கதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

This entry is part 20 of 33 in the series 11 செப்டம்பர் 2011

குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம் ஆரம்பித்திருந்தது. தமது தந்தை நைநியப்பிள்ளைக்கு இழைத்த அநீதிக்கு நீதிகேட்க சென்ற குருவப்பிள்ளைக்கு பிரெஞ்சுக் காரர்களின் மனநிலை ஓரளவு புரிந்திருந்தது. அவர் மூன்று நான்கைந்து மாதம் கடலில் பயணம் செய்யவும், மிகுதியான பொருட்செலவை எதிர்கொள்ளவும் துணிந்தாரெனில் யூகங்கள் அடிப்படையில் ஐந்து காரணங்களை முன்வைக்கலாம்.

முதலாவது: பிரெஞ்சு வரலாற்றில் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஓர் அரசின் கீழ் நடக்கும் செயல்பாடுகளுக்கு ஆட்சித் தலமை முழுப்பொறுபேற்பதென்பதை ஓர் அறமாகவே கடைபிடிப்பவர்கள் என்ற பொதுவான நம்பிக்கை

இரண்டாவது: தந்தை நைநியப்பிள்ளையின் நேர்மையில் மகன் குருவப்பாபிள்ளை வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கை.

மூன்றாவது: ஒரு பேராசைபிடித்த கவர்னர், குற்றமிழைக்காத தமது தந்தையை தண்டித்து தமது தந்தைக்கும் தமது குடும்பத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார், இந்த அவப்பெயரை துடைக்காமல் நாடுதிரும்பமாட்டேனென்ற மகனுக்குள்ள இயற்கையான வீம்பும் காரணமாக இருக்கலாம்

நான்காவது: இது ஒரு கௌரவ பிரச்சினையுங்கூட. உள்ளூர் பிரமுகர்கள் மத்தியிலும் புதுச்சேரியிலும் நைநியப்பிள்ளைக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையும் பறிபோன தரகர் பதவியும் அக்குடும்பத்தின் செல்வாக்கை வெகுவாக குறைத்திருந்தன. என்பதும் ஓர் காரணமே.

ஐந்தாவது: பாரீஸ் சென்று நீதிகேட்கும் அளவிற்கு குருவப்ப பிள்ளையிடம் போதிய பணபலம் இருந்ததும். நைநியப்பிள்ளையைத் தண்டித்திருந்த கவர்னர் கியோம் எபேருக்கு புதுச்சேரி காலனியிலும் சரி, பிரான்சு தேசத்திலும் சரி, அரசியல் எதிரிகள் நிறைய இருந்தார்கள் என்ற உண்மை கூட ஒரு காரணமாகிறது.

மேற்கண்ட ஐந்து காரணங்களைத் தவிர்த்து ஆறாவதாக ஒன்று பிரெஞ்சு முடியாட்சியில் குருவப்பபிள்ளைக்குச் சாதகமாக நிகழ்ந்தது.

பதினைந்தாவது லூயி முடிசூடியிருந்தார். நன்மை பதினைந்தாம் லூயி வடிவில் ஏற்படவில்லை. அவரது சிறிய தகப்பபன் வடிவில் குருவப்பாவைத் தேடிவந்தது. பதினைந்தாம் லூயி பதவிக்கு வந்தபோது அவர் ஆறு வயது சிறுவனென்ற நிலையில் உருவான காபந்து அரசுக்கு பதினைந்தாவது லூயியின் சகோதரர் ஓர்லயான் பிரதேசத்தின் நிர்வாகத்தைக் கவனித்துவந்த பிரபு ஒருவர் பொறுப்பேற்கிறார். சிறுவனாக இருந்த பதினைந்தாம் லூயி பெயரளவில்தான் மன்னர். ஆட்சி உண்மையில் ஓர்லயான் பிரபுவின் கைக்குள் இருந்தது. ஆட்சித் தலமைக்கு வருகிற எவரும் தமது முந்தைய ஆட்சியில் செயல்பாடுகளை முந்த வேண்டுமென நினைப்பதும், தமது ஆட்சி முந்தய ஆட்சிக்கு மேம்பட்டதென்கிற கருத்தினை மக்களிடம் ஏற்படுத்தித் தரவேண்டுமென நினைப்பதும் இயல்பு. அவ்வாறே ஓரலயான் பிரபுவுக்கும் தமது பெரிய தந்தையார் செய்தவை விவேகமற்ற செயல்கள், அநீதிகள். எனவே அரசியல் அமைப்பை திருத்த வேண்டும், மக்களுக்கு சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் தந்து சமூகத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென நினைத்து மும்முறமாக செயல்பட்டார்.

குருவப்பா விண்ணப்பத்தை பரிசீலித்த மன்னரின் ஆலோசனை சபை 1718ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம்தேதி முழுமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. அத்தீர்மானம் நைநியப்பிள்ளை வழக்கில் வாக்குமூலங்கொடுத்த சாட்சிகளை மறு விசாரணை செய்வதற்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

இராண்டாண்டுகாலம் நீடித்த மறுவிசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் அது தொடர்பான ஆவணங்களையும் பரிசீலித்தார்கள். 1720ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தது. நைநியப்பிள்ளை குற்றமேதும் இழைக்கவில்லை அவர் தண்டிக்கப்பட்டது தவறு என்றதில் கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பில் அதற்குரிய இழப்பீட்டைத் தரவேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

நைநியப்பிள்ளையின் சொத்துக்களை ஏலம் போட்டுக் கிடைத்த 10060 வராகன்களை தமது கருவூலத்தில் பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் சேர்த்துக்கொண்ட நாள் முதல் பத்து சதவீதம் வட்டியுடன் சேர்த்து அசலையும் வட்டியையும் நைநியப்பிள்ளையின் குடும்பத்தினருக்கு செலுத்தவேண்டும் அது தவிர நைநியப்பிள்ளை குடும்பத்திற்கு ஏற்படுத்திய அவமரியாதையை சீரமைக்கும் வகையில் அக்குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக 20000 வராகன் கூடுதலாக தரவேண்டுமென்ற உத்தரவு ம் முடியாட்சியிடமிருந்து புதுச்சேரி கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கு வந்தது.

குருவப்பா பிள்ளை தம் முயற்சியின் பலனை முழுவதுமாக அனுபவித்தார் என்றே சொல்லவேண்டும். செவாலியே பட்டத்தையும் அவருக்கு பிரெஞ்சு அரசாங்க சூட்டி மகிழ்ந்தது. பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் முடியாட்சியின் உத்தரவுப்படி அவரது தந்தையின் தரகர் பதவிக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட கனகராய முதலியாரை தரகர் பதவிலிருந்து நீக்கி அப்பதவிக்கு குருவப்பா பிள்ளையை நியமனம் செய்தது. தரகர் பணியோடு தபலியோம் (Registrar) வேலைக்கும் அவரும் அவர் சகோதரர்களும், வாரிசுகளும் தலைமுறைதலைமுறையாய் சாசுவதமாகின்றார்கள் என்றும் அந்த நியமன அறிக்கை தெரிவித்தது.

ஆக நைநியப்பிள்ளை மீது பழிசுமத்தப்பட்ட குற்றத்திற்கு அவர் மகன் குருவப்பா பிள்ளை பிராயச்சித்தம் தேடினார் என்பது உண்மைதான். பிரெஞ்சுக் காரர்களின் நீதிக்குறித்தும் இவ்வழக்கின் அடிப்படையில் இக்கட்டுரையினைப் படிக்கின்ற நண்பர்கள் வியந்தோதக்கூடும். ஆனாலுங்கூட உங்களில் ஒரு சிலருக்கு காலனி அரசுகளின் மனப்பாங்கினை அறிந்தவர்களென்ற வகையிலும், பிரெஞ்சின் முடியாட்சியில் சேசு சபயினருக்குள்ள செல்வாக்கை இக்கட்டுரையிலேகூட ஏற்கனவே வாசித்திருக்கின்ற வகையிலும் சில கேள்விகள் இருக்கலாம்.

நைநியப்பிள்ளைக்கு பதிலாக வேறு தரகர் நியமனம் செய்யப்படவிருந்தபோது ஒரு கிறுஸ்துவரே தரகராக நியமனம் செய்யவேண்டுமென்று கறாராக இருந்த சேசுசபயினர் -(நைநியப்பிள்ளை இடத்திற்கு நியமிக்கப்பட்ட கனகசபை ஒரு கிருஸ்துவர் என்றும் ஏற்கனவே கூறியிருந்தோம்.)- எப்படி குருவப்பபிள்ளை என்ற இந்துவை தரகராக நியமனம் செய்ய சம்மதித்தார்கள் என்பது முதலாவது கேள்வி

பிரெஞ்சு காலணி அரசாங்கத்திற்கு நியாயத்தை வழங்குவதில் அப்படியொரு அக்கறையா? என்பது இரண்டாவது கேள்வி.

நன்கு யோசித்திருப்பீர்களெனில் இரண்டுக்கும் விடையொன்றுதான். அந்த விடையை ஊகிக்க முடிந்தவர்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்களென நம்புகிறேன். உங்கள் ஊகம் சரி. அறமும் நெறியும் சம்பத்தையோ குபேர பலனையோ அழைந்துவந்ததாக கதைகளில் படிக்கலாம் ஆனால் வரலாற்று உண்மை என்பது வேறு. குருவப்பாபிள்ளை தந்தைக்காக நீதியை நிலைநாட்ட பிரான்சுக்குப் பயணித்தபோது ஆறுகாரணங்கள் இப்பகுதியின் தொடக்கத்தில் ஊகங்களாகச் சொல்லப்பட்டிருந்தன. அந்த ஆறுகாரணங்களையும் கடந்து நீதி தமக்குக் கட்டாயம் வழங்கப்படும் என்பதற்கு ஏழாவதாக ஒரு காரணத்தை தனயன் குருவப்பாபிள்ளை வைத்திருந்தார். அக்காரணம் கிருஸ்த்துவத்தை தழுவுவதென்று அவரெடுத்த முடிவு. பிரான்சுக்குச்சென்றதும் அவர் செய்த முதல்வேலை கிருஸ்துவராக மாறியது. அவரது ஞானத் தந்தை ஒர்லயான் பிரபு, ஞானத் தாயார் இளம் வயது அரசரின் (பதினைந்தாம் லூயியின்) தாயார். ஆக இந்தப் புதிய தகுதி பிரெஞ்சு நீதியின் கதவுகளை திறக்க வழிகோலின. தந்தை நைநியப்பிள்ளைக்கு தனயன் குருவப்பாபிள்ளை கிருஸ்துவத்தைத் தழுவி நீதியை நிலைநாட்டிவிட்டார்.

பி.கு. குருவப்பா பிள்ளையின் இறப்புக்குப்பிறகு கனகராயமுதலியார் தரகராக நியமிக்கபடுகிறார். அவருக்குப்பின் குருவப்பாபிள்ளையின் மைத்துனர் திருவேங்கிடம்பிள்ளையின் மகன் ஆனந்தரங்கப்பிள்ளை தரகராக நியமிக்கப்பட்டார். இவர் நைநியப்பிள்ளை வழிவந்தவரல்ல. குருவப்பா பிள்ளைபோல மதம் மாறி தமது செல்வாக்கை வளர்த்துக்கொண்டவருமல்ல. நவீன தமிழில் பிழைக்கத் தெரிந்தவர் என்பதற்கு ஆனந்தரங்கப்பிள்ளையென பொருள்கொள்ளலாம். சாதுர்யமான எஜமான விசுவாசமும், தரகுத் தொழிலில் அவருக்கிருந்த திறனும் சேசுசபையினரையே வாயடைக்கச்செய்திருந்தது.
—-

நாகரத்தினம் கிருஷ்ணா

Series Navigationநிலா அதிசயங்கள்நட்பு அழைப்பு. :-
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *