மன்னிப்பு

This entry is part 5 of 32 in the series 3 பிப்ரவரி 2013

இந்த ஆண்டு டில்லித்தலைநகரில்குடியரசுதின கொண்டாட்டங்களின் உச்ச நிகழ்வான கொடியேற்றும் தருணம். அங்கே கொடிவணக்கப்பாடல் பாடுவதற்கான குழு ஒன்றில் குரலிசைக்காகத்தான் அவள் தேர்வானாள். இந்தப்பெரு நாடே பாரதத்தாயுக்கு ச்செய்யும் ஆகப்பெரிய மரியாதையே இந்த கொடியேற்று விழா.
ஆண்டுக்கு இருமுறை இது கம்பீரமாய் இந்த தேசத்தின் தலை நகரில் நிகழ்த்தப்படுகிறது
.வெளி நாட்டுக்காரர்கள் அனேகம் வந்து மொத்த இந்தியாவை அளந்து விட்டு செல்வதற்கான நேரம் இது.
பரந்து விரிந்து கிடக்கும் பாரதத்து புண்ணிய பூமி
. பேசும் மொழிகள் எத்தனையோ. மனித வண்ணங்கள் எத்தனையோ. வாய்மையே வெல்லும் இதை உலக மேடையில் ஓங்கிச்சொல்லும் பார்க்கெலாம் திலகம்தான் இந்த பாரதம்.
பண்பாடு ஆராதிக்கப்படும் ஒரு புனிதப் பிரதேசம்
. உடன் பிறந்த இளையோனுக்கு அரசை விட்டுக்கொடுத்து தமயன் வனம் புகுந்த பண்பாட்டு ப்பெட்டகம் எமது தேசம். மூத்தோனின் பாத அணியை அயோத்தி சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்த தம்பிகளின் தேசம் இது. கவுரவர்கள் அரசவையில் பாஞ்சாலி என்னும் மாதர் குல மாதை மான பங்கப்படுத்திய கூட்டத்தைக் கணக்குத்தீர்க்க க்கடவுளே தேரோட்டியாய் அமர்ந்து அறம் வெல்லத்துணை நின்ற வரலாறு நிகழ்த்தப்பட்டது இங்கே.
கால் ஒன்று சற்று தாங்கித்தாங்கி நடக்கும் அந்தப்பேராசிரியையின் குரல் மட்டும் ஒரு முறை நீங்கள் கேட்டுப்பார்க்கவேண்டும்
. அது மதுரக்குயிலோசை. வீணையின் தந்தி எழுப்பும் வசீகரிக்கும் ஒலி. தேனினும் இனியதுவாய் அவளின் கீதம். தென்றல் காற்றினில் பைய மிதந்து அது நம் காதுகளில் விருந்தாக மனிதப்பிறவியும் நிச்சயமாய் வேண்டுவதே தான் இந்த மா நிலத்தே. இசை என்பது பாரத பூமியைப்பொறுத்தமட்டில் பிரத்யேகமான சமாச்சாரம்.இசை அது இறைவன் தந்த கொடை. அது உழன்று உழன்று வரும் மானுடப்பிறவிக் கடை சேர மனித ஆன்மா அந்த உலகளந்தான் திருப்பாதங்களில் தஞ்சம் புக ஒரு சாதனம். இசையே நாத உபாசனை. நாத பிரம்ம ஆராதனை.ஏழிசையாய் அவன். இசைப்பயனும் அவன்.
இன்று போலியோ நோயை வெற்றி கொண்டு விட்டோம்
. ஆனால் முடிந்து விட்ட சோகக்கதைகள் அப்படி எல்லாம் இல்லை. கொள்ளை கொள்ளையாய் மனித உயிர்கள் பறிபோன பெரியம்மைக்கு அந்த தெய்வம் மாரியும், ஓயா வாந்தியும் பேதியும் பிணைந்து மனித உயிர்கள் குடித்த காலராவுக்கு யாதுமாகி நின்ற மாகாளியும் பொறுப்பு ஏற்றுக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. சொல்ல மறந்தேன் செத்த எலிகள் அழுகச் சனிக்கும் பிளேக் நோயுக்கும் அந்த மாரித்தாயே அன்று பொறுப்பு.
அறிவு நிழல் தர அறியாமைக்கு விடைகொடுத்து மனித இனம் நோய்கள் பலவுக்கும் தீர்வு கண்டது
.காலம் போட்ட ஆரோக்கியக்கோலங்கள் ஆராதனைக்குரியன.
போலியோ நோயினால் அவளின் இடதுகால் குழந்தையாயிருக்கும் போதே சற்று பாதிக்கப்பட்டுத்தான் போனது
.ஊனம் உண்டு. அது கொஞ்சம் கூடவோ இல்லை குறையவோ இருக்கலாம். காலங்கள் உருண்டோடின. பரம் பொருளுக்கும் அஞ்சாத ஒரு சிங்கம் உண்டென்றால் அது காலம் மட்டுமே. பெண் குழந்தை படித்தாள்.தொடர்ந்து படித்தாள். அப்படியே விட்டு விடவில்லை, காலம் அவள் விதியை க்கொஞ்சமாய் நிமிர்த்தி க்காட்டியது.பிரம்ம லிபியின் தாக்கம் சற்று இதம் தந்தது.
மண்ணிலே முத்து எடுத்து ப்பிறர்வாழ மட்டுமே
, தான் வாழும் அந்த கூட்டம் அவளது.வாழையடி வாழை என வந்த வேளாண்திருக்கூட்டத்தில்தானே அவள் பிறந்தது. ஓரு விஷயம் சத்தியம்.உலகமயமாதல் வந்தபின்னே இந்திய விவசாயிகள் விதவைகள் ஆயினர்.காயடிக்கப்பட்ட அவர்களை குடைராட்டினத்தில் குந்தவைத்து குளிர்பானம் கொடுக்கிறார்கள்.குச்சி மிட்டாய் சப்பி அரசு சோமபானமும் உடன் வாங்கிக்குடித்த விவசாயிகட்கு வைகுண்டம் நேராகவேத்தெரிகிறதாம். இது விஷயம் நிற்க.
பொதிகை மலை அடிவாரத்துப்பிறந்து பொருனை நதி நீரால் வளர்க்கப்பட்டவள்தான் அவள்
.நெல்லைக்கிறுக்கு முண்டாசுக்கவியின் பள்ளியிலே தானும் படித்து வேலை தேடினாள்.
.
இன்று அவள் ஆங்கிலப்பேராசிரியை ஆக டில்லி மாநகரிலே கண்ணுக்குத்தெரிந்த இடங்களிலெல்லாம் வலம் வருகிறாள்.தலை நகரத்து டில்லிப்பல்கலை க்கழகத்திலே அவளுக்கு ஆசிரியப்பணி. தமிழ்த் திருவள்ளுவரையும் ஆங்கில உரை நடையின் முன்னோடி பேகனையும் ஒப்பீட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கி ஆகி ஆண்டுகள் சில முடிந்துபோயிற்று. மூன்று சக்கர மோட்டார் வண்டியொன்று அவளுக்கு உரிமையானது.அவளே முயன்று வண்டிப் பழகினாள்.ஒட்டுனர் உரிமம் பெற்றாள்.எங்கும் சுழன்று செல்ல முடிகிறதே இப்போது அவளால்.ஊனம் அவளுக்கு ஒரு பொருட்டாயில்லை.
கொடி ஏற்ற நிகழ்வுக்கு ப்பாடல் ஒத்திகை பத்து நாட்களாக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டுதானிருக்கிறது
.அவள் தினம் தவறாமல் சென்று வருகிறாள்.இன்றுதான் இறுதி நாள் ஒத்திகை. கச்சிதமாக அமைந்தது அவளின் முயற்சி.நாளை கொடி ஏற்ற நாள். உலகமே வியந்து பார்க்கக்காத்துக்கொண்டு இருக்கிறது.இந்திய த்துணைக்கண்டத்து அனைத்துப்பகுதியினரின் கலாசார உச்ச பங்களிப்பும் நாளை உலாவரும்.அயல் நாட்டார் பலரும் கூடி கண்டுகளிக்க டில்லி நகரமே விழாக்கோலம் பூண்டு நின்றது.
டில்லியின் பருத்தி மார்க்கெட் அருகேதான் அவள் தங்கியிருந்தாள்
. காளி மந்திருக்கு தினம் சென்றும்தான் வருகிறாள். சர்வ தேச தந்தி அலுவலகம் அமைந்த பகதூர்ஷாமார்க் பகுதி அவளுக்கு அத்தனைப் பழக்கம். மலயாளி ஸ்ரீதரன் ரெஸ்டாரண்ட்டில் அவள் எப்போதேனும் டிபனும் காபியும் சாப்பிடுவாள்.செவ்வாய்க்கிரகத்தில்கூட திருசூர் நாயரின் தேனீர்க்கடை
நிச்சயம் இருக்குமாம்
.சொல்கேள்விதான்.
தான் இன்னும் ஒண்டிக்கட்டை
. அந்த
காளிமந்திருக்கு அருகே பெட்டிக்கடையில் சிலதுகள் வாங்க எண்ணினாள்
.வழக்கமாய் வாங்கும் கடை.மூன்று சக்கர வண்டியை ஓரம் செய்து வண்டியை விட்டு இறங்க முயற்சித்தாள்.
பிறகு என்ன என்ன எல்லாம் நடந்தது
.அவளுக்கு தெரிய நியாமில்லை. ஆனால் சாலையோரம் குப்பைகொட்டும் சிமெண்ட் தொட்டிக்குள்ளாக வீசியெறியப்பட்டு அம்மணமாய்க்கிடக்கிறாள்.உடல் முழுதும் திட்டுதிட்டாய்க் கீறல்கள்.ரத்தம் சொட்டும் பிறப்புறுப்புகுதறிக்கிடக்கிறது.கண்களில் குருதி வழிந்து இமைகள் மூடிக்கிடக்கின்றன.பரந்து கிடக்கிறது தலை முடி. கன்னா பின்னா எனக்கீறிக்கிழிந்துபோய் கிடக்கிறது முகம்.போட்டிருந்த சுடீதாரும் இன்னபிறவும் எல்லாம் அவள் மேனியில் இப்போது இல்லை.
பெட்டிக்கடைக்காரன் ஒரு பெண்ணின் உடல் அந்தச் சாலையோர குப்பைத்தொட்டியில் கிடப்பதைப்பார்த்து கூச்சல் போட்டு அக்கம் பக்கம் நிற்போர்களை அங்கே அழைக்கிறான்
.மனித இருப்பின் சொச்சம் எழுப்பும் எச்சரிக்கை.யார் ஆம்புலன்சுக்கு போன் செய்தார்களோ. அது அலறிக்கொண்டு வந்து நிற்கிறது. ஓரம் செய்து நிற்கும் மூன்று சக்கர வண்டியை வைத்து அவள் டில்லிப்பல்கழகப்பேராசிரியர் என்பது உறுதியாயிற்று.பெட்டிக்கடைக்காரரே ஆமாம் அப்படித்தான் இருக்கமுடியும் என்றார்.
அவளுக்கு உயிர் பிரிந்துவிட்டும் இருக்கலாம்
.கொஞ்சம் ஒட்டிக்கொண்டும் இருக்கலாம்.இற்றுக்கொண்ட மனித உயிரை ஒட்டவைத்து ஒட்டவைத்து மருத்துவ சர்க்கசுகள் பெருமருத்துவமனைஒன்றில் தொடர்கின்றன.ஊரும் உலகமும் நாளைக் அந்தக்கொடியேற்றப் பெரு நிகழ்வுக்குத்தம்மை சிங்காரித்துக்கொள்ளத்தொடங்கிற்று.
அவள் கண் விழித்தாள்
. அவளின் நாவில் அந்த வாயில் கசியும் குருதியின் பூச்சு.சுற்றி நின்ற ஆகப்பெரிய மருத்துவர்கள் ஆடிப்போனார்கள். எப்படி இது சாத்தியம்.

சாரே ஜஹான் சே அச்சா’ முணு முணுத்தது அவள் நா. குருதி தோய்ந்த அவள் கண் விழிகள் கடைசியாய் மூடிக்கொண்டன. மருத்துவ மனை ப்பெரு வீதியில் ராட்சச ராணுவ டாங்குகள் ஆயிரம் ஆயிரமாய் உறுமிச்சென்றுகொண்டே இருந்தன. விண்ணில் சாகசம் நிகழ்த்தப் பயின்ற விமானங்கள் எழுப்பும் இடியொலி தொடர்ந்து கேட்கமுடிந்தது. கொடியேற்றம் நிகழ்போது அவள் தந்த குரலிசை மட்டும் நாளை நம் எல்லோருக்கும் கேட்கும்.
—————————————————-

Series Navigationகல் மனிதர்கள்வானிலை அறிவிப்பு
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *