தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்

This entry is part 23 of 34 in the series 28அக்டோபர் 2012

இப்படியும் ஒரு புத்தகம் இந்நாட்களில் த்மிழில் எழுதப்படும், அதுவும் அதற்குரிய கௌரவத்தோடும் ஆர்வத்தோடும் பிரசுரிக்கப்படும் என்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. கண்முன் இருப்பது விட்டல்ராவ் எழுதியுள்ள  வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் பழம் நினைவுக் குறிப்புகள். மூர்மார்க்கெட் தீக்கு இரையானதோடு (அல்லது இரையாக்கப்பட்டதோடு?) கருகிச் சாம்பலானது, பழையன கழிதல் ஆகாது, அந்த இடத்தை  ஒரு புதிய ரயில் நிலையம்தான்  பறித்துக் கொண்டது என்றாலும், மூர்மார்க்கெட் தன் நிழலில் வாழ்வு கொடுத்தது பழம் புத்தகக் குவியல்களுக்கும், கிராமஃபோன் ரிகார்டுகளுக்கும் மட்டுமல்ல. பழம் தட்டு முட்டு சாமான்களின் குவியல் அல்ல அவை. அப்படியான தோற்றத்தின் பின் அதைத் தேடுபவர்களுக்கும், பார்க்கத் தெரிந்தவர்களுக்கும் உணர்ந்தறிகிறவர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்துத் தரக் காத்திருக்கும் பாரம்பரியம் அது… இன்றைய சந்தை ஏற்க மறுத்த பாரம்பரியம் அது. தமிழர்களும் சென்னையும் இப்படியும்

ஒரு ஸ்தாபனத்தை, மனிதர்களை உருவாக்கியிருக்கிறதே என்று மலைக்கத் தோன்றுகிறது. அது இப்போது இல்லை. தமிழன் திரும்ப தன் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்.

 

பழம் பத்திரிகைகளை, புத்தகங்களை, தேடித் தேடி வாங்கிப் படிக்கவேண்டும், பின் பாதுக்காகவும் வேண்டும் என்று 40 = 50 வருடங்களைக் கழிக்கும் மனங்கள் இருக்கின்றனவே. விட்டல் ராவின் மூர்மார்க்கெட் நினைவுகளைப் படிக்கும் போது,. அவ்ர் மட்டுமல்ல, பழம் புத்தகங்களையும், கிராமபோன் ரிகார்டுகளையும், பழம் Black bird பேனாக்களையும் வாங்கிச் சேகரித்து விற்பவர்களும் ஒரு தனி உலகைச் சேர்ந்த மனிதர்களாகவே படுகிறார்கள். பழைய ரிகார்டுகளை அங்கேயே கேட்டு வாங்கிக்கொண்டு பழம் ரிகார்டுகளையும் கொண்டு வந்து விற்கவும் முடிகிற காலம் ஒன்று தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்பது எனக்குப் புதிய செய்தி.

 

சிறு வயதில் கார்ட்டூன் கதைகள் படிப்பதிலிருந்தும் அதை வெட்டிச் சேகரித்து வைத்துக்கொள்ளும் பழக்கத்திலிருந்தும் தொடங்கியது எப்படியெல்லாம் வளர்ந்து ஒரு தாகமாக, தேடலாக நம்மை மலைக்க வைத்துவிடுகிறது.! ஆனந்த ரங்கம் பிள்ளையின் 1746 வருடத்திய டைரிக்குறிப்புகள், 1948-ல் பிரசுரமானது 1960-களில் 12 அணாவுக்குக் கிடைக்கிறது. அதுவே அதிக விலையாகப் படுகிறது. 18 வயது தமிழ் வாசகனுக்கு அந்தத் தேடலும் பணச் செலவும் அபூர்வமான ரசனை கொண்டதாகத்தான் இருக்க வேண்டும். நிர்வாண அழகிகளின் புகைப்படங்களையே தன் முக்கிய ஈர்ப்பாகக் கொண்ட ப்ளே பாய் பத்திரிக்கையில் தான் உலகத்தின் மிகப்பெரிய கலைஞர்களின் தத்துவஞானிகளின்  மிக ஆழமான விரிவான பேட்டிகளும் பிரசுரமாகும். அப்போது விட்டல் ராவினுள் வளர்ந்து வரும் எழுத்தாளனின், ஓவியனின் நாடக, சங்கீத ரசிகனின் ஆளுமை ப்ளேபாயை ஒதுக்கவில்லை. பிக்காஸோ, டாலி, சார்த்ர், பெர்க்மன், போன்றோருடனான ப்ளேபாய் பேட்டிகளை முதன் முதலாகப் பார்த்தபோது அவற்றை நான் அதில் எதிர்ப்பார்க்கவுமில்லை. வேறு பத்திரிகைகளில் அந்த ஆழத்திலும் விரிவிலும் நான் பார்த்ததுமில்லை. விட்டள் ராவின் அக்கறைகளும் ரசனையும் மிக விரிவானவை. அது ஓவியம், நாடகம், சரித்திரம், சிற்பம், கலைத்தரமான கோட்டுச் சித்திரங்கள் கொண்ட பத்திரிகை விளக்கப் படங்கள், உலகளாவிய திரைப்படங்கள், இயக்குனர்கள் என அகண்டு விரிந்தது அது. ஒரு தரத்திய கலையும் இலக்கியமும் நாடகமும் எதுவும் அவரது அக்கறைக்கு அப்பாற்பட்டதல்ல. இவற்றைத் தந்த எந்த பத்திரிகையும் புத்தகமும் அவருக்குத் தந்த பழம் புத்தகக் கடைகள் அவருக்கு மூர் மார்க்கெட்டில் கிடைத்தன. காய்கறிகளை பரப்பியதுபோல் பத்திரிகைகளை பரப்பியிருக்கும் இன்று நாம் காணும் நடைபாதைக் கடைகள் அல்ல அவை

 

தனது வாடிக்கைக்காரர், நிஜமாகவே இவருக்குத் தேவை என்று தெரிந்து விட்டால், “ஒரு வாரம் கழித்து வா, வரும் எடுத்து வக்கிறேன்,” என்று சொல்லும், கேட்ட பத்திரிகை வந்தால் பத்திரமாக எடுத்து வைத்துக் காத்திருக்கும் கடைக்காரர்கள் இவர்களில் உண்டு. “ஏன்யா எங்கேய்யா போய்ட்டே, உனக்காக எடுத்து வச்சீ எத்தினி நாளாச்சு தெரியுமா?” என்று கோவிக்கிறவர்களும் உண்டு. சாடர்டே ஈவெனிங் போஸ்ட், அர்கோஸி, லைஃப், ப்ளேபாய், சோவியத் லிட்டரேச்சர், என புத்தக உலகில் தெரிந்த பெயர்கள் மாத்திரமல்ல, இஸ்ரேயில் இருந்து வரும் ஏரியல், பல்கேரிய ஒப்ஸார் போன்ற பத்திரிகைகளும் இப்பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன, அவையும் விட்டள் ராவின் கண்களுக்குத் தப்புவதில்லை. பல்கேரியா போன்ற சோவியத் வட்டத்துக்குள் அடைந்து கிடந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் அரசியலுக்குக் கட்டுப் பட்டிருந்தாலும், கலை, இலக்கிய விஷயங்களில் ரஷ்யாவை விட அதிக சுதந்திரம் பெற்றவர்களாகத் தோன்றுகிறது என்று விட்டல் ராவினால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது. ஆழ்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தான் இது போன்ற விஷயங்கள் தெரிய வரும். அறுபது எழுபதுகளில், க்ருஷ்சேவ், ப்ரெஸ்னயேவ் காலத்தில்கூட, உலகத்திலேயே மிகச் சிறந்த திரைப்படங்களைத் தந்தது கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தாம். ப்ரான்ஸ், ஜெர்மனியையும் கூடப் பின் தள்ளி. Hungaraian Quarterly-யை விட்டல்ராவ் எப்படித் தவறவிட்டார் என்று தெரியவில்லை.

 

Nine Hours to Rama – தடை செய்யப்பட்ட புத்தகம், மகாத்மா சுடப்படுவதற்கு முந்திய நிகழ்வுகளை, அக்கொலைக்கு இட்டுச் செல்லும் நிகழ்வுகளை,மனித மன சலனங்களைச் சித்தரிக்கும் புத்தகம், ஒரு விதமான நியாயப்படுத்தல் கொண்ட புத்தகம்,  நாயக்கர் கடையில் கொக்கோக சாஸ்திரமும் காணும் புத்தகக் குவியலில் கிடைக்கிறது. நாயக்கர் சொன்ன விலை ரூ 1. நாயக்கர் மாத்திரம் இல்லை. ஒரு முதலியாரும், ஒரு ஐயிரேயும் தான்.  வேதநாயகம் பிள்ளையின் சர்வசமய கீர்த்தனைகள், இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் நாணல் படத்தின் மூலம், Desparate Hours, என நிறைய பார்க்கத் தெரிந்தவர்கள் கன்ணுக்குப் படும்.  இப்படி இது பெரிய சாகஸ பிரயாணம் போலத்தான். நேரு மறைந்த  அடுத்த வாரம் இல்லஸ்டிரேடட் வீக்லி கொண்டுவந்த நேரு சிறப்பிதழ்கள் இரண்டும் பழம் –பத்திரிகைகளாக விட்டல் ராவிடம் பத்திரமாக வந்து சேர்கின்றன. க்ருஷேவின் சுயசரித்திரம் (அது அவர் எழுதியதுதானா என்ற சந்தேகம் பின் புலத்திலிருக்க) பிரசுரமான imprint பத்திரிகை, நானும் ஒரு காலத்தில் இம்ப்ரிண்ட் பத்திரிகை வாங்கி வந்தவன் தான். விட்டல் ராவ் மாதிரி முதல் இதழிலிருந்து அதன் கடைசி இதழ் வரை தொடரவில்லை. அதில் எம் எஃப் ஹுசேனின் எழுத்துக்களும் ஓவியங்களும் பிரசுரமானதும் தெரியும். ஆனால் அவை இப்போது என்னிடம் இல்லை. ஆர். கே நாராயணனின் Waiting for Mahatma வும் தி.ஜானகிராமனின் Appu’s Mother-ம் Illustrated Weekly of India’வில் பிரசுரமான போது நானும் வீக்லியில் படித்தவன் தான். ஆனால் அவை என்னிடம் இல்லை. விட்டல்ராவ் சொல்லாத Hermann Hesse –யின் Sidhdhaartha –வும் இதில் அடக்கம். ஒரு வேளை அவர் கவனத்தை வீக்லி ஈர்க்கும் முன் வந்ததாக இருக்கும். ராமன் ஆசிரியராக இருந்த காலத்தியது என்பது என் நினைவு.

 

நான் ஏதோ இப்படிக் கோடிக்காட்டத் தான் முடியும். விட்டல் ராவின் தேடலும், அதற்காக அவர் செலவிட்ட காலமும் பணமும் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள். ஒரு சாதாரண மத்திய தர அரசாங்க ஊழியன், எழுத்தாளனாகவும்,  பரந்ததும் ஆழ்ந்ததுமான படிப்பும் ரசனையும் கொண்டு படிப்பதும் அதற்கான் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் சேகரிப்பதும் பின்னர் அதை ஒரு காப்பகமாக பாதுகாப்பதும் மிகவும் அரிய விஷயங்கள். தனி மனிதனுக்கு அசாத்தியமான காரியங்கள். ஒரு ஸ்தாபனமும் அரசும் செய்யும் காரியங்கள். ஆனால் அவை கடனுக்கும் சம்பளத்துக்கும் செய்யும் காரியங்கள். ஈடுபாடு ஒரு தனிமனிதனின் தாகத்திலிருந்து பிறப்பது. அதுவே இதை சாத்தியமாக்குகிறது.

 

குருஷேவின் சுயசரிதம் நான் படித்ததில்லை. அது எங்கு கிடைக்கும் இப்போது? Nine hours to Rama நான் படித்ததில்லை. படிக்க விரும்புகிறேன். அது தடை செய்யப்பட்ட புத்தகம். அரசியல் காரணங்களுக்காக. ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிஸஸும் டி.எச் லாரென்ஸின் Lady Chatterly”s Lover-ம் தடை செய்யப் பட்டவை தான். தவறான அன்று  நிலவிய இலக்கிய, சமூக ஒழுக்க காரணங்களுக்காக. ஆனால் அப்பார்வை பின்னர் மாற்றம் பெறவே தடை நீக்கப்பட்டு எனக்குப் படிக்கக் கிடைத்தன. 1960-ன் ஆரம்பத்தில். ஜம்மு கடை ஒன்றில். எனக்கு யூலிஸெஸ்ஸும் கிடைத்து. Lady Chatterly”s Lover-ம் கிடைத்தது. ஆனால் ஸல்மான் ரஷ்டியின் சாடனிக் வெர்ஸஸ்-ம் Nine hours to Rama வும் எனக்கு என்றுமே படிக்கக் கிடைகாது. விட்டல்ராவ் போன்ற ஒரு ஆளுமையாக, வேட்கை கொண்டவனாக, அதில் என் ஜீவனைக் கழிக்க விரும்புகிறவனாக நானும் அல்லது யாருமே இருந்து இருக்க வேண்டும். க்ருஷ்சேவின் சுயசரிதம் படிக்கக்  கிடைத்த, வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட விட்டல்ராவ் ஒரு தமிழனாக நமக்கு பெருமை சேர்த்தவர். இம்மாதிரியான தனி மனிதர்களால் தான் தடமிட்டுத் தேய்ந்த பாதையிலிருந்து ஒரு சமூகம் தனக்கென ஒரு புதிய பாதை தன் முன் விரியக் கண்டு அதைத் தனதாக்கிக்கொள்கிறது.

 

ஒரு காலகட்டம் வரை நானும் ஒரு சில வருஷங்களுக்கு தொடர்ந்து லைஃப் பத்திரிகை வாங்கி வந்தேன். 1950=களீல். அமெரிக்க முதலாளித்வ பொய்ப் பிரசாரம் என்று ஒரு பொய் கோஷத்தை இரைச்சலிட்டு ஸ்டாலின் நிகழ்த்தி வந்த ஒரு  கொடூரமான வரலாற்றை இல்லையென்று ஸ்தாபிக்க முயன்ற அன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னர் வாய்மூடி மௌனித்தன. ஸ்டாலின் தொடர்ந்து தன் அரசியல் போட்டியாளர்களையெல்லாம் பொய் வழக்குகளில்சிக்க வைத்துக் கொண்ற கதைகள் லைஃப் பத்திரிகையில் வந்தன. அது ஐம்பதுகளில். ஆனால் விட்டல் ராவ் தான் தொட்ட எதையும் கடைசி வரை விட்டவரில்லை,. அது சாடர்டே ஈவெனிங் போஸ்டோ, லைஃபோ, இம்ப்ரிண்ட் பத்திரிகையோ அல்லது நம்மூர் வீக்லியோ அல்லது சோவியத் லிட்டரேச்சரோ. எதுவானாலும் அவற்றின் முழுச் சேகரிப்பு அவரிடம். சோவியத் லிட்டரேச்சர் படிப்பதில் எனக்கு ஆர்வம் வெகு சீக்கிரம் குறைந்து விட்டது. இவான் டெனிசோவிச்சின் வாழ்க்கையில் ஒரு நாள் என்ற நாவல் முழுதும் வெளியான இதழ் ஒன்றைத் தான் நான் விட்ட உறவின் மீட்சியாக வாங்கிப் படிதேன். அவ்வப்போது ஆந்தெரே வோஸ்னெஸின்ஸ்கியின், எவ்ஜெனி யெவ்டுஷென்கோ வின் கவிதைகள் வரும். பார்ப்பேன். அவ்வளவே. ஆனால் விட்டல் ராவ் போல விடாமல் தொடர்ந்திருந்தால் அவர் கண்ட செகாவ், தால்ஸ்டாய், டாஸ்டாய்வ்ஸ்கி சிறப்பிதழ்களைக் கண்டிருக்க முடியும். இது தான் அவருக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்.

 

சென்னை தெருக்களில் சினிமா விளம்பரங்களை, கோட்டுச் சித்திரமாக வரைந்து கொண்டிருக்கும் ஹுசேனை அவர் பார்த்துப் பேசுவார். அப்பா ராவ் காலரியில் நிழ்ந்த ஹூசேனின் ஒவியக் கண்காட்சியில் காட்லாகில் ஹுஸேனின் கையெழுத்து வாங்கியதைச் சொல்வார். சுற்றியிருப்போர் அவர் பாட்டுக்கு தம் வேலையைக் கவனித்துக்கொண்டு போவார்கள். நானும் தான் தில்லி நடைபாதை சாயாக்கடையில் சிங்கிள் டீ சாப்பிட்டு க்கொண்டிருக்கும் ஹுசேனைப் பார்த்திருக்கிறேன். சுற்றி யிருக்கும் தில்லி வாசி யாரும் அவரைக் கவனிக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவரைத் தெரியாது. அவரும் கவலைப் படமாட்டார்,

 

தான் சேர்த்தது எல்லாவற்றையும் வகைப்படுத்தி செக்ஸன் பைண்ட் செய்து ஒரு காப்பகமாக அவற்றைப் பாதுகாக்கும் விட்டல் ராவ் ஒரு தனிப் பிறவி தமிழ் நாட்டுக்கு. அவரைத் தனிப் பிறவியாக்கி வைத்திருப்பது தமிழ் நாட்டுக்குப் பெருமை அல்ல. இத் தேடலும் சேகரிப்பும் மூர் மார்க்கெட்டைத் தீக்கிரையாக்கிய நிகழ்வுக்குப் பின்னரும் பழைய கடைக்காரர்களைத் தேடிச் சென்றிருக்கிறார். சிலர் வாழ்க்கை நாசமடைந்திருக்கிறது. பழம் பாக்கி கொடுக்கவேண்டும் என்று அவர்களைத் தேடிச் சென்று  கொடுத்திருக்கிறார். பாக்கி மாத்திரமல்ல. 25 ருபாய் கொடுக்குமிடத்தில் 100 ரூபாயாக. கைகால் வசமிழந்து நினைவற்று வெற்று உடலாய்க் கண்ட பழம் உறவு சோகம் நிறைந்தது. இன்னொருவர் இன்னொரு இடத்தில் ஆழ்வாருக்கு உதவியாளாகப் போய்ச் சேர்கிறார். இன்னொரு மனதை நெழச் செய்யும் சந்திப்பு, வெல்லிங்டன் சினிமாவுக்கு எதிரான நடைபாதையில் ஒரு ஊமைப் பையன் கடைவிரித்திருப்பதும் அவனும் விட்டல் ராவுக்கு உதவியாகத்தான் இருந்திருக்கிறான், அவனோடும் விட்டல் ராவ் சம்பாஷித்திருக்கிறார். விட்டல் ராவ்  விடாக்கண்டன் தான்.

 

இன்னொரு மூர் மார்க்கெட் உருவாகவில்லை. முதலியார்களும், ஐயிரேக்களும் முருகேசன்களும் மறைந்து விட்டார்கள.

 

ரோமானியர்களின், கிரேக்கர்களின் எகிப்தியர்களின் சரித்திரத்தை, கலையைச் சித்தரிக்கும் சிறப்பிதழ்கள் பைண்ட் செய்யப்பட்டு இன்றும் விட்டல் ராவின் காப்பகத்தில் உள்ளன என்று நம்புகிறேன். பெங்களூர் வந்ததும் புதிதாக அலமாரிகள் செய்யச் சொன்னதாகச் சொன்னார். என்றாவது அவரிடம் க்ருஷ்சேவின் சுய்சரித்த்தைப் படிக்கக் கேட்கலாம் தான். ஆனால் கேட்க விருப்பமில்லை. காப்பகத்தில் அவை பத்திரமாக அவரிடமே இருக்கட்டும். அவை தமிழ் நாட்டின் சொத்து. கர்நாடகாவில் ஒரு தனி நபரின் பாதுகாப்பில் இருந்த போதிலும்

 

ஒரு வேளை விட்டல் ராவும்  அவரது தேடலும்  சேகரிப்பும் ஒரு கால கட்டத்திய நிகழ்வுகளோ என்னவோ. இன்று அவர் போன்ற மனிதர்களின் வேட்கைக்கு, தேடலுக்கு, சேகரிப்புக்கு தேவை இல்லை போலும். இருக்கலாம். இணையத்தில் கிடைககாததா? லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்ன, உலகத் திரைப்படங்கள் என்ன எல்லாம் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து புத்தகம் எழுதி தம் தலையைச் சுற்றி ஒளிவட்டம் சுழன்று பிரகாசிக்கச் செய்வது இயலும் என்றால், இந்தப் பாடெல்லாம் ஏன்?

 

விட்டல் ராவ் தன் தேடலின் பத்திரிகை புத்தகச் சேர்க்கையின் வரலாற்றைச் சொல்லிச் செல்ல, அப்பழமையின் காட்சிகளையும் இப்புத்தகத்தைப் பிரசுரித்துள்ள நர்மதா பதிப்பகம், படங்களோடு, சித்திரங்களோடு ஒரு பரிசுப் பதிப்பாக வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. தமிழ் பதிப்பாளர்கள் இப்படியெல்லாம் நினைப்பதில்லை. (ஒரு பதிப்பகத்தைத் தவிர).

 


வாழ்வின் சில உன்னதங்கள்: விட்டல் ராவ்: நர்மதா பதிப்பகம்,10, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர்- சென்னை – 17 ப. 219. விலை ரூ 200.. .  .   . .

Series Navigationதபால்காரர்மரப்பாச்சி இல்லாத கொலு
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *