆண்டுகள் பழுது பார்க்கத்தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இவ்வாறு கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழன் மிகச்சிறந்து விளங்கியுள்ளான்.
கப்பல் கட்டுதல் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பான சிற்பச்சான்றுகள் பல உள்ளன. சாஞ்சி ஸ்தூபத்தில் (கி.மு.150-50 கி.பி.போபால்) நான்கு திசைகளில் காணக்கூடிய நிலைத்தோரணங்களில் பல அரிய சிற்பப்படைப்புகள் காணப்படுகின்றன. அதிலுள்ள ஒரு ஜாதகக் கதையில் கப்பல் ஒன்றில் ;பயணம் செய்யும் வணிகர்கள் பற்றிய சிற்றுருவம் காணப்படுகிறது. மகாஜனக ஜாதகக் கதை தொடர்பான ஓவியம் ஒன்று அஜந்தாவில் உள்ளது. இதி;ல் கப்பல் ஒன்று சிதைந்து மூழ்கும் நிலையை காட்டியுள்ளனர்.
நாங்குனேரி வானமாமலைக் கோயிலில் அராபிய வணிகர்களின் உருவங்கள் ;காட்டப்பட்டுள்ளன. இங்குள்ள பிரகாரத்தின் சுவர்களில் அவ்வணிகர்கள் உருவங்களைக் காட்டியுள்ளனர். இவர்கள் முழுநீள ஆடை அணிந்து முழுக்கைச் சட்டை அணிந்துள்ளனர். ஆங்கர் வடிவ மீசையும் மழிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட தாடியுடனும் உள்ளனர். நீண்ட டர்பன் அணிந்துள்ளனர்.
இதே போல விஜயநகர காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடல் வணிகத்தை மிக அழகாக விளங்கும் சிற்பக்காட்சி ஒன்று திருக்குறுங்குடி முதல் கோபுரத்தின் உட்புறச்சுவரில் காணப்படுகிறது. இதில் ஒரு கப்பலையும் ஒரு சிறிய படகையும் காட்டியுள்ளனர். இக்கப்பல்களில் உள்ளவர்கள் நீண்டதொரு துடுப்பினைக் கொண்டு உள்ளனர். அருகில் கடல் கரையைக் காட்டியுள்ளனர். குதிரைகள் கரையில் நிற்பது போன்று உள்ளது. மற்றொரு காட்சியில் அரசன் ஒருவன் உயர்ந்த ஆசனத்தின் மீது அமர்ந்துள்ளான். அவன் ஒரு மண்டபத்திற்குள் அல்லது அரண்மனைக்குள் வீற்றிருக்கிறான். எதிரில் வணிகர்கள் தங்கள் குதிரைக்கான விலையை பேசுவதாக அமைந்துள்ளது.
நிய+சிலாந்து நாட்டின் தலைநகரான வெலிங்டன் நகரிலுள்ள அருங்காட்சியகத்தில் ஒரு வெண்கல மணியில் முகையதீன் அடிமை என்று பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இது கி.பி.1836 ஆம் ஆண்டில் நிய+சிலாந்து நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முகவை மாவட்ட கடற்கரை நகரங்களில் ஒன்றான மரைக்காயர் பட்டணத்தைச் சேர்ந்த அப்துல் கறீம் மரைக்காயர் என்பவர் வெலிங்டன் அருங்காட்சியத்திலுள்ள வெண்மணி தங்களது மூதாதையர்களுக்குச் சொந்தமானது என்றும் அம்மணியைத் தங்களுக்கு திருப்பித்தரவேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.
இதே போல கீழக்கரையைச் சார்ந்த ஹபீப் மரைக்காயருக்குச் சொந்தமான முகியித்தீன் பக்ஷ் என்றும் அக்கப்பல் ஜாவாவுக்குச் சரக்கு ஏற்றிச்சென்றபோது புயலில் அகப்பட்டு திரும்பிவரவில்லை என்றும், நிய+சிலாந்திலுள்ள வெண்கல மணி முகியித்தீன் பக்ஷ் என்ற கப்பலில் இருந்த மணியாகும் என்றும் அந்த வெண்கல மணியின் முகப்பில் தமிழில் முகியித்தீன் பக்ஷ் என்றும் அதன் கீழ் மரைக்காயர் என்றும் அதனடியில் குறிப்புத்தெரியாமல் பொறிக்கப்பட்டு இருப்பதாகவும் மற்றொரு செய்தியில் தெரியவருகிறது.
