விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தொன்பது

This entry is part 36 of 45 in the series 4 மார்ச் 2012

1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை

குட்மார்னிங் மேடம்.

தொப்பியைக் கழற்றிக் கையில் மரியாதையாகப் பிடித்துக் கொண்டு குனிந்து கும்பிடு போட்டான் ஜேம்ஸ். நானும் அந்த துரைசானிக்கு அபிவாதயே சொல்லாத குறையாக எண்சாணும் ஒரு சாணாகக் குறுக ஒரு அவசர நமஸ்காரம் செய்தேன்.

திருவாளர் மக்கென்ஸி உன் மேல் வெகு கோபமாக இருக்கிறார் என்று தெரியுமா?

ஜேம்ஸை பாதி சிரிப்பும் பாதி கண்டிப்புமாக விசாரித்தாள் துரைசானி. அவள் என்னை யாரென்று லட்சியம் கூடச் செய்யவில்லை.

எஜமானியம்மா, இந்த ஏழை மேல் என்னத்துக்காக தெய்வங்கள் கோபப் படவேணும்? அதைத் தயவாகத் தெரிவிக்க வேணுமே.

இப்படிக்கு குழைந்தான் ஜேம்ஸ்.

அதற்குள், வாயில் உறையூர் சுருட்டோ என்னமோ பிடித்து குப் குப்பென்று புகை வலித்தபடி வீட்டு எஜமானர் வாசலுக்கு வந்து விட்டார். ராத்திரி உடுத்த அங்கியிலேயே காலை விடிந்து பத்து மணிக்கும் இருக்கிற கோலம் அவர் முழுக்க ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பதைச் சொன்னது. தெய்வ துல்யரான அந்த வெள்ளைக்காரருக்கும் ஒரு வந்தனத்தைச் செய்து வைத்தேன்.

கிப்பர் தானே, என் குலம் வாழ வைக்கிற எஜமானே, உங்களுக்காக அங்கே இங்கே அலைந்து திரிந்து நல்ல ஐரிஷ் சரக்காக வாங்கி வந்ததில் தான் நேரம் சுணங்கி விட்டது போலிருக்கு. பெரிய மனசு பண்ணி அதை மன்னிக்கணும்.

ஜேம்ஸ் கையில் தொப்பியோடு நின்றபடிக்கே மன்றாட துரை சிரிக்க ஆரம்பித்து விட்டான். அவன் குஷியான மனோநிலையில் தான் இருந்திருக்கிறான் போல. வீட்டுக்காரி வேலை மெனக்கெட்டு ஜேம்ஸை அநியாயத்துக்கு மிரட்டிவிட்டு உள்ளே போயிருக்கிறாள். பணம். அது பேசும் போது, மிரட்டும் போது, அரையில் உதைக்கும்போது ஒன்றும் செய்ய முடியாது. வேறே யாரையாவது பீஜத்தை நெருக்கி இம்சைப் படுத்த நம்மிடமும் நாலு காசு சேரும்போது வேண்டுமானல் இதுக்கெல்லாம் பதில் சொல்லலாம். செய்து காட்டலாம். போறது போ வைத்தாஸே.

போன வாரம் நீ வந்தபோதே சொன்னேனே ஜேம்ஸ். இன்னிக்கு எனக்கு கல்யாணம் ஆன தினம். பூச்செண்டு கொண்டு வான்னு சொல்லி விட்டேனே?

துரை கேட்க, ஒத்தைக் கையன் என்னைப் பார்த்து இரைந்தான் – ஓய் ரெட்டி, பூவை எல்லாம் எடுத்து வரச் சொன்னேனே மறந்து விட்டீரா? உமக்கு பொறுப்பே இல்லை. எல்லாத்தையும் நானே கவனித்துச் செய்யணும். தப்பு பண்ணிட்டேன்.

அவன் கண்காட்ட, அவனுக்கு எடுபிடியாக நான் வெகு சிரத்தையாக நடித்து சாரட்டுக்கு நெட்டோட்டம் ஓடி பூச்செண்டுகளை எடுக்கும்போது என் வாடை பழக்கமில்லாத குதிரை ஒன்று பெரிதாகக் கனைத்தது. ஜேம்ஸ் ஒற்றைக் கையால் அதை ஆதரவாகத் தடவிக் கொண்டே கல்யாண தின வாழ்த்துகள் எஜமானி என்றான். வாசலுக்குத் திரும்ப வந்த எஜமானி எங்களை உள்ளே வரச் சொன்னாள்.

வந்த விருந்தினர்களை உட்கார வைத்து உபசரித்துப் பேசி அனுப்பும் பெரிய அறை அது. மூலையில் ஒரு நிமிடம் பார்க்க எனக்கு ஏகத்துக்கு ஆச்சரியம். இடது பதம் தூக்கி நடனமாடுகிற நடராஜ மூர்த்தி செம்பிலோ பித்தளையிலோ சிலாரூபமாக அங்கே ஆடிக் கொண்டிருந்தார். பக்கத்திலேயே பஞ்ச முக குத்து விளக்குகள் ரெண்டு அலங்காரமாக உட்கார்ந்திருந்தன. ஏற்றித்தான் வைக்கலை.

நான் கிச்சிலிப் பழக் கூடையையும், ஆப்பிள் பழக் கூடையையும் எடுத்துக் கொண்டு பூக்கூடையோடு சமையல்கட்டில் போய் இறக்கி வைக்க, ஜேம்ஸ் திருவாளர் வெள்ளைச்சாமிக்கு பூங்கொத்துகளை மரியாதையோடு கையில் கொடுத்தான். காசும் வாங்கிக் கொண்டு கல்யாண நாளுக்கு சந்தோஷமாக வாழ்த்தும் சொல்ல முடிகிறது இந்தத் தொழிலில்தான் என்று புரிந்தது எனக்கு.

சமையல்கட்டில் கமகமவென்று மணம். தெற்கில் தமிழ்ப் பிரதேசம், அதையும் தாண்டி மலையாள பூமியில் பிரத்யேகமாக எழும்பி வருகிற சமையல் வாடை. எத்தனை, எத்தனை , எத்தனை, எத்தனை வருடமாச்சு இப்படி ஒரு அவியல் மணத்தையும், பால் பாயசம் உருளியில் கொதிக்கிற சந்தோஷத்தையும் பார்த்து.

நீர் இந்திய தேசவாசியில்லையோ?

அந்த மெலிந்து கறுத்த மேடம் என்னைக் கேட்டபோது ஆமா அப்படீன்னு பதில் வாய் வரைக்கும் வந்துவிட்டது. என் அழுக்கும் சகதியும் அப்பின பூர்வ சரித்திரம் உடனடியாக நினைவுக்கு வர அவள் கிட்டே மனசறிஞ்சு பொய் சொன்னேன். அதுவும் தப்பும் தவறுமான இங்கிலீஷில். ரெண்டு வார்த்தைக்கு ஒரு தடவை ஒரு ஐ சீ போட்டுண்டேன். காப்பிரிகள் ஆப்பிரிக்க தேசத்தில் இருந்து புதுசா வரும்போது அப்படித்தான் தடுக்கி விழுந்து பேசிப் பேசிக் கத்துக்கும்.

எஜமானி அம்மா, ரெண்டு தலைமுறை முந்தி கரும்புத் தோட்டத்து வேலைக்காக இந்தியாவிலே இருந்து வந்த குடும்பம் என்னோடதுன்னு மாத்திரம் தெரியும். அம்மா காப்பிரிச்சி. அப்பா இந்தியா. மீன் மாம்சாதிகள் ஒண்ணும் கழிக்கற வம்சம் இல்லே. தோள்லே நாலைஞ்சு நூல் கோர்த்துப் போட்டுட்டு இருப்பார். நான் பள்ளிக்கூடம் போகிறபோதே இறந்து போய்ட்டார். பக்கத்து லைன் வீட்டு ரெட்டி பெயரைத்தான் அப்பா பெயர்னு கொடுத்தேன். ரெட்டி ஒண்ணும் சொல்ல மாட்டார்னு தைரியம். அவர் தான் வாய் பேச முடியாத ஊமையாச்சே.

நான் நீள அகலமாக கண், மூக்கு வாய், அரைக்கெட்டு எல்லாம் வச்சு இப்படி ஒரு சுவாரசியமான பொய் சொன்னேன். எஜமானியம்மா அது புரிஞ்சோ என் இங்கிலீஷைக் கேட்டோ விழுந்து விழுந்து சிரிச்சா.

ஓய் ரெட்டி, நீர் யாரா வேணும்னாலும் இருந்துட்டுப் போம். முதல்லே பின் கட்டில் போய் ஜேம்ஸ் கூட உட்கார்ந்து பசியாறும். இன்னிக்கு எங்க கல்யாணம் கழிச்சு இருபத்தஞ்சு வருஷம் பூர்த்தியான தினம். உங்க ஊர்லே விசேஷமான்னு தெரியாது. இங்கேயானா வெள்ளிவிழான்னு அமர்க்களப்படும்.

என்னையும் ஒரு பொருட்டா மதிச்சு இவ்வளவு தூரம் பேசறாளே, கற்பகாம்பாள் கடாட்சத்திலே கழுத்திலே தொங்கத் தொங்கக் கட்டிண்டு, இவாதான் கழுத்திலே தாலி கட்டிக்கறது இல்லையே, கைவிரல்லே இறுக்க இறுக்க மோதிரம் போட்டுண்டு அமோகமா இருக்கட்டும்னு மனசார நான் கும்பிடற தெய்வத்தை வேண்டிண்டேன்.

கொஞ்ச நேரம் வீட்டு வேலைக்காரர்களோட அரட்டை அடிக்கறதுலே நேரம் போச்சு. ஜேம்ஸ் உள்ளே வந்தான். சமையல் கட்டுலே கூட மாட ஒத்தாசை பண்ற ஒரு குட்டி அங்கே தோட்டக்காரன் கிட்டே வார்த்தை சொல்லிண்டிருந்தா. அதைச் கேட்டபடி ஈர்க்குச்சி எடுத்து பல்குத்த ஆரமபிச்சான் ஜேம்ஸ்.

கல்யாணம் கழிச்சு இருபத்தஞ்சு வருஷம் கடந்து போன கொண்டாட்டமாச்சே. வீட்டுக்காரி கழுத்திலே மாட்டி அழகு பார்க்க ஆப்பிரிக்காவிலே இருந்து வைரம் பதிச்ச மாலை வாங்கிண்டு வந்திருக்கார் துரை.

அதிசயமா சொன்னா அந்தச் சுத்துக் காரியக் குட்டி.

இந்த தேசம் போகிற போக்குலே ஒவ்வொரு வருஷம் கல்யாணம் தாக்குப் பிடிச்சாலும் இனிமேல் ஒரு வைர அட்டிகை வாங்கிட்டு வந்து தர வேண்டி இருக்கும்னு அவளைப் பார்த்துக் கண் அடிச்சான் ஜேம்ஸ் தடியன்.

நீ இந்த ஆண்டு நிறைவுக்கு உன் பொண்டாட்டிக்கு என்ன வாங்கிண்டு போய்க் கொடுக்கப் போறேன்னா அந்தப் பொண்ணு. அவ சிரிக்கும்போது சோழியைப் பதிச்சு வச்ச மாதிரி அவ பல் வரிசை பார்க்க ரம்மியமா இருந்தது.

இந்த வருஷம் உனக்குத்தான் முத்துமாலை வாங்கி வந்து கண்ணாலம் கட்டிக்கணும்னு நினைச்சிருக்கேன்னான் ஜேம்ஸ் அசராமல்.

என் வீட்டுக்காரன் கிட்டே அனுமதி வாங்கிட்டு வா, பாக்கலாம்னா அவளும் விட்டுக் கொடுக்காம. தோட்டக்காரனும், சாரட் ஓட்டறவனும் ரொம்பவே ரசிச்சு சிரிச்சு மகிழ்ந்து போனாங்க.

சிட்டுச் சிடுக்கியா ஒரு பொண்ணு வந்து பேசினா என்னமா ஒரு சந்தோஷம்.

நடுவாந்திர வயசிலேயே ரெட்டிய கன்யகையை கழுக்குன்றத்துலே பார்த்து லகரியிலே பிதற்றினவன் நான். எனக்கு மத்த மனுஷாளை குத்தம் சொல்ல என்ன அந்தஸ்து இருக்கு?

கேத்தி, கேத்தி, உள்ளே கொஞ்சம் வா.

சுத்துக் காரியக் குட்டி எஜமானி அம்மா குரல் கேட்டு உள்ளே ஓடினாள்.

அவ அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தபோது ஒரு பாத்திரம் நிறைய அட, நான் நம்பவே முடியாமல் பார்த்தேன். இட்டலி.

கேட்டிருக்கியா? தமிழ்ப் பிரதேசத்தில், ஏன் தெற்குப் பிராந்தியம் பூரா தினம் தினம் ஆகாரம் பண்ண காலையிலே தந்த சுத்தி செய்து, குளிச்சு, சூரிய நமஸ்காரம் செஞ்சுட்டு இலைக்கு முன்னாலே உக்கார்ந்தா சாதாரணமா இலையிலே விழறது இந்த அமிர்த பதார்த்தம் தான்,

இருபத்தைஞ்சு வருஷம். இவா கல்யாணத்துக்கு ஆண்டுநிறைவு கொண்டாடற அதே காலம். ஊரையும் உறவையும் விட்டுப் பிரிஞ்சு தேசாந்தரியா எங்கேயோ திரிஞ்சு உன்னையும் பெத்து, கைவிட்டு இப்போ லண்டன் பட்டணத்திலே யாசகம் கேட்டு வயறு வளக்கறவனுக்கு ஈசுவரன் காட்டற கருணையைப் பார்த்தியா வைத்தாஸே? கென்சிங்க்டன் பிரபு மாளிகைக்கு பின் கட்டிலே உக்கார்ந்து இட்லி தின்னனும்னு இன்னிக்கு என் தலையிலே எழுதின அந்த பிரம்மாவுக்கு இட்லியாலேயே அர்ச்சனை பண்ணி அஷ்டோத்தரம் சொல்லலாம்.

தட்டுலே நாலு நாலு இட்லி வச்சு, கூடவே கெட்டியா பூஷணிக்காய் சாம்பாரும் ஊத்தி அந்தப் பொண்ணு வார்த்துது. அணு அணுவா ரசிச்சு சாப்பிடறபோது கண்ணு நிறைஞ்சு போச்சு. பிடிச்ச தீனியை இத்தனை வருஷம் கழிச்சுத் திங்கற சந்தோஷம் மட்டும் இல்லே அது. திங்கற பதார்த்தமும், உடுத்திக் கிழிச்ச உடுப்பும், பழைய கட்டிடமும், இரும்பு, மரத்திலே செஞ்ச பீரோ, மேஜை, நாற்காலியும் எல்லாம் அதது மட்டும் இல்லே. நம்மோடு பாத்தியப்பட்டவங்களும் வேறே ரூபத்திலே நம்மை வந்து கையைப் பிடிச்சு இழுத்துப் பேசறது இல்லியோ.

கேத்தி திரும்ப பின்னங்கட்டுக்கு வந்தபோது நான் திருப்தியா எட்டு இட்லியும் ஒரு குவளை நிறைய சாம்பாருமா அதம் பண்ணிட்டு கையலம்பி வந்தேன்.

அவள் கையிலே ஒரு கொப்பரையை வச்சுண்டு நின்னா. உரிக்கணுமாம். ஜேம்ஸ் கள்ளத்தனமா அவளைப் பார்த்து எதுக்கு சிரிச்சான்னு எனக்கு அர்த்தம் ஆச்சு. வயசான பாம்புதான் நான். ஆனாலும் மத்தப் பாம்போட காலும், அரையும் தெரியாதா என்ன?

நான் உரிச்சுத் தரேன்.

கொப்பரையை எடுத்துண்டு உள்ளே போனேன். மரபீரோக்கு பின்னாடி மேஜை மேல் இரும்புலே நெம்புகோல் ஒண்ணு. கத்தி. எங்க பக்கத்துலே வீச்சரிவாள்னு சொல்வாங்க. அதுக்கு ஒண்ணு விட்ட தம்பி மாதிரி இங்கத்திய கொல்லன் வடிச்சுக் கொடுத்த ஏதோ ஒரு கருவி.

தேங்காய் உரிக்க ஆரம்பிச்சேன். நான் நிக்கற இடத்துலே இருந்து சமையல்கட்டு முழுசும் தெரிஞ்சது. எஜமானியம்மா பால் பாயசத்தை அடிப்பிடிக்காம கிளறிண்டு இருந்தா. தமிழ்க்காரிதான். நிச்சயமா சொல்வேன்.

துரை தடதடன்னு கையிலே ஒரு குப்பியைத் தூக்கிண்டு கால் செருப்பையும் கழட்டாம சமையல்கட்டுக்குள்ளே வந்துட்டான்.

சமையல்கட்டுலே சுகந்த பரிமள வாசனை. எஜமானி பக்கத்துலே மேல் குப்பாயம் இல்லாம கையே இல்லாத காடாத் துணி வளைச்சுத் தச்ச எதையோ மாட்டிண்டு துரை நிற்கறான். கரளை கரளையா அவன் புஜத்தைப் பார்த்தா, பிறக்கறதுக்கு முந்தியே மிலிட்டரியிலே சேர்ந்து கசரத் எடுக்கறவனோன்னு தோணல்.

அதை சாயந்திரம்னா உனக்குத் தரணும்னு வச்சிருந்தேன். அதுக்குள்ளே ஏன் எடுத்தே?

எஜமானி துரை கையில் இருந்து தட்டிப் பறிச்ச குப்பியை பத்திரமா அடைச்சு சமையல்கட்டு அலமாரி மேல் தட்டுலே வைக்கறபோது துரை கை நிறைய வழிச்சு ஊத்திண்ட வாசனை திரவத்தை கஷ்கத்துலே நன்னா பூசிண்டான். இந்த வாசனைக்காக இந்த வீட்டையே எழுதி வைக்கலாமேன்னு பூரிச்சுப் போய்ச் சொன்னான்.

அது சரி, அப்ப பென்னாலிகன் கடைக்குத்தான் எழுதி வைக்கணும் அப்படீன்னா எஜமானி. நான் கேட்டபடிக்கு இரும்புத் தடியாலே தேங்காய் உரிச்சபடி இருந்தேன்,

பென்னாலிகன்? இந்தப் பெயரை எங்கே கேட்டிருக்கேன்? யோசிச்சு யோசிச்சுப் பார்த்தேன். ரொம்ப நெருக்கமா இருக்கே. மெட்றாஸ் பட்டணத்திலேயா? இல்லே உன் அம்மா லோலாச்சி சொன்னாளா? நான் பிச்சை எடுக்கற பிரதேசத்திலே இருக்கற கடையா?

ஞாபகம் வந்துடுத்து. கோவண்ட் தோட்டப் பக்கம் மெய்ட் லேன் சந்துலே இருக்கப்பட்ட வாசனை திரவியக்கடை. பத்து பவுண்டுக்கு குறையாதே அங்கே ஜவ்வாதும் சாந்தும் பன்னீர் அத்தரும் எல்லாம்?

பென்னாலிகனுக்கு என்னைத்தான் எழுதி வைக்கணும். அப்பா இந்த வீட்டை ஸ்காட்லாந்து பேங்குலே அடைமானம் வச்சு வாங்கின கடனே கழுத்தை நெறிச்சுட்டு இருக்கு. வட்டி கட்டியாகணும் இந்த மாசம். முன்னூறு பவுண்ட்.

துரைக்கும் பணக் கஷ்டமா? ஏன் இருக்கக் கூடாதா? பண மொடை வர்றதுக்கு முந்தி யார் என்னன்னு ஸ்திதி பார்த்தா வரும்? ஆனாலும் இவ்வளவு பெரிய வீடு அடமானத்துலே இருக்கப்பட்டதுன்னு கேட்க கஷ்டமாத்தான் இருந்தது.

மொதல்லே அவர் கிட்டே இருந்து பவர் ஆப் அட்டர்ணியை கேன்சல் செய்யுங்க. அடமானம் வச்ச தொகை இவ்வளவு திரும்பி அடைச்சும் பூதம் போல வளர்ந்துட்டுத்தான் இருக்கு. உங்க தகப்பனார் செலவுக்கு அஞ்சறதில்லே. முக்கியமா பொண்ணு விஷயத்துலே இன்னும் சபலம் தான்னு சொல்றா எல்லாரும்.

நான் உரிச்சு முடிச்ச தேங்காயை சமையல்கட்டுலே எஜமானி கிட்டே கொடுக்க உள்ளே போனேன்.

துரை ஏதோ திரும்பச் சொல்ல வந்து என்னைப் பார்த்து சட்டுனு நிறுத்தினான். ஏய், முன்னே பின்னே தேங்காய் உரிச்சிருக்கியா, கன்னா பின்னான்னு ஏதோ பண்ணிட்டு இருக்கியேன்னு சத்தமாக் கேட்டான்.

நான் தேங்கா உரிச்சது எல்லாம் சரியாத்தான் இருந்தது. எனக்கு அவனும் அவன் பொண்டாட்டியும் பேசினது முழுக்க அர்த்தமாச்சான்னு சோதிக்கத்தான் இப்படிக் கேட்கறான்னு புரிஞ்சு போனது.

எஸ், எஸ் அப்படீன்னு இங்கிலீஷ் பாஷையே இனிமேதான் ஜென்மம் எடுத்துக் கத்துக்க வேண்டிய நிர்பந்தத்துலே இருக்கற முட்டாள் போல் திரும்பத் திரும்பச் சொன்னேன். நல்ல வேளை, ஜேம்ஸ் அப்போ உள்ளே வந்து அவனோட வார்த்தைக்கு ரெண்டு கெட்ட வார்த்தை முன்பாரம் பின்பாரமா வரும் பாஷையிலே என்னோடு பேச ஆரம்பிக்கலே. வண்டவாளம் அப்போ தண்டவாளம் ஏறி கல்கத்தாவுக்கு ரயில் மார்க்கமா போயிருக்கும். மெட்றாஸ்லேருந்து கல்கத்தாவுக்கு ரயில் விட்டாளே, அது இருக்குமோ இப்பவும்? ஆமா, அதுதான் தலைபோற விஷயம் நமக்கு.

தேங்காயைக் காட்டி, வேர் புட்னு எஜமானியைக் கேட்டேன். அவ சிரிச்சபடி, புருஷன் தலையைக் காட்டி, ஹியர் புட்-னாளே பாக்கணும். நான் நக்கல் புரிஞ்சாலும் வாத்து மடையனா முழிக்க, அவ தேங்காயை உடச்சுத் தரச் சொல்லி அபிநயம் பண்ணினா. ஒண்ணும் வேண்டாம், டேய் கட்டாலே போறவனே, இந்தத் தேங்காயை உடைச்சு இளநீரை ஒரு பாத்திரத்திலே பத்திரமா வடிச்சுட்டு தேங்காத் துருவியிலே சன்னமாத் தூவிக் கொடு. அம்மியிலே சன்னமா மொளகா சேர்த்து அரைச்சு அவியல்லே விடணும்னு அவ சொல்லியிருந்தா எவ்வளவு நன்னா இருந்திருக்கும். அவ பேசுவாதான். நான் பேசினா எங்கே போய் முடியுமோ.

ஓய் ரெட்டி, இதைக் குடிச்சிருக்கீரா?

எஜமானி ஒரு லோட்டாவிலே ரெண்டு கரண்டி பால்பாயசத்தை சுடச்சுட விளம்பிக் கொடுத்தாள். துளித் துளியா ரசிச்சு அதைக் குடிக்கறபோது இது என்னன்னு தெரியுமான்னு கேட்டாள்.

ஏன் தெரியாது? சூடாக்கின சக்கரைத் தண்ணி.

வேறே எதுக்கு நரகத்துக்குப் போகாட்டாலும், வாய் மணக்க, நாக்கு ருஜிக்க இதமான சூட்டோடு வயிறு வரைக்கும் ஜிவுஜிவுன்னு உள்ளே இறங்கின அந்த தேவாமிர்தத்தை சக்கரைத் தண்ணின்னு மனசறிஞ்சு பொய் சொன்னதுக்கு நிச்சயம் நான் அங்கே தான் போவேன்.

(தொடரும்)

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 30பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *