மீள்தலின் பாடல்

Spread the love

 

ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல்

தொய்வுகளேதுமின்றி

எழுதிவந்த விரல்கள்

வெளியெங்கும் புன்னகையை விதைக்கும்

இதழ்களோடும் விழிகளோடும்

சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன

இரவு பகல் காலநிலையென

மாறும் காலக்கணக்குகளறியாது

ஆஸ்பத்திரிக்கட்டிலில் மயங்கிக்கிடந்தேன்

ஓயாத பேச்சுக்குள் சிக்கித்தவித்த நாவு

மௌனத்தைப் போர்த்தி உறங்கிப்போனது

 

கண்களில் பேரன்பு பொருத்தித் தலைகோதி

ஆரோக்கியத்தைச் சொட்டுச் சொட்டாக ஏற்றி

எனது புலம்பல்களைச் சகித்தபடி

நடமாடிய செவிலித்தாய்களில்

அக்கா உன்னைக் கண்டேன்

 

ஆறுதலும் அக்கறையும் மிகுந்த வார்த்தைகளை

உன்னழுகையில் குரல் இடராது

தொலைபேசி வழியே கசியவிட்டாய்

நகர்ந்த நொடிகளனைத்திலுமுன்

பிரார்த்தனைகளினதும்

நீ அதிர்ந்தெழும் கொடிய கனவுகளினதும்

மையப்பொருளாக

நானிருந்தேனெனப் பின்னரறிந்தேன்

 

நீ பார்த்துப்பார்த்துச் செதுக்கிய

கவிதையின் முகத்தினை

மீளப்பொருத்தியபடி

தம்பி வந்திருக்கிறேன்

எல்லாக்காயங்களையும்

முழுதாயாற்றிடக் காலத்துக்கும்

சிறிது காலமெடுக்கலாம்

எனினும்

மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்

மீண்டுவிட்டேன்என

இப்போதைக்கு உன் வரிகளைச்

சொல்வதன்றி வேறறியேன்

 

எம்.ரிஷான் ஷெரீப்

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -3நீராதாரத்தின் எதிர்காலம்