மஹாளயத்தில் பொன்னம்மா யார்?

1
0 minutes, 1 second Read
This entry is part 32 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு, பலாமூசு, வாழைத்தண்டு, என்று தேடித்தேடி வாங்கிவருவாள். நல்ல வெண்ணெயை வாங்கி காய்ச்சி ஹோமங்களுக்கும் சமையல் சாப்பாட்டுக்கும் பக்ஷணங்களுக்கும் வைப்பான். நுனிவாழைஇலை வாங்கி வருவான்.

வருடத் திதி வருகிறதென்றால் ஒருவாரம் முன்னாலிருந்தே அதே நினை வாக காய்ந்த வரட்டி, சிராய் என்று ஓமம் வளர்க்க தயார்ப்படுத்துவான்-அப்பா வருகிறார் என்று. அதை கர்மசிரத்தை என்பார்கள். அப்படிமுடிப்பான். ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன.

அன்று மஹாளய தர்ப்பணம் செய்தான் கணேசன், வாத்தியாருக்கு வரமுடியவில்லை என்று போன் செய்துவிட்டார். “ஓரிடத்தில் சிரார்த்தம், ஒரு ’தவறவிட்ட கேஸ்’ வேறு கூடுதலாகக் கிட்டியிருந்தது. அதனால் நீங்களே புத்தகத்தை வைத்துக்கொண்டு செய்துவிடுங்க. சாயரட்சை நான் வந்து தாம்பூலம் எடுத்துக்கறேன்” என்று சொன்னார்.

சரி என்று கணேசன் தானே செய்தான். அப்பா, தாத்தா கொள்ளுத்தாத்தா, பாட்டி, பாட்டியின் மாமியார், பாட்டி மாமியாரின் மாமியார் என்று மூன்று தலைமுறைகளைக் கூப்பிட்டு தீர்த்தம் கொடுப்பது. தெரிந்தவர்கள் அறிந்த வர்கள், வாரிசு இல்லாதவர்களுக்கும் கொடுக்க முடியும். மாஹாளய பக்ஷம் என்பது இறந்தவர்களுக்கும் தாகசாந்தி செய்ய ஏற்பட்ட காலம். 15 நாட்கள் இறந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் புரட்டாசியிலோ சில சமயம் ஆவணியிலோ வரும். அதாவது ஆவணி மாதம் பௌர்ணமிக்குப் பிறகு மஹாளய அமாவாசைவரையிலான 15நாட்கள். அப்போது தெய்வத்திற்குச் செய்தாலும் அது இறந்தவரையே சேரும் என்று சொல்வார்கள். புரட்டாசி சனிக்கிழமை கொண்டாடுபவர்கள்கூட மஹாளய பக்ஷத்தில் செய்யமாட்டார் கள்.

கணேசன் தன் குடும்பத்தவர்கள் பெயர்களைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்தான். எல்லாப் பெயர்களும்அம்மாவுக்குத் தெரியும், ஒவ்வொருவரையும் நினைத்துக் கொண்டாள்.

’பாவம் மாமியார்! மாமனார் காலாலேயே உதைப்பார். மருமகள் எதிரில் கூசி, குறுகித்தவிப்பாள்.அவளும் சாகும்வரை புருஷனிடம் அடிபட்டவள்.அவளுக்கு மாமியார் காசிக்குப்போய் திரும்பவில்லையாம், தாத்தா தொண்ணூற்றி யாறு வயது வாழ்ந்தார். கணேசனின் அப்பா இறப்பதற்கு ரெண்டு வருடம் முன்னாலே தான் போனார்…’

’அது சரி, இதாரு இது பொன்னம்மா? கணேசன் ஏன் அவளுக்குப் போய் தர்ப்பணம் விடறான்? ‘

”நம்ம குடும்பத்துலேயே யாருமே அந்தப் பேர்ல இல்லயேடா? எந்தப் பொன்னம்மாளைக் கூப்பிட்டு மூணு தடவை தர்ப்பணம் பண்ணினே?

கணேசன் நிதானமாகச் சொன்னான்: ”ஏம்மா? மறந்துட்டாயா? மறந்து போயிட்டா விஷயமே இல்லைனு ஆயிடுமா? கிணத்துலே மிதந்த பொன்னம்மா நமக்கு என்ன சாபம் எப்படி எல்லாம் குடுத்தாளோ? எனக்கு அப்போ புரியலை. ஆனா அவங்க மனசு குளிரவேண்டும். அப்போதான் நம்ம குடும்பம் நல்லாயிருக்க முடியும். அதனாலே தான் மஹாளய பக்ஷத்திலே கோத்திரம் வயசு வருடம் திதி ஏன் பேர் தெரியாட்டாக்கூட அவங்களை ஆனசுலே நெனச்சு நம்பிக்கையோட எள்ளும் தண்ணியும் குடுத்தா கட்டாயம் அந்த ஆத்மாவுக்கு தாகசாந்தி கிடைச்சு மனசு குளிர்ந்துவிடும். எனக்கு நம்பிக்கை இருக்கு. அதான், நான் பொன்னம்மாவை நினைச்சு நம்பிக்கை யோட எள்ளும் தண்ணியும் தர்ப்பணம் பண்ணறேன்”, என்றான்.

பதில் பேசாத அம்மா அந்த பொன்னம்மாவை நினைவுபடுத்திக் கொண்டாள். குடியானவப் பெண் பொன்னம்மா சுள்ளி பொறுக்க காட்டுப்பக்கம் போவாள். வரப்பில் விளைந்த காய்கிழங்குகளை எடுத்துவந்து கொடுப்பாள். அரிசி புடைப்பாள், கல்கொத்தி, களைபிடுங்கி சீர்செய்து கொடுப்பாள்… கணேசனின் அப்பா பெண்கள் விஷயத்தில் சற்று சபலம். ஆனாலும், தந்தையிடம் பயம் அதிகம். அதனால் எந்த விபரீதமும் ஏற்படவில்லை.

ஒருமுறை கிழவர் வெளியூருக்கு ஒரு திருமணத்திற்குபோயிருந்த சமயம் கணேசனும், அம்மாவும் போயிருந்தார்கள். ஏதோ வேலையாக வந்த பொன்னம்மாவை வாயில் துணியை அடைத்து தன் விருப்பத்தை தீர்த்துக் கொண்டார் கணேசனின் தந்தை. அவள் கிழவரிடம் சொல்லுவேன், அம்மா விடம் சொல்லுவேன் என்று அழுதாள். என்ன செய்வது, பின்புறமிருந்த பாழும் கிணற்றில் அவளைத் தள்ளிவிட்டார்.

மூன்று நாட்கள் ஆனபின் நாற்றம் அடித்தபோது ஊரிலுள்ள மக்கள் வந்து பார்த்தனர். பொன்னம்மாவைக் காணோம். ஆற்றின் எதிர்கரையில் அவளு டைய மாமன் வீடு இருந்தது. அங்கு போவதுண்டு. அவள் அங்கு போயிருப் பாள் என்று தேடாமலிருந்தார்கள். அப்படியிருக்க அவள் எதற்கு கணேசன் வீட்டுக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள் என்று ஊர்மக்கள் குழம்பினார்கள்.

பத்துநாட்கள் ஆனபின் எல்லாருமே அவளை மறந்துவிட்டார்கள்.

கணேசனின் அப்பா கலகலப்பில்லாமல் வளைய வந்தார், சாகும்போது ”பொன்னம்மா சாபம் குடுத்துட்டாள்” என்று புலம்பினார், ஏன்? எதற்கு? என்ற விவரம் எதுவும் சொல்லவில்லை, இரண்டுநாளில் இறந்துவிட்டார்….

_’இப்போது நீ செய்தது மிகச் சரியான காரியம்தான்’ என்று கூறுவதாய் வாஞ்சையும் வருதமுமாய் கணேசனைப் பார்த்தாள் அவனுடைய தாய்.

*valee1938@gmail.com

Series Navigationதொலைந்த காலணி..பா. சத்தியமோகன் கவிதைகள்
author

கோமதி

Similar Posts

Comments

  1. Avatar
    ரேவதி நரசிம்ஹன் says:

    கணேசன் பொறுமையாகத் தர்ப்பணம் செய்கிறான். கணேசனின் அம்மா எப்படிப் பொறுமையாக இருந்தாள்:(
    கதை அருமை. நல்ல விவரமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *