தங்கம் 4 – நகை கண்காட்சி

This entry is part 17 of 28 in the series 29 ஏப்ரல் 2012
உலகிலேயே மிகவும் விலை கொண்ட கற்கள் வைரக் கற்கள். ஒரு வைரக் கல்லே பல கோடி பெறுமானம் கொண்டது. அப்படிப்பட்ட வைரக் கற்களும் இன்னும் உலகிலே கிடைக்கும் பல கற்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும்?
வைரங்கள் பதித்த நகைகள், மரகதம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து என்று பல தரப்பட்ட கற்கள் கொண்ட நகைகள், அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டு விற்கப்படும் கண்காட்சி தான் ஆசியாவிலேயே முதலிடம் வகிக்கும் ஹாங்காங்கில் நடக்கும் நகை மற்றும் கற்கள் கண்காட்சி. ஆம். இங்கு இருக்கும் கண்காட்சி மையத்தில் இரண்டு மூன்று மாடிகளில் பல தரப்பட்ட ஆபரணங்கள் 46 நாடுகளைச் சேர்ந்த 3354 அமைப்பாளர்கள் மூலமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உலகின் மிகப் பெரிய வைர கூடமும் மிகப் பெரிய ஜப்பானிய முத்துக் கூடமும் இதன் சிறப்பம்சமாக இருந்தன.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 19 முதல் 25 வரை நடக்கும் இந்தக் கண்காட்சியைக் காண எனக்கு பல வருடங்கள் வாய்ப்பு கிட்டியது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமான ஆபரணங்கள். ஒவ்வொரு விதமான வடிவமைப்புகள். மற்ற யாருமே அணிந்திராத வடிவமைப்பில் ஆபரணம் அணிய விரும்பும் நகைப் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.  உலகின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் மிகச் சிறந்த வடிவமைப்புடன் கூடிய நகைகளைக் கொண்டு வந்து இங்கே நல்ல விலைக்குத் தருகிறார்கள். ஒரே தளத்தில் உலகின் சிறந்த ஆபரணங்களை ஒரு சேரக் காணலாம். வேண்டியதை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த வருடத்தின் சிறப்பு, நயமான நகைகள் என்று சொல்லப்படும் நேர்த்தியான ஆபரணங்களின் அணிவகுப்பாக இருந்தது. ஒவ்வொரு நகை நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அழகான கூடங்களை அமைத்திருந்தன. எல்லாப் பக்கங்களிலும் வைரங்கள் ஜொலித்தன. தங்கம் பளபளத்தது.  கற்கள் கண்சிமிட்டி வரவேற்றன.
ஆசியா எக்ஸ்போ என்னும் இடத்தில் முத்துக்களின் குவியல். பாரம்பரிய நகைகள் பல வரலாறுகளைப் பறைசாற்றின.
தங்கத்தில் விலை எவ்வளவு தான் கூடிய போதும், அதை வாங்குவோரும் விற்போரும் சற்றும் குறையவில்லை. வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடன் பிரச்சினைகளால் நகை வியாபாரம் அங்கு குறைந்திருக்கும் வேளையில், உலகச் சந்தையில் சீனர்களும் இந்தியர்களும் இந்த வியாபாரத்தை சரிய விடாமல் தூக்கி நிறுத்தியுள்ளதாக அமைப்பாளர்கள் கருத்து கூறினர். ஆறு நாட்கள் நடந்த இந்தக் கண்காட்சியில் இலட்சக்கணக்கானோர் வருகை புரிந்தனர். கோடிக்கணக்கில் வியாபாரம்.
நகைகளும் ஆபரணங்கள் மட்டுமில்லாமல், நகைகள் செய்யும் கருவிகள் ஒரு பக்கம். நகைகளை அழகாக பாதுகாத்து வைக்கும் பெட்டிகள் ஒரு புறம். எடை பார்க்கும் கருவிகள். அன்பளிப்பு பெட்டிகள்.
மேலும் பற்பல நிறக் கற்களின் அணிவகுப்பு. போட்டியில் வென்ற நகைகளின் அணிவகுப்பு. தங்கக் கடிகாரங்களின் அணிவகுப்பு. எங்கும் ஒளி வெள்ளம். நகைகளின் நிற வெள்ளம்.
கண்காட்சியின் கடைசி நாள் முடியும் தருவாயில் நான் சென்ற போது, ஒரு பக்கம் மட்டும் ஏகப்பட்ட கூட்டம். அருகே சென்று பார்த்தால், பழமையான பாரம்பரிய நகைகளும், கடிகாரங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒரு புறம்.  என்ன நகைகள் இருக்கின்றன என்று பார்க்கும் கூட்டம் ஒரு புறம். 18ஆம் நூற்றாண்டு நகைகளைக் காணும் போதே அத்தனை கம்பீரம். பல்லி, தேள், வெட்டுக்கிளி, ஆமை, பாம்பு என்று வைரம் பதித்த தங்க அணிகலன்கள் பார்ப்பதற்கு சற்றே அருவருப்பாக இருந்த போதும், வாங்குவோரும் விற்போரும் அதை ஆர்வத்துடன் பார்த்தனர்.
உலகில் தங்க உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சீனா 1200 கூடங்களும், கண்காட்சியை நடத்தும் ஹாங்காங் 960 கூடங்களும், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, தைவான், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பர்மா என்ற நாடுகளின் கூடங்களும் எழிலோடு அமைக்கப்பட்டிருந்தன.
உலகில் தங்கத்தை வாங்குவதில் முதலிடம் வகிப்பது இந்தியா என்ற காரணத்தாலோ என்னவோ, அங்கு ஏகப்பட்ட இந்தியர்களைக் காண முடிந்தது. பல்வேறு நாடுகளிலிருந்து நிறுவனங்கள் கூடங்களை அமைத்திருந்த போதும்,  பெரும்பாலான கூடங்களில் இந்திய அமைப்பாளர்களைக் காண முடிந்தது. ஆதிகாலத்திலிருந்தே தங்கத்திற்கு மதிப்புக் கொடுத்து வரும் இந்தியர்கள், உலகம் முழுவதும் பரவி, அதன் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது அதனை உறுதி செய்தது.
வெள்ளை வைரம் தவிரவும், இப்போது பல நிறங்களில் வைரங்களும், மஞ்சள் தங்கத்தைத் தவிரவும், ரோஸ் தங்கம், வெள்ளைத் தங்கமும், வெள்ளை முத்தைத் தவிரவும் பல நிறங்களிலில் முத்துக்களும், எண்ணியும் பார்த்திராத நிறங்களிலில் கற்களும், அனைத்தும் விஞ்ஞான முன்னேற்றத்தைக் காட்டின. செய்யப்படும் ஆபரணங்களின் நேர்த்தியினையும் கண்கூடாகக் காண முடிந்தது. பவளங்கள் உருண்டையாக மட்டுமல்லாமல் பல வடிவங்களில் உருமாறியிருந்தன. பல அளவுகளில் முத்துக்கள்.
தேவைக்கேற்ற கற்களும் தங்கமும், முத்துக்களும் ஒரே கூரைக்குக் கீழே கிடைப்பது அரிதானது. அதை இந்தக் கண்காட்சி வருடாவருடம் சாதித்துக் காட்டி வருகிறது.  இங்குக் கூடங்களை அமைப்போரும் வாங்க விற்க வருவோரின் எண்ணிக்கையும் கூடிய வண்ணமே இருக்கின்றன.
தனிச்சிறப்பு மிக்க நகைகளை நீங்கள் வாங்க விரும்பினால், அந்தக் கனவை இந்தக் கண்காட்சிக்கு வந்தால் நிச்சயம் நனவாக்கிச் செல்லலாம். வாங்க மட்டும் பணம் தேவை.
நம் வரலாற்று நாவல்களைப் படிக்கும் போதும் கல்வெட்டுக்களைப் பற்றிப் படிக்கும் போதும், சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் தங்கம் மற்றும் வைர வியாபாரங்களில் சிறந்தவர்கள் என்றும், அவர்கள் வாழ்ந்த வீதிகளில் அவை குவிக்கப்பட்டு விற்கப்பட்டன என்றும் குறிக்கப்பட்டிருந்து ஏனோ அப்போது நினைவிற்கு வந்தது.
இதைக் கண்டு திரும்பிய போது, எனக்கு இந்தியாவில் பத்மநாப சாமி கோயில் நகைகள் எவ்வளவு இருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது. இங்கு இருந்ததை விடவும் பல மடங்கு அங்கு இருக்கலாம் என்பதை மட்டும் நிச்சயம் உணரவும் முடிந்தது.
Series Navigationவிவேக் ராஜகோபாலின் “ குறுக்கு வழியில் ஒரு டிராபிக் ஜாம் “பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *