தரிசனம்

This entry is part 40 of 46 in the series 5 ஜூன் 2011

 

மலைக்கு இந்த வருஷம் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று மணி சொன்னதும் சேஷு ஒப்புக் கொண்டு விட்டார்.   கடந்த நாலைந்து வருஷமாகவே மணி சேஷுவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஒழியவில்லை. இந்தத் தடவை  மணி மலைக்குப் போவது இருபத்தி ஐந்தாவது வருஷமாம் . ஆபிஸில் அவரை ஏற்கனவே வெள்ளி விழா மணி என்று   கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.மணி சேஷுவின் அலுவலகத்தில் மற்றொரு  பிரிவில் இருந்தார். சேஷு அங்கே சேர்ந்து  பதினைந்து வருஷ மாகப் போகிறது, இந்த டிசம்பர் வந்தால். மணி அவருக்குப் பின்னால் அதே வருஷம் வந்து சேர்ந்தார்.   ஒத்த வயது என்று இருவரும் நெருக்கமாகி விட்டார்கள்.. மணி வந்து சேர்ந்த வருஷம் அவர் மலைக்குப் போகிறேன்   என்று கிளம்பிய போது, அவருக்குக் கீழே வேலை பார்க்கும் சேது, ராமு, பாலு, சங்கரன், குரு என்று எல்லோரும் கூடப்   போனார்கள். அதற்கு அடுத்த வருஷம் அந்தக் கம்பனியில் இருந்த மற்ற இலாக்காக்களில்  இருந்தும் பலர் வந்து மணியின்  குழுவுடன் சேர்ந்து கொண்டார்கள். பாதி ஆபிஸ் மலைக்குப் போகிறேன் என்று காலியாகி விட்டது. மணி மலையிலிருந்து  திரும்பி வந்ததும் முதல் வேலையாக எம்.டி.அவரைக்  கூப்பிட்டு இனிமேல் இம்மாதிரி லீவு கொடுக்க முடியாது என்று   கண்டிப்பாகக் கூறி விட்டார். அதற்கு அடுத்த வருஷம் முதல் மணியின் குழு ஏழு அல்லது  எட்டு பேருக்கு மேல்  கொண்டிருக்கவில்லை. மற்றவர்கள் வெவ்வேறு தினங்களில், வெவ்வேறு குழுக்களுடன் போய் வந்தார்கள்.

 

மணியுடன் வருகிறேன் என்று சொன்ன அந்த மாலையே இருவரும்  கடைத் தெருவுக்குப் போய் பூஜை சாமான்கள் வேஷ்டி  ,துண்டு,சால்வை,துணிப் பை சந்தனக் கட்டை குங்குமம் எல்லாம் வாங்கிக் கொண்டார்கள்.  மலைக்குப் போவதற்கு முன்  குறைந்தது ஒரு மாதமாவது, விரதம் இருந்து, பூஜைகள் செய்து , நியமங்களைப் பின்பற்றி வருவது நல்லது என்று மணி  சேஷுவிடம் சொல்லியிருந்தார். சேஷு இந்தப் பூஜை, புனஸ்காரங்களை  விட்டுப் பல வருஷங்களாகியிருந்தன. அவற்றின்   மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்று இல்லை. வேலைப் பளு, சோம்பேறித்தனம் என்று பல்வேறு காரணங்கள் முன்   வந்து உதவி செய்யத் தயாராக நின்றன.

 

அடுத்த நாள் மாலை சேஷுவையும்,அவரது மனைவியையும் மணி அழைத்துக் கொண்டு மாதவ நகர் சென்றார். அங்குதான்  மணியின் குழுவில் உள்ளவர்களுக்கான குருசாமி இருக்கிறார் என்று போனார்கள். மாதவ நகரில் அமைந்திருந்த ஒரு சின்னக்   கோவிலை அவர்கள் அடைந்த போது அங்கு ஏற்கனவே கூட்டம் கூடியிருந்தது. உள்ளே இருந்த  பெரிய கூடத்தில், உட்கார்ந்தும்,  நின்றும் பேசிக்கொண்டிருந்தார்கள் . சிலர் அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் மலைக்குப்  போகிறவர்கள் என்று நன்றாகத் தெரிந்தது.

 

மணி சேஷுவையும் அவரது மனைவியையும் கோஸ்வாமி என்ற குருசாமியிடம் அறிமுகப் படுத்தினார்.   அவர் உயரமாயும், திடகாத்திரமாயும் காணப் பட்டார். நெற்றியில் பெரிய  சந்தனப் பொட்டும் அதன் நடுவில் குங்குமமும்  அணிந்திருந்த அவர் முகத்தில் தெளிவும் மலர்ச்சியும் காணப் பட்டன. அவருக்கு வலது பக்கத்தில் போடப் பட்டிருந்த   பெரிய பாயில் வெவ்வேறு  வயதில் நான்கு பேர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சேஷுவையும்  கோஸ்வாமி உட்காரச் சொன்னார்.

 

‘சட்’டென்று கூடத்தில் இருந்த ஆரவாரம் அடங்கிற்று. யாரோ ஒருவர் உரத்த குரலில் பஜனைப் பாட்டு ஒன்றை   ஆரம்பித்தார். மற்றவர்கள் அவரைப் பின்பற்றிப்   பாட ஆரம்பித்தார்கள்.  மெதுவாக ஆரம்பித்த பஜனை, சற்று நேரத்தில்  பெரும் குரலாக சுருதி சுத்தமாக எல்லோரையும் கட்டிப் போடும் விதத்தில் எழுந்து வந்தது. காற்றில் மிதந்து வந்த  உற்சாகம் தாங்க முடியாதது போல் இருந்தது சேஷுவுக்கு. கடந்து சென்ற வருஷங்களில் இதை இழந்த சோகம்   ஒரு நிமிஷம்  நெஞ்சை அடைக்கிறாற் போல் இருந்தது.

 

அரை மணிக்குப் பிறகு பஜனை நின்றது. இதற்குள் பூர்வாங்க பூஜைகளைச் செய்து கொண்டிருந்த கோஸ்வாமி    சேஷுவைக் கூப்பிட்டார். அவருக்கு எதிரில் இருந்த தட்டிலிருந்து ஒரு ருத்ராட்ச மாலையை எடுத்து ஞான   முத்ராம்,சாஸ்திர முத்ராம் குருமுத்ராம் நமாம்யகம் என்று ஆரம்பித்து ஸ்லோகங்களை உச்சரித்தபடியே   சேஷுவின் கழுத்தில் போட்டார். இதே மாதிரி மற்ற  நால்வருக்கும் மாலை அணிவிக்கப் பட்டது.

 

பிறகு குருசாமி அவர்களைப் பார்த்து நாளையிலிருந்து நீங்கள் விரதத்தை ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஒரு தபஸ் மாதிரி.  தபஸ்னா என்ன? எரிச்சுக்கறது. கர்மாவையும், அறியாமையையும் எரிச்சுக்கறது. விரதம் இருக்கற காலத்தில,மனசையும்   உடம்பையும் சுத்தமா வச்சுக்கணும்.தினம் கார்த்தாலையும் , சாயந்தரமும் ஸ்நானம்செய்து விட்டுப் பூஜை பண்ணி கோயிலுக்குப்   போய் ஈச்வரனே சரண்னு பிரார்த்தனை பண்ணுங்கோ. எல்லோருக்கும் ஆசிர்வாதம் என்றார்.

 

திரும்பும் வழியில் மணி அவருடைய அனுபவத்தில் இருந்து சில விஷயங்களைச்  சொன்னார். அதிகாலையில் எழுந்து   அனுஷ்டானங்களை  ஆரம்பிப்பது, காலணிகளை அணியாமல் இருப்பது, தினமும் ஒரு வேளை உணவைத்     தவிர்த்து விடுவது,புலனை அடக்குவது என்று இவைகள் எல்லாம் பின்பற்றப் படும் போது, மலை ஏறும் நாட்களில் அப்  பிரயாணம் கஷ்டம் தவிர்த்த எளிமையான உற்சாகமான செயல்பாடாகப் பரிமளிக்கும் என்று தோன்றியது.                  அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறை முன்பாக வந்து உட்கார்ந்தார் சேஷு. எல்லா சுவாமி படங்களுக்கும்  அவர் மனைவி அணிவித்திருந்த புஷ்பங்களிலிருந்தும், பூஜை அறையில் ஏற்றி வைத்திருந்த ஊதுபத்தியிலிருந்தும் வந்த நறுமணம்  அவரிடம் ஒருவித பரவச உணர்வை எழுப்பின. அர்ச்சனைக்காக வைக்கப் பட்டிருந்த புஷ்பங்களோடு, ஸ்தோத்திரப் புத்தகமும்  இருந்தது. அதை எடுத்து அவர் ஸ்லோகங்களைப் படிக்க ஆரம்பித்தார். அவற்றை அவர் மெதுவாகவும், கஷ்டப்பட்டும் உச்சரிக்க  வேண்டியிருந்தது. தனது பனிரெண்டாம் வயதில் வெங்கடேச சுப்ரபாதம், சிவஸ்துதி,கந்தர் கலி வெண்பா,விஷ்ணு சஹஸ்ரநாமம்   என்று அப்படி ஒரு மனப்பாடம் செய்து வைத்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

 

அதைத்  தொடர்ந்து அவருக்கு சாமிநாத ஐயரின் ஞாபகம் ஏற்பட்டது…..

 

அவர்தான் சேஷுவுக்கு இந்த ஸ்லோகங்களைக் கற்றுக் கொடுத்து நெட்ருப் போட வைத்தவர். தினமும், பொழுது விடிவதற்கு   முன்பே, எழுந்து, பல் தேய்த்து,காலைக் கடன்களை முடித்து, ஸ்நானம் செய்து விட்டு ஆறு மணிக்கு ‘டாண்’னென்று சேஷு போய்  அவர் வீட்டில்  நிற்கவேண்டும். அந்த சமயத்துக்கு, அவன் வயசுப் பையன்கள் மூன்று பேர் வந்து சேர்ந்து கொள்வார்கள்.   அவர்களைத்  தவிர, பி.யு.சி. படிக்கும் சாமிநாத ஐயரின் பெரிய பையன் சேகரும் , சேஷுவின் கூடப் படிக்கும் அவரின் இரண்டாவது   பையன் சிவாவும் வருவார்கள். இரண்டு பையன்களுக்கு நடுவில் கலா என்று அவருக்கு ஒரு பெண்ணும் இருந்தாள். இந்த ஸ்லோகப்   பாடம் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் தினமும் போகும். ஒரு நாள் கூட அவன் போகாமல் இருந்ததில்லை.

 

சேஷு ரொம்ப சூட்டிகையா இருக்கான். எது கத்துக் கொடுத்தாலும் ‘கப்’புன்னு பிடிச்சுண்டுடறான்  என்று சாமிநாத   ஐயர் அவன் தகப்பனாரிடம் வந்து சொல்வார்.

 

உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் சேஷுவின் அம்மாவும் பாட்டியும் பெருமையால் பூரித்துப் போவார்கள். சேஷுவின்  அப்பாவும் சாமிநாத ஐயரும் ஒரே ஊர்க்காரர்கள். சேஷுவின் தகப்பனார் கலைக்டர் ஆபிஸில் வேலையில் இருந்தார். சாமிநாத   ஐயரிடம் பூர்விக சொத்து இருந்தது. நில புலங்களில் இருந்து நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது. அதனால்தானோ   என்னவோ, இந்த மாதிரி வேதம் கற்றுக்  கொடுக்கும் நல்ல மனமும் கல்வியும் அவரிடம் இருந்தன.

 

தினம் உன் புராணம் பாடாம எங்கப்பா தானும் தூங்கிறதில்லை , எங்களையும் தூங்க விடறதில்லை என்று ஒரு நாள்   கலா அவனிடம் சொன்னாள்.

 

சேஷு அவரிடம் பாடம் கேட்க வந்து மூன்று வருஷங்களாகி இருந்தன. முன்பு திண்ணையில் உட்கார்ந்து பாடம் கேட்டது போக  இப்போது கூடத்து உள் வரை அவன் அனுமதிக்கப் பட்டிருந்தான். கலாவின் அம்மா சாயந்திரம் அவன் ருத்ரம் கற்றுக் கொள்ள  வரும்போது சில நாள் காப்பி, சில நாள் உப்புமா .சில நாள் தேங்குழல், முறுக்கு என்று உபசரித்துக்  கொண்டிருந்தாள்.

 

அப்படியா? என்று கேட்டான் சேஷு.  என்ன சொன்னார்?

 

பதில் எதுவும் கலாவிடமிருந்து வராமற் போகவே, அவன் தலை நிமிர்ந்து பார்த்தான்.

 

கலா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் தீவிரத்தைத் தாங்க முடியாதவன் போல அவன் மறுபடியும் தலையைக் குனிந்து  கொண்டான்.

 

அடேயப்பா, நான் கூடத்துக்கு வரச்சே, பாக்காத மாதிரி பாத்துண்டு, இப்ப என்னடான்னா  குனிஞ்ச தலை நிமிராம  என்ன நாடகம், என்ன நாடகம்! பொம்மனாட்டி கெட்டா போ!  என்றாள் கலா.

 

அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் பார்த்ததை அவள் பார்த்திருந்தாளா ?

 

அப்போது சமையல் உள்ளில் இருந்து கலாவின் அம்மா வந்தாள். சேஷுவா இப்பதான் வந்தியா , காப்பி சாப்பிடறியா என்று கேட்டாள்.

 

இல்லே, வரும் போதுதான் குடிச்சுட்டு வந்தேன் என்றான் சேஷு. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கலா நகர்ந்து உள்ளே   சென்றாள்.

 

அன்று பாடங்கள் முடிந்து அவன் வீட்டிற்குத் திரும்பும் போது கலாவும் அவளுடைய பேச்சும் நினைவுக்கு வந்தன.  அவள் தோற்றத்தின் மீது வருஷங்கள் ஏற்படுத்தி  இருந்த மாறுதல்களால் அவன் கவரப்பட்டது உண்மைதான்.  இப்போது அவள் தாவணிக்கு மாறியிருந்தாள். ஆனால் அவள் தன்னிடம் இன்று பேசிய மாதிரி அவளால் பேசக்  கூடும் என்று   அவன் சற்றும் எதிர்பார்த்திருந்ததில்லை.

 

நாட்கள் சென்றன. அவனுடன் நெருக்கமாக ஒரு நாள் பேசினோம் என்பதை மறந்து விட்டவள் போல கலா இருந்தாள். அதனால்  அவன் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு வழக்கம் போல் சாமிநாத ஐயரின் வீட்டிற்குப்  போய் வந்தான்.     ஒரு நாள் காலைப் பாடங்கள் முடிந்தவுடன் அவன் வீட்டுக்குப் போகத் தயாரானான். அப்போது விடுமுறைக் காலம்.

 

சாமிநாத ஐயர் சேஷு, உனக்கு வேற வேலை அர்ஜண்டா இல்லைன்னா, என் கூட வரையா, குமரகம் வரைக்கும் போயிட்டு வரலாம்.  இன்னிக்கு அங்க இருக்கற கோயில்ல கும்பாபிஷேகமாம். சேகரும் சிவாவும் பைக்கிலே  வந்துடுவா. நீயும் நானும் டாக்சீல போயிடலாம். கோயில்லேர்ந்து டாக்சி அனுப்பறேன்னு சொல்லியிருக்கா என்றார்.

 

அவன் சரியென்று சொன்னான். அவர் அவனை ஸ்நானம் பண்ணி விட்டு வரச் சொன்னார். அவன் மாற்று உடை இல்லை என்று  தயங்கி நின்ற போது, சிவாவை அழைத்து புது வேஷ்டி, மேல் துண்டு,எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.  கொல்லையில் கிணறு   இருந்தது. பெரிய வாளியும், சொம்பும் பக்கத்தில் இருந்தன. பத்து மணி இளம் வெயிலுக்கு கிணற்றுத் தண்ணியை தலைமேல்  விட்டுக் கொண்டு குளிப்பது பிரும்மானந்தமாக இருந்தது. கங்கே ச யமுநே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி  ஜலேஸ்மிந் ஸந்நிதம் குரு என்று சொல்லிக் கொண்டே தலையிலும் உடம்பிலும் வாளியிலிருந்து எடுத்துக் கொட்டிக் கொண்டான்.  குளித்து முடித்த பின் தலையையும், உடம்பையும் துண்டால் துடைத்துக் கொண்டு புது வேஷ்டியை கட்டிக் கொண்டான். துண்டு  பூராவும் நனைந்து ஈரமாகி விட்டது.   அதை அரைகுறையாக மேலே போட்டுக் கொண்டு அவன் உள்ளே வந்தான். எதிரே கலா வந்தாள்.

 

அவனைப் பார்த்து இன்னொரு துண்டு தரட்டுமா, இவ்வளவு ஈரமா இருக்கே என்று கேட்டு வந்த வழி நடந்து போனாள்.

 

சேஷு முன்னறைக்குப் போய் முகம் பார்க்கும் கண்ணாடி  முன் நின்று விபூதியைப் பட்டையாக இட்டுக் கொண்டு  நடுவில் சந்தனம் வைத்துக் கொண்டான்.

 

கலா உள்ளே வந்து  அவனிடம் துண்டைக் கொடுத்து விட்டு  நீ இவ்வளவு சிவப்புன்னு எனக்கு தெரியாது என்றாள்.

 

அவன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.

 

அவன் எதிர்பாராதவாறு,  அவள் சேஷுவின் வலது  கையை இழுத்து அதன் மேல் தன் வலது கையை வைத்து நான் சொல்றது  சரிதானே என்றாள்.

 

ஆமா , நம்ப எல்லாரையும் விட அவன் ரொம்ப சிவப்புத்தான் என்று குரல் கேட்டது.

 

கலா ‘விருட்’டென்று கையை இழுத்துக் கொண்டாள். அவளுக்கு பின்னாடி, சேஷுவுக்கு எதிராக கலாவின் அண்ணா சேகர்  நின்று   கொண்டிருந்தான். அவன் முகத்தில் சிரிப்பு காணப் பட்டது. சற்றுக் கழித்து சேகரும் சிவாவும் பைக்கில் கிளம்பிப் போனார்கள்.  சாமிநாத ஐயரும் ரெடியானபின், சேஷுவும் அவரும் டாக்சியில் போனார்கள். வழி பூராவும் அவர் பேசிக் கொண்டே வந்தார்.   இவன் ‘உம்’ கொட்டிக் கொண்டே வந்தான். மனது பூராவும் கவலை படர்ந்திருந்தது. உடம்பு லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.   சேஷு உடம்புக்கு எதாவதா? பாக்க என்னமோ போல இருக்கியே என்று ஐயர் கேட்டார். அவர் பரிவு இவனுக்கு மேலும் துக்கத்தைத்  தருவதாக இருந்தது.

 

அவன் மறுநாள் காலையில் பாடம் கேட்கப் போகவில்லை. கலா எல்லை மீறினாள் என்றால் கூட அது நீ    இடம் கொடுத்ததினால்தானே என்று உள்குரல் தாட்சண்யமின்றிக் கேட்டது. அன்று இரவு அவன் பெரியகுளத்திற்கு கிளம்பிப்   போனான். அவன் அக்காவை அங்கேதான் கொடுத்திருந்தார்கள். அக்காவின் மூன்று வயதுக் குழந்தையைப் பார்க்க ஆசையாக  இருக்கிறது என்று அம்மாவிடம் மத்தியானம் சொன்னான். அம்மா அவசரம் அவசரமாக, நாடாவும்,கைமுறுக்கும்   ஜெயத்துக்கு– அவன் அக்கா –ரொம்பவும் பிடிக்கும் என்று பண்ணி ரெண்டு சம்படம் நிறைய போட்டு அவனிடம் கொடுத்தாள்.  சேஷு ஜனவரியில் பள்ளிக் கூடம் திறப்பதற்கு முதல் நாள் பெரியகுளத்திலிருந்து திரும்பி வந்தான். அம்மா மத்தியானம்  அவன் சாப்பிடும் போது ஏதோ பேச்சுக்கு நடுவே சாமிநாத ஐயர் ரெண்டு மூணு தடவை அவனைப் பற்றி விசாரித்தார் என்றாள்.  அவன் படிக்க நிறைய டயம் வேண்டி இருப்பதால், சாமிநாத ஐயரின் வீட்டுக்கு போக முடியாது போல இருக்கிறது என்றான்.   அதற்குப் பிறகு அவன் அங்கே எப்போதும் போகவில்லை….

 

‘சட்’டென்று கனவிலிருந்து விழிப்பவரைப் போல் சேஷு நினைவுக் குவியலில் இருந்து மீண்டார். அவர் கண்கள் ஸ்லோகப்  புஸ்தகத்தில் பதிந்திருக்க, வாய் ஸ்லோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்ததை ஆச்சரியத்துடன் உணர்ந்தார். மனதுக்கும்  செயலுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த முரண்பாடு அவரை வியப்புக்கு உள்ளாக்கிற்று. பூஜை செய்கிறேன் பேர்வழி   என்று பழைய குப்பையைக் கிளறிக் கொண்டிருந்ததற்காக ஒரு நிமிஷம் வருந்தினார். இனிமேல் இம்மாதிரி அசம்பாவிதமாக   எதுவும் நடக்காமல் மனத்தைக் கட்டிப் போட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு பூஜையில் இருந்து எழுந்தார்.

 

நான்கு வாரங்கள் சென்றன. ஒவ்வோரு நாளும் புதிய  அனுபவங்கள் அவரை எதிர் கொண்டன. வீட்டுக்குப் பக்கத்திலிருந்த  மெய்ன் ரோடில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அந்த அர்ச்சகர் வீர வைஷ்ணவராக இருந்தார். சேஷுவுக்கு சின்ன  வயசில் படித்த ஆழ்வார்க்கடியானின் வாத விவாதங்கள் ஞாபகத்துக்கு வந்தன.யானைக்கு எந்த மாதிரியான நாமம் போடுவது  என்று சுப்ரீம்  கோர்டுக்குப் போன நாட்டில்தான் இன்று  சிவன் கோவிலில் ஐயங்கார் தினமும் குளிப்பாட்டி அலங்காரம் பண்ணி    பூஜைகள் செய்து…காலம் மாறவில்லை என்று யார் சொன்னார்கள்?  சேஷு முதல் இரண்டு நாட்கள் காலையில் எட்டு மணிக்கே   கோயிலுக்கு வந்தார். ஒன்பது மணிக்குத்தான் அர்ச்சகர் வந்து கோயில் கதவைத் திறந்தார். இரண்டாம் நாள் சேஷுவைப் பார்த்த  பூக்கடைக்காரன் சாமி, இது கவர்மென்ட்  ஆபிஸ் மாதிரி ஆயிடுச்சி. ஒம்பது மணிக்குதான் தெறக்கும் . நல்ல வேளையா  ரண்டாவது சனிக் கிழமைக்கு பூட்டி வச்சுடறது இல்லே என்று சிரித்தான். அவர் அடுத்த நாளிலிருந்து சற்றுத் தொலைவில்  இருந்த மாரியம்மன் கோயிலுக்குப் போக ஆரம்பித்தார். அந்த பூஜாரி காலையில் ஆறரைக்கே வந்து விடுவார் என்று சொன்னதால்.

 

செருப்பு இல்லாமல் நடப்பது கஷ்டமாகத்தான் இருந்தது. தார் ரோடில் வாகனங்கள் போவதற்கே இடமில்லாததால், அவர் கல்லும்  மண்ணும் நிறைந்திருந்த ஓரத்தில்தான் நடக்க வேண்டியிருந்தது.  பள்ளிக் கூடம் போகும் நாட்களில் கூட காலணி அணிந்து பழக்கப்  பட்ட கால்கள் இப்போது வலியை ஏற்க முடியாமல் தவித்தன. வலியும் வேறு நினைப்புக்களும் மனதை அண்ட வேண்டாம் என்று   வாய்க்குள் ஸ்லோகங்களைச்  சொல்லிக்  கொண்டு போனார்.எதிர்த்தாற்  போல் ஸ்கூலுக்குப்  போய்க்கொண்டிருந்த  இரண்டு   குழந்தைகள் தனக்குள்ளேயே பேசிக் கொண்டு போகிறாரே என்று கண்களை அகல விரித்துக் கொண்டு சென்றன. பொதுவாகவே  ஜனங்கள் தன்னை  விசித்திரமாகப் பார்க்கிறார்களோ என்று அவருக்குச் சந்தேகம் வந்து கொண்டிருந்தது. ஆபிஸில் கூட இதே மாதிரி  பார்வைகள்–கேலிக் கண்,ஆச்சரியக் கண்,திருட்டுக் கண், கூலிங் கிளாசில் ஒளிந்து கொண்டு என்னவென்று கண்டுபிடிக்க முடியாத  கண் –என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று நினைத்தார். லட்சக் கணக்கில்  உலகம் பூராவிலிருந்தும் ஒவ்வொரு வருஷமும்   வருகிறார்கள் மலைக்கு. ஒவ்வொருவருக்கும்  தனக்குத் தோன்றும் நினைப்புக்கள் இருக்குமா என்று ஆச்சரியப்பட்டார்.

 

ஏழு  பேர் அடங்கிய அவர்கள் மலைக்குக் கிளம்புகின்ற அன்று காலை மணியின் வீட்டில் பூஜை நடந்தது. பூஜைக்குப் பின்,   அழைக்கப் பட்டிருந்தவர்களுக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது. எல்லோருடைய வாழ்த்துக்களுடனும்,  ஆசீர்வாதத்துடனும் சேஷுவும், மணியும் மற்றவர்களும் வாசலில் நின்றிருந்த டெம்போ டிராவலரில் ஏறிக்  கொண்டார்கள். மலைக்குப் போய் விட்டுத் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வண்டி அது . யாத்திரையின் போது   எதிர்ப் படும் முக்கியமான கோயில்களில் தரிசனம் செய்து  கொண்டு போவதற்கு இந்த மாதிரி வண்டி ஏற்பாடு செய்து கொள்வது  வசதியாக இருக்கிறது என்று முன்பு ஒரு தடவை மணி அவரிடம் சொல்லியிருந்தார்.

 

அவர்கள் ஏழு  பேரும் ஒரே அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒருவரை ஒருவர் பல காலமாக அறிந்தவர்கள் என்ற   முறையிலும் எல்லோராலும்  சௌஜன்யமாகப் பிரயாணிக்க முடிந்தது. வண்டி கிளம்பி, நகரின் நெருக்கமான தெருக்களில் சென்ற   போது பஜனை கீதங்கள் அடங்கிய ஒலி நாடாவைப் போட்டார் டிரைவர். நகருக்கு வெளியே வந்து பெருஞ்சாலையில் முழு வேகத்துடன்  வண்டி ஓடிற்று. மணி ஒலிநாடாவை நிறுத்தச் சொல்லி விட்டு மலையில் குடிகொண்டிருக்கும் சுவாமியின் பேரில் இயற்றப் பட்டிருந்த  பாட்டை ஆரம்பித்தார். மற்றவர்கள் அவருடன் சேர்ந்து பாட ஆரம்பித்தனர். முதல் இரு பாடல்களும், சேஷுவுக்கு இந்த நாலு   வாரங்களில் பாடம் ஆகியிருந்ததால், அவரும்  சேர்ந்து பாடினார். அதற்கடுத்த பாடல்களில் பல அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.   ஆனால் மற்றவர்கள் எந்தக் கஷ்டமும் இன்றி தொடர்வதைப் பார்த்துத், தானும் இம்மாதிரித் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றால்,   இன்னும் சில வருடங்கள் தொடர்ந்து மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தார்.

 

ஒரு மணி நேரம் போயிருக்கும். பஜனைப் பாடல்கள் நின்று விட்டன. எதிர் காற்று ஜன்னல்கள் வழியாக வந்து உடலைத் தழுவினாலும்  ஏறும் வெய்யில் சற்று உக்கிரமாகவே இருந்தது. சேஷு முகத்தில் படிந்திருந்த வேர்வைத் துளிகளைக் கைத்துணியால் துடைத்துக் கொண்டார்.

 

அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ராஜு ரொம்ப  வேர்க்கறதா ஸார் என்று கேட்டான்.        சேஷுவுக்கு எதிர் ஸீட்டில் இருந்த மணி இன்னும் போகப் போக வெயில்தான்  என்று சிரித்தார். என்ன இருந்தாலும் நம்ம ஊர் ஏர்கண்டிஷன்  ஸிட்டி மாதிரி எங்கயும் வர சான்ஸே இல்லை.

 

நீங்க ஏஸி ஸிட்டிங்கிறேள். சிலவா பென்ஷனரோட பாரடைஸ்ன்னு கொண்டாடறா. ரெண்டாவது கொஞ்சம் கரெக்டா இருக்குமோன்னு   எனக்கு தோணறது. நம்ப ஆபிசிலேயே எடுத்துக்கோங்கோ ஜேபீ ஸார் இருக்காரே. அவர் வேலைக்கு சேந்த அன்னிக்கே ரிடையர் ஆயாச்சு.  இப்ப வாங்கற மாசச் சம்பளம் எல்லாம் அவருக்கு பென்ஷன்தான்என்றார் மணி அருகில் இருந்த ராகவன்.

 

எல்லோரும் வாய் விட்டுச் சிரித்தார்கள்.  ராகவன்  அக்கௌன்ட்ஸில் மானேஜர். ஜேபீ என்கிற ஜெயப்பிரகாஷ் சேல்ஸ் மானேஜர்.  இருவருக்கும் அவ்வளவாக ஒத்துக் கொள்ளாது. போதாக் குறைக்கு அவர்கள் கம்பெனியின் எம்.டி.க்கு விற்பனைப் பிரிவு என்றால்  ஒரு தனிப் பிரியம். அவர்கள் விற்பனை முயற்சிகளால்தான் கம்பனியே நடக்கிறது என்று அவர் தீர்மானமாக நம்பினார்.

 

ஜேபீ ஒழுங்கா வேலை பாக்கணும்னா ஒண்ணு நம்மளோடது மார்கெடிங் கம்பனியா இருக்க கூடாது. ஆனா இது ஆகிற காரியமில்லே  அதுக்கு பதிலா எம்.டி. மாறணும்னு நீங்க வேண்டிக்கலாம். அதுவும் ஒரு ஸி. ஏ. வா வந்துட்டாரொம்ப நன்னா இருக்கும் என்றார் சேஷு .

 

ஸார் , நீங்க எதுக்கு நடக்காத பேச்செல்லாம் பேசறேள் ? . இந்த எம்.டி. நம்ம கம்பனிய விட்டு நகர மாட்டான் என்று முன் ஸீட்டில் இருந்த  ராஜாமணி சொன்னார்.

 

சேஷுவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ராஜாமணிக்கு ஐம்பது வயது இருக்கலாம். இந்தக் குழுவில் அவர்தான் வயதானவர். ஆனால்  அவர், தான் வேலை பார்க்கும் கம்பனியின் தலைமை அதிகாரியை ஒருமையில் கூப்பிட்டது  சேஷுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

ராஜாமணியின் குரல் மறுபடியும் கேட்டது. இந்த எம்.டி., சேர்மன் , பாதி டைரக்டர்கள் எல்லாரும் ஒரே ஜாதி. அதனாலே இன்னொரு  எம்.டி. வந்தா கூட, அதுவும் ஸி. ஏ. வா இருந்தா கூட அதே ஜாதி ஆளாத்தான் இருப்பான். யூ ஹவ் நோ சாய்ஸ் என்றார்.

 

சேஷு ஆச்சரியத்துடன் மற்றவர்களைப் பார்த்தார். மணி வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் இதழ்களிலும் புன்னகை  காணப்பட்டது.

 

ஒரு வாய் காப்பி சாப்பிடலாமா என்று ராகவன் கேட்டார்.

 

பேஷா என்ற மணி வண்டியை நிழல் விழுந்திருக்கும் இடமாகப் பார்த்து நிறுத்தச் சொன்னார். டிரைவர் அவ்வாறு நிறுத்தி விட்டு   வண்டியிலிருந்து கீழே இறங்கிச் சென்று டிக்கியைத் திறந்தார். அக்கூட்டத்தில் வயதில் சிறியவனான   பாலு டிரைவருடன் கீழே இறங்கினான். டிக்கியிலிருந்து மூன்று பெரிய பிளாஸ்குகளை எடுத்து வந்து தம்ளர்களில்   காப்பியை ஊற்றி ஒவ்வொருவருக்கும் தந்தான். லேசான பிரயாணக் களைப்புக்கு மாற்றாக அது தென்பைத் தருவது போல இருந்தது சேஷுவுக்கு.

 

நல்ல வேளை, இப்ப ராவ் இங்க இல்லை. வந்திருந்தா, நமக்கெல்லாம் இவ்வளவு காப்பி கிடைச்சிருக்காது என்றான் சேது. அவன் ராவுக்கு  உதவியாளன். டிரைவருக்குப் பக்கத்தில் தூங்காமல் வரும் ஆள்தான்  உட்கார வேண்டும் என்று   அவனைப் போட்டிருந்தார்கள்.

 

ஆமாய்யா , உன் பாஸ் காலம்பர காப்பி  குடிச்சாலும் சரி , சாயந்திரம் சரக்கு அடிச்சாலும் சரி, ஒரே முங்கல்தான்  என்றார் சேஷு . அதுவும் சாயங்காலம் ஆச்சுன்னா, எங்கேர்ந்துதான் அப்பிடி ஒரு  ஸ்டாமினா அவனுக்கு வரதோ. காட் ஒன்லி  நோஸ் என்றார்.

 

உங்களுக்கு என்ன, அவனுக்கு வயசு இருக்கு, வாங்கித்தர ஆள் இருக்கு. மஜா பண்ணறான் என்றார் மணி                   ம். அதைச் சொல்லுங்கோ.க்ளையன்ட்சை எல்லாம்   பயமுறுத்தின்னா வாங்கிக் குடுக்கச் சொல்றானாம். ஏம்ப்பா, சேது !  ராவ் , நான்-வெஜ்  கூட அடிப்பானாமே, நிஜம்தானா என்று கேட்டார் சேஷு  கண்களை அகல விரித்துக் கொண்டு.

 

இடது கையாலயும். வலது கையாலயும் வாங்கறதை வேற எப்படி வாரி விடறது? ராவ் , உன் பாஸ் அடிக்கடி மைசூருக்கு போறானாமே   என்ன விஷயம்? யாரோ சொன்னா அங்க யாரையோ வச்சிண்டு இருக்கான்னு! என்றார் ராஜாமணி.

 

ராவ் அவரைப் பார்த்துச் சிரித்தான். ஸார், நீங்க கம்பெனி ஸ்டாடிஸ்டிக்ஸ் எல்லாம் அப்டுடேட்டா வச்சிருக்கேளோஇல்லையோ, இந்த  மாதிரி விவகாரம் எல்லாம் உங்களுக்கு அத்துப்படி.

 

சரிப்பா. நீ அவருக்கு  சர்டிபிகேட் கொடுக்கிறதெல்லாம் இருக்கட்டும். நான் கேட்டது உண்மைதானா? என்று கேட்டார் சேஷு.

 

கரெக்டுதான் ஸார்.

 

அதெப்படி பிராமணனா இருந்துண்டு..? என்றார் சேஷு.

 

அவர் ஒய்ப் கிறிஸ்டியன் ஸார்.

 

அப்படிப் போடு என்றார் ராஜாமணி

 

அன்று இரவு அவர்கள் மணியின் உறவினர் வீட்டில் தங்கினார்கள். சாப்பிட்டதும் வந்த களைப்பில் எல்லோரும் கிடைத்த இடத்தில்   கட்டையை விரித்து விட்டார்கள். மறுநாள் சீக்கிரம் எழுந்து கிளம்பி மலையை நோக்கிச் சென்றார்கள். போகும் வழியில் மழை தூறிக்  கொண்டே இருந்தது. வளைவுகளும்  ,குன்றுகளும் நிரம்பிய பாதையில் வண்டி ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியவில்லை . கண்ணில் தென்பட்ட  இடங்களில் எல்லாம் இயற்கை பச்சையை அப்படி வாரி இறைத்திருந்தது. போகும் வழியில் இருந்த சிற்றூர்களிலும், சற்றே பெரிதான ஊர்களிலும்  இருந்த கோயில்களில் இறங்கிப் பார்த்து விட்டுச் சென்றார்கள். பல இடங்களில், வண்டி செல்லும் பாதையின் இரு புறங்களிலும் சிறிய   ஆறுகள் ஓடின. தென்னையும், பனையும், கமுகுமாக கண்ணைப் பறித்துக் கொண்டே கூட வந்தன.

 

மாலையில் சூரியன் மெதுவாக விழத் தொடங்கிய நேரம் மணி சேஷுவைப் பார்த்து நாம் இப்ப மலை கிட்ட வந்தாச்சு என்றார்.   டிரைவர் வண்டியை நிறுத்தின இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தலைகள் தெரிந்தன.

 

அடேயப்பா என்ன கூட்டம் என்றார் ராகவன். நேத்திக்குதான் மலைல கோயிலைத் திறந்திருக்கா. அதுக்குள்ளே இவ்வளவு கூட்டமா என்றார்.

 

எல்லோரும் ஆற்றில்  ஸ்நானம் செய்து விட்டு மலை மீது ஏறினால் சரியாக இருக்கும் என்று மணி சொன்னார்.சேஷு தனக்கு நீச்சல்   தெரியாது என்றார். நீச்செல்லாம் அடிக்க வேண்டாம். தலையை முங்கி ஒரு குளியலைப் போடுங்கோ என்று ராஜாமணி சிரித்தார்.

 

சேது நீர் அருகே சென்று கீழ் இறங்கினார். அங்கு ஆழம் அதிகம்   இருக்கவில்லை. மூக்கைப் பிடித்துக் கொண்டு நீருக்குள் மூழ்கி எழுந்தார்.   தண்ணீர் வேகமாகப் புரண்டு ஓடினாலும், சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு இரண்டுங்கெட்டான் நிறத்தில் இருந்தது. மணலும், குப்பையும்,  செடிகளும் என்று எல்லாவற்றையும் வாரி எடுத்துக் கொண்டு சீறலாக ஆறு ஓடிற்று. அவர் மறுபடியும் இரண்டு முங்கு போட்டார். அதற்கு   அடுத்த தடவை, அவர் நீரிலிருந்து தலையைத்  தூக்கி நின்ற போது, அவருக்கு இரண்டடி முன்னே, நீரில் மலம் மிதந்து  சென்றது.   சீ  என்று அவர் அருவெறுப்புடன் எழுந்து வெளியேறினார். அவருக்கு குமட்டல் வரும் போலிருந்தது. சமாளித்துக் கொண்டு   உடைகளை மாற்றிக் கொண்டார்.

 

மணி அவரருகே வந்து எல்லாம் ஆச்சா என்று கேட்டார். சேஷுவால்தாங்கிக் கொள்ள முடியவில்லை. சொன்னார்.  மணி அவரிடம் இதுக்குத்தான்  நாங்க   கோயில்   திறந்த மறுநாளே வந்துர்றது. இன்னும் நாள் ஆக ஆக ஆறு பூரா நரகல்தான். இந்த கூட்டத்துக்கு யாரால கக்கூஸ் கட்டி   மாளறது என்றார். இவ்வளவு பக்தியும், மனிதருக்குள் இருக்கும்  சுய ஒழுங்கைக் காப்பாற்றிக்  கொள்ள உதவாமல் போய் விட்டதே என்று   சேஷுவுக்கு கோபம் உண்டாயிற்று.

 

எல்லோரும் வந்ததும் அவர்கள் மலையில் ஏறி நடந்தார்கள்.முன்னால் போனவர்களும், பின்னால் வருகிறவர்களும், பஜனைப் பாடல்களைப்  பாடிக் கொண்டு வந்தார்கள். மலையில் இருக்கும் இறைவனின் நாமத்தைக் கோஷித்தார்கள். குழந்தைகள்  , இளைஞர்கள், நடுத்தர வயதினர்,   அவர்களையும் விடப் பெரியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாத பெருங் கூட்டம் மெதுவாக நடந்து சென்றது. செல்லும் வழியில்  வெறும் பாதங்களை கூரான கற்கள் சீண்டி குசலம் விசாரித்தன. சேஷு மெதுவாக நடந்தார். அவருக்கு இது முதல் தடவை என்பதால் ஒருவர்  மாற்றி ஒருவர், அவருக்கு எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா ,வலி ரொம்பத் தெரிகிறதா என்று எல்லாம் கேட்டுக் கொண்டே வந்தார்கள்.                                         மணி அவரிடம் இப்பல்லாம் இந்த பாதை எவ்வளவோ மேல். நான் முதல் தடவை இங்க வந்தப்போ நிஜமாவே, இந்த இடமெல்லாம் கல்லும்   முள்ளும்தான் இருக்கும். ராத்திரி காட்டு மிருகங்கள் எல்லாம் சர்வ சாதாரணமா குறுக்க போகும். இப்ப என்னடான்னா பாதி வழி வரைக்கும்  சிமென்ட் போட்டாச்சு. இங்கே ஏரோட்ரம் கூட வரப் போறதுன்னு சொல்லிண்டு இருக்கா. பூரா வழிக்கும் ஆஸ்பால்ட் போட்றுவானோ    என்னமோ என்றார்.

 

இந்த கோயில் ரொம்ப பணக்கார கோயில்னு எல்லாரு சொல்லறா. அப்படிப் பாத்தா  நீங்க சொல்றதெல்லாம் ஒரு செலவா இவாளுக்கு  என்றார் சேஷு.

 

ஆமா. இந்த பணவிஷயத்தால கோயில் டிரஸ்டுல கூட அடிக்கடி தகராறு , எலக் ஷன் எல்லாம் நடக்கறதாமே என்றார் ராஜாமணி.

 

ஆமா. இங்க அடிக்கடி சினிமாக் காரா வேறு வந்து கூத்தடிச்சுட்டு போவா. நல்ல வேலைய ஷூட்டிங்கு அது இதுன்னு நடத்த விடரதில்லே.   அப்படியும் பாருங்கோ, யாரோ ஒரு சினிமாக்காரியப்  பத்தி கொஞ்ச நாள் ஒரே ரகளையா இருந்தது என்றார் சேஷு.          அவர்கள் கீழே இருந்து கிளம்பும் போதே ‘நச’ ‘நச’ வென்று மழைத் தூறலாக இருந்தது. சில சமயம் சற்றுப் பெரிதாகவும் மழைத் துளிகள்   விழுந்தன. நடந்து செல்லும் தரை ஈரமாக இருந்ததால், சில இடங்களில் ஜாக்கிரதையாக நடக்க வேண்டியிருந்தது. மூன்று மணி நேரப்  பிரயாணத்துக்குப் பிறகு அவர்கள் மலை உச்சியை அடைந்தனர். ஏற்கனவே, மணியின் நண்பர் ஒருவர் மலையாளப் பத்திரிகை  ஒன்றின்   விருந்தினர் தங்குமிடத்தில் அவர்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருந்தார்.

 

கொஞ்ச நேரம் நாம ரெஸ்ட் எடுத்துக்கலாம்  . காலம்பற மூணு மணிக்கு எழுந்தா எல்லோரும் ரெடியாகி கிளம்பறதுக்கு சரியா இருக்கும்.  ரொம்ப கியூ இருக்கறதுனால சீக்கிரமா போறது நல்லது என்றார் மணி.எல்லோரும் படுத்துக் கொண்டார்கள். நடந்து வந்த களைப்பில்   எல்லோரும்    உடனே தூங்கி விட்டார்கள்.

 

மணி சொன்னபடி எல்லோரையும் மூன்று மணிக்கு எல்லாம் எழுப்பி விட்டார்.  குளித்து முடித்துத் தயாரான போது மணி நாலரை   ஆகி விட்டது. மூலஸ்தானத்தில் தரிசனம் செய்வதற்கு அப்படியொரு  கூட்டம் நீளமாகவும் வளைந்தும் நெளிந்தும் நின்று நகர்ந்தது. மணி   எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போகும்படி சொன்னார்.சந்நிதானத்தை நெருங்க நெருங்க கூட்டத்தைச் சமாளிக்க முடியாது என்றும்,   அவர்கள் கலைந்து போனால் மறுபடியும் ஒன்று சேர நேரம் ஆகும், அப்படி ஆனால் அவர்கள் மலையிலிருந்து கீழே இறங்கிப் போவதில்   தாமதம் ஏற்படும்  என்றும் அவர் சொன்னார்.

 

மணி சொன்னது பாதிதான் என்பது போல நெருக்கி அடித்துக் கொண்டு கூட்டம் அலை மோதிற்று. சேஷுவுக்கு மூச்சு திணறுவது   போலிருந்தது. உரத்த கோஷம் ஒலிக்க கூட்டம் அதுவே ஒரு ராட்சசன் போல நகர்ந்தது. மூல விக்ரகத்தை நெருங்கிய போது யாரையும்  நிற்க விடாமல் காவல் உடை அணிந்தவர்கள் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.சில வினாடிகள் கூட நின்று தரிசனம் செய்ய வாய்ப்பு   கொடுக்க விரும்பாதவர்கள் போல அவர்கள் மனிதர்களைத் தள்ளி விட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர் முறை வந்த போது  கை கூப்பி நமஸ்கரித்து மூல விக்ரகத்தைப்  பார்த்தார்.திடீரென்றுஅப்போது  ஒருவர் மீது ஒருவராக விழுந்து அவரையும் தள்ளிக்  கொண்டு நாற்பது ஐம்பது பேர் சன்னதியை விட்டு விலகி முன்னேபோய் தடுமாறிக் கொண்டு நின்றார்கள். அவர் சமாளித்து பார்த்தபோது  அவர் அருகில் மணியும், சேதுவும் நின்றார்கள்.     இன்னும் கொஞ்சம் முன்னால் போய் நிற்கலாம் என்று மணி அவரைக்  கூட்டிக் கொண்டு கோயிலுக்குள்  இருந்த மண்டபத்துக்கு வந்தார்.

 

சேஷு ஸார், நீங்க இங்கேயே இருங்கோ. பத்து நிமிஷத்திலே  நானும் சேதுவும் போய் பிரசாதம் வாங்கிண்டு வந்துடறோம். மத்தவாளும்   அனேகமா  அங்கே போயிருப்பா என்று  மணி சேதுவைக் கூட்டிக் கொண்டு நடந்தார்.

 

சேஷு மண்டபத்துத் தூணில் சாய்ந்து கொண்டார். என்ன கூட்டம், என்ன கூட்டம் . இவ்வளவு நாள் எல்லா விதிகளையும் முறைகளையும்  உடம்போடு கட்டிக் கொண்டு, நியமங்கள் என்று விதிக்கப் பட்டவைகளைப் பின்பற்றி, அலைந்து திரிந்து ஏறி இறங்கி தேடி வந்த  திரு உருவத்தைப் பார்க்க வந்தால், சில நொடி அவகாசம் கூடக் கொடுக்கப்படவில்லையே என்று ஒரு எண்ணம் அவர் மனதில் தோன்றிற்று .  சேஷு கண்களை மூடி சாமி சந்நிதியில் தான் பார்த்த முகத்தை மனதிற்குள் கொண்டு வர முயன்றார். முடியவில்லை. கூட்டம் அவரை    நெரித்துத் தள்ளியது வந்தது. மாலை போட்டு விட்ட கோஸ்வாமியின் முகம் வந்தது. சாமிநாத ஐயர் வந்தார். கலா வந்தாள். அக்காவின்  குழந்தை அம்முக் குட்டி வந்தது. வீர வைஷ்ணவர், பூக்கடைக்காரன், பள்ளிக்குச் செல்லும் பெண் குழதைகள் எல்லோரும்   வந்தார்கள். ராவ் வந்தான். நீரில் மிதந்த அவலம் வந்தது. ஆனால் அவர் கொண்டு வர  முயன்ற முகம் வரவில்லை.

 

கண்களைத் திறக்கவே வேண்டாம் போல இருந்தது. கஷ்டப் பட்டுத் திறந்தார். உள்ளே போவதற்கான கூட்டம் வளைந்தும் நெளிந்தும்   நீளமாக ஆகிக் கொண்டே போவதைப் பார்த்தார். மண்டபத்து வழியாக கீழே போகும் கூட்டம் வெளியே போய்க் கொண்டிருந்தது.

 

சேஷு, மணியும் மற்றவர்களும்   வருகிறார்களா என்று பார்க்க அவர்  உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்தார்.

 

 

 

Series Navigationவிக்கிப்பீடியா – 2கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *