ரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்

This entry is part 30 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

இஸ்லாத்தின் புராதன பொருளியல் கோட்பாட்டின் நோக்கம் என்பதே துவக்க காலத்தில் நாடோடி மேய்ச்சல் சமூக வாழ்வியல் முறை சார்ந்த மக்காநகர் குறைஷிகளுக்கும், வணிக வாழ்வியலில் மேம்படுத்தப்பட்டிருந்த மதினாவாசிகளுக்கும் இடையேயான பொருளியல் ஏற்றத்தாழ்வையும் முரண்பாட்டையும், பகைமையும் சரிப்படுத்தும் விதத்தில் செல்வத்தை சமபங்கீடு செய்தலை நோக்கிய பயணமே ஆகும்.இதுவே பின்னர் உலகியல் கோட்பாடாக உருவாகிறது

ஸகாத் என்பதற்கு தூய்மையையும் வளர்ச்சியையும் உருவாக்குதல் என்பது உள்ளார்ந்த பொருளாகும். இதுஏழ்மையின் பிடியில் சிக்கி பலவீனப்பட்டுக் கிடக்கும் ஏழை எளிய மக்களுக்கு வசதி படைத்தோரை தாராள உள்ளத்துடன் உதவி செய்யத் தூண்டும் நடவடிக்கையாகும்..மக்காவின் திருக்குர்ஆன் வசனங்கள் ஜகாத்தை ஒரு தர்மச் செயலாக அணுகுகிறது. மதினாவில் நபிகள் நாயகம் (ஸல்)ஆட்சியமைப்பை ஏற்படுத்தியபின் அது கட்டாய கடமையாகிறது. அரசு நிர்வாக பிரதிநிதிகள் ஜகாத்தை வசூலிக்க நாடெங்கும் அனுப்பப்பட்டும் உள்ளனர். மதினாவில் இறங்கப்பெற்ற திருமறை வசனம் ‘ஜகாத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ, தொழுகையையோ அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லையென திட்டவட்டமாக அறிவித்தது.

நலிந்தவர்களையும், வறுமைப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நோக்கமே ஜகாதின் பிரதான அம்சமாகும். இதற்கென வகுக்கப்பட்ட பொருளியல் திட்டமே வசதியுடையோர் தமது சொந்த நுகர்வின் அடிப்படைத் தேவைபோக தங்களது அசையும் சொத்து அசையா சொத்து அனைத்திற்கும் ஜகாத் வழங்கவேண்டும் என்பதாகும். ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் செல்வம் இருந்தால் அவர் கட்டாய கடமையாக ஸகாத் என்னும் ஏழைவரியை குரான் சுட்டிக்காட்டும் வறியவர்கள், ஏழைகள், உழைப்பவர்கள்,விடுதலைக்கான அடிமைகள் உள்ளிட்ட எட்டுவகைப் பிரிவினருக்கும் வழங்க வேண்டும்.

நிஸாப் எனும் சொல் நிர்ணயிக்கப்பட்ட அளவு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.செல்வம் என்பது மூலதனம்,முதலீடுகள்,உற்பத்தி, லாபம் என்பதான நான்குவகை பிரிவுகளையும் சேர்த்துகுறிப்பதாகும்.இதுவீடு,நிலம்,தொழிற்சாலை,சேமிப்புகள்,தங்கம்வெள்ளிஉள்ளிட்டவிலையுயர்பொருள்கள்,வாகனங்கள்,உற்பத்திகருவிகள் நிதிமூலதனம் உள்ளிட்ட வியாபார முதலீடுகள், ஆடு மாடு, ஒட்டகம் என தொடரும் கால்நடை சொத்துக்கள் விவசாய விளைபொருட்கள், தொழில் உற்பத்தி பொருட்கள் என நிகழும் அனைத்து பொருளாதார அம்சங்களைச் சார்ந்ததாகும்

நிஸாப் – குறைந்தபட்சம் நிர்ணயிக்கப்பட்ட அளவு என்பதன் கணக்கீடு சுத்த தங்கத்தின் மதிப்பீட்டில் நிர்ணயம் செய்யப்படுகிறது. 85கிராம் தங்கம்,அல்லது 595 கிராம் வெள்ளி மதிப்பை கடக்கும் நிலையில் அப் பொருளுக்கு 2.5 சதவிகிதம் ஸகாத் வழங்கப்பட வேண்டும்.

தங்கம் வெள்ளி தவிர பிற சொத்துகளுக்கும் இம்மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இரண்டரை சதவிகிதம் ஸகாத் வழங்கப்பட வேண்டும்.இது விவசாய உற்பத்திபொருள் மற்றும் கால்நடை சொத்துகள் தவிர்த்த சொத்துக்களுக்கான அளவீடாகும்.

தனதுநிலத்தில் மதிப்புயர்ந்த கிரானைட் உள்ளிட்ட சுரங்க நில வளப் பொருட்கள் எண்ணெய் கிணறுகள், தங்கப் புதையல்களோ இருக்குமாயின் அவை தேசியமயமாக்கப் படாத சூழ்நிலையில் அச் சொத்துகளுக்கு இருபது சதவிகிதம் ஸகாத் வழங்கப்பட வேண்டும்.

இந்த ஸகாத் விதி கால்நடை சொத்துக்களுக்கும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஐந்து ஒட்டகங்களுக்கு மேல் இருந்தால் அதற்கு ஒரு ஆடு ஸகாத் ஆகும்.நாற்பது ஆடுகளுக்கு மேல் இருந்தாலும் ஒரு ஆடு ஸகாத் வழங்கப்பட வேண்டும்.

விவசாய நிலங்களுக்கு ஜகாத் இரு வேறுவிதமான அளவீட்டில் கடமையாக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி நிகழ்ந்து அறுவடையானவுடன் கிடைக்கும் விவசாயப் பொருள்களுக்கு விவசாயியின் சொந்த உழைப்பை அடிப்படை அலகாக வைத்து இரண்டு வழிகளில் இந்த அளவீடு சொல்லப்படுகிறது.

உழைப்பு சக்தியை செலவழித்து, அந்த விவசாயி நீர் இறைத்து அப்பயிரை விளைவித்திருந்தால் நூற்றுக்கு ஐந்து சதவிகிதமும் நீர் இறைக்காமல் சுயமாக விளைவித்திருந்தால் நூற்றுக்கு பத்து சதவிகிதமும் ஜகாத் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருடத்தில் அந்த விளைநிலத்தில் மூன்று போகம் விளைந்தால் மூன்று தடவையும் ஜகாத் கொடுக்கப்படவேண்டும்.

தற்போதைய சூழலில் இது நெல், வாழை, தென்னை, ரப்பர், கிராம்பு, தேயிலை, காப்பி உட்பட்ட அனைத்து வகை உணவுப் பயிர், பணப்பயிர், தோட்டப் பயிர்களுக்கான வேளாண்மை வருமானத்திற்கும் வழங்கப்படவேண்டும் என்பதே இதன் நீட்சியாகும்.

மேலும் வருமானத்தையும், முதலீட்டையும் அளவீடாகக் கொண்டு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், வணிகவியல் வளாகங்கள், நிலம், வாகனங்கள் மற்றும் நிதி முதலீடுகள் சார்ந்த அனைத்து சொத்துக்களுக்கும் ஆண்டுதோறும் நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் ஏழை வரியாக பகிர்ந்தளிக்கவேண்டும்.

இந்நிலையில் ஜகாத் குறித்த வகாபிசத்தின் தற்போதைய பார்வை என்பதே நவீன முதலாளிய நலன்கள் சார்ந்து மாறுபாடடைந்துள்ளது. ஒரு நபர் தனது செல்வங்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதுமானது. ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் ரமலான் என்பதற்கான பொருள் கரித்தல் / சுத்தப்படுத்துதல் என்பதாகும். செல்வத்தை ஒருமுறை சுத்தப்படுத்தினால் சுத்தமாகிவிடும். திரும்ப திரும்ப சுத்தப்படுத்த வேண்டிய தேவையில்லை என்பதான விளக்கமாக இது மாற்றப்பட்டுள்ளது.

இன்றைய வகாபிசத்தின் இக்குரல் மிகத்தெளிவாக கோடி கோடியாக உற்பத்தியிலும், வணிகத்திலும் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகளின் நலன்களையும், லாபத்தையும், மூலதனப்பெருக்கத்தையும், பாதுகாப்பதற்கான குரலாகவே இஸ்லாமிய தளத்தில் ஒலிக்கிறது. இஸ்லாம் முன்வைத்த ஏழை எளிய நலிந்த மக்கள் பிரிவினரின் நலன்களை பாதுகாத்தல் என்கிற அறவியல் சமத்துவகோட்பாட்டிற்கு வகாபிசம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது.

————-

Series Navigationமாத்தி யோசி…!தொலைந்த காலணி..
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Comments

  1. Avatar
    தங்கமணி says:

    //நாடோடி மேய்ச்சல் சமூக வாழ்வியல் முறை சார்ந்த மக்காநகர் குறைஷிகளுக்கும், வணிக வாழ்வியலில் மேம்படுத்தப்பட்டிருந்த மதினாவாசிகளுக்கும் இடையேயான பொருளியல் ஏற்றத்தாழ்வையும் முரண்பாட்டையும், பகைமையும் சரிப்படுத்தும் விதத்தில் செல்வத்தை சமபங்கீடு செய்தலை நோக்கிய பயணமே ஆகும்//
    ஆதாரம் என்ன? மெதீனாவாசிகள் செல்வந்தர்களாக இருந்தார்கள் என்றால் ஏன் மெக்காவாசிகளின் வியாபார காரவான்களை கொள்ளையடிக்க வந்தார்கள்?

    //மக்காவின் திருக்குர்ஆன் வசனங்கள் ஜகாத்தை ஒரு தர்மச் செயலாக அணுகுகிறது. மதினாவில் நபிகள் நாயகம் (ஸல்)ஆட்சியமைப்பை ஏற்படுத்தியபின் அது கட்டாய கடமையாகிறது. //
    ஏன்? மக்காவில் கொண்ட கருத்தை ஏன் ஒரு சில வருடங்களுக்குள் மெதீனா சென்றதும் மாற்றிகொள்கிறார் அல்லாஹ்?

    ஜகத் இஸ்லாமிய சேவை நிறுவனங்கள் முஸ்லீமா முஸ்லீம் அல்லவா என்று பார்த்துத்தான், எந்த பேரிடராக இருந்தாலும் சேவை செய்கின்றன.

    Pakistan: some Christians denied aid unless they convert to Islam
    http://www.catholicculture.org/news/headlines/index.cfm?storyid=7460

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *