கு.அழகர்சாமி
சென்னைப் பள்ளியொன்றில் பதினைந்து வயது கூட முழுமையடையாத ஒரு மாணவன் தன் பள்ளி ஆசிரியையைக் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியாகவும் துயரமாகவும் இருக்கிறது. நம் கலாச்சாரச் சூழலில் எப்படி இது நடந்தது என்ற தொனியும் அதில் இருக்கிறது. தன் பாடத்தில் சரியாகத் தேர்ச்சி பெறாத மாணவனின் டயரியில் தன் ஆசிரியை எழுதிய குறிப்புகளின் மேல் ஆத்திரப்பட்டு மாணவன் இந்தக் கொலைச் செயலை நடத்தியிருக்கிறான். ஏன் நடந்தது இது? என்ற கேள்வி எல்லோருடைய மனத்திலும் உருத்துகிறது. அது யார் பொறுப்பு என்ற கேள்வியாய் மாறி பெற்றோர்களா, ஆசிரியர்களா மற்றும் திரைப்படம் உடகங்கள் போன்ற புறச்சூழல்களா என்ற விவாதத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இது ஒரு பழி போடும் விளையாட்டாக பிரச்சினையைக் குறுகி அணுகும் ஆபத்தை உருவாக்குகிறது. இது தனிப்பட்ட விபரீதம் அல்ல; இது அடிப்படையான ஒட்டு மொத்தமான ஒரு பிரச்சினை என்பது தான் உண்மை. இந்த அடிப்படையான ஒட்டு மொத்தமான பிரச்சினையின் சம்பந்தப்பட்டவராக (stakeholders) பெற்றோர்களும், ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மையினரும், மற்றும் மாணவர்களும் அமைகின்றனர். மேலும் திரைப்படங்களின், ஊடகங்களின் பங்கும் இதில் இருக்கின்றன. இது மாதிரியான சம்பவம் நடந்ததன் அமைப்பு ரீதியிலான (systemic) காரணங்களாகக் கருதப்படுபவற்றை இப்படி தொகுக்கலாம்.
-
குருவியின் தலை மேல் பனங்காயை வைக்கிறார்கள் பெற்றோர்கள். தாம் அடையாத கனவை அல்லது தாம் அடைந்த கனவை மீறிய கனவை தம் பிள்ளைகள் அடைய ஆசைப்படுகிறார்கள். அதன் விளைவாக மாணவர்கள் அவர்களின் வயது, மனப்பக்குவத்தை மீறிய மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் காது திருகுதல், கோபித்து அடித்தல் என்ற செயல்களில் கூட இறங்கி விடுகிறார்கள்.
-
பள்ளி மேலாண்மையினர் நூறு விழுக்காட்டு தேர்ச்சியை விரும்புவது மட்டுமல்ல, முதல் மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களும் தங்கள் பள்ளிகளிலிருந்து ‘உற்பத்தியாக’ வேண்டுமென்று விரும்புகிறார்கள். இதனால் பள்ளிகள் முக்கியமாக வணிக முறையில் நடத்தப்படும் உறையுள் பள்ளிகள் (Residential schools) மாணவர்களைப் படி படி என்று கட்டாயப்படுத்தும் சிறைக்கூடங்களாக மாறி விட்டன.
-
பள்ளி மேலாண்மையினரின் இந்தப் போக்குக்கு பெற்றோர்களும் துணை செய்கிறார்கள். தம் பிள்ளைகள் மேல் அவர்கள் சுமத்தியிருக்கும் அவர்களின் கனவுகளை மேற்சொன்ன பள்ளிகள் நிறைவேற்ற உதவும் என்று அவர்களது நம்பிக்கை.
-
பெற்றோர்களின் கனவுகளும், பள்ளி மேலாண்மையினரின் எதிர்பார்ப்புகளும் ஆசிரியர்களின் பணியை மிகவும் சவாலானதாகவும், சிரமமானதாகவும் செய்கின்றன. மேலும் கற்பிக்க வேண்டிய பாடங்களும் அதிகமாகவும்,கடினமானதாகவும் மாணவர்களின் வெவ்வேறு விதமான அறிவு, புரிதல் நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாததாகவும் இருக்கின்றன. இதனால் அவர்கள் மாணவர்களின் தேர்ச்சிக்கு கண்டிப்பாகவும் கறாராகவும், இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது சில சமயங்களில் சரியாய்த் தேர்ச்சி பெறாத மாணவர்களை அடிப்பது போன்ற வன்முறை உத்திகளையும் கையாள வேண்டியுள்ளது.
-
மாணவர்களோ அபிமன்யு போல் ஒரு சக்கர வியூகத்தில் அகப்பட்டுக் கொண்டவர்கள் போல் உணர்கின்றனர். பெற்றோர்கள், பள்ளி மேலாண்மையினர், ஆசிரியர்கள், தம்மை விட நன்றாகத் தேர்ச்சி பெறும் தம்முடைய சகாக்கள் என்று நாலாம் பக்கங்களிலிருந்தும் வரும் அழுத்தங்கள் அவர்கள் மேல் குவிகின்றன. இந்த அழுத்தங்களோடு போதாக் குறைக்கு திரைப்படம், ஊடகங்கள் அவர்களுக்கு கல்வி மேலான அவர்களின் கவனத்தைக் குறைக்கின்றன. ஒரு வேளை மாணவர்கள் தங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் அழுத்தங்களுக்கு திரைப்பட,ஊடகக் காட்சிகளை வடிகால்களாகக் கருதுகிறார்களா என்பது ஒரு கள ஆய்வுக்குரியது.
மேற்கூறிய காரணங்களிலிருந்து, இன்றைய பள்ளிக் கல்வி முறையின் சிக்கல் ஒரு நூற்கண்டின் சிக்கல் போல் பின்னிப் பிணைந்து இருப்பது தெளிவாகும். இன்றைய பொருள் சார் போட்டி உலகத்தில் இத்தகைய சிக்கல் நாம் எல்லோரும் நமக்கு நாமே விரும்பிப் பெற்றுக் கொண்ட நோய். இன்றைய கல்வி முறையின் நோய் பின்னிப் பிணைந்திருப்பதால் அதற்கான தீர்வும் ஒட்டு மொத்தமான தீர்வாகத் தான் அமைய வேண்டும்.
முதலில் இன்றைய பள்ளிக் கல்வி முறையில் எல்லோரையும் பிணித்திருக்கும் அழுத்தத்தை விடுவிக்க அல்லது குறைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட யாரிடமிருந்தாவது அழுத்தத்திலிருந்து விடுதலைக்கான செயல்முனைப்பு ஆரம்பமாக வேண்டும். பள்ளி மாணவர்கள் மேல் இருக்கும் பாடங்களின் பளுவைக் கொஞ்சம் குறைக்கலாம். இதற்காகப் பாடங்களின் தரத்தைக் குறைக்க வேண்டுமென்றில்லை; எண்ணிக்கையைக் குறைக்கலாம். இந்தக் கருத்து இன்னொரு முக்கியமான கருத்தோடு தொடர்புள்ளது. இன்றைய மாணவர்கள் தங்களின் பட்டாம் பூச்சி போன்ற விளையாட்டுத் தனத்தை வெகு சீக்கிரமாக இரு வகைகளில் இழந்து விடுகிறார்கள்- ஒன்று கால அவகாசமின்மையில், இன்னொன்று மனப்பாங்கில். முன்னது பாடப்பளுவோடு தொடர்புடையது. அன்றைய வகுப்புப் பாடங்களை அன்றே படித்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தோடு, ஆசிரியர்கள் தரும் வீட்டுப் பாடங்களும் மாணவர்கள் மேல் அழுத்தத்தைக் கூட்டுகின்றன. இந்த அழுத்தத்தை மேலும் தீவிரமாக்குகிறது ஊடகங்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் போன்ற புறச்சூழல்கள். இந்த புறச்சூழல்கள் மாணவர்களை பால பருவத்தின் இயல்பான கள்ளமின்மையிலிருந்து ஒரு வாலிப மனப்பாங்குக்கு அதற்கான உடல்சார் மாற்றத்திற்கு முன்பே நகர்த்துவதால் ஏற்படும் உள்ளச் சலனங்கள் பாடங்களின் மேல் கவனக் குறைவை விளைவிக்கின்றன. இந்த கவனக் குறைவு கால அவகாசமின்மையான் எழும் சிக்கலோடு சேர்ந்து அழுத்தத்தை மேலும் அதிகரிக்க இன்றைய பள்ளி மாணவர்கள் ஒரு விதமான மோசமான மன அழுத்தச் சுழலில் (vicious pressure cycle) சிக்க வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஒவ்வொரு தனிச் சமூகப் பண்பாட்டுச் சூழலும் உலகமயமாதலில் தாக்குறும் போது, திரைப்படம் ஊடகம் போன்ற புறச்சூழல்களைக் காரணம் காட்டுதல் சிக்கலின் தீவிரத்தை எளிதுபடுத்துவதாகும். ஒரு சிறந்த கல்வி முறையின் வெற்றி விரும்பிப் படிக்கும் தாகத்தை மாணவர்களிடம் உருவாக்குவதே. அப்போது உகந்ததல்லதாகக் கருதப்படும் புறச்சூழல்கள் வெற்றி கொள்ளப்படும். படிக்கும் தாகம் கைகூடின் மாணவர்கள் பயிலும் கால ஓட்டத்தின் ஒரு கட்டத்தில் தானாகவே பறந்தெழ (take off) ஆரம்பித்து விடுவார்கள். அப்போது பள்ளி ஆரம்ப நிலைகளில் இருந்த குறைந்த பாடப் பளுவும் ஈடு கட்டப்பட்டு விடும். உதாரணமாக, பள்ளி நிலையிலேயே கணிதத்தில் Matrices, Probability, set theory என்று பள்ளி மாணவர்களை பயமுறுத்துவதை விட அவற்றைக் கல்லூரி நிலையில் கற்பித்தால் தான் என்ன? இன்றைய பெற்றோர் பலர் மேற்சொன்ன பாடங்களைக் கல்லூரி நிலையில் தான் படித்தார்கள் என்பதை நினைவு கூர்வது நல்லது.
அடுத்து பாடங்களின் தேர்ச்சியில் எல்லா மாணவர்களையும் உச்சத்தில் ஒரே தரப்படுத்துதல் என்ற எதிர்பார்ப்பையும் கைவிட வேண்டும். இதிலும் எல்லா மாணவர்களும் எல்லாப் பாடப் பிரிவுகளிலும் உயர் மட்ட தேர்ச்சி பெற வேண்டும் என்ற இன்றைய கல்வி அணுகு முறையும் நடை முறை சாத்தியம் மட்டுமல்ல. அறிவார்த்த, உளவியல் ரீதிகளில் கூட சாத்தியமற்றது. ஒவ்வொரு மாணவனுக்கும் உள்ளார்ந்து ஒரு பாடப் பிரிவில் அல்லது சில பாடப் பிரிவுகளில் –கணிதத்திலோ, அறிவியலிலோ, வரலாற்றிலோ என்று- திறமையும் தேர்ச்சியும் இயல்பாய் அமையும். இந்த இயற்கைப் பான்மையை ஒரு கல்வி முறை அங்கீகரிக்க வேண்டும். நமது கல்வி முறை தான் கணித மேதை இராமானுஜனை கல்லூரி நிலையில் இருமுறை தேர்ச்சி பெறவில்லை என்று புறந்தள்ளியது என்பதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது. ஏனென்றால் கணிதம் தவிர ஏனை பாடப்பிரிவுகளில் இராமானுஜனுக்கு ஈர்ப்பு இல்லை.
இன்றைய பள்ளிக்கல்வியில் அடிசரடாக இருக்கும் அமைப்பு ரீதியிலான அழுத்தத்திற்கு இன்னொரு காரணம் கற்பித்தலில் சம்பந்தப்பட்டிருப்போருக்கிடையே நிலவும் உறவுகளும் சொல்லாடல்களும்(communication). ஆசிரியர்கள் தாம் மாணவர்களிடம் தினம் தினம் சந்திக்கின்ற நேர்முக நிலையில் இருக்கிறார்கள். அப்படியாக, ஆசிரியர்கள் மாணவர்களிடம் தங்களின் உறவு நிலைகளையும் சொல்லாடல்களையும் ஒரு நம்பகத்தை (trust) உருவாக்குவதில் வெற்றி பெற வேண்டும். மாணவர்கள் முன்மாதிரியாய் ஆசிரியர்களைக் கருதுமாறு ஆசிரியர்கள் தங்களைத் தகுதியாக்கிக் கொள்ளவேண்டும். அப்போது ஆசிரியர்கள் கடிந்தாலும், கறாராய் இருந்தாலும், அடித்தாலும் தங்கள் நன்மைக்கே எனற நம்பகம் மாணவர்கள் மனத்தில் பதிய வாய்ப்புண்டு. இதை ஒரு கோட்பாடு ரீதியிலான கருத்து என்று புறந்தள்ளலாம். ஆனால், நம்பகத்தின் மேல் அமையாத கண்டிப்பும் கறாரும் மாணவர்களிடம் மட்டுமென்ன யாரிடமும் எதிர்ப்பையும் வெறுப்பையும் விளைக்கும் சாத்தியம் தான் அதிகம். ஆசிரியர்களும் இன்னொரு நிலையில் பெற்றோர்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது. இன்றைய பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் கலந்துறவாடக் கூட நேரம் இல்லை என்று ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் சிக்கி விடக் கூடாது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் தினம் நூறு ரூபாய் கைச்செலவுக்குக் கொடுத்ததைக் காட்டிலும் தினம் நூறு நிமிடங்கள் கலந்துரையாடியிருந்தால் நடந்த வெறிச்செயலைத் தடுத்திருக்கலாம். பெற்றோர்கள் இன்னொரு நிலையில் ஆசிரியர்களாக இருந்து தங்கள் பிள்ளைகளைப் பண்பு நிலைகளில் மேம்படச் செய்யவேண்டும். எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பள்ளிப் பாடம் மட்டும் சார்ந்திராத படிக்கும் தாகத்தை வளர்த்து விடுகிறார்கள்? அதற்குப் பெற்றோர்களே தினம் தினம் வாசித்தால் தான் அவர்களின் பிள்ளைகளும் முன்னுதாரணமாய் எடுத்துக் கொண்டு வழி நடப்பார்கள்.
ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமிடையே கூட பரஸ்பர மரியாதையும், புரிதலும் அவசியம். பெற்றோர்கள் ஆசிரியர்களின் கண்டிப்பையும் கறாரையும் சில சமயங்களில் அடிப்பது போன்ற நிகழ்வுகளையும் பின்னணியில் (context) வைத்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆசிரியர்களின் நல்லெண்ணத்தின் அடிப்படையிலான கண்டிப்பும் கறாரும் புரிந்து கொள்ளப்படாவிட்டால் ஆசிரியர்களும் போனால் போகிறது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். அந்த நிலைப்பாடு கடைசியில் மாணவர்களின் எதிர்காலத்தைத் தான் பாதிக்கும். இந்த உறவுச் சங்கிலியில் பள்ளி மேலாண்மையினரின் பங்கும் முக்கியமானது. அவர்கள் பெற்றோர்க்கும் மாணவர்க்கும் இடையே பாலமாக அமைய வேண்டும். அவர்கள் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறமையை எத்தனை மாணவர்களின் தேர்ச்சி என்ற அளவு கோலில் மட்டும் அளக்காது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருக்கும் வரையறைகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கான ஆலோசனைகளை (counselling) அவ்வப்போது ஒழுங்கின் அமைந்த காலகட்டங்களில் நடத்தினால் மாணவர்களின் மனங்களில் உள்ளே புகைவது என்ன என்று முன் கூட்டியே கண்டு கொள்ளலாம்.
சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் இன்றைய கல்வி முறையில் புரையோடியிருக்கும் இறுக்கத்தையும் அழுத்தத்தையும் எப்படி விடுவிப்பது அல்லது குறைப்பது என்பது தான் நம் முன்னால் இருக்கும் பெருங்கேள்வி. அதற்கு சென்னைப் பள்ளியில் நடந்த ஆசிரியை கொலை சம்பவத்தை ஒரு தனிப்பட்ட அசாதாராண அசம்பாவிதமாக எடுத்துக் கொள்ளாமல் அடிப்படையான சிக்கலாய்க் கருதி மேலே சொன்ன தீர்வுகளையோ அல்லது வேறு பல தீர்வுகளையோ அமைப்பு ரீதியில் முயற்சித்தால் நல்லது. அரசின் நிலைப்பாடு இதில் மிக முக்கியம் என்பதில் மிகையில்லை. பள்ளியில் கற்பது மாணவர்களுக்கு அறிவோடு கூடிய ஆனந்தமாக வேண்டும். இது தான் எந்தக் கல்வி முறையின் இலக்காகவும் இருக்க முடியும்.
- பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
- ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்
- நினைவுகளின் சுவட்டில் – 86
- எழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)
- எல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –
- சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘
- பிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘
- மயிலு இசை விமர்சனம்
- பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்
- கலங்கரை விளக்கு
- வேதனை விழா
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 31
- பழமொழிகளில் ஒற்றுமை
- மரணம்
- அகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- இன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்
- கனவுகள்
- பட்டறிவு – 1
- தற்கொலையிலிருந்து கொலைக்கு …
- இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்
- குருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.
- ஐங்குறுப் பாக்கள்
- ஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11
- இவள் பாரதி கவிதைகள்
- முன்னணியின் பின்னணிகள் – 27
- Kalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamil
- தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54