விளையாட்டு வாத்தியார் – 1

author
0 minutes, 19 seconds Read
This entry is part 6 of 29 in the series 12 மே 2013

 

தாரமங்கலம் வளவன்

வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

 

வள்ளிக்கு எதையும் நம்ப முடியவில்லை. தனக்கு நடந்தது கல்யாணம் என்பதும், இனிமேல் விளையாட்டு வாத்தியார் குமார் தான் தனக்கு புருஷன் என்பதும் நம்புவதற்கு சிரமமாக இருந்தது.

 

அண்ணன் செல்வத்தை போலீசில் பிடித்துக்கொடுத்த விளையாட்டு வாத்தியார் குமாரையே தான் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தது பற்றி அவளுக்கு வியப்பாய் இருந்தது. நடந்தது அண்ணன் செல்வத்துக்கு பிடிக்காது என்பது மட்டும் தெளிவாய்  புரிந்து, கைகாலெல்லாம் நடுங்கியது அவளுக்கு.

 

ரிஜிஸ்டர் கல்யாணத்திற்கு அவளுடைய கிராமத்திலிருந்து வந்து வள்ளியின் சார்பாக சாட்சி கையெழுத்து போட்ட பக்கிரி,  ஊனமான தன் காலை ஒரு முறை தொட்டுபார்த்துக் கொண்டான். அவனுக்கும் வள்ளியின் அண்ணன் செல்வத்தை நினைத்து, பயமாக இருந்தது.

 

ஊனமான தனக்கும், வெகுளிப் பெண் வள்ளிக்கும் பொருத்தம் என்று தான் இது வரை நினைத்து வந்ததற்கும், இப்போது அவளுக்கு வேறு ஒருவனை தானே கல்யாணம் செய்து வைக்கும் நிலைமைக்கு வந்ததற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து பார்த்தான்.

 

அதில் வருத்தம் ஏதும் இல்லாமல் மனம் நிறைவாகவே இருப்பதாகத் தோன்றியது பக்கிரிக்கு.

 

செல்வம் அடிக்கும் போது, தன்னை பிழைத்து போ என்று விட்டு விட்டது கூட தன் கால் ஊனத்தை பார்த்து தான் என்பதும் நினைவுக்கு வந்தது.

 

இல்லையென்றால் கோலப்பனை அடித்து கொன்றது போல் அவனையும் செல்வம் கொன்றிருப்பானோ…

 

பக்கிரி மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த விளையாட்டு வாத்தியார் குமாரை  பார்த்தான். வள்ளியும் மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த விளையாட்டு வாத்தியார் குமாரை  கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

கழுத்தில் மாலையுடன் அவர் அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்.

 

தீடீரென்று ஜன்னலுக்கு வெளியே கடைத்தெருவில் யாரோ ஓடும் சத்தம் கேட்டது. பக்கிரியும், வள்ளியும் திரும்பிப் பார்த்தார்கள். போலீஸ் ஒரு மனிதனை துரத்தி கொண்டு ஓடுவது தெரிந்தது.

 

துரத்தப்படும் அந்த மனிதனைப் இருவரும் உற்றுப்பார்த்தார்கள்….

 

“ வள்ளி… அது செல்வம் அண்ணன் தான்….” பக்கிரி சொன்னான்.

 

“ ஆமாண்டா பக்கிரி… அது அண்ணன் தான்…” வள்ளி பதில் சொன்னாள்.

 

இருவருக்கும் நெஞ்சு பட பட வென்று அடித்துக் கொண்டது.

 

“ உன்னோட அண்ணன் செல்வத்தை பத்தி எனக்கு தெரியும்.. கண்டிப்பா அண்ணனை போலீசால பிடிக்க முடியாது..” பக்கிரி சொல்ல..

 

“ ஆமாண்டா… எனக்கும் அப்படித்தான் தோணுது..” என்றாள் வள்ளி.

“ அண்ணன் கண்டிப்பா நம்மள தேடி ஊருக்கு வரப்போவுது.. அதுக்கு தான் போலீசுகிட்ட இருந்து தப்பிச்சுருக்கும்…..” பக்கிரியின் பேச்சு பயத்துடன் வந்தது.

 

“ வந்து என்ன செய்யும் அண்ணன்.. கோலப்பனை அடிச்சு கொன்னது மாதரி, நம்ம மூணு பேரையும் அடிச்சு கொன்னுடுமா..” வள்ளி.

 

“ இப்ப என்ன செய்ய…. வாத்தியாருகிட்ட அண்ணன் தப்பிச்சகிட்ட விஷயத்தை சொல்லவா…” பக்கிரி கேட்டான்.

 

“ வேணாண்டா.. போலீசுகிட்ட பிடிச்சுக் கொடுக்கப் போறேன்னு சொல்லுவாரு…” வள்ளி சொன்னாள்.

 

வள்ளி இப்படி பேசுவதைக் கேட்டு, கல்யாணம் முடிஞ்சா வெகுளித்தனம் போய்விடும் என்று யாரோ சொன்னது சரிதான் என்று தோன்றியது பக்கிரிக்கு.

 

கிராமத்துக்கு திரும்பிய வள்ளியும் பக்கிரியும், குமாருக்கு விஷயத்தை சொல்லாமல், இருட்டியவுடன் அண்ணன் செல்வம் வருவான் என்று பயத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் போலீசும் மறைவாய்  காத்துக்கொண்டிருந்தது.

 

செல்வம் எதற்காக ஒருத்தன் மேல் கோபப்படுகிறான் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவன் நினைத்து விட்டால் அந்த மனிதனை மிருகத்தனமாக  புரட்டி, புரட்டி அடிப்பான்…

 

செல்வம் பலசாலி. முறுக்கேறிய உடம்பு அவனுடையது. அவனை யாரும் எதிர்த்து நிற்கமுடியாது. யாராவது ஏன் எதற்கு என்று கேட்க போனால் அவர்களும் அவனிடம் அடி வாங்க வேண்டியதுதான். டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு போய் செல்வத்தைப் பற்றி புகார் கொடுக்கவும், சாட்சி சொல்லவும் யாருக்கும் தைரியம் இதுவரை வந்ததில்லை.

 

செல்வத்திற்கு முன் இருக்கும் ஒரே சவால், வள்ளியின் குழந்தைத்தனமும் அது சம்பந்தமாக வரும் மற்ற  பிரச்சினைகளும்தான். அவளுடைய குழந்தைத்தனத்திற்கு செல்வமும் ஒரு காரணம். அவர்களின்  அப்பா அம்மா சின்ன வயதிலே இறந்து விட்டார்கள். செல்வம் சின்ன வயதிலிருந்தே ஊரே வெறுக்கும் ரௌடிப்பையனாக உருவெடுத்தான். செல்வத்தின் மேல் இருக்கும் பயத்தினால் அக்கம்பக்கம், உறவுக்கார்கள் என்று யாரும் வீட்டிற்கு வருவதில்லை. யாரும் வள்ளியுடன் பேசுவதுமில்லை. தன் போக்கில் அவள் வளர ஆரம்பித்தாள். அதனால் அவள் பேச்சு, நடவடிக்கை எல்லாம் குழந்தைத்தனமாகவே இருந்தது.

 

பக்கிரிக்கு ஒரு பாட்டி இருக்கிறாள். மற்றபடி வேறு யாரும் இல்லை அவனுக்கு. அவன் ஒருத்தன் தான் வள்ளியிடம் பேசுவான். இது சின்ன வயதிலிருந்து வரும் பழக்கம். அப்போது செல்வம் ஒன்றும் சொன்னதில்லை.

 

மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு நாள்.

 

வள்ளியிடம் பக்கிரி பேசிக்கொண்டிருப்பதை பார்த்த செல்வம்,

 

“ ஏண்டா.. நொண்டிப் பயலே… வள்ளிக்கிட்ட என்னடா பேச்சு…”

என்று அடிக்க ஆரம்பிக்க..

 

“ அண்ணா.. அவனை அடிக்காதே…” என்று அவள் கெஞ்ச, செல்வத்திற்கு கோபம் உச்சத்திற்கு போய், இன்னும் உக்கிரமாய் அடித்தான். பிறகு பக்கிரியின் ஊனத்தைப் பார்த்தோ என்னவோ அடிப்பதை நிறுத்திவிட்டான்.

 

ஆனால் கோலப்பன் விஷயத்தில் அப்படி செல்வம் கருணை காட்டவில்லை. ஒரு வேளை அவன் பக்கிரி போல் ஊனமாக இருந்திருந்தால்  கருணை காட்டி விட்டிருப்பானோ என்னவோ…

 

கோலப்பன் மர வேலைசெய்யும் ஆசாரி. கல்யாணம் ஆகி ஒரு குழந்தை கூட உண்டு. செல்வம் இல்லாத நேரத்தில், ஒரு நாள் வள்ளியின் வெகுளித்தனத்தை உபயோகப்படுத்தி, அவளிடம் தவறாக நடந்து கொள்ள, வள்ளி அதை புரிந்து கொண்டு கத்தி சத்தம் போட, அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து காப்பாற்ற, கோலப்பன் ஓடி விட்டான்.

 

விஷயம் செல்வத்தின் காதுக்கு போக, அவ்வளவுதான் நரகாசுரன் அவதாரமெடுத்தான்….

 

உடனே கோலப்பன் வீட்டிற்கு போய் அவனை மரண அடி அடித்தான்.

 

ஊரே கூடி வேடிக்கை பார்த்தது. கோலப்பனின் மூக்கிலும் வாயிலும் இரத்தம் கொட்டியது. யாரும் வாய் திறக்கவில்லை.

 

பக்கிரி மட்டும், “ யாராவது வெலக்கி விடுங்களே….” என்று ஊர் மக்களைப் பார்த்து கெஞ்சினான்.

 

யாருக்கும் கிட்டே போகும் தைரியம் இல்லை.

 

குற்றுயிராய் அவன் கிடக்கும் போது, அவனை விட்டுச்சென்றான் செல்வம்.

 

ஊனம் ஏதும் இல்லாமல், நல்ல உடம்பு உள்ள ஊர் மக்களே செல்வத்தின் ரௌடித்தனத்தை பார்த்து எதுவும் பாதிக்க படாத போது, உடல் ஊனமான பக்கிரிக்கு செல்வத்தின் அடாவடித்தனத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று தோன்றியது.

அன்று மாலை, கிராமத்தில் கபடி போட்டி நடந்தது. புதிதாய் கிராமத்துக்கு மாற்றலாகி வந்த விளையாட்டு வாத்தியார் குமார்தான் அந்த போட்டிக்கு ரெப்ரி.

 

உள்ளூர் வீரர்கள் பனிரெண்டு பேரும், வெளியூர் வீரர்கள் பனிரெண்டு பேரும் கூடியிருந்தார்கள்.

 

உள்ளூர் வீரர்களுக்கு செல்வத்தைப் பற்றி தெரியும்.

 

ஆனால் வெளியூர் வீரர்களுக்கு செல்வத்தைப் பற்றி தெரியாது.

 

விளையாட்டு ஆரம்பிப்பதற்கான நேரம். கிராமத்து மக்கள் குழுமியிருந்தார்கள். பக்கிரியும் அதில் ஒருத்தன்.

 

பார்க்க வந்தவர்கள் கட்டுபாட்டுடன் உட்கார்ந்திருந்தார்கள்.

 

கபடி விளையாட்டு வீரர்கள் இரண்டு அணியாக ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்றுகொண்டிருந்தார்கள்.

ரெப்ரி குமார் இரண்டு வரிசைகளுக்கு நடுவில் நின்றுகொண்டு வீரர்களுக்கு கபடி போட்டிக்கான விதிமுறைகளை விளக்கி கொண்டிருந்தார்.

 

போட்டி இன்னும் ஆரம்பிக்கவில்லை.

அங்கு வந்த செல்வம், அந்த இரு வரிசைகளுக்கு இடையே வந்து நின்று கொண்டான். உள்ளூர் மக்கள் யாருக்கும் அவனிடம் பேச தைரியம் இல்லை.

 

ஊருக்கு புதிதான ரெப்ரி குமார்,

 

“ யாருப்பா அது….. இப்படி குறுக்க வர்ரது… கொஞ்சம் கூட மரியாதை தெரியாம… போய் மத்த ஜனங்களோட போய் உட்காரு..” என்று மிரட்ட,

 

உள்ளூர் வீரர்கள், “ சார்… சார்… அவன் கிட்ட வம்பு வைச்சுக்க வேணாம்… அவன் பெரிய ரௌடி…” என்று பதைபதைத்தார்கள்.

 

இதைத் தொடர்ந்து செல்வத்தைப் பற்றி தெரியாத வெளியூர் விளையாட்டு வீரர்கள், ரெப்ரி குமாரை ஆதரித்து, செல்வத்தை மிரட்ட, செல்வம் தன்னுடைய இயல்பான குணத்தோடு, குமாரையும் மற்ற விளையாட்டு வீரர்களையும் அடிக்க வர, நிலைமை முற்றி விட்டது.

 

பக்கிரிக்கு தான் செல்வத்திடம் அடிவாங்கியதும் அப்போது தான் கெஞ்சியதும் ஞாபகம் வந்தது. அன்று காலையில் கோலப்பனை மரண அடி அடித்து விட்டு  செல்வம் வந்ததும் ஞாபகம் வந்தது.

 

செல்வதை பழிவாங்க, இதற்கெல்லாம் ஒரு தீர்வு காண, பக்கிரிக்கு ஒரு யோசனை வந்தது.

 

செல்வம் இந்த விளையாட்டு வீரர்களுடன்  வம்புக்கு போனதை வைத்து அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று பக்கிரிக்கு தோன்றியது.

 

ஊனமான தன்னால் செல்வத்தை திருப்பி அடிக்க  முடியாது. அவனிடம், ‘ என்னை விட்டு விடு’ என்று கையெடுத்து கும்பிடுவதை விட வேறு ஒன்றும் செய்ய முடியாது. இது வரைக்கும் அவனிடம் அடி வாங்கியவர்கள் எல்லோரும், காலையில் அடிவாங்கிய கோலப்பன் உட்பட, அப்படித்தான் செய்திருப்பார்கள்…

 

ஆனால் இந்த  கபடி விளையாட்டு வீரர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், செல்வதை வீழ்த்திவிடலாம்…

 

இப்படி பக்கிரி யோசித்துக் கொண்டிருக்க, செல்வமும் நிலைமையை யோசித்திருப்பான் போலிருக்கிறது.

 

அவனுக்கும் இது ஒரு வித்தியாசமான நிலை…..

 

இது வரை செல்வத்தைக் கண்டு பயப்பட்டவர்கள் எல்லாம் எளியவர்கள். செல்வத்திற்கு நிகரான உடல் வலிமை இல்லாதவர்கள்.

 

ஆனால் இப்போது செல்வம் வம்புக்கு இழுத்தது, வலிமை கொண்ட இருபத்தி நாலு கபடி விளையாட்டு வீரர்கள்.

 

விளையாட்டு வாத்தியார் குமாரை செல்வம் அவமதித்தாக, அந்த இருபத்தி நாலு கபடி விளையாட்டு வீரர்களும் நினைக்கும் சூழ்நிலை.

 

எல்லோரும் நினைத்தால் தன்னை அடித்து அடக்கிவிடலாம் என்பதை உணர்ந்த செல்வம் தன் வாழ்நாளில் முதன்முறையாக அடங்கி போய் விடலாம் என்று நினைத்தான்.

 

பேசாமல் ஓரமாக போய் அமைதியாக நின்று கொண்டான்.

 

இதைப் பார்த்துக்கொண்டிருந்த பக்கரிக்கு சப்பென்று போய் விட்டது.

 

இவர்களை வைத்து செல்வத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறாது போய் விடும் போலிருக்கிறதே என்று நினைத்தான் பக்கிரி.

                                    – அடுத்த வாரம் முடியும்

Series Navigationதூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்ஒரு கவிஞனின் நாட்குறிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *