மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்

This entry is part 10 of 38 in the series 10 ஜூலை 2011

“என்னய்யா கேசு?”, இடுப்பில் நிக்காத காக்கி கால் சட்டையை மேலே இழுத்தபடி உள்ளே நுழைந்தார் துணை ஆய்வாளர். நாள் முழுவதும் அமைச்சரின் ‘மது, புகையிலை விலக்குப் பேரணியில்’ விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு களைத்துப் போய் வந்திருந்தவருக்கு, குடுவையிலிருந்து தேநீர் கொடுத்தார் ஏட்டு. அவர் வாயின் வலுக்கட்டாயத்தால் கொஞ்சமாக உள்ளே சென்றது நீர்மம்.

அவர் தேநீரின் சூட்டை சுவை பார்க்க நேரம் கொடுத்துவிட்டு,

“மூணு பெற மொத்து மொத்துன்னு மொத்திருக்கான் சார்”, என்றார்.

“குடும்பப் பகையா?”

“இல்ல சார்”

“கடன்,பொம்பள விவகாரம் அப்படி ஏதாவதா?”

“இல்ல சார்”

“நீயே சொல்லேன். நானே நொந்து போய் வந்திருக்கேன். யோசிக்க வெச்சிட்டு”

“அந்த மூணு பேரையும் கூட்டிட்டு வரேன் சார். நீங்களே விசாரிங்க”

“ம்ம்ம்”, மறுபடியும் தேநீரை உறிஞ்சினார். அது உள்ளே சென்று சூட்டை பரப்புவதர்க்குள்,

“இவங்க தான் சார்”, என்று மூன்று பேரையும் அறிமுகம் செய்தார். மீதம் இருந்த தேநீரை ஒரே இழுவையில் முடித்துவிட்டு, அம்மூவரின் அருகில் சென்று கன்னத்தை கவனித்தார்.

“என்னய்யா? மூணு கன்னத்துலயும் விரல் மட்டும் தான் பதிஞ்சிருக்கு. மொத்தினான்-ண்ணு சொன்னீங்க? இதுக்கு எதுக்கு யா போலீஸ் ஸ்டேஷன் வந்தீங்க?”

“சார். ஏதாவது ஒரு நல்ல காரணத்துக்காக அடிச்சிருந்தா விட்டுட்டு போயிருப்போம். இவன் எதுக்கு அடிச்சான்னு தெரிஞ்சா, நீங்களே காண்டாவீங்க”, என்றான் மூவரின் ஒருவன்.

“எதுக்கு டா அடிச்ச?”, முதல் முறையாக முத்துவின் அருகில் சென்று அவன் முடியைப் பிடித்து இழுத்தார்.

“சார். சார். வலிக்கிது; விடுங்க சார்”, என்று துடித்தான்.

“சொல்லு. அப்போ தான் விடுவேன்”

“சொல்றேன் சார். சொல்றேன் சார்”, என்று நடுங்கியவுடன், பிடியை தளர்த்தினார். முத்து அவர் கண்களில் தன் முகத்தை பார்த்தான். அவன் பரிதாப நிலையும் அக்கண்களின் ஆழத்தில் அம்பலமானது.

அன்று காலை.. தியாகராய நகரில், ஒரு மான்ஷன்!

“டேய் ஒதவாக்கர! முட்டா முத்து. என்ன டா இன்னும் கழட்டிக்கிட்டு இருக்க? வேல வெட்டி இல்லாத பய நீ. இவ்ளோ நேரம் உள்ளே என்ன செஞ்சிட்டு இருக்க? வெளிய வா டா”, நெளியும் கால்களுடன் செல்வா.

செல்வமில்லாதவர்களின் சொர்க்கம், மேன்ஷன் தான்! அதுவும் முக்கியமான சில நகரங்களில், குறைந்த செலவில், வேலை செய்யும் இடத்திற்கு அருகில் கிடைத்துவிட்டால் வெல்லக் கட்டி தான். அந்த மாதிரியான ஒரு மேன்ஷனில், வசதியை மனதில் கொண்டு எவரும் குடிபுகுவதில்லை.

“வீட்டிற்கு எவ்வளவு பணம் கொடுக்க முடிகிறது? தொடையிலும்,ஆசன வாயிலும் சொறி-சிரங்கு ஏற்படுத்தாத தண்ணீர் கிடைக்குமா? தூங்கும் போது கடிக்கும் மூட்டை பூச்சிகளால் ஏற்படும் வீரத் தழும்புகளை ஆற்றுவதற்கு ஆயின்மென்ட் கிடைக்குமா? பத்து ரூபாயில் டிபன், இருபது ரூபாயில் சாப்பாடு, மறுபடியும் பத்து ரூபாய்க்கு பரோட்டா-குருமா கிடைக்குமா? முடிவாக, முக்கிக்கொண்டு வரும் போது முட்டி மோதாமல் மலம் கழிக்க முடியுமா?” என்பன போன்ற கேள்விகளுக்கு சாதகமான பதிலை கொடுக்க வல்ல மான்ஷனே, மாட மாளிகை!

செல்வத்திற்கு, அன்று கடைசி கேள்விக்கு மட்டும் சாதகமான பதில் இல்லை. மாதம் தவறாமல் வாடகை வாங்க வந்துவிடும் முதலாளியில் ஆரம்பித்து, காலை, நேரம் கடத்தி எழுப்பிய ‘ஓட்டை’ அலாரம் வரை எல்லாவற்றையும் திட்டி முடித்துவிட்டு, முத்துவுக்கு மலர்மாலை சூட்டிக் கொண்டிருந்தான் செல்வம். சில நிமிடங்களில் வெளியே வந்த முத்து,

“டேய். உன் அலம்பலுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. கக்கூசுக்கு போறதுக்கு கூட வேல வெட்டியோட தான் போகணுமா? ஏன்? எங்களுக்கெல்லாம் வராதா?”, என்று இடையில் நின்றபடி கூறினான்.

“மொதல்ல தள்ளு”, என்று உள்ளே சென்று கதவை மூடிவிட்டு,

“வேல வெட்டி இல்லாதவன் எதுக்கு திங்கிற? தின்றதால தானே வருது?”, என்று குரல் எதிரொலிக்கக் கூவினான். விலக முற்பட்ட முத்து, அதை கேட்டதும், கதவில் ஒரு எத்து விட்டு நகர்ந்தான்.

“எலே! தகடு ஒடஞ்சா, உன் ஒடம்புல கீறல் விழும். இருக்குறது ஒரு கதவு. வெட்டிப் பய ஓடச்சான்-ன்னு மாமனுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான். வெளிய தொரத்திடுவான்”

“அங்க சுத்தி, இங்க சுத்தி, அங்கேயேயேயே”, மனதிற்குள் நொந்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்றான்.

அன்று முத்துவுக்கு முக்கியமான நேர்காணல். எம்.எஸ்.சி படித்துவிட்டு,ஆறு மாத கணினி பயிற்சி முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். அவன் தன் சொந்த ஊரான சேலத்திலிருந்து, சென்னை வந்து சில மாதங்கள் ஆயிருந்தன. கையிருப்பு கால் வருடத்திற்குள் கரைந்துவிடும்; அதற்குள் ஒரு வேலை மிகமுக்கியம்!

சில நாட்களாக எந்த வாய்ப்பும் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தவனுக்கு, அன்றைய வாய்ப்பு ஒரு உத்வேகத்தை அளித்திருந்தது. குளித்து முடித்துவிட்டு அறைக்குள் வந்ததும், தன் பெட்டியை திறந்து, நேர்காணலுக்கு தனியாக எடுத்து வைத்திருந்த உடுப்பை எடுத்து மாடிக் கொண்டான். அதற்குள், துண்டும் கையுமாக செல்வம் உள்ளே நுழைந்தான்.

“எங்க பொறவ?”

“இண்டர்வியு-கு. சாவிய மறக்காம மெஸ்-ல குடுத்துட்டு போய்டு”

“அது சரி. உனக்கே தெரிஞ்சு போச்சு. மதியமே தொரத்தி விட்டுருவானுங்க-ன்னு. இதெல்லாம் எங்க உருப்பட போகுது”

“ஹ்ம்ம். உன்ன திருத்தவே முடியாது”, எண்ணெய் காணாத கதவை இழுத்து மூடினான்.

“ஏன் டா? உன் பேரு செல்வமா?”, அவன் கதையில் இடை மறித்து வினவினார் காவலர்.

“இல்ல சார். இவன நான் ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் சார் பாத்தேன்”

“பின்ன என்ன டா?”

“முழுசா கேளுங்க சார்”, தலையை தடவிக் கொண்டே கூறினான் முத்து.

“சரி சொல்லு”

வீட்டிலிருந்து நேர்காணலுக்கு கே.கே நகர் சென்ற முத்து, மதியமே சுவற்றில் அடித்த பந்து போல் மான்ஷனுக்கு திரும்பினான். காரணம், அவன் விண்ணப்பித்திருந்த வேலைக்கு முத்து ‘ஓவர் குவாலிபைட்’! மாலை வரை வெளியில் திரிந்துவிட்டு, வாசலை அடைந்த பொது,

“உலகத்துலேயே, அதிகமா படிச்சிருக்க; அதனால உனக்கு வேலை இல்ல-ன்னு இங்க மட்டும் தான் சொல்லுவானுங்க போல”, என்று புலம்பிக் கொண்டே அறையினுள் நுழைந்தான்.

“என்ன டா? வேல போச்சா?” அன்றைக்கென்று பார்த்து செல்வத்தை நேரத்துக்கு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் அவன் உயர் அதிகாரிகள்.

“ஆமா. ஓவர் குவாலிபைட்-ஆம். தலை எழுத்து”, என்று விரக்தியை கைகளில் கடத்தி, காலுறையை உருவினான்.

“நீ திமிரா பேசியிருப்ப”, என்ற செல்வத்தை ஒரு முறை முறைத்துவிட்டு கயிலி மாற்றும் வேலையில் ஈடுபட்டான்.

“என்ன மொறைக்கிரவ? இதோ பார். உனக்கு இதெல்லாம் வேலைக்கு ஆவாது. பேசாம ஒரு கடைய போட்டு உக்காரு. நிம்மதியா சம்பாதிக்கலாம்”, செல்வம் தன் ஆலோசனைகளை தொடர, அர்ச்சனையை சகிக்காமல் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தான். எதிரில் உள்ள டீ கடையில் ஒரு ‘தம்’ போட்டால் தான் நிம்மதி திரும்பும் என்று தோன்ற,

“அண்ணே, ஒரு பீடி குடுங்க”, என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள், ஆயிரம் ரூபாய் செல் போன் சிலிர்த்தது. அந்த பக்கம், அம்மா.

“என்னமா? சொல்லு”, விரக்தியை கையிலிருந்து செல் போன் மூலமாக அன்னையிடம் காண்பித்தான்.

“என்னப்பா? வேல என்னாச்சு?”

“மண்ணாச்சு. நான் அதிகம் படிச்சிருக்கேனாம். அதனால வேலை இல்லையாம்”

“இதுக்கு தான் அப்போவே சொன்னேன். பத்தாங்கிளாசோட நிருத்திரு; வெவசாயம் பாக்கலாம்-னு. கேட்டியா?” அம்மாவும் அர்ச்சனையை தொடர,

“அடடடா..மே! யார் யார் புத்தி சொல்றதுன்னு இல்லையா? சேல்ஸ் செய்றவன் கட போடா சொல்றான்; பி.பி.ஓ-ல இருக்குறவன் வெளி நாட்டு காரங்க கூட பேசலாம்-னு ஆசை காட்டுறான்; எங்க ப்ரொபசர்-ஐ பாத்தேன், அவர் மேல படிக்க சொல்றார். நீ என்ன டா-ன்னா வெவசாயம் செய்யச் சொல்ற. இப்படி ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணிகிட்டே இருக்க வேண்டியது தானா? எனக்கு-ன்னு ஒரு மூளை இல்ல? எனக்கு என்ன வேணும்-னு எனக்கு தெரியாதா? வை மா போனை”, என்று கட் செய்தான்.

கோபத்தில் உச்சியில், கடையிலிருந்து வாங்கிய பீடியை சணல் நெருப்பில் பற்றவைத்து, வேகமாக ஒரு இழுப்பு இழுத்தான். அவன் மண்டை ‘ஊன்னு சொல்லு. வெடிச்சிடறேன்” என்றது. அதை அடக்க தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தவனின் தோளை யாரோ தொட்டனர்.

“டேய் முத்து! எப்படி டா இருக்க?” என்றான் சக்தி; அவன் பால்ய நண்பன். அந்த நேரத்தில் நட்புக்கு மரியாதை கொடுக்க மனமில்லை என்றாலும், புன்னகையை வரவழைத்துக் கொண்டு,

“அட நம்ம சக்தி. நல்லா இருக்கேன் மாமா. நீ எப்படி இருக்க? ” என்றான்.

“நான் நல்லா இருக்கேன் டா. என்ன செய்ற?” தயக்கத்துடன்,

“வேல தேடிகிட்டு இருக்கேன் மச்சி. கெடைக்கல”,என்று பீடியில் மற்றொரு இழுவை இழுத்தான்.

“நீ எம்.எஸ்.சி படிச்சிருக்க? உனக்கே வேலை கெடைக்கலியா?”

“என்ன மச்சி செய்றது? எல்லாம் தலை எழுத்து. அது சரி, நீ என்ன செஞ்சிட்டு இருக்க?”

முத்துவின் இந்த கேள்விக்கு, “அவன் மூலமாக மற்றொரு வாய்ப்பு கிடைத்தால்?”, என்ற யோசனையே காரணம்.

“நானும் வேல தேடிகிட்டு தான் இருக்கேன் மச்சி”, என்றான் சக்தி.

“ஒரு யோசனை கூட நமக்கு சாதகமா இருக்க மாட்டேங்கிதே! ஹ்ம்ம்”, மனதை தேற்றிக் கொண்டு இன்னொரு இழுவை இழுத்தான். பீடி தீர்ந்தது. சக்தி பேச்சை தொடர்ந்தான்.

“ஆமா, நீ எங்க எல்லாம் வேலை தேடித் போற?”

“கே கே நகர், அடையாறு, அண்ணா நகர் இப்படி சிட்டி சைடா பாத்து போயிட்டு இருக்கேன் மச்சி”

“அடடே. அதான் கெடைக்கல.டவுன் பக்கம் போய் தேடியிருந்தா கண்டிப்பா கெடைச்சிருக்கும். சிட்டி சைடு ரொம்ப காம்பெடிஷன் இல்ல?”

“இவன் என் கிட்ட அடி வாங்காம போக மாட்டான் போலயே!” மனது அரித்தாலும்,

“கரெக்ட் மச்சி. நான் தப்பு செஞ்சிட்டேன்”, என்றான். அவன் விட்டால் போதும் என்று பட்டது. பீடி வேறு தீர்ந்துவிட்டது.

“சரி, நீ எந்த மாதிரி கம்பனி தேடுற?”

“நான் படிச்சது கம்பியூட்டர் சம்மந்தமானது”

“அடடே! என்ன மாதிரி பயாலாஜி படிச்சிருந்தா செம வேல கெடச்சிருக்கும் மச்சி. மிஸ் பண்ணிட்ட”, என்று வானத்தை பார்த்தான்.

“அண்ணே, இன்னொரு பீடி குடுங்க”, சக்தியின் வார்த்தைகள் மேலும் வெறுப்பூட்ட, மறுபடியும் மனம் தெளிவு கேட்டது.

“என்ன எதுவும் பேச மாட்டேங்கிற? நான் சொல்றது சரி தானே?” சக்தியின் கைகள் அவன் தோளினை பற்றின.

“ம்ம்ம்”, என்று திரும்பவும் சணலில் பற்றவைத்தான்.

“சரி, எவ்ளோ சம்பளம் கேட்ட?”

“இவனுக்கு பதில் சொல்லியே ஆகணுமா?” என்ற கேள்வி எழுந்ததற்க்கிடையில்,

“சொல்லு டா. எவ்ளோ”,அவன் தொல்லை அதிகமானது.

“டிமாண்ட் செய்யல மச்சி”

“அடப் பாவி! இப்படி எல்லாம் அப்பாவியா இருக்காத டா. ஒரு அமவுண்ட் கேட்டா தான் நம்மள மதிப்பானுங்க. என்ன சொல்ற? சரி தானே?”

“எடு கைய!”, என்றான். அவன் பொறுமை எல்லை கடந்துவிட்டது.

“என்ன மச்சி? திடீர்னு இப்படி பேசுற?”

“எடு கைய”, குரல் கடுகடுத்தது.

“ஏன் டா?”

“ஆமா, இவ்ளோ சொல்றியே, உனக்கு ஏன் செல்லம் இன்னும் வேலையே கெடைக்கல?” முத்து, கயிலியை மடித்துக் கட்டினான்.

“அதுவா? அது ஒரு பெரிய கதை”

“என்ன கத ராசா?”

“நீ என்ன ஒரு மாதிரி கேக்குற?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ சொல்லு”, சிறிது யோசனைக்கு பிறகு, ஆபத்தில்லை என்று தோன்றவே,

“என் கெரகம் சரியில்லையாம். எங்க சோசியர் சொல்லியிருக்காரு. சி, எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் இல்ல? என்ன நான் சொல்றது? சரி தானே?” என்றான்.

“இதோ வந்திருச்சு-ல்ல?”

“அப்படி-ன்னு சொல்லி அடிச்சிட்டான் சார்”, ஆய்வாளரிடம், கன்னத்தில் கை வைத்துக் கொண்டு முத்துவின் கதையை சக்தி முடித்தான்.

“கேளுங்க சார். இவன் செஞ்சது நியாயமா-ன்னு”, என்று அவன் சொன்னவுடன், முத்துவிடமிருந்து சக்தியின் பக்கம் பார்வை மாறியது.

“யார் கிட்ட கேட்க சொல்ற? உன் கிட்டயா? அவன் கிட்டயா?”, ஆய்வாளரின் குரல் சக்தியின் காதில் அலறியது.

“அவன் கிட்ட தான். அவன் தானே என்ன அடிச்சான்? நான் அட்வைஸ் தானே செஞ்சேன்”, என்றான் பாவமாக.

“ஓ! உனக்கு அந்த நெனப்பு வேற இருக்கா? அட்வைஸ் செய்றதுக்கு ஒரு தகுதி வேண்டாம்?”

“சார், இவன் வேணா வேலை இல்லாம அட்வைஸ் செஞ்சிருக்கலாம். நான் அப்படி இல்ல. ஐ ஆம் எ டிக்நிபைடு ஆபீசர் பரம் எ ரெபியூடட் கன்செர்ன்”, என்றார் அருகில் இருப்பவர். அதை கேட்டதும், மறுபடியும் அதிகாரியிடம் ‘முடி’ மாட்டக் கூடாதென,

“சார். அவர் தான் அந்த பி.பி.ஓ மானேஜர்”, என்றான் முத்து; அவசரமாக.

“அதானே பாத்தேன். உனக்கு என்ன? ஆபீஸ்-ல ஆள் புடிக்க சொல்லியிருப்பாங்க. நாக்கு நுணியில இங்கிலீசு”, என்றதும் அவர் தலை குனிந்து, ‘ஆமாம்!’ என்றது.

“நீ யாரு? ப்ரொபசரா?”

“இல்ல சார். நான் அவன் மேன்ஷன் மொதலாளி”

“இவன எதுக்கு டா அடிச்ச?”

“வடை வாங்கவே காசில்ல. இவன் வீடு கட்டி வாடகைக்கு உட்டு சம்பாதிக்க சொல்றான் சார்.நீங்களே சொல்லுங்க. எனக்கு எப்படி இருக்கும்?” அவன் அழ ஆரம்பித்துவிட்டான்.

“அடப்பாவிங்களா. ஒருத்தன் கெடச்சிட்டான்-ன்னு போட்டு புடுங்கி எடுத்திருக்கீங்களே! ஏன்யா, உங்க அட்வைஸ் சரியா இல்லையான்னு பாக்க இவன் வாழ்க்கை தானா கெடச்சுது? இதுல அடிச்சிட்டான்-னு வேற வந்து நிக்கறீங்க. ஊர் முழுக்க குடி, சிகரெட்டை ஒழிக்க பேரணி நடத்துறாங்க. இவன மாதிரி பசங்க கெட்டப் பழக்கத்துக்கும், வன்முறைக்கும் அடிமை ஆவுறதே நீங்க(சமுதாயம்) குடுக்குற தொல்லையால தான். மொதல்ல உங்கள ஒழிக்கணும்-யா. ரெண்டு பிரச்சனைக்கு தீர்வு கொடுத்து,பாராட்டும் வாங்கிட்டா,ஒடனே அட்வைஸ் செய்ய ஆள் தேட ஆரம்பிச்சிடுறீங்க. போங்கய்யா. போய் உங்க பொழப்ப பாருங்க”, அவர்கள் மூவரையும் துரத்திவிட்டு, உட்கார்ந்திருந்த முத்துவிடம் வந்தார் ஆய்வாளர்.

“என்ன டா? அவங்கள துரத்தினதும் போஸ் மாறுது? ஒழுங்க உட்காரு டா”, என்று காலை மிதிக்க ஓங்கினார்.

“சார். சார். வேணாம்”, அவன் இரு கைகளும் முகத்தை மறைத்தன.

“எப்பவும் அடுத்தவன் மேலையே குறை சொல்லாத. உன்ன மாதிரி வெளிய ஆளே இல்லையா? அவன் எல்லாம் உன்ன மாதிரி உலகத்தை திட்டிகிட்டு உக்காந்திருந்தா வேலைக்கு ஆகுமா? முயற்சி செய்யணும். கிடைக்கலேன்னா உன்னையே செருப்பால அடிச்சிக்கோ. அடுத்தவன அடிக்கிறது ஆம்பள தனம் இல்ல. இனிமே எவனையாவது தொட்ட-ன்னு தெரிஞ்சா, உன் கன்னத்துல என் கை பதியும். என்ன புரியுதா?”

“புரியுது சார்”

“போ. ஓடு!”

தன் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினான் முத்து. டீ க்ளாசில் மீதம் இருக்கிறதா என்று ஆய்வாளர் ஆராய்வதர்க்குள்,

“சார், ஐ.ஜி”, என்றார் ஏட்டு. உடனே ஓடிச் சென்று,

“ஹலோ”, என்றார்.

“சேகர், நாளைக்கு நடக்கப் போகும் பந்தோபஸ்துக்கு சில ஆலோசனைகள் குடுக்கணும். ஒடனே ஐ.ஜி ஆபீஸ்க்கு வாங்க”, என்றார்.

“காலைல தான் டி.ஐ.ஜி ஆலோசனை குடுத்தார் சார்”

“அது இருக்கட்டும். ஏதாவது பிரச்சனை வந்தா, எல்லாரும் என் பேரை சொல்லி, இவரு கண்டுக்கவே இல்ல-ன்னு சொல்லக் கூடாது இல்லையா? அதுக்கு தான். வாங்க”

“அது சரி! வரேன் சார்”, போனுக்கு சல்யூட் அடித்துவிட்டு ‘ரிசீவரை’ கீழே வைத்தார்.

“நல்லா பேரு வேச்சனுங்கய்யா ரிசீவர்-னு. எப்பவும் ரிசீவ் செஞ்சிட்டே தான் இருக்கும்”, தலையில் இருந்த தொப்பியின் சின்னத்தில் அவர் மூன்று விரல்களும் பதிந்தன.

 

Series Navigationதூசு தட்டப் படுகிறது!என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம்
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

3 Comments

  1. Avatar
    Kannan says:

    நன்றி. என் எழுத்து பிடித்தவர்கள், என் பெயரை சொடுக்கி,என் தனிப்பட்ட ப்ளாக்கையும் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  2. Avatar
    Subbaraman says:

    Good story. Humorous but really thinkable.You are right. The cheapest thing available on this earth is giving advice to others. But a proper advise at the right time, with a good guidance and support with true love(w/o selfishness)works out. But where is it available? Very rare.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *