பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்

This entry is part 40 of 42 in the series 1 ஜனவரி 2012

பாம்பை மணந்த பெண்

 

ராஜக்கிருஹம் என்கிற ஊரில் தேவசர்மா என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அண்டை அயலார்களின் குழந்தைகளைப் பார்த்துவிட்டு அவள் ரொம்பவும் அழுதாள். ஒருநாள் பிராமணன் அவளைப் பார்த்து, ‘’அன்பே, கவலைவிடு. நான் குழந்தைப் பேறு பெறுவதற்காக யாகம் செய்யும்போது ஏதோ ஒரு அசரீரி, ‘பிராமணனே, மற்றெல்லா மனிதர்களைக் காட்டிலும் மிகுந்த அழகும், குணமும், பலமும் உள்ள குழந்தை உனக்குப் பிறக்கும்’ என்று தெளிவாகச் சொல்லிற்று’’ என்றான்.

 

பிராமணன் மனைவிக்கு ஒரே சந்தோஷம், அப்படியே மனம் நிறைந்து போனாள். ‘’அசரீரி வாக்கு பலிக்கட்டும்’’ என்று வேண்டிக்கொண்டாள். கிரமப்படி கர்ப்பவதியாகி காலாகாலத்தில் ஒரு ஆண் பாம்பை ஈன்றெடுத்தாள். அதைப் பார்த்ததும், ‘இந்தப் பாம்பை எறிந்து விடுங்கள்’ என்று அத்தனை வேலைக்காரர்களும் சொன்னார்கள். அந்தப் பேச்சைப் பொருட்படுத்தாமல் அவள் அதை எடுத்து ஸ்நானம் செய்வித்தாள். அதைச் சுத்தமான பெட்டியில் வாஞ்சையோடு எடுத்துவைத்து, பால் வெண்ணெய் முதலியவற்றைக் கொடுத்து சிரத்தையோடு போஷித்தாள். சில நாட்களிலேயே பாம்பு பெரியதாக வளர்ந்தது.

 

ஒருநாள் அந்தப் பிராமணப் பெண் பக்கத்து வீட்டுப் பையனுக்குக் கல்யாணம் நடப்பதைக் கண்டாள். கண்ணீர் பெருகியோடிய முகத்தோடு கணவனிடம் சென்று, ‘’என்ன இருந்தாலும் உங்கள் மீது எனக்கு வருத்தந்தான். நமது பிள்ளைக்கும் கல்யாணம் செய்து வைக்க ஏன் நீங்கள் முயர்ச்சிக்க வில்லை? என்று கேட்டான். அதற்கு அவள் கணவன், ‘’குணவதியே, அதல பாதாளத்துக்குப் போய் வாசுகியை வேண்டிக் கொள்ளச் சொல்கிறாயா, என்ன? முட்டாளே, இந்தப் பாம்புக்கு வேறு யார் பெண் கொடுப்பார்கள்?’’ என்றான்.

 

என்ன சொல்லியும் மனைவியின் ஏக்கம் நீங்கவில்லை. மனைவியின் முகத்தைப் பார்த்து கணவன் வருந்தினான். அவள்மீதிருந்த அன்பினால், நிறைய உணவைக் கட்டி எடுத்துக்கொண்டு பல நாடுகளைச் சுற்றிவரத் தொடங்கினாள். சில மாதங்கள் கழிந்து, ஒரு தூர தேசத்தைச் சேர்ந்த குட்குட நகரம் என்ற நகரத்துக்கு வந்து சேர்ந்தான்.  அவனுக்கு நன்கு தெரிந்த உறவினன் ஒருவன் அங்கிருந்தான். அவன் நல்லவன். எனவே அவனோடு தங்கி சௌகரியமாக இருக்கலாம் என்று எண்ணி அவன் வீட்டுக்குள் நுழைந்தான். உறவினனும் அவனுக்கு ஸ்நானம் செய்வித்து, சாப்பாடு தந்து, உபசாரங்கள் செய்தான். தேவசர்மா அன்றிரவை அங்கேயே கழித்தான். பொழுது விடிந்ததும் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு தேவசர்மா புறப்படவிருந்த சமயத்தில், ‘’எதற்காக நீங்கள் இந்த ஊருக்கு வந்தீர்கள்? எங்கே போகிறீர்கள்?’’ என்று உறவினன் கேட்டான்.

 

‘’என் மகனுக்குத் தகுந்த பெண் தேடிக்கொண்டே இங்கு வந்திருக்கிறேன்’’ என்று பதிலளித்தான் தேவசர்மா.

 

‘’அப்படியானால், எனக்கு அதிரூபவதியான பெண் ஒருத்தி இருக்கிறாள். நீங்கள் கட்டளையிட்டால் சரி. அவளை உங்கள் பையனுக்குப் பெண்ணாக அழைத்துச் செல்லலாம்’’ என்றான் உறவினன்.

அதன்படியே அந்தப் பெண்ணோடு வேலையாட்களையும் அழைத்துக் கொண்டு தேவசர்மா வீட்டிற்குத் திரும்பிவந்தான்.

 

அந்தப் பெண்ணின் அதிரூப சௌந்தரியத்தையும், அற்புதமான குணங்களையும், அசாதாரணமான நடையுடை பாவனைகளையும் கண்டதும் ஊர்ஜனங்களின் விழிகள் அன்பால் மலர்ந்தன. பெண்ணின்  வேலையாட் களிடம், ‘’நல்லவன் எவனாவது இப்படிப்பட்ட பெண்மணியைக் கொண்டு போய்ப் பாம்புக்குக் கட்டிக் கொடுப்பானா?’’ என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் பெண்ணின் சுற்றத்தார் கவலை அடைந்தனர். ‘’அந்தப் பேய் பிடித்த பையனின் வீட்டிலிருந்து பெண்ணை அழைத்துச் செல்லுங்கள்’’ என்றனர். ஆனால் அந்தப் பெண்ணோ, ‘’இந்தப் பிதற்றல் எல்லாம் போதும். வேத வாக்கைக் கேளுங்கள்.

 

அரசன் ஒரு தடவைதான் சொல்வான்; சாதுவும் ஒரு தடவைதான் சொல்வான்; பெண்ணையும் ஒரே தடவைதான் மணமுடிப்பார்கள். டூம் முன்றையும் ஒரே தடவைதான் செய்வார்கள்.

 

பூர்வஜன்மத்தில் செய்த கர்மத்தின் பலனாக நடக்கிறதை வேறு விதமாக மாற்ற நமக்குச் சக்தி கிடையாது. புஷ்பகன் என்கிற கிளியின் விதியைக் கண்டு தேவர்கள் சகித்துக் கொண்டார்களே!

 

என்று சொன்னாள்.

 

‘’யார் அந்தப் புஷ்பகன்?’’ என்று எல்லோரும் கேட்கவே, அந்தப் பெண் சொல்லத் தொடங்கினான்:

 

புஷ்பகன் என்ற கிளி

 

புஷ்பகன் என்ற கிளி ஒன்று இந்திரனிடம் இருந்தது. அநேக சாஸ்திரங்களையும் ஆகமங்களையும் நன்றாய் அறிந்து அது புத்திசாலியாக இருந்தது. அழகான உருவமும் அதற்கேற்ற குணங்களும் பெற்றிருந்தது. ஒருநாள் அது இந்திர சபையில் இந்திரன் கைமேல் உட்கார்ந்திருந்தது. அந்த ஸ்பரிச சுகத்தால் அதன் தேகம் முழுவதும் புல்லரித்தது. பலவிதமான சூத்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது. இந்திரனை வணங்கும் நேரம் வந்ததும் யமன் அங்கு வந்தான். யமனைக் கண்டதும் கிளி ஒருபுறமாக ஒதுங்கியது. அதைக் கண்ட தேவர்கள், கிளியைப் பார்த்து, ‘’இவரைக் கண்டதும் ஏன் இப்படி ஒதுங்கிப் போகிறாய்?’’ என்று கேட்டனர்.

 

‘’இவர்தான் எல்லோருடைய உயிரையும் பறிக்கின்றவர் ஆயிற்றே! இவரைக் கண்டதும் எப்படி ஒதுங்காமல் இருக்கமுடியும்?’’ என்று கிளி சொல்லிற்று. கிளியின் பயத்தைப் போக்க விரும்பிய தேவர்கள் யமனைப் பார்த்து, ‘’எங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து இந்தக் கிளியைக் கொல்லாமல் இரு’’ என்று  சொன்னார்கள். எனக்கு ஒன்றும் தெரியாது. காலன்தான் அதைத் தீர்மானிக்கிறவன்’’ என்றான் யமன். எனவே தேவர்கள் அந்தக் கிளியை எடுத்துக்கொண்டு காலனிடம் சென்றார்கள்.  முன்மாதிரியே வேண்டிக்கொண்டார்கள். ‘’மரணம்தான் இதை அறிவான். அவனிடம் சொல்லுங்கள்’’ என்று காலன் கூறிவிட்டான்.

 

அவ்விதமே தேவர்கள் மரணத்திடம் சென்றார்கள். மரணத்தைப் பார்த்த மாத்திரத்தில் கிளி செத்துப்போயிற்று. அதைக் கண்டு தேவர்கள் எல்லோரும் மனவருத்தமடைந்து, ‘’இதன் அர்த்தம் என்ன?’’ என்று யமனைக் கேட்டார்கள். ‘’மரணத்தைப் பார்ப்பதினாலேயே இது சாகும் என்று விதி இருந்தது’’ என்று யமன் சொன்னான். அதைக்கேட்ட பிறகு தேவர்கள் எல்லோரும் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிப் போய்விட்டனர்.

 

அதனால்தான் ‘பூர்வஜன்மத்தில் செய்த கர்மத்தின் பலனாக நடக்கிறதை வேறுவிதமாக மாற்ற நமக்குச் சக்தி கிடையாது…’ என்று சொல்கிறேன்’’ என்றாள் அந்தப் பெண். மேலும், ‘’தன் பெண் விஷயமாய்ப் பொய் சொன்னார் என்று என் தகப்பனாருக்குக் கெட்ட பெயர் வரக்கூடாது’’ என்றும் சொன்னாள். இவ்வாறு சொல்லிவிட்டுத் தன் தோழிகளின் அனுமதி பெற்று அந்தப் பாம்பை மணந்து கொண்டாள். பிறகு அந்தப் பாம்பின் முன் காய்ச்சிய பால் முதலியவற்றைப் பக்தியோடு வைத்து உபசரிக்க ஆரம்பித்தாள். ஓரிரவு அவள் அறையிலிருந்த அகலமான பெட்டியிலிருந்து அந்தப் பாம்பு வெளிவந்து அவள் படுக்கையில் ஏறியது. ‘’ஆண் உருவத்தில் வந்துள்ள நீ யார்?’’ என்று உடனே அந்தப் பெண் கேட்டாள். அந்நிய மனிதன் என்று நினைத்து உடம்பெல்லாம் வெடவெடக்க எழுந்துபோய்க் கதவைத்  திறந்து வெளியே செல்ல முயற்சித்தாள். அப்போது அவன், ‘’அன்பே, போகாதே, நில். நான் உன் கணவன்’’ என்று சொன்னான். அவளை நம்பச் செய்தவற்காகக் பெட்டியிலிருந்த பாம்பின் உடலில் நுழைந்து மறுபடியும் வெளியே வந்தான். ஒளி வீசும் கிரீடமும், குண்டலமும், கடகமும், கேயூரமும் தரித்து மோதிரங்கள் அணிந்து அவன் காணப்பட்டான். அவன் பாதங்களில் அவள் வீழ்ந்தாள். பிறகு அவர்கள் இன்பமாய் இரவைக் கழித்தனர்.

 

இரவில் அடிக்கடி எழுந்திருக்கும் வழக்கம் அவன் தந்தைக்கு உண்டு. தந்தைக்கு விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பாம்பின் உடலை எடுத்து மறுபடியும் அதில் நுழைய மாட்டான் அல்லவா?’ என்ற எண்ணத்தோடு நெருப்பிலிட்டான். விடியற்காலையில் பத்தினியோடு மிகுந்த ஆனந்தத்துடன் உரையாடிக்கொண்டிருந்த தன் ஈடற்ற புதல்வனை எல்லா ஜனங்களுக்கும் காண்பித்தான்.

 

இந்த உதாரணத்தை அரசனுக்குச் சொல்லிவிட்டு, நிர்வாண சந்நியாசி இருக்கிற மடாலயத்தை மந்திரி பலபத்திரன் தீக்கிரையாக்கினான்.

 

அதனால்தான், ‘பலபத்திரன் என்கிற மந்திரி…’ என்னும் செய்யுளைச் சொன்னேன்’’ என்றது கரடகன். மேலும் தமனகனைப் பார்த்து,  ‘மூடனே, இவர்கள்தான் உண்மையான மந்திரிகள். உன்னைப்போல் அரசியல் தந்திரம் ஒன்றும் தெரியாமல், மந்திரி என்ற பெயர் மட்டும் வைத்துக்கொண்டு, அவர்கள் பிழைக்கிறதில்லை. உன் கெட்ட புத்தி ஒரு பரம்பரைக்குணம். உன் கெட்ட நடத்தையே அதை எல்லா வழிகளிலும் விளம்பரப்படுத்துகிறது. கட்டாயம் உன் தந்தைகூட இந்த லட்சணத்தில்தான் இருந்திருக்க வேண்டும்.

 

ஏனென்றால்,

 

தந்தையின் குணம் எப்படியோ அப்படியே மகனுடைய குணமும் இருக்கும். தாழம்புச் செடியிலிருந்து நெல்லிக்கனி உண்டாகிறதில்லை யல்லவா?

அறிஞர்களிடம் இயல்பாகவே மாட்சிமை தங்கியிருக்கும். எத்தனை காலம் சென்றாலும் அது மங்குவதில்லை. அவர்களாவே அதைக் கைவிட்டு மனோபலவீனத்தைக் காட்டினால்தான் உண்டு.

 

ஏனென்றால், எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் மயிலின் நிர்வாணத்தை யாரால் பார்க்க முடியும்? என்றாலும் மேகங்கள் கர்ஜிக்கும்போது அந்த மூடமயில் நாட்டியமாடுகிறது. (தன்னை நிர்வாணமாகக் காட்டிக் கொள்கிறது.)

 

துஷ்டனாகிய உனக்கு உபதேசம் செய்வது வீண். ஒரு பழமொழி கூறுகூதுபோல்,

 

வளையாத மரத்தை வளைக்கவும் கல்லை உடைக்கவும் கத்தியால் முடியாது. சூசீமுகம் என்னவோ உபதேசம் செய்து பார்த்தும் குரங்கைக் கீழ்ப்படிந்து போகும்படி செய்ய முடியவில்லை.

 

என்றது கரடகன். ‘’அது எப்படி?’’ என்று தமனகன் கேட்க கரடகன் சொல்லத் தொடங்கியது:

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *