யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?

author
1
1 minute, 5 seconds Read
This entry is part 1 of 13 in the series 6 செப்டம்பர் 2020

கோ. மன்றவாணன்

      இந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாப்புக்கு ஏது எதிர்காலம் என்று கேள்வி வடிவிலேயே பதிலைச் சொல்வீர்கள்.

      சங்கம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் ஒருபகுதி வரை நம் கவிதை இலக்கியங்கள் யாவும் யாப்பு முறையில் எழுதப்பட்டவையே. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் யாப்புக் குறித்து எழுதப்பட்டுள்ளதால், அதற்கு முந்தைய காலங்களில் வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்றவை இருந்துள்ளன என்பதை ஊகித்து அறிய முடியும்.

      தம் படைப்புகளை வெளிப்படுத்தவும், அவற்றைப் பிறரின் நினைவில் பதிப்பதன் வழியாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லவும், நம் மூதாதையர் கண்ட முறைமையே யாப்பு ஆகும். அதாவது எளிதாக மனதில் பதிவதற்கும் மனப்பாடமாகச் சொல்வதற்கும் ஏற்றவை யாப்புக் கவிதைகளே. முதல்வரியோ முதல்சொல்லோ நினைவுக்கு வந்துவிட்டால் முழுப் பாடலையும் எளிதில் சொல்லிவிட முடியும். அது அந்தக் காலத்துக்குத் தேவையாக இருந்திருக்கிறது.

      திருக்குறளில், தேவாரத்தில், திருவாசகத்தில், கம்ப ராமாயணத்தில், திருஅருட்பாவில் உள்ள கவிதைகளை நம் முன்னோர் மனப்பாடமாக ஓதி வந்துள்ளார்கள். இன்றும் சிலர் ஏடு புரட்டாமல் நினைவைப் புரட்டியே அந்தக் கவிதை வரிகளை அருவியெனக் கொட்டுகிறார்கள். இதற்குக் காரணம் யாப்புக் கட்டுமானமே.

      பாமர மக்களிடத்தில் புழங்கும் பழமொழிகள் பல தலைமுறைகளாக மக்களிடத்தில் தொடர்வதற்கு, அவற்றில் அமைந்துள்ள யாப்பு ஒழுங்கும் ஒரு காரணம் ஆகும். ஓசை ஒழுங்கில் பாடுகிற நாட்டுப்புறப் பாடல்களில் இயற்கையாக அமையும் யாப்புக் கட்டுமானம் உண்டு.

      இன்றும் பாரதியார் கவிதைகளை, பாரதிதாசன் கவிதைகளை, கண்ணதாசன் கவிதைகளை முழுமையாகச் சொல்வோர் உண்டு. ஆனால் வசன கவிதைகளையோ புதுக்கவிதைகளையோ நவீன கவிதைகளையோ வரிமாறாமல் மனப்பாடமாகச் சொல்ல முடியாது. வேண்டுமானால் ஓரிரு வரிகளை மட்டும் சொல்ல முடியும். இருப்பினும், மோனை அழகோடு எழுதப்படும் புதுக்கவிதைகள் சிலவற்றை மனப்பாடமாகச் சொல்ல முடியும். அதற்கும் யாப்பின் ஒரு கூறாகிய மோனை உதவுகிறது.

      அச்சுப் பதிவுகளும் எண்மப் பதிவுகளும் எளிதாக உள்ள இந்தக் காலத்தில் எதையும் நினைவில் சுமக்க வேண்டியதில்லை. அதனால் புதுக்கவிதைகளையும் நவீன கவிதைகளையும் நினைவில் வைத்துப் பாதுகாக்காமல் தேவையான போது ஏடு திறந்தோ, கணினி திறந்தோ, திறன்பேசி திறந்தோ பார்த்துக்கொள்ள முடிகிறது.

      இருபதாம் நூற்றாண்டில்தான் வசன கவிதைகளும் புதுக்கவிதைகளும் நவீன கவிதைகளும் மலர்ந்தன. இக்காலக் கட்டத்திலும் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் என மரபுக் கவிஞர்கள் பெருஞ்செல்வாக்குப் பெற்றுள்ளனர். இவர்களைப் படித்துக் கவிஞர்கள் ஆனவர்கள் அதிகம்.  இதே இருபதாம் நூற்றாண்டில் அப்துல் ரகுமான், மேத்தா, மீரா, வைரமுத்து போன்றவர்கள், மரபுக் கவிதைகளையும் எழுதினார்கள். புதுக்கவிதைகளையும் எழுதினார்கள். புதுக்கவிதைகளின் வளர்ச்சியில் பெரும்பங்கு இவர்களுடையது. இவர்களைப் பார்த்துத்தான் ஏராளமானோர் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்கள். கவிஞர்கள் தொகை வளர்ச்சிக்குப் புதுக்கவிதை இயக்கம் ஒரு காரணம். மேலும்                   ந. பிச்சமூர்த்தி, நகுலன், பசுவய்யா, பிரமிள் போன்றவர்கள், புதுக்கவிதை வீச்சுகளைத் தாண்டியும் கவிதை படைத்தார்கள்.

      இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டிலும் புதுக்கவிதை செல்வாக்கு கொண்டுள்ளது.  என்றாலும், நவீன கவிதையின் வளர்ச்சியும் மேலோங்கி வருகிறது. தற்காலத்தில் புதுக்கவிதைகளை விடவும் நவீன கவிதைகளையே தரம் மிகுந்த இலக்கிய இதழ்கள் வெளியிடுகின்றன. இந்தக் கவிதைப் போக்குகள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதோடு புதுமையையும் சேர்க்கின்றன. நவீன கவிதை நூல்கள் நிரம்ப வருகின்றன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்புக் கொண்டதாக உள்ளது.

      யாப்பு வடிவத்தைப் புறக்கணித்து விட்டாலும் புதுக்கவிதைகளில் மரபின் நீட்சி உண்டு. இன்றைய நவீன கவிதைகளிலும் சங்க இலக்கியத் தாக்கங்கள் உண்டு.

      காலம் தோறும் கவிதை வடிவங்களும் போக்குகளும் மாறித்தான் வந்துள்ளன. ஒன்றிலிருந்து ஒன்று எனப் புதுவடிவம் தோன்றுவது இயற்கையானது. அப்படித்தான் இப்போது நவீன கவிதை உருவாகி வந்துள்ளது. நவீன கவிதைக்குப் பிறகும் இன்னொரு நனிநவீன கவிதையோ வேறொன்றோ நிச்சயமாக வரும். அதையும் வரவேற்போம்.

      எனினும்-

      எல்லாக் கவிதை வகைப்பாடுகளும் மதிப்புக்கு உரியவை. ஒரே வகைப்பாட்டில் கவிதை எழுதி அலுப்புவதைவிட எல்லா வகைப்பாடுகளிலும் கவிதை எழுதலாம். இங்கு நவீன கவிதை எழுதுபவர்கள், புதுக்கவிதையையும் மரபுக் கவிதையையும் ஒதுக்குகிறார்கள். புதுக்கவிதை எழுதுபவர்கள், மரபுக் கவிதையையும் நவீன கவிதையையும் வெறுக்கிறார்கள். சிலர் ஒரே வகைப்பாட்டில் பழகி விட்டதால் பிற வகைப்பாடுகளில் எழுதத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

      இன்றைய நிலையில் புதுக்கவிதையும் நவீன கவிதையும் நல்ல நிலையில் வளர்ந்து வருகின்றன. ஆனால் மரபுக் கவிதைக்கு எதிர்காலம் இருக்குமா என்பதுதான் கேள்விக்குறி. இரண்டாயிரம் ஆண்டு காலத்துக்கும் மேலாக நிலைத்து நீடித்து வந்த யாப்புக் கவிதை மரபு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் அழிவு நிலையில் உள்ளது. யாப்புக் கவிதை எழுதும் யாரோ சிலரையும் ஏளனமாகப் பார்க்கும் நிலையும் இலக்கிய நிகழ்வுகளில் காண முடிகிறது.

      மரபுக் கவிதைகள் எழுதுவோர் குறைந்து வருகிறார்கள் என்பதைவிட மறைந்து வருகிறார்கள் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மரபுக் கவிதை ஏன் இந்த நிலையில் இருக்கிறது என்று கவிதை நண்பர்களிடம் கேட்டேன்.

      இன்றும் மீன்விழி மான்விழி என்றே எழுதிக் குவிக்கிறார்கள். உவமைகளில் புதுமை இருப்பதில்லை. புதிய பாடுபொருள்கள் இல்லை.  சொல்லும் முறையில் புதுக்கோணம் காண்பதில்லை. காலம் என்ற சொல்லில் தொடங்கினால் ஞாலம் பாலம் நீலம் சூலம் ஜாலம் என்று ஒரே மாதிரியான எதுகை போட்டு எழுதி எழுதித் தமிழைத் தேய்த்துவிட்டார்கள் என்று நண்பர் ஒருவர் சொன்னார். இதில் உண்மை இல்லாமல் இல்லை.

      யாப்புச் சட்டகத்துக்குள் சொற்களை அடைத்துவிட்டால் அது கவிதை ஆகிவிடாது. அப்படிச் சொற்களை அடைத்ததனால்தான் மரபுக் கவிதை வீழ்ச்சி அடைந்தது என்று ஒரு தோழி சொன்னார். இதிலும் மெய் இருக்கத்தான் செய்கிறது.

      பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களுக்கே இன்னமும் இலக்கணம் பிடிபடவில்லை. அதிலும் யாப்பு இலக்கணம் சொல்லித் தரும் அளவுக்கு திறன் உள்ளவர்கள் இல்லை. ஒரு பொருளில் ஒருவருக்கு முழுப்புரிதல் இருந்தால்தான் அடுத்தவர்க்குப் புரியும்படிச் சொல்லித்தர முடியும். ஆசிரியருக்கே புரியவில்லை என்றால் மாணவர்களுக்கு எப்படிப் புரியும்?  நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என்று மனப்பாடம் செய்யச் சொல்லி அடுத்த பாடத்துக்குத் தாண்டுகிறார்களே தவிர, மாணவரை யாப்பு வடிவில் கவிதை எழுதத் தூண்டுவதில்லை என்று தமிழாசிரியர்கள் மீது பழி சுமத்தினார் இன்னொரு தோழர்.

      யாப்புக்குள் கவிதை எழுதும்போது, அதில் நம் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. யாப்பு, நம் சுதந்திர சிந்தனைக்குத் தடை போடுகிறது. இதனால்தான் கட்டற்ற கவிதைபாட புதுக்கவிதைகளும் நவீன கவிதைகளும் மலர்ந்தன என்று வாதிடுவோர் உண்டு.

      இது குறித்துச் சில மரபுக் கவிஞர்களிடம் பேசிய போது, யாப்பே நம் சிந்தனையைத் தூண்டும் என்று சொன்னார்கள். எதுகைக்கு ஏற்பவும் மோனைக்கு ஏற்பவும் கருத்துகள் உருவாகிவரும் என்றார்கள்.

      யாப்பு அழிவதால் கவிதை இலக்கியத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது என்று துடிப்பான இளைய கவிஞர் ஒருவர் சொன்னார்.

      யாப்பு முதுமுதுமை அடைந்துவிட்டது. யார் தூக்கி நிறுத்தினாலும் அதனால் நடமாட முடியாது. அது தானாகவே மறைந்து போகும். ஒரு பழைமை அழிந்தால்தான் ஒரு புதுமை நிலைகொள்ள முடியும் என்றும் ஒருவர் சொன்னார்.

      பழைமை என்பதால் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட முடியாது. புதுமைகளுக்கு இடம் அளித்தபடிச் சில பழைமைகள் காலம் தோறும் உடன்வரும். அந்த வகையில் யாப்பையும் பேணிப் பாதுகாக்கலாம் என்றார் ஒரு கவிதை ரசிகர்.

      புதுக்கவிதைகள் எழுதிவரும் பலரிடம் பேசி இருக்கிறேன். அவர்களில் சிலருக்கு மரபுக் கவிதைகள் எழுத ஆசை இருக்கிறது. ஆனால் அதன் இலக்கணம் புரிபடவில்ல; புரிய வைப்பாரும் இல்லை என்கிறார்கள். புதுக்கவிதை எழுதும் சிலர், பாரதியார் பாரதிதாசன் கவிதைகளைப் படித்துவிட்டு, அதே வடிவத்தில் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் அதில் வடிவம் இருக்கிறதே தவிர அதற்குரிய இலக்கணம் இல்லை. வெண்பா போல விருத்தம் போல சிலர் எழுதுகிறார்கள். ஆனால் வெண்பாவில் தளை தட்டுப்படும். விருத்தத்தில் சீர்குறையும் அல்லது நீளும். குறைசொல்லியே பேர் வாங்கும் புலவர்களுக்கு அது அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிடும். தவறுகளைச் சுட்டிக் காட்டி, அந்த இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கத்தான் தகுந்த கவிஞர்கள் இங்கு இல்லை. “நாம் கற்றுக் கொடுத்தால் அவன் நன்றாக எழுதிப் பேர் வாங்கி விடுவான்” என்று சிலர் கற்றுத் தருவதும் இல்லை.

      சில ஆண்டுகளுக்கு முன், மரபுக் கவிதைக்கு மின்சாரம் பாய்ச்ச வேண்டும் என மெனக்கீடு செய்து வைரமுத்து அவர்கள் மரபுக் கவிதைகளை எழுதி வந்தார்கள். அதுதான் “ரத்த தானம்” என்ற கவிதை நூலாக வந்தது என்று கருதுகிறேன். கல்கியில் மரபுக் கவிதைப்  போட்டிகூட வைத்தார்கள்.

      பல ஆண்டுகளுக்கு முன், பல இலக்கிய இதழ்களில் வெண்பா போட்டி நடத்தி வந்தனர். ஈற்றடி கொடுத்துவிடுவார்கள். மீதி மூன்று அடிகளை எழுதி அனுப்ப வேண்டும். கண்ணதாசன் நடத்திய தென்றல் இதழில் வந்த வெண்பா போட்டிகள் மிகவும் புகழ்பெற்றவை. எழுபதுகளில் தமிழக அரசு வெளியீடான தமிழரசு இதழில் வெண்பாப் போட்டிகள் நடந்தன. மரபுக் கவிதைக்காகவே தெசிணி என்பவர், கவிதை என்ற இதழைப் பல ஆண்டுகாலமாக நடத்தி வந்தார். தலையங்கம், பேட்டிகள், எல்லாம் கவிதையாக வடித்து நடத்தி வந்தார்.

      இவை எல்லாம் மரபுக் கவிதையைப் காப்பாற்றவும் வளர்க்கவும் எடுத்த முயற்சிகள். இப்போது இந்த முயற்சிகள் எங்கோ இரண்டோர் இதழ்களில் இருக்கக் கூடும். ஆனால் இளைஞர்களை ஈர்க்கக் கூடிய அளவுக்கு முயற்சிகள் இல்லை. புகழ்மிகு இலக்கிய அச்சிதழ்களும் மின்னிதழ்களும் மரபுக் கவிதைகளை வெளியிடுவதில்லை.                     நம் கண்முன்னே யாப்பு, நம்மைவிட்டுப் பிரிவதைக் காண முடிகிறது.

      வள்ளுவர், இளங்கோ, கம்பர் போற்றிய யாப்புக்கு இன்று செல்வாக்கு இல்லை என்று நினைக்கிற போது வருத்தமாகத்தான் இருக்கிறது. வள்ளலார், பாரதியார், பாரதிதாசன் கொண்டாடிய யாப்பு, இன்று வழக்கொழிந்து வருகிறது என்பதைப் பார்க்கிற போது ஒரு பெருங்கொடையை இழப்பதுபோல் ஆகிறது என்ன செய்வது? காலத்தின் முன்னால் கைபிசைந்து நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை..

      இன்றைய புதுக்கவிதை எழுதும் கவிஞர்களும் நவீன கவிதை எழுதும் கவிஞர்களும் புதுப்புது உத்திகளைக் கையாளுகிறார்கள். யாரும் நினைக்காத கோணத்தில் சிந்திக்கிறார்கள். யாரும் பாடாத பொருள்களில் கவிதை எழுதுகிறார்கள். நுண்சித்தரிப்புகளில் வியப்பின் உயரத்தைத் தாண்டுகிறார்கள். தமிழின் தேய்வழக்குகளை விட்டுவிலகிப் புதிய சொல் இணைவுகளையும் சொற்றொடர்களையும் உருவாக்குகிறார்கள். இதுவரை இல்லாத புதிய தமிழ் அழகை… கவியழகை இன்றைய இளைய கவிஞர்களிடம் கண்டு மகிழ முடிகிறது. இந்த இளைஞர்களுக்குத் திரைப்பாடல் எழுதவும் ஆசை இருக்கிறது. எந்தக் கவிஞருக்குத்தான் திரைப்பாடல் எழுத ஆசை இருக்காது என்று நீங்கள் கேட்பதும் கேட்கிறது. யாப்பு இலக்கணம் கற்றிருந்தால் திரைப்பாடல் எழுதுவது எளிதாகும்.

      நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகன் அவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் வெண்பாக்கள் எழுதி அசத்தினார்கள். எதுகை மோனையைப் பற்றிக் கவலைப் படாமல் ஞானக் கூத்தன் எழுதிய பல கவிதைகளில் யாப்புக் கட்டுமானம் உண்டு.

      இளைஞர்கள் கொஞ்சம் யாப்புக் கற்றுக்கொண்டால் நவீன கவிதைகளோடும் புதுக்கவிதைகளோடும் மரபுக் கவிதைகளையும் எழுதலாம். யாப்புக் கவிதை எழுதும் மூப்புக் கவிஞர்களிடத்தில் புதுவீச்சுக் காண முடியாது. இளைஞர்கள் எழுதினால் யாப்புக் கவிதைக்குள் புதிய கோள்களைப் படைத்து ஒளிவீசச் செய்ய முடியும்.

      யாப்புக் கவிதை எழுதுவது கடினம் என்று யாரும் கருத வேண்டாம். யாப்பு இலக்கணத்தைக் கண்டு மிரளவும் வேண்டாம். புலவர் குழந்தை அவர்கள் “யாப்பதிகாரம்” என்ற நூலையும்- கி.வா.ஜகந்நாதன் அவர்கள் “கவி பாடலாம்” என்ற நூலையும்- மருதூர் அரங்கராசன் அவர்கள் “யாப்பறிந்து பாப்புனைய” என்ற நூலையும் எழுதி இருக்கிறார்கள். மரபுக் கவிதைகள் எழுதுவது குறித்துப் பல வலைப்பூக்கள் இணையத்தில் உள்ளன.  இவற்றை முழுமையாகப் படிக்க வேண்டாம். அசை, சீர், எதுகை, மோனை பற்றி மேலோட்டமாகத் தெரிந்துகொண்டால் போதும். இதில் எதுகை மோனை பற்றி நம் கவிஞர்களுக்கு ஏற்கனவே புரிதல் உண்டு. விருத்தப்பாவுக்கு உரிய வாய்ப்பாடுகளில் ஒன்றிரண்டு தெரிந்துகொள்ளுங்கள். இவற்றைக் கொண்டு விருத்தங்கள் எழுதிவிட முடியும். கம்பனைப் போல் காவியமும் படைக்க முடியும். தேர்ந்த கவிஞர்கள் எழுதிய ஆசிரியப்பாவில் அமைந்த கவிதைகள் சிலவற்றைப் படித்தால் போதும். இலக்கணம் படிக்காமலேயே ஆசிரியப்பா எழுதிவிட முடியும். இணைக்குறள் ஆசிரியப்பா என்று ஒன்று இருக்கிறது. இதைவிட எளிய யாப்பு எதுவும் இல்லை. இன்றைய புதுக்கவிதைகளையும் நவீன கவிதைகளையும் இணைக்குறள் ஆசிரிப்பாவுக்குள் அடக்கிவிட முடியும்.

      இளைய கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

      புதுக்கவிதை நூல்கள், நவீன கவிதை நூல்கள் என ஏராளமான நூல்களை வெளியிடுங்கள். உலகக் கவிதைத் தரத்தைத் தாண்டியும் பயணியுங்கள். உங்கள் வாழ்வில் ஒரேஒரு மரபுக் கவிதை நூலாவது வெளியிடுங்கள். இரண்டாயிரம் அகவை தாண்டிய உங்கள் தாய்க்கு நீங்கள் செய்யும் குல மரியாதையாக அது இருக்கட்டுமே.

Series Navigationபுறநானூற்றுப் பாடல்களில் அறநெறிகள், வாழ்வியல் கூறுகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    வெ. நீலகண்டன் says:

    கவிதை வரலாறு குறித்த ஒரு நுட்பமான ஆய்வு. புதுக்கவிதை, நவீனக் கவிதை எழுதுபவர்களும் யாப்பைக் கற்கவும், தெரிந்து கொள்ளவும் வேண்டும் என்பது மார்க்சிய நோக்கிலும் சரியானது. புதுமைக்குக் கட்டியம் கூறும் மார்க்சியம் பழமையை நிராகரிக்கச் சொல்வதில்ல; மாறாக, அதன் மீது நின்றுதான் புதிய உயரங்களைத் தொடமுடியும் என்பதை வலியுறுத்தும். கட்டுரையில் தொடர்ந்து மரபுக் கவிதையில் ‘அலுப்புவதைவிட’ என்ற ஒரு பயன்பாடு அற்புதம் — அலுப்புப் பெயர்ச்சொல் வினையாகி அதன் உயிர்ப்பைக் காட்டுகிறது. கவிதையின் உள்ளளடக்கத்தில் புதுமை இல்லை எனில், எந்தப் புது வடிவமும் நில்லாது. கடைசி வேண்டுகோள் மிகவும் நியாயமானது — மரபுக் கவிதை நூல் வெளியிடவில்லை எனினும், சில மரபுக் கவிதைகளையாவது எழுதத்தான் வேண்டும். சிந்தனையைத் தூண்டிய மன்றவாணன் ஐயா அவர்களுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *