ப்ளாட் துளசி

This entry is part 25 of 38 in the series 20 நவம்பர் 2011

இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை.

*
1.

லிப்டிலிருந்த என்னைக் கையைப்பிடித்து இழுக்காதாவாறு இழுத்து தனது இல்லத்தை நோக்கி இழுத்து சென்றார் நாயர். நாயர் உயரம். பின்னாலிருந்து தள்ளாத குறை.

“ தும் ஆக்கே காலி தோக்கோ “ [ நீ வெறுமன வந்து பாரு ]

நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் ஏன் வெறுமனே பார்க்க வேண்டும். அதுவும் அலுவல அவசரத்தில்.
’முடியாது’,
’அப்புறம் பார்க்கலாம்’,
’என்ன என்று முதலில் சொல் அப்புறம் யோசிக்கலாம் வரலாமா, வேண்டாமா’
இப்படி ஏதாவது சொல்லியிருக்கலாம் தான். அதற்குள் நாயர் தன் வீட்டு பெல் அடித்துவிட்டார்.

அவரது மருமகள் கதவை திறந்தாள். வியர்வை பொட்டு பொட்டாய் நெற்றியில் முளைத்திருந்தது. சமையலறையில் இருந்து வந்திருக்கலாம். பரதம் ஆடிவிட்டு வந்திருக்கலாம். இல்லை படுக்கை அறையிலிருந்து..
நோ நோ.. சான்ஸ் இல்லை. அவளது கணவன் இப்போது கடலில் உத்தியோக நிமித்தமாய். அதுவுமில்லாமல் காலையிலே அவ்வாறு இருந்திருக்க முடியாது. நாயரின் மனைவி ஆசாரமானவள். எல்லாம் அவள் கட்டுப்பாட்டில் நடப்பதாய் நினைத்துக் கொண்டிருப்பவள்.

“ எந்தா.. இத்தன சீக்கிரம்.. “ மலர்ந்த சிரிப்போடு மாமனாரை பார்த்து தாழ்ப்பாளை நீக்கிய பின், என்னை பார்த்து விரிந்த கண்களில் சின்னதாய் ஆச்சரியக் குறி. இன்னொருத்தன் கூடவே இருப்பதால் தனது மருமகளின் சிரிப்பிற்கு எதிர் சிரிப்பு சிரிக்காமலும், கொஞ்சம் கடினமாகவும் முகத்தை வைத்து கொண்டார் நாயர்.

கதவு திறக்க, முதல் அறை தாண்டி ஹாலுக்கு கூட்டிக் கொண்டு போனார். நான் நடந்தவாறே மருமகளை நோக்க, சின்னதாய் அவள் புன்னகைத்தாள். வெள்ளை நைட்டியில் பச்சை பூக்கள். வியர்வையை அவள் அவசரமாய் ஒரு கையை தூக்கித் துடைத்துக் கொண்டதில் காது பக்கத்து தலைமுடிகள் கலைந்து முகத்தில் விழ, அதை ஓதுக்கி விட இன்னொரு கையைத் தூக்கியதில் ஸ்லீவ்லெஸ் நைட்டி சின்னதாய் நெகிழ்ந்தது போல தெரிந்தது காட்சிப் பிழையாகவும் இருக்கலாம்.

நாயர் இறுக்கமான முகத்தோடு ஹால் திரையின் பின்பக்கத்தைக் காட்டினார். அதில் ஏராளமான சிவப்பு பொட்டுக்கள் இருந்தன. கொஞ்சம் மண் கலந்து இருந்தது. மண்ணை தண்ணீரில் கலந்து கொட்டியது போலத் தெரிந்த்து.
அந்த திரைச்சிலை சோலாப்பூரிலிருந்து வந்த ஓன்று. அதன் மேல் பாகத்தில் எந்த சேதமும் இல்லை. அது அப்படியே சின்ன சின்னதாய் வட்டங்களையும், உருளைகளையும் சேர்த்து கொண்டு தனது உருவத்தை விரித்திருந்தது. அதன் வரைவில் ஒரு திட்டபடிதலையும் தாண்டி மெல்லிதான சுகந்திரமும், இலகு தன்மையும் எப்படியோ அந்த டிசைனில் வந்திருந்தது. அந்த டிசைன் என்னதான் இந்த புடவைக்குள் கட்டினாலும் எனக்குள்ள சுகந்திரத்தை, கள்ளத்தனத்தை மீறலை நீ எடுத்துவிட முடியாது என்று சொல்வது போல தோன்றும். அந்த திரைச்சீலையும் அதிலிருக்கும் ஒரு மெல்லிய, அகிம்சையான கள்ளத்தனத்தையும் ஓவ்வொரு முறையும் இந்த இல்லத்திற்கு வந்திருக்கும்போது இதை ரசித்திருக்கிறேன்.
நாயர் மருமகள் வந்த பின்பு தான் இந்த ரசனை, அதுவும் அவள் ரசனைக்கேற்ற திரைச்சீலை. இதற்கு முன்பு அந்த வீடு ஒரு கந்திர கோலம். நாயர் பெண்டாட்டிக்கு இதெல்லாம் புரிவதில்லை. பிடிப்பதுமில்லை.
நாயர் மூக்கால் பேச ஆரம்பித்தார். மெல்லியதாய் கத்த முயற்சித்தார். செய்தி சுருக்கம் இதுதான்
“ மேலிருந்து விழுந்த நீர் அவர் வீட்டு ஜன்னல் வழியே சிதறி திரையை சிதைத்து விட்ட்து…. இந்த ப்ளாட்டில் இந்த நிம்மதி கூட இல்லை.. இதை சுத்தப்படுத்த என் மருமகள் இவ்வளவு முயற்சித்திருப்பாள். ஆனாலும் அது போவதாயில்லை. நாங்கள் எங்கே போவோம் ? ..
இது நம்மூர் தரவாடில்லை. ப்ளாட் வீடு. மேலே இருப்பதால் மட்டும் கடவுள்களில்லை. என்னால் எந்த கீழ் வீட்டுக்கார்ர்களுக்கும் பிரச்சனையில்லை.. …இத்யாதி ..இத்யாதி.. “ தொடர்ந்து பினாத்திக்கொண்டிருந்தார் நாயர்.
சத்தம் கேட்டு ஈரத்தலையோடும், சந்தன நெத்தியோடும் வந்த நாயர் பெண்டாட்டி அதி பயங்கர மங்களகரமாய் இருந்த்து வயிற்றில் புளியை கரைத்த்து.
“ பாரு.. நானும் தான் செடி வைக்கிறேன்.. அதற்கு மெல்ல மெல்ல தண்ணி விடுவேன். குழந்தைக்கு பால் ஊட்டுவது மாதிரி.. “ சொல்லியபடியே கையை மார்பக்கம் வைத்து காண்பித்தாள். குரலும், உருவமும் பயமுறுத்தியது. திடீரென குரல் மாறி,
“ நீ என் பிள்ளை மாதிரி.. வேறு யாராவது இருந்தால் திருப்பி போட்டு சவட்டி விடுவேன்.. “
இந்த ரீதியில் முழுக்க மலையாள பகவதியாய் அர்ச்சிக்க ஆரம்பித்தாள். நாயர் ஆண்டி வேகமாக பேசும் போது மொழி அதுவாகவே மலையாளமாக மாறி விடுகிறது. ஏன் ஆண்டி திருப்பி போட்டு சவட்டிகிறீர்கள் ? என்று சாதரண நிலையில் இருந்தால் யோசித்திருக்கலாம்.
சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் அவள் மருமகளிடம் கேட்டிருக்கலாம்.
ஆனால் இன்று நிலைமை சரியில்லை. கடிகார முள் அலுவலகத்தை நோக்கி விரைகிறது. சீக்கிரம் கிளம்பணும். வெள்ளைக் கொடி
“ நாயர்.. கண்டிப்பாய் சாயங்காலம் வந்து பேசுகிறேன்.. சாரி.. “ சொல்லியபடியே நகர்ந்தேன்.
நாயர் மருமகள் தான் என்னை வந்து வழியனுப்பி வைத்தாள். அவசரத்திலும் ஒரு மெல்லிய சந்தோசம் எனக்கிருந்தது. அவள் கண்களிலும் ஏதோ ஓன்று வழிவதை உணர முடிந்தது. கிட்ட்த்தட்ட இதே சிரிப்பைத் தான் அவள் மாமனார் கதவைத் திறக்கும்போது விடுத்தாள்.
ஹாலில் அவள் சிரித்த சிரிப்பிற்கும், நடை தாண்டியபின் அவள் சிரித்த சிரிப்பிற்கும் உள்ள வித்தியாசம் நுண்ணியாதயினும் பெரியது. கதவோடு தன் மார்பை நெருக்கி கொண்டாள். லிப்டில் ஏறியபின் மெல்லியதாய் கை அசைத்து விடை கொடுத்தாள்.
அந்த தீரைச்சிலையின் சுகந்திரம் அவள் சிரிப்பில் தெரிந்த்து.
வீட்டிலிருந்து துளசி செடி வழியே வழிந்த நீர் மீதும், அம்மா மீதும் எனக்கே கோபம் வந்தது.

*

2.
வேர் :
அலுவலகத்தில் கிடைத்த ஒரு மகத்தான வெற்றிக்கு பின் வந்த ஒரு ஞாயிறில் மிகப் பெரிய மன அழுத்தம் அவனுக்கு ஏற்பட்டது.

வீட்டில் வேறு யாரும் இல்லை. மழை தூறலான சோம்பலான ஞாயிறு. வீட்டில் எல்லோரும் ஏதோ ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தனர். அவன் தனியனாய் இருந்தான். இலக்கியம் படித்தான். ஹிந்துஸ்தானி கேட்டுக்கொண்டே மது அருந்தினான். சுபா முத்கலை மறுமறுபடி கேட்டுக் கொண்டேயிருந்தான். பேகன் அக்தருக்கு மாறினான். கீர்த்தீ ஸ்கால் பாடும் காபி ராகத்தில் மெல்ல விசும்பி, பனால் கோசின் வார்த்தையற்ற குழல் சங்கீத்த்தில் உள் உடைந்து விக்கி விக்கி அழுதான்.

அதுவும் அவன் போதை குறைந்த பின்பு தான் அவன் அழுததே அவனுக்கு தெரிந்திருந்த்து. அந்த வெற்றிக்கு பின்னான வெறுமை அவனை இலேசாக்கி ஏதோ செய்தது. வீடு, தன் வர்த்தகம் எல்லாம் அர்த்தமற்று போனதாய் சில கணம் உணர்ந்தான்.

மிகுந்த விழுமியங்களோடு வாழ்ந்து எந்த காரணமின்றி தற்கொலை செய்து கொண்ட தன் தந்தை அவனுக்கு ரொம்ப நாளுக்கு பிறகு ஞாபகம் வந்தது. தனது வீட்டிச் சன்னலை திறந்து பார்த்து, கீழே நோக்கினான். அக்கம் பக்கத்து ஜன்னல்களை நோக்கினான்.

நினைவற்ற உடல் நகர்ந்த அந்த கணத்தில் தான் பக்கத்து வீட்டு கீதா கதம் பால்கனி செடியின் பூக்கள் அவனோடு பேச ஆரம்பித்தன. ஏதோ பேச ஆரம்பித்தன. ஏதோ அவனும் பதில் சொல்லி விட்டு உள்ளே படுத்துக் கொண்டான். நள்ளிரவு எழுந்து அடுத்த பெக்கிற்காக உட்காரும் போதும் தான், அவை மட்டும் அப்போது பேசவில்லையெனில் என்னவாயிருக்கும் என்று நினைத்தான். நினைப்பே பயமாகத்தானிருந்தது.
இரவா, பகலா என்று தெரியாத வெளிச்சம் கொண்ட ஒரு தூறல் நாளில் தான் அந்த சம்பாஸணை நிகழ்ந்தது.
அப்படித்தான் பூக்களை அவனுக்கு பிடித்து போயிற்று.
*
மலர்
அவைகளிடம் பேச ஆரம்பித்து கொஞ்ச நாளுக்கு பின் ஏதேச்சையாக ப்ளாட் வாசலிலே பூ தொட்டிகளோடு காது தோடு போட்ட மார்வாடிக் காரனிடமிருந்து ஓன்றுமே புரியாமல், சில பூத்தொட்டிகளை வாங்கிக் கொண்டான்.

“ ஹியா.. சாப்.. கர்மே துள்சி தோ ரக்னேகாகே…. ( வீட்டில துளசி செடி வைக்க வேண்டாமா ?)
என்று வியாபாரத்திற்காக தள்ளி விட்டான்.
அவன் பூத்தொட்டிகளோடு வந்த போது அவன் வீடே ஆச்சரியமானது. அவன் பூக்களை வாங்குபவன் அல்ல. அதுவும் மூன்று பூச் செடி, ஒரு துளசி செடி என பால்கனி நிறைத்தது ஆச்சரியக் கண்ணோடுதான் பார்க்கப்பட்டது. புதிதாய் வந்த செடிகள் அந்த இல்ல மந்தத்தனத்தை மெல்ல அசைத்தது என்றே சொல்லலாம்.

முன்னெல்லாம் அவனும் அத்தகைய நெகிழ்வுகளில் நம்பிக்கையற்றுத்தான் இருந்தான். இப்போதெல்லாம் அவன் காலையில் சில நேரம் அதோடு செலவழிக்கிறான். அது ஏன் வளரவே இல்லை என்று சாப்பாட்டின் போது கவலைப்படுகிறார்கள் அவனும், அம்மாவும். அம்மா மற்ற வீட்டில் எப்படி வளர்கிறது என்று பதிவு போல பட்டியிலடுகிறாள்.

இதற்கு முன் அவனது தாவர அறிவு வெகு அபூர்வமானது. பூக்கள் மரத்தில் பூக்கலாம், செடியிலும் பூக்கலாம் ஆனால் கடையில் கிடைக்கும் என்கிற அளவிற்கு அபாரமானது. முதலில் பூச்செடி வாங்கி வைத்த போது அதன் உள்ளிருந்த மண்ணை அவன் கையில் உறை போட்டுக் கொண்டே வெளியில் எடுத்தான். எத்தனை முறை கழுவினாலும் அது அவன் கூடவே ஓட்டிக்கொண்டு வந்த்து போலவே உணர்ந்தான்

ஒரு சில நாட்கள் கழித்து மறுபடியும் அம்மா மண் எடுக்கச் சொன்ன போது வந்த இலேசான பச்சை பிடித்த மண் அவனுக்குப் பயமாயிருந்த்து. நிறைய டெட்டால். நிறைய கழுவல். ஆயினும் விடாது துரத்திய அதன் மணம் அவன் மனதில். தானும் தன் மனைவியை போலவோ என்கிற நினைப்பு வரவே, தலையை உதறி மண் வாசனையை ஆழமாய் உள்ளிழுத்து அதை பழக்கப்படுத்திக் கொண்டான்.
அப்படியான ஒரு ஞாயிறு காலையில் தான் அடுத்த பால்கனியிலிருந்து பூக்களுக்கு பதிலாய் கீதா கதம் சொல்லிக் கொடுத்தாள் எவ்வளவு தண்ணீர், எப்படி விட வேண்டும். எப்போது விட்டால் நல்லது, எப்படி கொத்தி விடவேண்டும், வேர்களை வெட்டாமல், தொட்டியும் சிதையாமல்– எல்லாம் சொன்னாள் கீதா கதம். ஓவ்வொரு நாளும் ஏதாவது காரணம் கொண்டு பூக்களைச் சுற்றி ச்ம்பாசணைகள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. முதல் சில நாட்களில் எதுவுமே பூத்து குலுங்கவேயில்லை.

அவன் அலுவலகம் போல அங்கேயும் பயப்பட்டான். அவசரப்பட்டான். அப்போது கீதா கதம் சின்ன பாக்கெட் வில்லை ஓன்றை வாங்கி அவ்வப்போது அதன் மீது தெளிக்க சொன்னாள். அவளிடமிருந்த பாக்கெட்டை அங்கிருந்தே தூக்கி போட்டு எப்படி பூச்செடிக்குள் தூவுவது என்றும் சொல்லிக் கொடுத்தாள். அது உரம் மாதிரி ஏதோ ஓன்று. நகரச் செடிகள் தொட்டியில் வளர்வதற்கு கூட செயற்கை உரம் வேண்டும் போல. அதை மேலே தூவிய பின்பு செடி வளர்ந்துவிடும் என்கிற நம்பிக்கை முளைத்தது.
.
தண்ணீர், கிளறுதல் ஆகியவற்றை தொடர்ந்து செடியால் பால்கனியிலிருந்து வருகிற மண் வாசனை அவன் மனைவியை பயமுறுத்துகிறது. மண் வாசனை மெட்ரோவிலே வளர்ந்த அவளுக்கு பயமான ஓன்று. பாக்கெட்டில் போட்டு, வாசனை திரவியம் தெளித்து, மறு சுத்திகரிப்பு செய்யப்பட்டு பெரிய மால்(Mall)களில் விற்றால் மட்டுமே அவளால் விலை பார்த்து மண் கூட வாங்க முடியும். அவள் பதிவுபோல தனது பிடித்தமின்மையை நாசூக்காய் சொல்லியபடியே போகிறாள்.

பூச் செடியை விட அதை கூடவே வளர்க்கும் கீதா கதம் தான் அவன் செடி வாங்க காரணம் என்று அவனது மனைவி உளமார உறுதி கூறுகிறாள். இது ஏழு ஜென்ம உறவும் என்றும் நக்கலடிக்கிறாள் அதுவும் உண்மையாயிருக்கலாம் என்று அவன் சொன்னது அவளது பதட்டத்தை அதிகரித்தது.

இருவரும் விடுமுறை நாட்களில் சோம்பல் நிறைந்த முற்பகுதியில் தங்களது பால்கனியில் நின்று செடிகளின் குசலம் விசாரித்து கொள்வதும், அதை பராமரிக்கும்போதும் கீதாகதம் சொல்லும் ஆலோசனைகள் கேட்கும் போதும் அவனது அர்ஜீன சரணாகத பாவத்தை உற்றாமல் நோக்கிய அவனின் மனைவி ஏதோ சொல்ல முடியாத கோபத்தோடு தான் இருந்தாள். பதிவு போல அதையும் அவள் மெட்ரோ நக்கலாய்த்தான் வெளிப்படுத்தினாள்.

“ என்ன இன்னிக்கு என்ன கலர் ட்ராயர் போட்டுண்டிருக்கா.. ஆகா.. உங்களுக்கு பிடிச்ச ப்ளாக் கலர் ட்ராயர்.. பிங்க் கலர் டாப்பு.. ஜமாய்ங்கோ.. “

“ நீங்க டூர் போறப்பல்லாம் பாருங்கோ, அவ வீட்டு பூவெல்லாம் வாடி போய்றது.. பாவம்.. “
“ இங்கிருந்து ஒரு பைப்பு வெச்சுண்டு நேரா அங்கிய விட்டர்லாமே “ [அதை இடுப்பு உயரத்தில் வைத்து செய்து காட்டி சிரிப்பாள் ]
“ ஒரு சின்ன ப்ரிட்ஜ் வேணா போட்டு கொடுங்கோ.. பாவம்.. நீங்க இல்லைன்னா அவளே வந்து உங்க செடியை பாத்துக்கலாமே.. “

சம்பாசனைகள் வெறும் வளரும் பால்கனி செடிகளை பற்றி மட்டும் அமைவதில்லை. செடி பராமரிப்பிற்கான சில ஞாயிறு காலைகளில் கீதா கதம் பால்கனியிலிருந்து பேசியவற்றிலிருந்து தொகுத்தவை கீழே :
தாதரின்^ அவள் அம்மா வீட்டில் இதை விட நிறைய செடியிருக்குமாம். கிட்ட்த்தட்ட அவர் அப்பா ஓற்றை தார் பாய்ச்சி கட்டி செய்கிற எல்லா பூசைக்கும் அங்கிருந்தே பூ கிடைக்குமாம். அது போக வீட்டின் எல்லார் தலைகளிலும் பூ நிரம்பி வழியுமாம். [ அவள் பூர்வாசிரம பெயர் கீதா ஃபடுகே. திருமணத்திற்கு பிறகு கீதா கதம் ]
பூக்கார வீடு என்று அதற்கு தனி பெயரே உண்டாம். தனது அக்கா, அண்ணன், தங்கை எல்லா வீடுகளிலும் தன்னை விட பெரிய பூ பாக்கியதை உண்டு என்றும் தான் மட்டும் ப்ளாட்டில் வாழ்வதால் இத்தகைய துர்பாக்கியம் என்றும் சொல்லிக் அலுத்துக் கொண்டாள்.

சாங்கலியிருந்தும், தார்வாட்டிலிருந்தும், சோமேஸ்வரத்திலிருந்தும் நிறைய புது வகை பூக்களை அவர் அப்பா தருவித்து வளர்த்துக் கொண்டேயிருப்பாராம். தன் வீட்டில் வைக்க முடியாத பூ வகைகளை யாருக்காவது கொடுத்து வளர்க்க சொல்லிக் கொண்டேயிருப்பராம். பூவை, செடியைப் பற்றிய பேச்சுகள் சுற்றியபடியே அந்த வீடு இருக்குமாம்.
தான் மட்டும் வேறு சாதி (ஜெய்பீம் பார்ட்டி அம்பேத்கார்வாலா) மராட்டிக்காரனை மண்ந்து கொண்ட்தால் தன்னிடம் குறைவாகவே பேசுவதாகவும், பூக்களை பற்றி தன்னிடம் அறவே பேசாதது தனக்கு மிகுந்த மனக் கவலையளிப்பதாகவும் சொல்லி கண் கலங்கிய போது அவளின் வெளிர் இலட்சண முகத்தில் அகண்ட பூனைக் கண்கள் லேசாய் ஈரமானது போல தெரிந்தது. சிரிப்பால் அழுகையை அகற்றிக்கொண்டாள்.

தனது திருமணத்திற்கு பிறகு தான் தலையில் பூச்சூடுவதேயில்லை என்றும் ஆனாலும் இந்த பூ பிசாசு பைத்தியம் விடாது இன்னும் தொடர்கிறது என்று நகைத்து கொண்டே சொன்னாள்.
இங்கு பூ வளர்ந்து மறுபடியும் அவ்வப்போது வந்து போகிற அப்பா தன்னோடு சகஜமாய்ப் பேச ஆரம்பிக்கலாம் என்கிற நம்பிக்கையோடு அவள் இருப்பதாக பட்டது. வளர்கிற செடிகளும் பூக்களும் மறுபடியும் தனக்கும் தனது தந்தைக்குமான கதவுகளை திறக்கும் என நம்புகிறாள் போல.

கீதாவை போலவே அம்மாவிற்கும் அந்த சின்ன பால்கனியில் செடி வளர்ப்பு உயிர்ப்பை கொடுத்திருக்க வேண்டும்.
மார்வாடிக்காரன் தள்ளிவிட்ட துளசி வந்த பின் அம்மா -, ரொம்ப நாளைக்கு பிறகு நெகிழ்வாய் உணர்ந்தாள்.

அவளது தினசரி ஆன்மீக அலுவல் வரிசைகளில் புதிதாய் வந்த ஓன்று கண்டிப்பாய் மகிழ்ச்சி அளித்திருக்க கூடும். அதே ஹனுமான் சலீசா, சுந்தர காண்டம், செளந்தர்ய லஹரி, அன்ன லட்சுமிக்கான பூசை எல்லாம் போராடித்திருக்கலாம். ஓரே உப்பு, புளி சமாச்சாரம் போல.

புதிதான ஆன்மீக ஐட்டமாய் வந்த துளசி செடியும் அதன் பராமரிப்பும், வளர்ச்சியும் பேரனை பார்த்துகொள்வதற்கு இணையான இளகிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கலாம். கண்ணெதிரே வளர்கிற உயிர் எதுவுமே மகிழ்ச்சிதான். நெகிழ்வு தான். உயிர்ப்பு தான்.
கீதா பேசுவது பாதியே புரிந்தாலும் அவளின் செடி உயிர்ப்பு அம்மாவிற்கு பிடித்திருந்தது. நம் வீட்டில் அவ்வளவாய் வளரவே இல்லை என்கிற குறையை தாண்டி கீதாவிடம் பூக்களை பற்றி சின்ன சின்ன இந்தி வார்த்தைகளோடு தமிழிலே பேச ஆரம்பித்தாள்.

துளசி செடிக்கு நீர் விட்டது போக, மிச்சமிருந்தால் மற்றவற்றிகும் காட்டி விட்டுப் போவாள். அம்மாவிற்கு மற்ற பூச்செடிகள் மேலே அவ்வளவு அக்கறையில்லை. அவை பிடிக்காது என்பதல்ல, துளசி ரொம்பவே பிடித்து போனது போல தெரிந்தது.
பதிவு போல ஊர் பழைய துளசியை நினைத்து ஓப்பிடு அட்டவணையை தயாரித்தாள்.
“ இந்த ஊர்ல எல்லாமே சின்னதுதான்.. துளசி தனியா நம்ம இடுப்பு உயரத்திற்கு இருக்க வேண்டாமோ.. அப்பத்தானே சேவிக்கிறதுக்கு பாந்தமா இருக்கும்.. “
“ ராஜாமணி மாமாவாத்து துளசி தான், துளசி, என்ன உயரம் என்ன களை, ஓவ்வொரு துளசியும் ஒரு களைதான்… அதுக்கு உங்க அப்பா தண்ணி விட்டபறம் சொல்லுவா, இங்க பாருடி குளிச்சுட்டு பெருமாள் சேவிக்க புறப்பட்ட பெரியாழ்வார் மாதிரின்னா சிரிக்கிறதுன்னு.. ஆமா.. அப்படி சிரிஞ்சிண்டு நிக்கும்..” சொல்லும்போது அம்மா கண் சிரிக்கும்.
“ அப்பாக்கு ரொம்ப கஸ்டம்னா ராஜாமணி மாமாவாத்து துளசி மாடம் முன்னாடிதான் சேவிச்சுண்டு வருவா… உண்மையிலேயே துளசி சேவிக்க போறாளா, மாமி போடற காபிக்கு போறேளா.. ஆத்தில இல்லாம அப்படி என்ன அந்த துளசி உசத்தின்னு கேட்டு நான் பழியா விளையாட்டுக்குச் சண்டை போடுவேன்…. போடி கம்மநாட்டி.. அது செடியில்லைடி.. பெருமாள்டின்னு கத்துவா.. என்ன மனக் கஸ்டம் வந்தாலும் பதினோரு நாள் குளிச்சு தண்ணி விட்ட போறுமே, கஸ்டம் போறதோ இல்லையோ மனசில சில்லுனு ஒரு தெளிவு வந்துடுமே.. “

உண்மை தான். அவனும் ராஜாமணி வீட்டு துளசி போல வேறெங்கும் பார்த்த்தில்லை. அந்த அழகு, கம்பீரம், புனிதம் எல்லாம் மனப்பிரமைதான் என்றாலும் அது அதுதான். அம்மாவிற்கு இந்த துளசியும் அப்படி வரவேண்டும் என்கிற ஆசை. ஆனால் அவளே சொல்லிக்கொள்வாள்.

“ இந்த இக்கிணியூண்டு பால்கனில என்ன வளரும். அதுக்கே தெரியும்.. ஒரு ஸ்கெயர் பூட்ல எத்தனை வளரணம்னு.. அது மட்டும் இருந்தா போதாது.. கூட எதுக்கு யாரையோ பாத்து சொறிஞ்சுண்டு என்னெல்லாமோ வாங்கி வச்சிருக்க.. இதுகள் வெறுமனே வளர்றதே தவிர கொஞ்சமாவது மணம் வருதா பாரு.. எல்லா இந்த ஊர்க்காரா மாதிரி தான்.. “
ஒன்பது அடிக்கு ஓன்னரை அடி பால்கனி. ஆகவே எனக்கான மூன்று பூச்செடி. அம்மாவிற்கான துளசி. மாநகரத்தில் அவர்களுக்கான தோட்டங்கள் இல்லதிற்குள்ளேயே. பால்கனியின் பாதியிடத்தை ஏசியின் இயந்திரமும், மற்ற சில பொருட்களும் அடைத்துக் கொள்ள பாவம் செடிகளும் இருக்கிற இட்த்தில் தங்களது ஜீவனத்தை கழிக்க வேண்டியிருக்கிறது. அம்மா சொன்னது போல துளசி மட்டும் வாங்கியிருக்கலாம் தான்.

துளசி ரொம்ப தெளிந்த ஞானி போல வளர்கிறது. மற்ற பூச்செடிகள் குழைந்து, வளைந்து, பால்கனியின் கம்பிகளில் ஓட்டியும், முட்டியும் வளர்கின்றன.
மற்ற பூக்கள் மீது ஏதோ ஆசை. ஏதோ ஆசை என்ன ? குறிப்பாய் கீதா கதம் துளசி வளர்ப்பதில்லை. அவளிடம் பேச வேலையிருக்காது.

கீதாவிடமே அம்மா ஏன் துளசி வளர்க்கவில்லை என்று தமிழிலும் சைகையிலும் கேட்டபோது கீதா கத்த்தின் முகத்தில் ஒரு இறுக்கம் வந்த்து. ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் விட்டு விட்டாள் [ ஆத்தில இல்லைனா என்னடா.. அவ ஆத்துக்காரனை தண்ணி விடச் சொல்ல்லாமே ? ] அவனும், கீதாவும் அம்மாவிற்கான பதிலை தவிர்த்து விட்டனர்.

அடுத்த வார பால்கனி பேச்சில் கீதா கதம் சொன்னாள், இன்னும் அவள் அப்பா திருமணத்திற்கு பின் அவளை துளசிக்கு தண்ணீர் விட அநுமதிப்பதில்லை என்று சொல்லி நீண்ட மெளனத்திற்குள் உட் புகுந்தாள். பின், தான் துளசி வளர்க்கிறேன் என்று தெரிந்தால் அவர் வருத்தப்படவும் கூடும் என்பதால் தான் அந்த முயற்சி எடுக்கவில்லை என்றாள். உறவுகள் எல்லாம் சரியான பின்பு துளசி வளர்க்க கூடும் என்றும் அப்பாவே வந்து அதை கொடுக்க கூடும் என்று சொல்லும்போது சிரித்துக்கொண்டாள். அதனாலோ என்னவோ துளசி பற்றிய எந்த ஆலோசனையையும் அவள் பேசுவதில்லை.

ஒரு நாள் அவ்வப்போது இறுகிய முகத்தோடு கீதா கதம் வீட்டிற்கு வந்து போகும் அப்பா, அந்த வீட்டு பால்கனியிலிருந்து நம் வீட்டு துளசி செடியையே பார்த்துக்கொண்டிருந்ததாக அம்மா சொன்னாள்.

“ என்னடாது.. எப்ப பாத்தாலும் ஒரு ட்ராயரை போட்டுண்டு.. கழுகு மாதிரி உக்காந்திருக்கு.. சரியான பிரதிவந்தம்… துளசிக்கு தண்ணி விடம்போது இப்படியா வெறைச்சி பாப்பார்..”

மெல்ல மெல்ல அவனுக்கு அடுத்த தடவைக்கான மண் கிளறல்கள். கீழ் பாத்திரம் கழுவி விடுதல் போன்ற வேலைகள் பிடிபட்டு போயின. அவன் அலுவலகத்தை போலவே செடிகளிடமும் அவசரப்பட்டான். அவைகள் அவனின் க்வார்ட்டர் மற்றும் மாதாந்திர அழுத்தங்களை மதிப்பதாகவே தெரியவில்லை.

ஆனாலும் அது அதன் போக்கில் வளர்ந்து, பால்கனி பூத்து குலுங்கியது. அவன் செடிகளை விட இப்போது அம்மாவின் துளசி வெகு சீக்கிரமாகவே வந்தது. அம்மா அதற்கு முழு கிரிடெட் எடுத்துக் கொண்டாள். ஜலம் மட்டுமில்லை, பக்தி என்று புருடா விட்டாள். வீட்டு சாமிகள் துளசியோடு வாசம் கொண்டன. வீட்டு துளசியை அம்மாவே தினமும் ஒன்றிரண்டு சாப்பிடுவாள்.

பூச் செடியின் வளர்ச்சி பால்கனி கிரிலில் முட்டி மோதி சிலசமயம் உடைக்க வேண்டியிருந்தது. தண்ணீர் அதிகமாக வேண்டியிருந்த்து. அதிகமாகி கீழே விழுந்தால் நாயர் சொசைட்டியில் குற்றப்பத்திரிக்கை வாசித்து விடுவான்.

பால்கனியை. இடித்து கொஞ்சம் பெரியது செய்து கொள்ளலாம் என்றாள் அம்மா. ‘இந்த ஊர்ல காசுக்கு பிடிச்ச கேடு.. எதையாவது இடிச்சு காத்துலன்னா இடம் பிடிக்கிறது சவங்கள். (ஜனங்கள்) நீயும் கொஞ்சம் இடிச்சு போடு..“

காற்றில் இடம் எடுத்து கொண்டு கொஞ்சம் பால்கனி நீட்டிக் கொள்ளும் வழக்க்ம் பொதுதான். அதற்கே கிட்ட்தட்ட பெரிய பத்து பதினைஞ்சு கிட்ட செலவாகலாம். பால்கனி சுவரை உடைத்து நீட்ட வேண்டும். ஹாலின் மார்பிளை மாத்தி அது போல நீட்ட வேண்டும் பெரிய பிரஞ்சு விண்டோ போட வேண்டும். சின்னதாய் வெளி தளத்தை சரி படுத்தி, மார்பிள் போட்டு, வாகாய் சாய்த்து தண்ணீர் நேரே குழாய்க்கு போகுமாறு ட்யூப் வைத்து செய்யலாம். எல்லாம் முடிந்து பெயிண்டிங் அடிக்க வேண்டும். ஹாலுக்கு மட்டும் அடித்தால் நன்றாயிருக்காது. இதோடு சேர்த்து கொஞ்சம் லைட்டிங்கையும் மாற்ற வேண்டும். ஆட்டோ விண்டோ போட்டால் இன்னும் நன்றாயிருக்கும். ப்ளாட்டில் எங்கு கை வைத்தாலும் பணம் பிய்த்துக் கொண்டு போகும்.
“ பூல்(பூ) வைக்கிறதுக்கு இவ்வளவு செலவு தேவையா.. லேட்டஸ்ட் மாடுலர் கிச்சன் மாத்தணம்னு எத்தன நாளா அழுதிண்டிருக்கேன்.. “ என்கிற குரல் எழ முழு வாய்ப்புண்டு.

ஆகவே அதை தள்ளிப் போட்டான். அம்மாவிற்கு பால்கனியில் இறங்க முடியாத வேளைகளில் வீட்டு மொசி(வேலைக்காரி) எல்லாச் செடிக்கும் தண்ணீர் விடவேண்டும்.
எல்லாம் வளர்ந்து கொண்டுதானிருந்தது.
*
காய்

எல்லோரும் வீட்டில் இல்லாத ஒரு சனி பின் இரவு சின்னதான வோட்காவோடு அவன் தனது வாழ்க்கையை நினைத்து பார்த்துக்கொண்டு வெளியே சொல்ல முடியாத அழுத்தங்களை அசைபோட்டு அவற்றை தடவி கொடுத்துக் கொண்டிருக்கும் போதும் இயற்கை காற்று வேண்டி ரிமோட்டால் ஜன்னல் திறந்தான்.
அப்போது அந்த புதுச் செடி கர்ப்பிணி வயிறு சாய்வது போல வீட்டிற்குள் சாய்ந்து தனது முதல் பூவை காட்டியது.

அவைகள் அவனோட பேச ஆரம்பிக்க அது எப்போதும் சலிப்பையோ,ஒரு அடிமன பயத்தையோ கொடுக்க போவதில்லை என உணர்ந்தான். அவைகள் அவைகளாகவே இருந்து பேசின. பேச்சின் ஓட்ட்த்தில் ஒரு கள்ளத்தனமான காதல் அந்த செடிகள் மீது வந்தன. அவை கீதா போல பேசுவதில்லை. சலனப்படுத்துவதில்லை.

எனவே அவனும் எந்த எதிர்பார்ப்புமின்றி, காரணமின்றி இளகுதல் என்பதை உணர்ந்தான். அவனுக்குள்ளும் பூச்செடி. தன்னையே தான் பார்த்தல். அதை பார்த்து, பார்த்து, பேசி, பேசி ஏதோ உடைந்து, அந்த இராத்திரி முழுக்க அவன் அழுது கொண்டேயிருந்தான். அது அவனிடமிருந்த எத்தனையோ அடைப்புகளை கழுவி விட்டு சென்றது போலயிருந்த்து.

முதல் முறை பார்த்த பக்கத்து வீட்டு பால்கனியின் செடி தன்னை கீழே விழாமல் தடுத்தது. தாங்கியது. இப்போது உள்ளே வந்த செடி தன்னை கரைத்து மேலானா எதுவோடவே இணைக்கிறது. அதை உணர்ந்த ஜென் கணத்தில் ‘அவன்’ ரமணியானான்.

எல்லாம் நன்றாய் போய்க் கொண்டிருந்த கணத்தில் அது நடந்திருக்க வேண்டாம் தான். என்ன செய்வது. ?

*
கல்லடி

தவறு லலிதா மோசி மேல் தான். லலிதா மோசி எங்கள் வீட்டு வேலைகள் செய்யும் அலுவலர். வயது நாற்பதுக்கு மேலெ. அவருக்கு ஹனுமான் சலீசா ரொம்ப பிடிக்கும். அவரை அனுமான் என்று தான் அவரது வீட்டுக்காரர் கூப்பிடுவாராம்.

லிப்ட் இருந்தாலும் படிகளில் தான் குதித்து குதித்து ஏறி வருதல். நாலடிக்கு குறைவான உயரம் கொண்டு மஞ்சப்பையை இடது தோளில் போட்டுக்கொண்டு குதித்துவரும் போது சாட்சாத் அனுமான் சேலை கட்டி வருவது போலவேயிருக்கும். மற்றும் வாயில் தூங்கும் நேரம் கூட சொதப்பிக் கொண்டேயிருக்கும் டம்பாக்கு புகையிலை. எப்போதுமே புகையிலை ஓதுங்கியிருக்கும் கன்னங்கள் வீங்கி அனுமானில் ஓப்பனைக்கு இன்னும் அழகு சேர்க்கும். .

அன்று லலிதா மோசி கொஞ்சம் அதிகமாய் சலீசா சொல்லியிருக்கலாம். ஒரு நாள் பேன் தொடைக்கிறேன் பேர்வழி என்று அதை அழுத்தி, இழுத்து தொடைக்க இரண்டு நாளில் பேன் வழுக்கி விழுந்து கொஞ்சமாய் எங்கள் தலையை பதம் பார்த்தது. வாழ்க்கை நிரந்திரமற்றது என்கிற தத்துவத்தை அது எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது. மற்றும் ஓழுங்காக எல ஐ சி பாலிசிகளுக்கு நேரம் தவறாமல் பணம் நிரப்பவும் எனது மனைவிக்கு கற்று கொடுத்தது.

இப்படியான அனுமனின் அநுக்கிரகம் அதிகமான ஒரு சுபயோக சுப தினத்தில் பால்கனியை கழுவ நிறைய தண்ணீரை அடித்து அடித்து கழுவயிருக்கிறார். அடித்த தண்ணீர் எல்லாம் கீழ் ப்ளாட்டு நாயர் வீட்டிற்குள் புகுந்திருக்கின்றன. பொதுவாக ஒரு சில துளிகள் தெறித்தாலே முகத்தை ஐயங்காரின் யோக உடலை போல முறுக்கும் நாயர் பேமிலுக்கு அது பிரளயம் போல. சொல்லாமல் புகுந்தது தீவிரவாதி கஸ்மல் போல.

ஜன்னல் சாத்தாததால் தீரைச்சிலையின் சகலபாகங்களும் நனைய, நாயர் மனைவி, மருமகள் சகிதம் – எத்தனை தடவை சொன்னாலும் இந்த மண்டைகளுக்கு ஏறாது என்று முடிவுகட்டி பொறுத்தது போதும் பொங்கியெழு வேண்டும் என முடிவெடுத்து என் வீட்டில் புகுந்து சண்டையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

நான் இல்லாத வேளை. எனது மனைவியும் சாரி சாரி என்று விளித்து திகைத்து நிற்க, அம்மாவும் நாயர் மனைவியும் தமிழ், மலையாள மொழிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். முக்கியமான அதன் சாரம்சம் கீழே :

“ ஒரு நாள் தண்ணி தெரியாம விழுந்ததிற்கு குதிப்பாளா ? “
“ எவ்வளவு தர சொல்லியாச்சு.. மேனர்ஸ் வேண்டாமா.. காது செவிடா.. “
“ எல்லா ஞாயித்துகிழமையும் கறி நாத்தம் குடலை பிடுங்கிறது. என்னிக்காவது வந்து இந்த இழவை பண்ணாதிங்கீன்னோ சொல்லியிருக்கேனா.. “

“ எலும்பை தூக்கி உள்ள போட்ட உங்களுக்கு எப்படி இருக்கும் .. “
” செத்த சொசைட்டிக்கு போறதுக்கு நான் என்ன கிறுக்கா.. போலிசுக்கு போறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது.. நாளைக்கு முன்ன பின்ன பாத்துக்க்னும்ல. ”

வாய் வார்த்தை தடித்து ஒரு வழியாய் பக்கத்து வீட்டுக்காரர்கள் நீர் ஊற்றி அணைக்கபட்டிருக்கிறது.

சண்டையின் முடிவில் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு யோசனை வந்திருக்கிறது. செடிகளுக்கு நேரே நீர் ஊற்றாமல் பால் கவரிலோ அல்லது ஏதோ ப்ளாஸ்டிக் பேக்கிலோ நீர் ஊற்றி சின்னதாய் ஊசி போட்டு செடியிலே போட்டு விடுவது. அதுவே மெல்ல மெல்ல சொட்டு சொட்டாய் வழிந்து செடி ஈரமாகிவிடும். நீரும் கீழே விழாது. நாயர் மருமகள் திரைச்சிலை நனையாது. நாயர் மனைவி கதகளி ஆடமாட்டாள். நாயர் மருமகளுக்காய் கண்ணீர் சிந்த வேண்டாம்.

ஆனால், அம்மா, மனைவி இரண்டு பேருமே இதை மறுத்துவிட்டார்கள்.
“ ஏண்டா .. மனுசாளுக்கு சலைன் ஏத்தற் மாதிரி என்னாடாது.. நம்பளே சாத்தை அள்ளி அள்ளி போட்டுண்டிருக்கோம்.. துளசிக்கெல்லாம் நான் அப்படி விடமாட்டேன். போ.. “
“ ஐயோ. ப்ளாடிக் பாட்டில்ல செடிகளுக்கு தண்ணீர் வேண்டாம்.. தாமன் குழந்தையாய் இருந்தப்போ பாட்டில்ல பால் பிடிச்சு வைச்சுட்டு போனது ஞாபகம் வருது.. அதுவே எனக்கு கில்டி கன்சியஸ்ஸை இன்னும் கொடுக்கிறது..முடியலான்னா செடிய சொசைட்டி கார்டன்ல வைச்சுட்டு வாங்கோ.. “

எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவு அடுத்த ஞாயிறு கூட்டத் தொடருக்காக ஓத்திப்போடப்பட்டது. அந்த வாரம் முழுக்க எல்லார் மனதிலும் நாயரின் சண்டையும், செடிகளின் நீரும் தான் தளும்பிக் கொண்டிருந்தன.

அடுத்த வாரம் எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். என்ன ஆனாலும் செடிகள் அப்படித்தான் இருக்கும். முடிந்தவரை நீர் அதிகமாய் விழாமல் பார்த்து கொள்வோம். அம்மாவிற்கு துளசி முக்கியம். எனக்கு என் செடிகள் முக்கியம். அவைகள் என்னுடன் வளர்கின்றன. என்னுள் வளர்கின்றன். என்னுள் நானும் வளர்கிறேன்.

என் மனைவிக்கு நாயர் மனைவி அம்மாவை பேசிய முறை பிடிக்காது போக அவளை போட்டு தீட்ட முடிவெடித்தாள். ஒரு முடிவுக்கு வந்தோம். அது எலலோரையும் சந்தோசமடைய வைத்தது.

சொல்லப்போனால் கீதா கதம் தான் இந்த முடிவை அடைய எங்களுக்கு கொஞ்சம் உதவினாள். அந்த சண்டை முடிந்து அவள் வந்து எங்களுக்காய் பேசியது எங்களுக்கிடையேயான ஒரு இறுக்கத்தை தளர்த்தியது.

கடந்து நாலு வருடங்க்ளில் லிப்டிலும், பொது வெளியிலும், பொது விழாக்களிலும் ஹாலோ சொல்லிக் கொண்டது போக, இப்போது தான் அந்த நாயர் சண்டை எங்களது வீட்டை அவளோடு இறுக்கமாக்கியது. அவளை நாயர் மனைவி எங்களை திட்டியதை விட செடிகளை குறிப்பாய் துளசி செடியை தனது தேள் கொடுக்கு நாக்கால் நாயர் மனைவி வசை பாடியதுதான் ரொம்பவே அசைத்திருந்தது.

முடிவு : எல்லோரும் சேர்ந்து. “ நாயரே, நீ என்ன முடியுமோ செஞ்சுக்கோ. எங்க போனமோ போயிக்கோ.. இது இப்படித்தான் இருக்கும்.. நாங்க இப்படித்தான் இருப்போம் “.

நாயர் சொன்னபடி வருகிற ஞாயிறு அவன் வீட்டுக்கு போய் நிதானமாய் அவனுக்கு என் முடிவை சொல்லிவிட முடிவெடுத்திருந்தேன்.

எல்லாம் நன்றாய் போய்க் கொண்டிருந்த கணத்தில் அது நடந்திருக்க வேண்டாம் தான். என்ன செய்வது. ?

*
கனி

எல்லாம் முடிந்த ஒரு ஞாயிறு நாளில் எனது மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு கீதா கதம் குமுறிக்கொண்டிருந்தாள். தொடர்ந்த இடைவெளியில் அழுது கொண்டேயிருந்தாள். கொஞ்சம் அழுவது பின்பு நிலைமை உணர்ந்து வார்தைகளால் அழுகையை முழுங்குவது மறுபடியும் ஏதோ வார்த்தைகள் அவளது அப்பாவை தொடப்போக மறுபடியும் அழுகை என தொடர் வண்டியாய் இருந்தது.

அவள் எனது அம்மாவிற்கும் மனைவிக்கும் நடுவில் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அம்மாவிற்கு மொழி புரியாவிட்டாலும் அவளின் சோகம் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் கண்கள் வெட்கமின்றி கண்ணீர் வடிந்தது. அது கீதாவிற்கும் நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். அழுகை, கண்ணீர் மற்றவருக்கும் அழுகலாம் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது.

எனது மனைவி கீதாவின் கைகளை பிடித்தவாறே அவளது வீட்டின் பாரபட்சத்தை கண்டமேனிக்கு ஆங்கில வார்த்தைகள் நிரப்பி திட்டிக்கொண்டிருந்தாள். கீதாவிற்கு அது ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும். ஏழு வருடங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கண்ணீர் சிந்தி பேசிக்கொண்டிருந்தது அப்போது தான். கீதாவின் கணவனின் முகம் பிரமை பிடித்துபோயிருந்தது.

” கொஞ்ச நாள் புனே எனது கிராமத்தில் இவளை இருக்கவைத்து விட்டு வரலாம் என நினைகிறேன். அவளது அப்பா ஒரு நல்ல மனிதர்.. என்ன கொஞ்சம் அந்தக் கால மனிதர்…நாங்கள் தான் அவரது மனதை புண்படுத்திவிட்டோம்.. “ எனக்கு நெகிழ்ச்சியாய் இருந்தது.

கீதா கதம் அப்பா – விகாஸ் ஃபடுகே செத்து போனதற்கு அவளுக்கு லேட்டாகவே சொல்லி விட்டார்களாம். பதிவு போல கல்யாணமாகி தங்களது குடும்ப பெயர் மாத்தி கொண்ட தனது மருமகளையும், மகன்களையும் மட்டுமே எல்லா சம்பிராதயங்களையும் செய்ய சொல்லியிருக்கிறாள் அவள் அம்மா.

அன்று மாலை அவர்கள் கிளம்பும்போது எனது மனைவி மூலம் கீதா கதத்தை அம்மா கூப்பிட்டு விட்டாள். தமிழிலே சொன்னாள்.

“ இந்தாடியம்மா. இந்த துளசி செடிய எடுத்துண்டு போ.. “

எங்களுக்கு ஆச்சரியமாயிருந்த்து. கீதா கதம் ஆடி விட்டாள்.

“ அம்மா.. வீட்டுச் செடிய கொடுக்கலாமோ.. “”அவளுக்கு புரியக்கூடாதென ரமணி மனைவி தமிழில் கேட்டாள்.

“ அதெல்லாம் ஒன்னுமில்ல.. வீடாவது.. காடாவது.. பாவம்..இது தான் அது மனசில இருந்து அரிச்சிண்டிருக்கு.. “

அம்மா கையை பிடித்துக்கொண்டு கீதாவும், அம்மாவும் எதுவுமே பேசாமல் இரண்டு பேரும் கொஞ்சம் அழுதுகொண்டார்கள்.

27/6/11

Series Navigationவாப்பாவின் மடிதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்
author

மணி ராமலிங்கம்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *