பொருனைக்கரை நாயகிகள் (திருப்புலியூர் சென்ற நாயகி)

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 9 in the series 19 பெப்ருவரி 2017

எஸ். ஜயலக்ஷ்மி

குட்டநாட்டுத் திருப்புலியூர் மலை நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. சோழநாட்டுத் திருப்புலியூரை வேறு படுத்திக்காட்ட, இதைக் குட்டநாட்டுத் திருப்புலியூர் என்று அழைக் கிறார்கள். எம்பெருமான் திருநாமம் மாயப்பிரான்

தலைவியும் தோழியும்
நாயகியின் நடவடிக்கைகளை அவள் தாய் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே தோழி தெரிந்து கொண்டு விடுவாள். சில சமயம் நாயகியே தன் அந்தரங்கங்களைத் தோழியிடம் பகிர்ந்து கொள்வாள். தன்னுடைய காதல், காதலன், தங்களுடைய சந்திப்பு இவற்றையெல்லாம் தாயிடம் பகிர்ந்து கொள்வதை விட தோழியிடம் பகிர்ந்து கொள்வதையே விரும்பு வாள். பராங்குசநாயகி காலத்திலிருந்து இன்றும் இப்படித் தோழி யிடம் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கிறோம். தாய்
மார்கள் நாயகியின் எண்ணத்துக்கு எதிராகப் பேசுவதால் அவர்களை இப்பெண்கள் தமக்கு எதிரிகளாக நினைக்கவும் தவறவில்லை. அத னால் தான் தன் காதல் அனுபவங்களைத் தோழியிடம் தெரிவிக்கி றாள்.
தோழிகளே! என் நிலையை என் தாய் மார்களிடம் கூட சொல்ல நான் வெட்கப்படுகிறேன். அவர்கள் எனக்கு எதிராகப் பேசுவார்கள். அதனால் உங்களிடம் சொல்கிறேன்.
இருந்தாலும் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல முடிய வில்லை. என் நெஞ்சம் அந்த மாயப் பிரானிடம் சென்று விட்டது. அதனால் என் உடல் மெலிந்து கைவளையல்கள் கழன்று விழுந்தன. ஒளி இழந்து விட்டேன். உடல் தளர்ந்து விட்டேன். பசலை அடைந்து விட்டேன்
தோழிகளே! என் உள்ளம் கவர் கள்வ னான தாமரைக் கண்ணனைக் கண்டால் என்னிடமிருந்து அவன் கவர்ந்த என் வளையையும், என் நிறையையும் பெறலாம் என்று முகில் வண்ணனான கண்ணனைத் தேடிச் சென்றேன்.

தோழிகளே! அவனை நினைக்கும் பொழுது அந்தச் சோதி என் சொல்லில் அடங்கமாட்டேன் என்கிறது. ஏன்? பிரமன் முதலான தேவர்களுக்கே புலப்பட வில்லையே! அவனோ தன் அழகு குணங்களால் என்னைக் கவர்ந்து என் நிறத்தையும் என் நிறையையும் கொண்டான். ஆனால் தான் அணிந்துள்ள திருத்துழாய் மாலையைத் தர வில்லையே! இந்த அநியாயத்தை யாரிடம் சொல் வேன்? அவன் வாசலில் சென்று முறையிடுவதைத் தவிர வேறொன் றும் தெரியவில்லை. என்னிடமிருந்து எல்லாவற்றையும் கவர்ந்து கொண்டவன் ஒரு மாலையாவது தருவது தானே நியாயம்? இதைக் கேட்பதற்காக அவனைத் தேடிச் சென்றேன். இதை அறிந்த ஊரார் என்னைப் பலபடியாகத் தூற்றினார்கள். ஊர்ப்பழியும் என்மேல் விழுந்தது.

ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர்!
இனி நாணித்தான் என்?

நானோ ஸ்ரீதரா, கேசவா, மாதவா, கோவிந்தா, நாராயணா என்று அவனுடைய பல்வேறு நாமங்களையும் சொல்லிச் சொல்லிக் கூக் குரலிடுகிறேன். அவனோ? என்னை இப்படி ஓலமிடும்படி செய்து விட்டுத் தன் உருவத்தையோ அடையாளத்தையோ காட்ட மறுக் கிறான். தோழிகளே! என்ன நேர்ந்தாலும் அவனைக் காண்பேன் இது ஆணை

மால், அரி, கேசவன், நாரணன், சீ மாதவன்
கோவிந்தன் என்றென்று
ஓலம் இட என்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்
என்னுடைத் தோழியர்காள் என் செய்வேன்
காலம் பல சென்று காண்பது ஆணை

என்று ஆணித்தரமாகப் பேசுகிறாள்.

நெஞ்சு செய்த சதி
அந்த மாயக் கண்ணன் எவ்வளவு ஞானம்
பெற்றவர்களுக்கும் தன்னை உள்ளபடி காட்டிக் கொடுக்க மாட்டான்.

குறள் வடிவம் கொண்டு வந்த மாயவன் பூமியும் வானமும் அடங் கும் படி பெரிய வடிவெடுத்த தேவபிரானுக்கு என்னை இழந்த நான் என் அடக்கத்தையும், வெட்கத்தையும் கொடுத்து விட்டேன் இவற்றை யெல்லாம் இழந்த பின் இழப்பதற்கு வேறு என்ன இருக்கிறது? இனி வேறு எதை நான் கொடுக்க முடியும்?

தோழிகளே! என் மனமோ என்னிடம் “இனிமேல் உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி விட்டு என்னை நீங்கிச் சென்று விட்டது. எங்கே தெரியுமா? சங்கு, சக்கரங்களை ஏந்திக் கொண்டு நீல நெடுங்குன்றம் போல
விளங்குகிறானே அவனிடம் தான்!

என் நெஞ்சு என்னை
’நின்னிடையேன் அலேன்’ என்று நீங்கி
நேமியும், சங்கும், இருகைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பான்மதி ஏந்தி ஓர் கோல நீல
நன்னெடுங்குன்றம் வருவது ஒப்பான்
நாண்மலர்ப் பாதம் அடைந்ததுவே

என்று தன் நிலையை விவரிக்கிறாள். ”உன் நன்மையையே நாடு கின்றவர்களான எங்களுடைய பேச்சையும் கொஞ்சம் கவனித்துக் கேள்” என்று சொல்லும் தோழிகளிடம், தோழிகளே! நீங்கள் சொல் வதையெல்லாம் கேட்பதற்கு நெஞ்சு வேண்டுமல்லவா? அது இங் கில்லையே. அவனிடம் போய் விட்டதே! என்கிறாள்.

தோழியின் சாமர்த்தியம்
தன் தலைவியின் (நாயகியின்) செயல்கள் அனைத்தையும் அறிந்த தோழி, அவளுக்குப் பெற்றோர் மணம் பேச நினைப்பதை அறிந்து திடுக்கிடுகிறாள். தன் தலைவி யின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதை அறிவாள். ஆனால் இதுவரை தலைவியின் பெற்றோரிடம் சொல்லவில்லை. இப்பொழுது சொன்னால் இதுவரை ஏன் தெரிவிக்கவில்லை என்று கோபித்தால் என்ன செய்வது என்ற அச்சம். எனவே இப்பொழுது தான் தனக்குத் தெரிய வந்ததாகக் காட்டிக் கொள்கிறாள். எனவே அன்னைமீர்!

திருமால் எம்மான் செழுநீர் வயல் குட்ட நாட்டுத்
திருப்புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள், இதற்கு என்
செய்கேனோ?

என்று ஒன்றும் தெரியாதவள் போலப் பேசுகிறாள். ”உமது மகள்
எம்பெருமானுடைய நாமத்தைச் சொன்னவள் அவனுடைய வண்
ணத்தையும், அவனுடைய ஊரையும் புகழ்ந்து பேசுகிறாள்.சூரியனும்
அவனைச் சுற்றிலும் விளங்கும் பல்வேறு வகைப்பட்ட நக்ஷத்திரங் களும் போல எம்பெருமான் தன் திருமுடியும், ஆரமும், ஆபரணங்க
ளோடும் விளங்குகிறான். திருப்புலியூரோ புன்னை மரங்கள் சூழ்ந்து விளங்குகிறது என்று மூர்த்தியின் வண்ணத்தையும் அவன் ஊர் வளத்தையும் அவள் புகழ்ந்துகொண்டே யிருக்கிறாள்

அணிமேருவின் மீது உலாவும்
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீள்முடி ஆரம் பல்கலன் தானுடை எம்பெருமான்
புன்னை அம்பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே

என்று தலைவியைப் புகழ்கிறாள்.

தோழியின் திகைப்பு
நாயகியின் பேச்சையும், தோற்றத்தை யும், நடவடிக்கைகளயும் கவனித்த தோழிக்கு இப்பொழுது ஒரு உண்மை தெளிவாகிறது. நாயகி பெருமானுடன் இரண்டறக் கலந்து விட்டதை அவள் ஊகித்து விடுகிறாள். இவளைப் பார்த்தாலே இவள் திருப்புலியூர் அப்பனின் காதலைப் பெற்று அவன் திருவருளுக்குப் பாத்திரமாகி விட்டாள் என்பதை அவள் கூர்த்த மதி கண்டு பிடித்து விடுகிறது. இவளுடைய ஆடை ஆபரணங்கள் தான் எப்படி சோபை யுடன் விளங்குகிறது! இவள் வடிவிலேயே புதிய ஒளி தெரிகிறதே!
என்ன காரணம்? எல்லாம் அப்பனின் திருவருள்!

புனையிழைகள் அணிவும் ஆடை உடையும்
புதுக் கணிப்பும்
நினையும் நீர்மையது அன்று, இவட்கு இது நின்று
நினைக்கப்புக்கால்
சுனையினுள் தடம் தாமரை மலரும்
தன் திருப்புலியூர்
முனைவன் மூவுகாளி அப்பன் திரு அருள்
மூழ்கினளே

என்ற முடிவுக்கு வருகிறாள். அவன் திருவருளை அடைந்ததற்கு இன்னும் வேறு சாட்சிகளும் வேண்டுமோ? கண்ணபிரான் திருவருள் கிட்டியதற்கு மறுக்க முடியாத, மறைக்க முடியாத அடையாளங்க ளும் உள்ளன. இவளுடைய உதடுகளைப் பாருங்கள். அவை திரு வருள் கமுகு என்னும் பாக்குமரத்தின் சிறந்த பழத்தைப் போல் விளங்குகின்றன. திருவருள் கமுகு என்று சில உண்டு. இவை நீரால் வளருவதன்றி பிராட்டியும் பெருமானும் திருக்கண்கள் நோக்க அதனால் வளருவன.
தோழி மீண்டும் சொல்கிறாள். “தாய்மார் களே! மூவுலகாளி அப்பன் திரு அருளில் மூழ்கின இவள் ஆதி சேஷனில் பள்ளி கொண்ட பாம்பணையான் நாமம் தவிர வேறு எதையும் பேச மாட்டாள். இரவும் பகலும் திருப்புலியூர் புகழைத்தவிர வேறெதையும் புகழ மாட்டாள். பரவ மாட்டாள். அன்னையே! உங்கள் மகளைக் கவனித்துப் பார்த்தீர்களா? அவள் உடம்பிலிருந்து திருத் துழாயின் மணம் வீசுகிறதல்லவா? இதைவிட வேறு சாட்சி வேண் டுமா? இவள் திருப்புலியூர் பெருமானின் திருவருளுக்குப் பாத்திர மாகி விட்டாள்.

தோழியின் உறுதி.

அன்றி மற்றோர் உபாயம் என்?
இவள் அம் தண் துழாய் கமழ்தல்
குன்றம் மாமணி மாடமாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கித்
தென் திசைத் திலதம் புரை
குட்ட நாட்டுத் திருப்புலியூர்

நின்ற மாயப்பிரான் திரு அருளாம்
இவள் நேர் பட்டதே

தாய்மார்களே! நீங்கள்கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சி அடையுங்கள் உங்கள் மகள் திருப்புலியூர்

மல்லல் அம் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்

என்று உறுதியாகக் கூறுகிறாள் தோழி.

Series Navigationசாதாரணதும் அசாதாரணமானவையும் – எஸ்ஸார்சியின் புதிய சிறுகதைத் தொகுப்பு “சொல்லில் நிரம்பிய குளம்”
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *