மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 2

This entry is part 14 of 37 in the series 27 நவம்பர் 2011

முதல் பாகம் – கிருஷ்ணபுரம்
1580-1620

இம்மலைகள் நிரந்தரம், என்றேனும் சிதற நேர்ந்தாலும் பாறாங்கல்லாய், ஒரு சிறுகல்லாய் ஒரு கைப்பிடிமணலாய் இதே இடத்தில் தான் வாழ்ந்ததற்கு தானே சாட்சியாக கிடக்கலாம். ஆர்ப்பாட்டங்களுடன் கதைசெய்யும் மனிதன்மட்டும் பிறர் ஊடாக தான் வாழ்ந்ததை நினைவூட்டவேண்டும். ”

3. இறையெடுத்த மிருகத்தைப்போல பாதிகண்களைமூடி இரவு மயக்கத்தில் மூழ்கியிருக்கக் கண்டான், அதன் கரியசருமம் பெய்திருந்த மழையில் பளபளத்தது. நாசிதப்பிய அதன் மூச்சுக்காற்றில் மரங்கள் அவ்வப்போது அசைந்து கொடுத்தன. மௌனமான அந்த அதிர்வை உறிஞ்சிக்கொண்டதுபோல சரீரம் தன் பங்கிற்கு சிலவற்றை நிகழ்த்துகிறது. ரோமங்கள் குத்திட்டுக்கொள்ள தசைகள் ஒரு முறை உதறி அடங்குகின்றன. காற்றிலுங்கூட மழையின் கசகசப்பு கலந்திருப்பதை அவன் தேகம் உணர்த்திற்று. மழை விடாது பெய்துகொண்டிருந்தது. தொடர்ந்து இடிச்சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. கீழ்வானில் மூர்க்கத்துடன் வெட்டிய மின்னலிற் சிதறித் தெறித்த ஒளித்துணுக்குகள் ஈரம் உலராதிருந்த தோப்புக்குள் விழுந்த மறுகணம் பணை மரமொன்று சடசடவென்று தீப்பற்றி எறிந்தது. இயற்கையின் எதிர்பாராத இப்புதிய முகத்தை உள்வாங்கிக்கொள்ள அவனுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டிருந்தன. அந்த சில நொடிகளில் பெருமுழக்கத்துடன்கேட்ட இடி இவன் காலடிகளைத் தொட்டுக் கடந்ததை பின்னரே உணர்ந்தான். புதரிலிருந்து சாம்பல் நிற காட்டுமுயலொன்று வெளிப்பட்டு பந்துபோல தாவிக்குதித்து மண்டிக்கிடந்த காட்டாமணி செடிகளுக்குள் மறைந்தது.

இடதுகை குடையின் கைப்பிடியை இறுகப் பிடித்தது, இவன் மனதைப் புரிந்துகொண்டதுபோல கை மார்பையொட்டி குடையைக்கொண்டுவந்து தோளில் அணைத்து நிறுத்தியது. தலையைப் பின்பக்கம் இறக்கி மலையை அண்ணாந்துபார்க்க முடிந்தது. ஒரு சிறுமேகக்கூட்டம் உடைந்த தாழியின் வெண்ணெய்போல ராஜகிரி மலையின் உச்சியில் வழுக்கி இறங்கக் கண்டான். நட்சத்திரங்கள் சீதளவானத்தில் அடக்கமாகவே பிரகாசித்தன. சாம்பல் வண்ணத்தில் ஒளி சன்னமான திரைத் துணிபோல காற்றில் அலைந்துகொண்டிருந்தது. சர்க்கரை பாகின் நிறத்தில் கம்பியாக இறங்கிய மழையூடாக அவ்வொளியில் அமிழ்ந்துகிடக்கும் மலைகளைப் பார்த்தான். மேற்பரப்பில் நொய்போலவும் கீழ்ப்பரப்பில் ஆழ்கடலின் அடர்த்தியுடனும் இருள் பரவிக்கிடந்தது. கிளைகளுடனிருந்த மரங்களை வேருடன் பிடுங்க எத்தனிப்பதுபோல திடீர் திடீரென்று பேரிரச்சைலுடன் காற்று சுழன்று அடித்தது. தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவளைகள் கொரகொரத்தன. மழை நனைந்த முள்கற்றாழையும், செடிகொடி மண்டிய ஈரப் புதர்களும், பாறாங்கற்களின் இண்டு இடுக்குகளில் பதுங்கிக்கிடந்த வெக்கையும், விழுந்து சிதறியிருந்த இலுப்பைப் பழங்களும் முயங்கி திரௌபதை அம்மன் கோவில் மண்டபத்தில் படுத்துக்கிடக்கிற வேலுச்சாமியின் திருவோட்டுவாடையை அவன் இருநாசிக்கும் அறிமுகப்படுத்தின.

இரண்டாவது முறையாக மலைகளைச் சேர்ந்தாற்போல பார்த்தான். பொம்மலாட்டக்காரர்கள் திரைக்குப்பின்னே யானைகளை நடத்திச்செல்வதுபோல மேகங்கள் சீராக முன்னேறின, அவற்றிலிருந்து குட்டியானையொன்று விலகி மலைகளைத் தொட்டு, நிலத்திட்டை எதிர்கொண்ட நதிபோல இருபுறமும் பிரிந்து கடந்துபோனது. மூன்று மலைகளிலும் விழுந்த நிலவொளி மலைகளில் வழிந்து அடிவாரத்தில் விழுந்து மௌனமாக சலசலத்தது. அவைகளை இறுக்கிப்பிணைத்துக்கொண்டு வட கயிறுபோல கோட்டை சுவர். கிருஷ்ணகிரிக்கும் சந்திராயன் துர்க்கத்திற்கும் இடையில் கவிழ்த்துவைத்த தொப்பிபோல ராஜ கிரி. ஒட்டியிருந்த இமைமயிர்கள் விலக்கி கண்மணிக்குள் ஒளியும் நிழலுமாக முதல் பிரவேசத்தை அம்லைகள் நிகழ்த்திய நாள்முதல் அவற்றின் காலடியில் கிடந்திருக்கிறான். கற்களும் சுண்ணாம்புமாக குழைத்து, பார்த்து பார்த்து மனிதர் எழுப்பிய கோட்டையும் அரண்மணையும், கோவில்களும், பிறவும் மூப்படைந்திருக்க, மலைகளுக்கோ காலத்தை வென்ற கர்வம்.

வெள்ளைவெளேரென அன்று நிலா இருந்ததாக நினைவு. உதறி விரித்த நீலக் கம்பளம்போலவிருந்த ஆகாயத்தில் கையளவு மேகங்கூட இல்லை. இரண்டாம் சாமம், உறக்கம் வராமல் புரண்டு படுத்தத் தகப்பன் ஓலையில் முடைந்த வெற்றிலைப்பெட்டியை எடுத்து தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு இவனை எழுப்பினான், கதை சொல்லப்போகிறேன் என்றான். சொல்லத் தொடங்கினான். ஒன்றா இரண்டா பழங்கலத்திலிருந்து விதை நெல்லை எடுப்பதுபோல சிந்தாமல் சிதறாமல் சொல்லப்பட்ட கதைகள். ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்க மனிதர் வாழ்க்கையில் கதைகளா இல்லை. மழைபோல, காற்றுபோல சிலகதைகள் இதமாகவும், சிலகதைகள் புயலாகவும், சிலகதைகள் தூறல்களாகவும், சிலகதைகள் ஆலங்கட்டி மழைபோலவும், சிலகதைகள் பாலாறு வெள்ளம்போல நுரைத்துக்கொண்டு எறும்புக் கூட்டங்கள், நெளியும் பாம்புகள், வயிறு வீங்கிய ஆடுமாடுகள், முறிந்த கிளைகள், வைக்கோல் கட்டுகள், ஓலைவேய்ந்த குடிசைகளென அடித்துக்கொண்டுபோகும். எப்போதாவது மேடுகளைக் கண்டு தயங்குவதுண்டு. ஆனால் பள்ளங்களில் ஆவேசமாக பாய்ந்து தடைபட்ட நேரத்தை ஈடுசெய்து இறுதியில் கடலில் கலந்துவிடும். அப்போதெல்லாம் பட்டியில் அடைய மறுக்கும் குறும்பாடுகள்போன்ற மனநிலையை இவன் அடைந்திருப்பான் வேலியைப் பாய்ச்சலுடன் தாண்டியிருக்கிறான். மனிதர் கூட்டத்தில் இந்த விலங்கின் பிணக்கும், அண்மையும் இன்று நேற்று விதிக்கபட்டதல்ல காலம்காலமாய் தொடர்கிறது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தொடரும், உயிர் வாழ்க்கை அலுத்துபோனால் ஒருநாள் பிற விலங்குகளைப்போல உடல் மண்ணில் விழுந்து மக்கும், எலும்புகள் உதிர்ந்து காற்றில் நீந்தும், ஆனால் எதிரே நிற்கிற இம்மலைகள் நிரந்தரம், என்றேனும் உடைந்து சிதற நேர்ந்தாலும் பாறாங்கல்லாய், ஒரு சிறுகல்லாய் ஒரு கைப்பிடிமணலாய் இதே இடத்தில் தான் வாழ்ந்ததற்கு சாட்சியாகக் கிடக்கலாம். ஆர்ப்பாட்டங்களுடன் கதைசெய்யும் மனிதன்மட்டும் பிறர் ஊடாக தான் வாழ்ந்ததை நினைவுகூர்தல் வேண்டும்.

வேட்டியைத் தார்பாய்ச்சிக்கட்டியிருந்தான். முதுகில் ஊசல் வாடைகொண்ட நான்கு முழத்துண்டொன்று முதுகெலும்பையும் மார்பெலும்பையும், ஏற்ற இறக்கங்களுடன் தோளின் இருபுறத்தையும் போர்த்த உதவிற்று. சற்று முன்பு கொடியிலிருந்து எடுத்த மொடமொடப்பு இல்லை. குளிர்காற்றும், நீர் சாட்டைபோல சளார் சளாரென்று விழுந்த மழைத்துளியின் உடைந்த துணுக்குகளும் அதை ஈரமாக்கியிருந்தன. குளிர்ந்தக் காற்று வீசியது. கால்களை அரக்கிவைத்து நடந்தான். கௌபீனத் துணி நேற்று கசக்கி போட்டது. தாழங்குடைக்கு ஒரு கை போக, மற்றது நடையின் வேகத்திற்கேற்ப முன்னும் பின்னுமாக அசைந்துக்கொண்டுபோனது. இரண்டு நாட்களாக கண் நோய் வந்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறான். நோய்கண்ட நாளிலிருந்து வெதுவெதுப்பாக காலை மாலை இரண்டுவேளைகளிலும் ஆட்டுபாலை கண்களில் அவனே பீச்சிக்கொண்டு வருகிறான். தாழங்குடையில் சலசலவென தூறல் விழுகிறபோதெல்லாம், நாக்கில் புரண்ட திரவம் நெஞ்சில் இறங்குவதேனெனப் புரியாமல் குழம்பினான்.

உஸ் உஸ்ஸென்று ஊதற்காற்று, மணலும் பொடிக்கற்களுமாக நிறைந்திருந்த கந்தக பூமி தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த மழையில் ஊறி ஓதம்கண்டிருந்தது. கால்களை ஊன்றி நடக்கிறபோது கூர்மையான சிறு கற்கள் நெருஞ்சி முட்களைப்போல கால்களில் அப்பிக்கொள்கின்றன. நடப்பதற்குக் கடினமாக இருந்தது. கால்கள் கடுத்தன. போனகிழமை சக்கிலி மேட்டுக்கு நடையாய் நடந்து பச்சையிடம் நின்று வாங்கிவந்த ஒரு ஜோடி செருப்பு வீட்டில் இருந்தது. மழைநாளில் அதனுடைய உபயோகம் குறைவுதான். குடையில் வேய்ந்திருந்த தாழை ஓலைகள் கூழ் பானையில் ஒட்டிக்கிடக்கும் காந்தல் நிறத்தில் பழுத்தும் நைந்தும் இருந்தன. குடையின் குச்சிகளில் ஒன்றிரண்டு உடைந்துமிருந்தன. குடைவேண்டாமென்றுதான், காலெடுத்து வைத்தான். தலைகீழாகத் தொங்கவிட்டிருந்த தாழங்குடையை துருஞ்சில்களை கைத்தட்டி ஓட்டிவிட்டு அவன் தாய்தான் எடுத்துத் தந்தாள். இவன் கையில் குடைக்காம்பை வாங்கியபோது சிறுவண்டுகள் போல ஏதோ விரல்களில் ஊர்ந்ததைக்கண்டு பயந்து கையை உதறினான். உதறியபின்னரும் விரலிடுக்கில் ஏதோ நச நசவென்று ஒட்டிக்கிடக்க தொட்டு நாசியில் வைத்தான் ஓக்காளம் வந்தது எலிபுழுக்கையோ துரிஞ்சல் புழுக்கையோ எதோவொன்று, மீண்டும் தாயிடம், “எனக்கு குடையும்வேண்டாம் ஒன்றும் வேண்டாம்”, தலையிலே துண்டை போட்டுக்கொண்டு மலைப்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு வந்திட என்னால் முடியுமென்றான். அவள் வம்பு செய்து குடையைத் திணித்திருந்தாள்.

மனம் சங்கடத்தில் ஆழ்ந்திருந்தது. ‘கமலக்கன்னிம்மா நம்ம கைவிடமாட்டா, சக்கிலித் துர்க்கம் பக்கம் போய்ப்பாரு, அங்கதான் எங்கனாச்சும் வழிய தவறவிட்டு படுத்துக்கிடக்கவேணும்”, ஜெகதாம்பாள் தாழங்குடைய கைகளில் பலவந்தமாகத் திணித்தபோது கூறியிருந்தாள். அவள் நெஞ்சில் ‘இராத்திரி நேரத்துலே இப்படி பிள்ளையை தனிச்சு அனுப்பறோமே’, என்ற கவலையும் இல்லாமலில்லை. அவர்களின் ஜீவனம் ஆடுகளை நம்பி இருந்தது. மொத்த குடும்பத்துக்கும் சகலமும் ஆடுகள்தான். ‘நல்லது கெட்டது, கல்யாணம் காட்சிகள், வருடம் தவறாது பிள்ளை பெற்றுகொள்ள கீழ்பெண்ணாத்தூரிலிருந்து வரும் பெண்ணின் செலவு, செட்டி கடை நவதானிய செலவு, ஊர் ஏகாலி, நாவிதன், திடீர் திடீரென்று வரி கேட்டு வந்து நிற்கும் அதிகாரியென அனைத்திற்கும் தீர்வு ஆடுகள்தான். கிடைகட்ட நஞ்சை புஞ்சையென்று ஊர்மதிக்க ஐவேசியுடன் வாழும் மனிதர்கள் கூப்பிடுவார்கள். தெற்கே 20கல், வடக்கே 30 கல்லென்று தகப்பனும் மகனும் சித்திரைக்குப் போனார்களென்றால் நாட்டுக்குத் திரும்ப ஆனி மாதமாகிவிடும்.. அந்த மூணுமாதமும் ஆட்டுப்பாலில் கரைத்த கம்பங்கூழும், இரண்டு உப்புகல்லும் ஊறுகாய் ஒரு பத்தையும் வயிற்றுக்கு ஆதாரம். பிறகு அந்திவரை துறட்டுக்கோலைத் தோளில் போட்டுக்கொண்டு ஆடு மேய்ப்பதும் அந்திசாய்ந்தால் கிடைகட்டுவதுமென்று பொழுது கழியும்.

ஆடுகளை பட்டியிலிட்டு, படலை மூடும்போதுதான் கவனித்தான், சினைபட்டிருந்த கொம்பு முறுக்கிய மூக்கில் வெள்ளைபட்ட ஆடு மந்தையிலில்லை. தட்டியைத் திறந்ததும் ஆடுகள் தலையைத் தொங்கப்போட்டப்படி சோம்பலுடன் கால்களை வைத்து முன்னேறின. ஈச்சம் பழங்களை கொட்டி பரப்பியதுபோல கிடந்த புழுக்கைகளையும், ஆட்டு மூத்திரத்தையும் அடக்கி மேலெழும்பும் சினை ஆட்டின் மொப்பு இல்லையென்றானதும் மனம் கலவரப்பட்டது. “தம்பி மடி பேர்ந்திருக்கு, அநேகமாக பொழுது சாயறதுக்குள்ள குட்டிபோட்டுடும்னு நினைக்கிறேன், மேய்ச்சலுக்கு இதை ஓட்டி போகாதே” என்று காலையில் எச்சரித்திருந்த தாய்க்கு என்ன பதில் சொல்வதென குழம்பினான். அவளிடம் சொன்னால், ஆவேசம் கண்டவள்போல ஊரைக்கூட்டிவிடுவாள். போன மாதம் பெருத்திருந்த வயிற்றைப்பார்த்து ‘இரட்டை குட்டி போடுமா?’ வயிறு இப்படி வண்ணான் சால்போல இருக்கிறதே”, என கண்கள் பிரகாசிக்கச் சொன்னாள். இரண்டுலே ஒன்று பெட்டைண்ணா தவறாம மகள் சிறுபாட்டுக்கென்று கொடுத்திடவேணும், என்று அப்போதே ஆக்கினையும் பிறப்பித்திருந்தாள். தாயிடம் தொலைந்திருந்த ஆட்டைப்பற்றி வாய்திறவாமலேயே புறப்பட்டுப் போகலாமா என்றும் அவன் மனம் யோசித்தது. காலையில் சாப்பிட்டது அதன்பிறகு மலைச் சுணையில் அந்திவரை பசித்த நேரங்களில் கைநிறைய தண்ணீரை அள்ளிக் குடித்ததுதான். வாசலிலிருந்து குரல் கொடுத்தான்.’அம்மா சினை ஆட்டை காணவில்லை, தேடிப்போகிறேன். என்னைத்தேடிக்கொண்டு மலைக்கு வந்திடாதே’ என்றான். கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்து தலையை உயர்த்தியவளின் கறுத்தமுகம் அந்திவெயிலில் மேலும் கறுத்துபோனது.. கவிழ்த்துப்போட்ட அட்டைபோல ஏடுரிந்தும் பொரிந்துமிருந்த உதட்டு வெடிப்புகளில் வெற்றிலைசாறு. வாயுடன் சேர்ந்து மூக்கும் உயர்ந்தது. வார்த்தைகள் வந்து விழுந்தன: ” சினை ஆட்டை விட்டுட்டு போவென்று காலையில் ஒருமுறைக்கு இரண்டுமுறையா கத்தினேன், உங்கப்பனுக்கும் உனக்கும் பொட்டைக் கழுதைப் பேச்சை எதற்காக கேக்கோணுங்கிற எளக்காரம்”.

– ஆரம்பித்தாயிற்றா? நான் மலைக்குப்போய் ஆட்டுடன் திரும்பிவரேன், நீ இங்கே சாமி வந்து ஆடவேண்டாம்.

– எங்கே போகிறாய்?

– ஆட்டைத் தேடி. வேறெங்கே காசிக்கா போகிறேன். எத்தனை நாழிகை ஆனாலும் ஆடு கிடைத்ததுங்கிற சந்தோஷ செய்தியுடன் வருவேன் போதுமா?

– சரி சரி இப்போ என்ன சொல்லிவிட்டேண்ணு இப்படி அந்தரப்படற, ஒரு வாய் சாப்பிட்டுபோ. மீன் குழம்புக்குத் தோதா வரகரிசிசோறு வடித்து வைத்திருக்கிறேன். உனக்காக ஒரு மரக்கால் வரகை இடுப்பொடிய ஒருத்தியா அறைத்தேன் – கொசுவத்தை உதறி தோளில் போட்டவள், முகத்தை ஒடித்து திருப்பினாள்.

கண்களில் நீர் தளும்பி நின்ற தாய் ஜெகதாம்பாளின் முகத்தைப்பார்க்க பிள்ளைக்கு சங்கடமாக இருந்தது. தலையைக் குனிந்து வீட்டிற்குள் நுழைந்தான், நெய் விளக்கின் தீபத்தில் சோறும் மீன்குழம்பும் ஒளிர்ந்தது. பார்த்த மாத்திரத்தில் நாக்கில் நீர் புரண்டது. முகவாய்க்கட்டையை சொரிவதைப்பார்த்து, “கட்டையனிடத்தில் சவரம் செய்துகொண்டு வரவேண்டியதுதானே? என்றபடி தடுக்கொன்றை எடுத்துப் போட்டாள். இவன் வாய் திறவாமல் செம்பொன்றை எடுத்து பானையிலிருந்த தண்ணீரை சேர்ந்துகொண்டு உட்கார்ந்தான். சோற்றைப்பிசைந்து விரலிடுக்குகளில் குழம்பொழுக கவளம் கவளமாக விழுங்கினான், அவள் முள்நீக்கி மீனின் சதைப்பற்றைக் சோற்றுருண்டையில் வைத்தாள். மற்ற நாட்களெனில் ஜெகதாம்பாள் இதை அனுமதிக்கமாட்டாள். “எதற்காக இப்படி இறக்கைகட்டி பறக்கிற” என்பாள். இன்றைக்கு அவளுக்கும் காணாமற்போன ஆட்டைப்பற்றிய கவலை. ஆடு கிடைத்தால் கன்னியம்மாவுக்கு சேவற் கோழி காணிக்கை செலுத்தறேனென மஞ்சள் துணியில் ஒரு பணத்தைவைத்து கங்கணம் கட்டிக்கொண்டாள். தாயும் மகனுமாக கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார்கள். தெற்கே பார்த்து அண்ணாந்து கும்பிடு போட்டாள். கும்பிட்டவள் கண்களில் இருண்டிருக்கும் வானம் கண்ணிற் பட்டிருக்கவேண்டும். தாழங்குடையைக் கொண்டுவந்து கையிற் திணித்தாள்.

மழையின் வேகம் தணிந்து தூறலாக உருமாறியிருந்தது. சந்திராயன் துர்க்கம் அடிவாரத்தை நெருங்கியிருந்தான். காலையில் ஆடுகளை அங்குதான் மேயவிட்டிருந்தான். மற்ற ஆடுகளெல்லாம் கால்களை ஊன்றிவைத்து மேலே செல்ல சினை ஆடுமட்டும் நடக்க சிரமப்பட்டது. கொம்பைப்பிடித்து மெது மெதுவாய் குரங்குமலை திசைக்காய் இழுத்துச்சென்று அங்கிருந்த கொடுக்காப்புளி மரத்தடியில் வைத்து கிளைகளை துறட்டுக்கோலால் உடைத்துப்போட்டான். தலைக்குமேலே சூரியன் வந்தபோது ஆடு படுத்து அசைபோட்டது. மலைமேல் ஏறிய ஆடுகள் கண்ணிற்படவில்லை ஒன்றுமட்டும் வெண்திரவம்போல நிரம்பியிருந்த வெயிலில் நீர்அலைபோல அசைவது தெரிந்தது. சினை ஆட்டை மலையிலிருந்து இறங்கும்போது எழுப்பி ஓட்டிச்செல்லலாம் என்று தீர்மானித்தவனாய் மலை ஏறினான். ஆனால் அந்திச் சாய்ந்ததும் வீடு திரும்பும் அவசரத்தில் எதை மறக்கக்கூடாதென்று நினைத்தானோ அதை மறந்துபோனான்.

குரங்கு மலைக்குத் திரும்ப இறங்கிவந்து பார்த்தபோது நினைத்ததுபோலவே ஆடு படுத்திருந்தது, சுற்றிலும் மஞ்சளும் சிவப்புமாய் திரவம், தேன் நிறத்தில் சதைபிண்டம் அதன் தொடையிடுக்கிற் கிடந்தது. குட்டிகளில் ஒன்று எழுந்திருப்பதும் குளிரில் வெடவெடத்து கீழே விழுவதுமாக இருந்தது. அப்போது இவனுக்கு நேரெதிரே புதரொன்றிலிருந்து குள்ளநரியொன்று மெல்ல ஆட்டைக் குறிவைத்து நெருங்குவதைக்கண்டான். விபரீதத்தைப் உணர்ந்தவனாய் கையிலிருந்த தாழங்குடையைத் தாமதமின்றி சுழட்டி வீசினான். இவன் வீசிய திசை மறந்துபோனது போல குடை எதிர் திசையில் காற்றில் சிறிது சுழன்று சரிவில் விழுந்து உருண்டோடியது. இரண்டொரு கற்கள் குடையுடன் சேர்ந்து உருண்டோடின. நரி இவன் மீது பாய்வதுகண்டு ஒதுங்கினான், ஆனாலது எதிர் திசையில் ஓடி மறைந்தது.

நான்கைந்துபேர் பேசிக்கொண்டுவருவதுபோல குரல்கள் கேட்டன. அக்குரல்கள் மெல்ல மெல்ல இவனை நெருங்கிவருகின்றன. இந்நேரத்தில் இதுபோன்ற குரல்களுக்கிங்கு அவசியமில்லையேயென யோசித்தான். கள்வர்களாக இருக்குமோ? இப்போது குரல்கள் அருகில் கேட்டன. அவசர அவசரமாக மரத்தில் ஏறினான். மார்பில் மரச்செதிள்கள் சிராய்ப்புகளை ஏற்படுத்தின. தலையிலிருந்த துண்டை தவறவிட்டான். நல்லவேளை கிளை தடுத்திருந்தது. மனிதர் குரல்களோடு சுளுந்தொன்று தெரிந்தது. அசைகிறபோதெல்லாம் காற்றில் நன்றாகப்பிடித்து எரிந்தது, விளக்கெண்ணெயும் துணியும் சேர்ந்து எரிவதால் ஏற்படும் சிடுகு மணம் மூக்கை அடைத்தது. மூச்சைப்பிடித்துக்கொண்டு மரத்தில் அமர்ந்திருந்தான். வந்தவர்கள் ஆட்டைப்பார்த்ததும் தயங்கி நின்றார்கள்.

-ம் .. ஆகட்டும் நடவுங்கள் கடிதில் போய்ச்சேரவேணும்.

– பூசாரி ஐயாவுக்கு எப்போதும் அதிகாரந்தான் – முன்னால் வந்த தாடிக்கார ஆசாமியின் பதில்.

ஒருவன் தலையில் கலசம்போல ஏதோ ஓன்றை வைத்திருந்தான் மொத்தம் ஆறு பேர் இருந்தார்கள். ஆனால் நடுவில் வருவது .தலைவிரி கோலமாக ஒர் இளம்பெண், தலையை ஒருமுறை அவள் சிலுப்பியபோது ஒதுங்கி விழுந்த கூந்தலுக்கிடையில் நிழல்போல தெரிந்த அந்த முகம் .ஆச்சரியமாக இருந்தது. அவளாக இருக்குமா? இருக்காது. இங்கே எப்படி? சிதம்பரத்துப் பெண்ணுக்கு கிருஷ்ணபுரத்தில் என்னவேளை? மார்பிலும் இடுப்பிலும் அவளுக்கு வேப்பிலையை பிரியில் சுற்றி கட்டியிருந்தார்கள். பேய்பிடித்தவள்போல, இதென்ன அலங்கோலம், பற்களுக்கிடையில் கடிபட்டநாக்கு தொங்கிக்கொண்டிருக்கிறது. கால்களை அழுந்தப்பதித்து திமிறுகிறாள். அவள் இடுப்பில் ஒர் இரும்பு சங்கிலி. இறுக பிடித்தபடி காவலர் இருவர். அவ்வப்போது பூசாரி என்று சொல்லப்பட்ட ஆசாமி அவளை நிறுத்தி மஞ்சள் நீரை தலையில் தெளிக்கிறான். இவன் நெஞ்சில் உலக்கைக்கொண்டு குத்துவதுபோல தொம் தொம் என்று ஓசை. பல்லைக் கடிந்துகொண்டு அமைதியாக இருந்தான்.

– மந்தை தப்பிய ஆடு, குட்டிபோட தங்கியிருக்கோணும், வரும்போது ஞாபகமாக கொண்டுபோகவேணும்- கீழிருந்து ஒர் ஆண் குரல்.

இரண்டு மாதத்திற்குமுன்பு கோவிந்தராஜர் திருப்பணியை மேற்பார்வையிட மன்னர் கிருஷ்ணநாயக்கர் சிதம்பரத்திற்குச் சென்றபோது பந்தோபஸ்து படையில் இவனுமிருந்தான். எதிர் முகாமில் கொள்ளிட பாளையக்கார கிழவன் ஆட்களும் இருந்தார்கள், அவர்களில் ஒருவன் அன்றிரவு முழுக்க கள்ளைக் குடித்துவிட்டு இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்தான். இவன் சகாக்களில் ஒருவன் வெகுண்டெழுந்து கண்டிக்கச்சென்றான் அது கைகலப்பில் முடிந்தது. அந்தக் குடிகாரனின் குரல்போலத்தான் இருந்தது. ஆனால் உறுதியாய் சொல்ல முடியவில்லை.

– ஆமாம் நரி தின்னாமலிருந்தால் உன் ஆசை நிறைவேறும். தாசி செங்கமலம் இபோதெல்லாம் ஆடு மாடுகளுக்குக்கூட கதவு திறக்கிறாளாம். – மற்றொரு குரல்

எல்லோரும் சிரிக்கிறார்கள். அவர்கள் தங்கள் சிரிப்பை அடக்கியே உதிர்த்தாலும், மரத்திலிருந்த இடையனுக்கு நெஞ்சை அடைத்தது, உடல் சிலிர்த்து ஒரு முறை அடங்கியது கைகளை பெருக்கல் குறிபோல மார்பில் வைத்து தன்னை தைரியப்படுத்திக்கொண்டான்.

– வீண் பேச்சு எதற்கு சீக்கிரம் நடவுங்கள், – பூசாரியின் குரல் அதிகாரமாக ஒலித்தது தொடர்ந்து, ‘நமக்காக பெரியவர்களெல்லாம் காத்திருக்கிறார்கள்’. என்றார்.

ஆடு மீது கண்வைத்தவன் ஓரிரு நொடிகள் தயங்கி நின்றான். மேலே பார்த்தான். பின்னாலிருந்தவர்கள் அவனைத் தள்ள பெண்ணை இழுத்துக்கொண்டு ஆறுபேரும் மெல்ல மரத்தைக் கடந்து சென்றார்கள். இப்போது அவர்கள் நடையில் வேகம். அடுத்த சரிவில் இறங்கி அவர்கள் மறைந்ததும் காத்திருந்தவன்போல கீழே குதித்தான். உடல் இலேசாக நடுங்கியது. குளிரா? சற்று முன் இவனைக் கடந்து சென்ற மனிதர்களா? யார் காரணம், குழம்பினான். கிளையில் தொங்கிக்கொண்டிருந்த துண்டை எடுத்து தலையிற் கட்டிக்கொண்டான். ஆட்டை நெருங்கினான். அருகிலிருந்த ஆடாதொடை இலைகளை வேண்டியமட்டும் எடுத்துவந்து முதலில் குட்டிகளின் உடலிலும் பின்னர் ஆட்டின் பின்புறத்திலும் வழியும் கோழைகளைத் துடைத்தான். நாளை ஏரியில் வைத்து கழுவிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தான். மீண்டும் புதர்பக்கம் சென்று கொப்பும் தழைகளுமாக கொண்டுவந்து அதிற் கழிவுகளைவாரி எடுத்து கொடிகொண்டு சுற்றி கக்கத்தில் வத்துக்கொண்டான். அதே கையில் குட்டிகளையும் ஏந்திக்கொண்டான், மற்றொரு கையினால் ஆட்டை இழுத்துக்கொண்டு நடந்தான். சந்திராயன் துர்க்கத்திலிருந்து கிருஷ்ணகிரி இடைக்குடிகள் திசைக்காய் ஆடு இவனுமாய் நடந்தபொழுது, தூறல் சுத்தமாக நின்றிருந்தது. ஆறுகணத்தில் குடிசை வந்துவிடும். தாயிடம் சற்றுமுன்பு கண்ட காட்சியைக் கூறலாமா எனநினைத்தான். அவள் வாயில் நிற்காது. ஊர்முழுக்க தண்டோரா போட்டுவிடுவாள். எதற்கு வம்பு என நினைத்தான். ஜெகதாம்பாள் இவனை எதிர்பார்த்து குடிசை வாசலில் காத்திருப்பாள். அவளுக்கு ஆட்டைப்பார்க்காமல் சோறுதண்ணிகூட இறங்காது.

அவன் காலில் எதுவோ மிதிப்பட்டதுபோலிருந்தது. கணத்தில் காலை உயர்த்தி கீழே குனிந்து பார்த்தான். ஒரு தவளை. வயிறு கிழிந்து செத்துக்கிடந்தது. ஒதுங்கி காலைத் தூக்கிவைக்க முனைந்தபோது அங்கே இன்னொரு தவளை, கவனமாய் ஒதுங்கிக்கொண்டான். சற்றுமுன் கண்டகாட்சியையும் இதனையும் முடிச்சுப்போட்டு சஞ்சலப்பட்டான். ஆட்டை மீண்டும் இழுத்துக்கொண்டு நடந்தபோது கவனித்தான் சாரி சாரியாக ஆயிரக்கணக்கில் தவளைகள் குதித்து குதித்து வடக்கிலிருந்து தெற்காக போகின்றன. இவ்வளவு தவளைகளை சேர்ந்தாற்போல வாழ் நாளில் அன்றுதான் கண்டான். கிருஷ்ணபுரத்திற்கு ஏதோ விபரீதம் நேரவிருக்கிறது என்பது புரிந்தது.

(தொடரும்)

Series Navigationசுஜாதாவின் சொர்க்கத்தீவு -நாவல் விமர்சனம்சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *