ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 7 of 11 in the series 13 செப்டம்பர் 2020

             ப.தனஞ்ஜெயன்

  1.கணித சமன்பாடுகளோடு

காயும் வெயில்

பெய்யும் மழை

வீசும் காற்றுக்கிடையில்

தவிக்கும் செடிகளின்

வேர்களுக்கிடையில்

ஏற்படுத்தும்

பௌதீக களைப்பால்

அழுதுகொண்டிருக்கும்

வேர்களின்

துன்பங்களை அறியாமல்

உதடுகளும் இதயங்களும்

சொல் களிம்பை தடவி

காற்றில் பறக்கவிட்டு

நீடித்து எழுத முயல்கிறது

சில பொருந்தாத முடிவுகளை.

2.என்னைச்சுற்றியிருக்கும்

இயற்கையின்

அணைப்புக்காக

இதயத்தைப் பிழிந்து

அன்பைத் திரட்டி

சலனமின்றி

மழையாய் பெய்கிறேன்

எப்பொழுதும்

ஒரு பறவையின் வழிபாடு

என்னைப் பரவசம் அடையச்செய்யும்

மழைக்கு

மேகம் ஆடையாய்

இருப்பதை விலக்கி

என்னை நனைத்துவிடும் வெட்கத்தில்

என் நிர்வாண அனலின்

அரூப கணத்தில்

சிறுதுளி மழையொன்று

பிழிந்த என் இதயத்திற்கு

உயிர் தந்துபோகும்

வெட்கத்தில்

ஒளிந்துகொண்டிருப்பேன்

எப்பொழுதும்

ஆரவாரத்தைத் தந்துவிட்டு

சலனத்தோடும்

சலனமற்று தீண்டிச் செல்கிறது இயற்கை.

3.கோடையின் கடைசி

வெப்பத்தை விரட்ட

அடிக்கடி

வந்துபோகிறது மழை

மாமா வீட்டிலிருந்து புதுக்கல்யாணம் ஆன

அக்காவும் வந்தாயிற்று

ஆடியில் ஐசுவரியம் பெருக

அம்மன் கோவிலுக்கு

முதல் வெள்ளியில் பொங்கலும்

வச்சாச்சு

கடைசி வீட்டுப் பாட்டி

குளிருக்குச் சுள்ளி நறுக்கி கட்டுகள்

சேகரிக்கிறாள்

பக்கத்து வீட்டுக்காரரும்

ஹீட்டர பழுது பார்த்து மாட்டி விட்டார்

சும்மா அடிக்கிறது காத்து

சும்மா பெய்கிறது மழை

இது காத்து காலம்

வேப்பம் பழமும் நாவல்பழமும்

பொறுக்கி சாப்பிட்டு

நீல நாக்கை நீட்டும்

சிறுவர்களுக்கு மீண்டும்

அழகென வீசுகிறது ஆடிக்காத்து

எந்த காலத்திலும் சாராயம்

குடித்து விட்டு ஆடி வரும்

அப்பாவைப் பார்க்கும் நேரத்திலெல்லாம்

மனது ரசிக்காமல் போனது மழையை

ரசிக்காமல் விட்டது காற்றை

என்ன காலமிது?

அக்காவிற்கு

ஆடிவரிசை செய்ய வேண்டுமென

துன்பப்படும் அம்மாவிடம்

ஆட்டம் காட்டி

அடிக்கடி

அடுப்பில் ஏறிக்கொள்கிறது இரண்டுப் பூனைகள்.

4.எளிதில் கடத்தி விடுகிறது

இயல்பாய் ரகசியங்களை இயற்கை

பிற உயிர்களனைத்தும் நிஜத்தின் இருப்பில் நிகழ்த்துகிறது இன்றைய பொழுதுகளை

முதல் தோட்டமான ஆதாம் ஏவாளின் தோட்டத்தில்

இன்னும் தேடுகிறார்கள் முதல் முத்தங்களை மனிதர்கள்

பிற உயிர்களுக்கான முதல் தோட்டத்திற்கு வழி சொல்ல அழைத்தது பறவைகள்

பறவைகளின் முதல் தோட்டத்தில் கேட்கிறது நிரம்பி வழியும் உணர்வுகளின் சிறகுகள்

அதற்கான பெயரைத்

தேடிக்கொண்டிருக்கிறேன்

அது சுதந்திரமாகப் பறந்து கொண்டேயிருக்கிறது

முதல் கருவறை மகத்தானது

இங்கு முடிவில்லாத கருவறையில்

முடிந்து போகுகிறது நம் வாழ்வு

காட்சிகளாக இடம் பெயர்ந்து

ரேகைகளில் பதிந்து மனிதர்களைப் படித்துவிட்டு தவிக்கிறது

மொழியின் சுவடுகள்.

5.பற்றி எரியும் ஆழ்மன

பிளவுகளில் அசைகிறது உடல்

மூங்கிலின் ஆழ்தியானத்தில்

அணைகிறது நெருப்பு மனங்கள்

ஆழ்கடலின் உள்ளெழும் மௌன இருப்புகளை

கிளறத்துடிக்கிறது அலைகள்

அலைகளைத் திணறடிக்கிறது வெப்பத்தின் திரல்கள்

கடலின் வாசலில் நிற்கிறேன்

அது வரவேற்கும்

மணல் இடைவெளியில்

நிரம்பிவிட்டேன்

மணல் சிறைகளில் நிரம்பி வழியும்

காற்றின் வசந்தத்தோடு

முடிகிறது நீர்க்குமிழியின் பயணங்கள்

வெடித்தெழும் சிதறல்களில்

தொடர்கிறது அர்த்தங்கள்

அர்த்தமற்ற சாம்பலில் எரிந்து அடங்கிப்போகும் பாவணைக்கூறுகளில் நான் காற்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

காற்று எரிந்த சாம்பலில் மறைந்துள்ள பாவங்களைச் சுமக்கிறது உடல்கள்

இந்த இருண்மை நகரத்தில் நிழல்கள் வாசிக்கிறது நிஜத்தின் புள்ளிகளை

அங்கே பற்றி எரிந்து சாம்பலாகிப்போகிறது ஒவ்வொருதுளியிலும் நிஜத்தின் மறுபக்கங்கள்.

6.நான்கு மாதம் தாண்டியும்

அடுப்பெரித்து

கொண்டிருப்பது தாத்தா பாட்டியின் உழைப்பால்தான்

ஒரு வேளை சாப்பாடு செய்து கொடுக்கும் அடுப்பிற்கு

லாக்டவுனைப் பற்றிய அக்கறை அதிகமாகவே இருந்தது

எதைப் பற்றியும் கவலைப்படாத ஆடுமேய்க்கும் தாத்தா சுள்ளிகளைப் பொறுக்கி

கருவேலங்காடுகளின் வழிப்பாதையெங்கும்

ஈரக்குச்சிகளை இழுத்து வந்தார்

அவரால் இப்படித்தான்

எழுத முடியும் தன் வறுமையை

அவர் பின்னால் வந்த ஒற்றை ஆடொன்று வழிப்பாதையின் கோட்டில் ஆங்காங்கே முற்றுப்புள்ளி வைத்தது

துயரம் மிகுந்த வாழ்வை

காலநதியில் கரைத்தவாறே

களைப்படைந்த தாத்தாவிற்கு

மழையில் நனைவது

பிடிக்கவில்லை

வீடு சேர்ந்த தாத்தாவை

முறைத்துப் பார்த்த பாட்டியின்

கனவுகளில் எரிந்தது அடுப்பு..

அடுக்கு சட்டியைத் திறந்துபார்த்து

வெறும் குரலை உரக்கச்சொன்னது

தாத்தாவின் ஆழ் மௌனங்கள்

அவதானிப்போடு மழையிடம்

அரிசி கேட்டு கை நீட்டினார் தாத்தா

கையில் பட்டு தெறித்த நீர்த்துளிகளை

அரிசியாக நினைத்து ஆனந்தப்பட்டார்

விறகு அடுப்பின் பாத்திரத்தில்

நிரம்பி வழிந்தது அந்தத் துளிகள்

மழை நிரம்பிய பாத்திரத்தை நோக்கி தொடர்புள்ளியோடு

விரைந்து வந்தது அவரைப் பின் தொடர்ந்த ஆடு.

7.காசிக்குச்  செல்ல முடிவெடுத்த மனதிற்கு

நீண்ட நாட்களாய் சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தேன்

ஆதி முதல் அமர்ந்திருக்கும்

ஆளுயர சடையின் அளவுகள்

அரை அடி சிலைக்குள் அடங்கிவிட்டதைக் காணத்துடிக்கிறது மனம்

கைப்பிடி சாம்பலில் அடையாளங்களை அழித்து விடுவதுபோல்

வேகம் கொள்கிறது கங்கை நீர் 

நதியின் வாய் அருகே

எரிந்து அடங்கும் சடலங்களின் நம்பிக்கையில் காசியைக்காண்கிறேன்

அந்த நம்பிக்கையின் சாம்பலில் 

புனிதமாகிறது கங்கை

என்றோ காசிக்குச் சென்று வந்த பாட்டியின் கைப்பிடிக்குள் அடங்கிவிட்டது 

பாட்டில் நீரில் கங்கை நதி.

கங்கைநதி மழையாய் பெய்தது வீடு முழுவதும்

மீண்டும் வீடுசேர்ந்த எத்தனையோ

உயிர்களின் சாம்பல் துகளின் முனகலுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

ப.தனஞ்ஜெயன்.

danadjeane1979@gmail.com


ப.தனஞ்ஜெயன்.danadjeane1979@gmail.com

Series Navigationஐங்குறு நூறு — உரை வேற்றுமைநாம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *