பிரசவித்துச் சென்ற அக்காவின் அறை

Spread the love

ஸ்ரீ

நேற்றுத்தான் கிளம்பினாள் அக்கா
தனது நான்கு மாத தேவதையுடன்
அக்காவே ஒரு தேவதைதான்
தேவதைக்கு வேறு என்ன பிறக்கும்
இறங்கிய வயிற்றுடன் வந்து இறங்கிய
கர்ப்பவதியின் கர்ப்பக்கிரகமானது
வாசலை ஒட்டிய பத்துக்குப் பத்து அறை
அக்காவுக்கென்று ஒதுக்கிய அந்தத் தனியறையில்
முதலிரண்டு மாதம் ஒரேயொரு விக்கிரகமும்
அதைத் தொடர்ந்து
நேற்றுக் காலை வரையிலும்
இரண்டு விக்கிரகங்களும்
அருளாட்சி புரிந்தன
பிள்ளை வரம் கேட்போருக்குப்
பெருமாள் கோயிலில்
குழந்தைக் கண்ணன் விக்கிரகத்தை
மடியில் கிடத்துவதுபோல
யார் வந்தாலும்
பேத்தியை எடுத்துக் கொடுத்துப்
பெரிதாக மலர்ந்து சிரித்தாள் அம்மா
கர்ப்பக்கிரகத்தின் தீர்த்தப் பாத்திரம் போல்
பிளாஸ்க்கில் எப்போதும் இதமான வெந்நீர்
சடாரிபோன்று அக்காவுக்குக்
குளிர்காலக் கம்பளிக் குல்லாய்
பிரசாதம்….கேட்கவே வேண்டாம்
தட்டுத் தட்டாகப் பரப்பி விடுவாள் அம்மா
அர்ச்சனைச் சொற்களாய்
ஆரம்பத்தில் அக்காவின் முக்கல் முனகல்
அப்புறம் ராத்திரி பகல் எல்லாம்
குட்டி தேவதையின் பூபாள மழலை
திருவிழா முடிந்து
தேவதை இரண்டும் தேர் ஏறிவிட்டது
இதோ அந்த
பத்துக்குப் பத்து கர்ப்பக்கிரகம்
தேவதை இரண்டும் விட்டுச் சென்ற
வாசங்களின் மிச்சத்தோடு….

Series Navigationஉயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை“ கோலமும் புள்ளியும் “