கலங்களின் வரலாறு
பண்டைய காலத்தில் தமிழகத்தில் முதன் முதலில் ஒரு சிறு மரக்கட்டையின் மேல் அமர்ந்து குளத்திலோ, ஆற்றிலோ மீன் பிடிக்கத் தொடங்கிய மனிதன் அப்பால் இரு மரக்கட்டைகளை இணைத்து அதனைக் கட்டுமரம் என்று கூறி வசதியாக மீன் பிடிக்க ஆரம்பித்தான். பின்னர் நடுவில் ஒரு பெரிய மரக்கட்டையையும் இரு பக்கங்களிலும் இரு கட்டைகளையும் இணைத்துப் புதிய ஒரு ஒட்டுமரத்தைக் கண்டான். பின்னர் படிப்படியாக ஐந்து மரங்களை இணைத்து மற்றொரு வகை கட்டுமரத்தைக் உருவாக்கினான். அதன் பின்னர் சிறிய கலங்களாகிய மிதவை, முதல்நாவாய், வங்கம் போன்ற பெரிய கலங்கள் வரை உருவாக்கினான். தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் 18 வகையான கலங்கள் இருந்ததாக அறியப்படுகிறது. கட்டுமர வகை, தோணி வகை, வள்ளம் வகை என பாகுபடுத்தி உள்ளான். கட்டுமர வகைக்கலங்கள் மீன்பிடித்தலுக்கும், புனல் விளையாட்டுக்கம் பண்டைக்காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தெப்பம், மிதவை, புணை, பரிசல், ஆகியன தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கட்டுமரங்கள் ஆகும். கட்டுமரங்கள் போதிய பாதுகாப்பின்மையை கருத்தில் கொண்டு தோணி, படகு, சோங்கு, ஓடம், முடுகு, கைப்பரிசு ஆகியவற்றை தயாரித்தான். இவை மீன்பிடிப்பதற்கும், புனல் விளையாட்டிற்கும், கடற்போருக்கும், கடல்கொள்ளைக்கும், முத்துக்குளித்தலுக்கும் பயன்படுத்தியதாக அகநானூறு 350:10-15, புறநானூறு 126:14-16, குறுந்தொகை 123:5,6, ஆகிய இலக்கியங்கள் வாயிலாக அறியப்படுகிறது. அதன் பின்னர் நீண்ட தூரத்திற்கு இவ்வகை கலங்கள் ஒத்துவரவில்லை எனக்கருதி ஏரா என்னும் அடிமரத்;தின் மேல் இருபக்கங்களிலும் பலகைகளை அடித்து இடைவெளியில் நீர் புகாதாவாறு தார் ப+சி, பெரிய கலங்களை உண்டு பண்ணினர். மரக்கலம், நாவாய், வங்கம், மதலை, கப்பல், அம்பி, திமில் போன்ற பெயர்களில் தயார்செய்தனர். தமிழர் கப்பற்கலையில் சிறந்து விளங்கியதுடன் தொன்மையானவர்களாக இருந்துள்ளார்கள். நாவாய், நேவி, கப்பல், கடல், கட்டுமரம், தோணி, வத்தை, வள்ளம், மிதவை, ஓடம், தெப்பம், ழங்கி, பட்டுவா, வங்கம், அம்பி, நீருர்தி, திமில் என பலவகையில் அழைக்கப்பட்டது.
இவ்வாறு தயார் செய்யப்படும் கலங்களை உடனடியாக செய்யமுடியாது. ஒரு பொருள் வாங்கும்போது அல்லது புதுமனை புகுவிழா, திருமண நாள் போன்றவற்றிற்கு நல்லநாள் பார்;ப்பது போல கப்பல் கட்டுவதற்கும் காலங்கள் உண்டு. நல்ல நாள், நல்லநேரம், திதி, சந்திரன், இவைகளின் சேர்க்கை, மகரம் முதலிய ஆறு சர லக்னங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களில் கடைசி ஏழு நட்சத்திரங்கள் தவிர மற்ற நட்சத்திரங்களில்; கப்பலைச் செய்கின்றனர். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இந்த நான்கு இராசிகளிலும் கப்பலைச் செலுத்த முடியாது. இதே போல நாள், நேரம், திதி, நட்சத்திரம் இவைகளின் நிலையறிந்து மகரம், துலாம், கடகம், மேஷம் ஆகிய நான்கு சரலக்னங்களை நீக்கி 27 நட்சத்திரங்களில் கடைசி ஏழு நட்சத்திரங்களாக உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், புரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி தவிர மற்ற நட்சத்திரங்களில் கப்பலைக் கட்டத் தொடங்குகின்றனர். மிதுனம், கன்னி, தனுசு, மீனம், இந்நான்கு இராசிகளிலும் கப்பலைச் செய்யத்தொடங்கக்கூடாது.
அதே போல கப்பலை செய்ய பயன்படுத்தப்படும் மரத்திற்கும் நிறங்களை கணக்கிட்டுள்ளனர். கப்பல் செய்ய மரம் வெட்டும் போது கறுப்பாக இருந்தால் பாம்பு வாழ்வதாகவும், தயிலம் போல் இருந்தால் தேள் வாழ்வதாகவும், பல நிறங்கள் காணப்பட்டால் தவளை வாழ்வதாகவும், அதிகச் சிவப்பாக காணப்பட்டால் பல்லி வாழ்வதாகவும் சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. கறுப்பு நிறம் கொண்ட மரக்கலம் தீமை ஏற்படுத்தும் என்றும், வெள்ளை நிறம் கொண்ட மரக்கலம் நன்மை விளைவிக்கும் என்றும் ஓட்டை மரம் இருந்தால் துன்பம் ஏற்படும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
அதே போல மரத்தை இரண்டாக வெட்டி அதையே மூன்று துண்டுகளாக்குகின்றனர். அதில் முன் பகுதியும், பின்பகுதியும், நன்மை ஏற்படும் என்றும், ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது துண்டுகளாக இருந்தால் கப்பல் செய்யப் பயன்படாது என்றும், நான்கு, ஐந்து துண்டுகளாக இருந்தால் கப்பல் செய்ய உகந்தவை என்றும், பத்துத்துண்டுகளாக இருந்தால் மரணம் என்றும் நம்புகின்றனர்.
கப்பலின் இருதயப்பகுதியாகக் கருதப்படும் அடிப்பகுதிக்கும் சாத்திரங்கள் வைத்துள்ளனர். அடிமரத்தின் நீளத்தை அளந்து ஒரு முழத்துக்கு 24 அங்குலமாகப் பெருக்கி வந்த தொகையை 27-ல் கழித்து மீதியை வைத்து அசுவினி நாளில் கப்பல் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
இவ்வாறு கப்பல் கட்டி முடித்த பிறகு கடலில் செலுத்துவதற்கு தயாராகும் நிலையில் இருக்கும்போது கடலில் கொந்தளிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு மஞ்சள், சந்தனம், தேன், வில்வம், சூடம் போன்ற பொருள்களைக்கொண்டு எட்டுத்திசையில் உள்ள தெய்வங்களுக்கு பூசைகள் செய்கின்றனர். அதற்கு பிறகு பயணம் மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு கடலில் முத்துக்குளிப்பதில் இருந்து, மீன்பிடித்தல், மரக்கலம் கட்டுதல், மரக்கலத்தைச் செலுத்துதல் என அனைத்துத்துறைகளிலும் முன்னேறிய தமிழன் ஆங்கிலேய ஆட்சிக்குப்பின்னர் மீனைப்பிடிப்பதை விட்டுவிட்டு மீனை தின்பதற்கு மட்டும் தகுதியாக மாற்றப்பட்டுவிட்டான் அதே வேளையில் வெளிநாட்டு பைபர் படகு, வெளிநாட்டு தொழில்நுட்பம், வெளிநாட்டு அரசின் அத்துமீறல் ஆகிவற்றால் தமிழக மீனவர்கள் கருவாடாக மாறிக்கொண்டு வருகிறார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602

Series Navigationகாதல் கண்மணிக்குக் கல்யாணம்வால்மீனில் முதன்முதல் இறங்கிய ஈஸா ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் தளவுளவி.