எழிலரசி கவிதைகள்

author
1
0 minutes, 5 seconds Read
This entry is part 12 of 40 in the series 26 மே 2013


ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

1968-ல் ராணிப்பேட்டையில் பிறந்த எழிலரசி தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது நாமக்கல் பள்ளி ஒன்றில் தமிழாசிரியையாக இருக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்புதான் ‘மிதக்கும் மகரந்தம்’ இதில் 44 கவிதைகள் உள்ளன. தத்துவப் பார்வை, வாழ்க்;கையை ஊடுருவிப் பார்த்தல், எளிமை, பூடகத் தன்மை வழி வாசகன் மனத்தில் கேள்விகளை எழுப்புதல், அகநோக்கி ஆகியவை இவரது கவிதை இயல்புகள் எனலாம்.

‘அந்தக் கணம்’ – முன் வைக்கும் வியப்பு எல்லோருக்குமானதுதான். கையால் பிடிக்க முடியாமல் ஜாலம் காட்டும் காற்றாய் நம் முன் இருக்கிறது இக் கவிதையின் கருப்பொருள்

சட்டென
எங்கோ எப்படியோ
துளிர்த்துத் தழைத்து
கிளைத்து விருட்சமாய் அசைகிறது
அந்தக் கணம்

எனக் கவிதை தொடங்குகிறது. இவர் குறிப்பிடுவது ஆசை அல்லது லட்சியமாக இருக்கலாம்.

சில சமயம்
பொத்தப்பட்ட ஊற்றாய்க் குபீரிடுகிறது
மலை வீழ் அருவியாய்
மடை திறந்த வெள்ளமாய்
கோடிப் பூக்களின் குவியலாய்
வண்ணவில் கொண்ட வானமாய்
நிலை கொள்ளாப்
பட்டாம் பூச்சியாய்
கை வசப்படுத்த முடியா
அகண்ட வெளியாய்
எல்லாம் சட்டென.

எளிமையான இந்த தொனிப் பொருள் கவிதை என்றும் புதுமையோடு இருக்கும் இயல்பு கொண்டது.

‘சமதளப் பரப்பு’ – ஒரு நல்ல கவிதை! குறியீடு சார்ந்தது. இந்தக் கவிதையைப் புரிந்து கொள்ள முயன்றால் ஒன்றிற்கு மேற்பட்ட வாயில்கள் உள்ளன. அவரவர் அனுபவத்தின் மூலம் ரசிக்கலாம். என் பார்வை இக்கவிதையின் கரு: பிரச்சனைகளும் அவற்றைத் தீர்க்கும் வழிகளும் என ஒரு வரியில் அடக்கலாம்.

புள்ளி ஒன்று பிடிபட்டது
புள்ளி புள்ளிகள் ஆயின
இணைக்கத் தொடங்கினேன்

என்று தொடங்கி கவிதை வளர்ச்சி எளிமையுடன் அழகாகச் செல்கிறது. வளைந்த கோடுகள், நெளிந்த கோடுகள் புள்ளியை இணைக்கின்றன. இப் பகுதியில் அமைந்துள்ள தொடர் படிமங்கள் கவிதைக்கு வலிமையூட்டுகின்றன.

புள்ளிகளும் இணைவுகளும்
இணைவுகளும் புள்ளிகளுமாய்
சமதளம்

என்ற முத்தாய்ப்பு எல்லா பிரச்சனைகளும் ஒரே மாதிரியாகத் தான் மனத்தைப் பாடாய்ப் படுத்துகின்றன என்ற மன இயல்பைச் சுட்டுகின்றது.

‘இன்னும்’ – கவிதையும் குறிப்பிடத்தக்கது. மன இயல்பை இக்கவிதையும் சுட்டுகிறது. தேடல் கவிதையை நடத்திச் செல்கிறது. கருப்பொருள் தேர்வில் ஒரு கூர்மை காணப்படுகிறது.

தடை ஒன்றுமில்லை
என் ஏகுதலுக்கு
எனினும் துவள்கின்றன பாதங்கள்
இன்னும் செல்ல இருக்கின்றன
பூட்டொன்றும் இல்லை
எனினும் தொக்கி நிற்கின்றன சொற்கள்
இன்னும் சொல்ல இருக்கின்றன
வரம்பொன்றுமில்லை
எனினும் தயக்கம் மேலெழ
இன்னும் செய்ய இருக்கின்றன
மையிருட்டு நிழலில் எத்தனையோ
இன்னும்கள்

எளிமையால் உள்வாங்கப்படுகிறது. வாழ்க்கையில் யாருக்கும் தவிர்க்க இயலாதவை இந்த இன்னும்கள்!

‘பாசக் கயிறு’ எளிதில் யுகிக்க முடியாத கவிதை.

இழுத்துக் கட்டப்படாத
கயிறொன்று அவ்வப்போது
தலை தட்டுகிறது வாஞ்சையுடன்
பரிவுடன் அது கைக்கொட்டும் சமயம்
ஒருபோதும் வாய்க்கவே கூடாது

என்பது கவிதையின் முதல் பத்தி. எதை யூகித்து மேற்கண்ட பத்தியுடன் இணைத்துப் பார்க்க முடியும்?

நான் அமிழும் கருமணற்குழியின்
ஆழத்தில் ஆழ்த்திவிட்டு மேலெழுகிறேன்
விடிந்து
வெளிச்சம் பரவியுள்ளது

என்ற வரிகளில் இருண்மை ஓங்கி நிற்கிறது.

‘எப்போதும் பொம்மைகள்’ கவிதையில் ஒரு யதார்த்தக் காட்சி…

விடிந்து பார்த்த போது
படுக்கையைச் சுற்றிலும்
வீரர்கள் யானைகள் குதிரைகள்
என வீழ்ந்து கிடக்க
சலனமற்ற உறக்கத்திலிருந்தான்
என் மகன்

‘நிலம் பெயர்ந்த பறவை’ – குறியீட்டுக் கவிதை. புது மணப் பெண்ணின் குறியீடாகப் பறவை கையாளப்பட்டுள்ளது என்பது என் யூகம்!

கூர் கற்களும் அம்புகளுமாய்
வேவு பார்க்கும் வேடர்கள்

‘வேடர்கள்’ புகுந்த வீட்டு உறவினர்களைக் குறிக்கிறது. ‘கால்கள் நடுக்கத்தோடுதான் நிலத்தில் ஊன்றுகிறேன்’ என்ற வரிகள் புகுந்த வீட்டில் முதல்நாள் புதுமணப் பெண் வருவதை தெளிவாக்குகின்றன.

என் குரலொலியின் பேதமறியும்
செவியேதும் இல்லை
நிரந்தரமோ இவ்விடம்
வலுப்பெறுமோ சிறகுகள்

என்று கவிதை முடிகிறது.

நிறைவாக, எழிலரசி கவிதைகள் சுயமான நடையில் தனித்தன்மையுடன் உள்ளன. கவிதைகளில் பூடகத்தன்மையைக் கொஞ்சம் குறைத்து மொழி வளத்தைக் கூட்டினால் மேலும் சிறக்கும் என்பது என் நம்பிக்கை! வாசகர்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டிய புத்தகம்.

Series Navigationவாய் முதலா? வட்டக்குதம் முதலா?குரங்கு மனம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய செல்லப்பா says:

    டாக்டர் எழிலரசி, இராணிப்பேட்டையில் 1968ல் பிறந்தவரா? நான் அந்த வருடம் அதே ஊரில் பி.எஸ்சி. முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். எடுத்துக்காட்டில் உள்ள இரண்டு கவிதைகள் என்னைக் கவர்ந்தன: “இன்னும் செய்ய இருக்கின்றன/ மையிருட்டு நிழலில் எத்தனையோ
    / இன்னும்கள்” என்ற வரிகள் கனமான வரிகள். குழந்தையின் உறக்கத்தை வருணிக்கும் “விடிந்து பார்த்த போது / படுக்கையைச் சுற்றிலும் / வீரர்கள் யானைகள் குதிரைகள் / என வீழ்ந்து கிடக்க /
    சலனமற்ற உறக்கத்திலிருந்தான் / என் மகன்” என்ற வரிகளும் ரசிக்கத்தக்கன. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *