மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –

This entry is part 6 of 31 in the series 19 பிப்ரவரி 2012

15. தாசி மீனாம்பாள் வீடு அமைதியாககிடந்தது. வழக்கம்போல தீட்சதர் அதிகாலையில் புறப்பட்டுபோனபோது திறந்து மூடிய கதவு. பொழுது துலக்கமாக விடிந்து, வீடு பகற்பொழுதுக்கு இணங்கிக்கொண்டிருந்தது, கூரையில் இன்னமும் அதிகாலைப் பனியின்வாசம் நீரில் நனைத்த துணிபோல வீடு முழுக்க நிறைந்திருந்தது. வீடு கூட்டவில்லை என்பதன் அடையாளமாக ஆங்காங்கே அதது வைத்த இடத்திற்கிடந்தது. குளத்து நீர் தவலை இருந்த இடத்தில் அசையாமலிருக்க, அதன் மஞ்சள் நிறத்தில் சோகை வழிந்துகொண்டிருந்தது. மனிதர் நடமாட்டமின்மை, அது ஏற்படுத்தியிருந்த அமைதி. அந்திநேர வயற்காடுபோல மீனாம்பாள் வீடு. அந்நேரத்தில் தொடுவானம் சிவப்பைத் துறந்து நீலத்தைப் பூட்டிக்கொண்டிருக்கும் – தங்கள் இருப்பிடம்செல்ல மறந்து விரைந்து பறக்கும் ஒன்றிரண்டு பறவைகளைத் தவிர்த்து வானம் சுத்தமாக துடைக்கபட்டிருக்கும், மரங்களின் தலைகளில் இருட்டத் தொடங்கிவிடும். ஒருவித சோகம் பூஞ்சணம்போல படிந்திருக்குமில்லையா, மீனாம்பாள்வீட்டிலும் அப்பூஞ்சணம் வெளித்திண்ணை, நடை, தாழ்வாரம் அறைகளென்று பார்க்கமுடிந்தது. பகற்பொழுது தடுக்கப்பட்ட அறைகளில் அரை இருட்டில் அவரவர் அறைகளில் மீனாம்பாளும், அவள் மகள் சித்ராங்கியும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.

குறட்டைச் சத்தத்துடன் தூங்கிக்கொண்டிருந்த மீனாம்பாள், கதவு மெள்ள திறப்பட்ட சத்தம் கேட்டு விழித்தாள். திறந்த கதவில் இடைவெளியில் பகலின் வெளிச்சத்தைப் பின்னுக்குத்தள்ளி நின்றிருந்த நிழல் அரையிருட்டில் தேவையற்ற சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும் அலறி அடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

– யார்.. யாரது?

– கதவைத் திறந்திருந்திருந்த நிழல் மெல்ல அவள் பாயருகே வந்தது. கீழே குனிந்து அவள் தோளைத் தொட்டது. அவளுக்கு சமதையாக தரையில் உட்கார்ந்தது. கணத்தில் மீனாம்பாள் தோளோடு தோளோடு சேர்ந்து கட்டிக்கொண்டது.

மகளும் தாயும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக கட்டிக்கொண்டு மௌனமாக கண்ணீர் விட்டனர், இருவருக்கும் வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது. அழுதனர். மகள் கண்ணீரைத் தாயோ; தாயின் கண்ணீரை மகளோ துடைக்கும் எண்ணமுமில்லை. தடுக்கும் எண்ணமுமில்லை. பொருமினர். அப்பொருமல் சிறிது நேரத்திற்குப் பிறகு முனகலும்,வெப்பமும் வெடிப்புமாக தொடர்ந்தது. வாய் எச்சில் நூல் போல அடுத்தவர்தோளில் இறங்கி பிசுபிசுத்தது. மூக்கில் வடிந்த நீரை, உதட்டின் பரப்பைக்கடந்து வாயிலிறங்கி உவர்த்தது.

– ஏம்மா அழற?

– நீ என் அழற?

– சொல்லத் தெரியலை அம்மா.. செண்பகத்தை இப்படி திடீரென்று தொலைத்தது காரணமாக இருக்கலாம். மின்மினிபூச்சுகள்போன்று ஓளிவட்டத்தைத் தேடி பொசுக்கிக்கொள்ளும் நமது விதியை அதிகமாக நினைத்துப்பார்த்தது காரணமாக இருக்கலாம். தீட்சதர் மைத்துனரை பற்றிய எனது கனவுகள் பொய்த்துபோகுமோ என்கிற கவலையாகக்கூட இருக்கலாம்.

மீனாம்பாள் மகளைத் தன்னிடத்திலிருந்து விலக்கிவிட்டு ஓரிரு நொடிகள் அவள் முகத்தை நேரிட்டுப்பார்த்தவள் மீண்டும் மகளைக் கட்டிக்கொண்டு அழுதாள். இம்முறை சித்ராங்கி மீனாம்பாளிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டு கேட்டாள்,

– ” சொல்லும்மா, தீட்சதர் நேராய் நேற்று நான் வேண்டாமென்று உன்னைத் தேடிவந்தாரே. என்ன விஷயம்?”

– அவர் இனி வரமாட்டேன், என்றார்

– உனக்கு நம் வீட்டிற்கு தீட்சதர் வீட்டு வெகுமதிகள் நின்று போகுமென்கிற பயமா? அப்படி அஞ்சுவதில் எதேனும் பொருள்ளதாவென்று தெரியவில்லை. என்னை இதுவரை தொடாமலேயே கொடுத்த மனிதர், நம் வீட்டிற்கு வராமல் போனாலும் கேட்டால் உதவுவார்.

– நம் வீட்டிற்கு வந்து உன்னைத் தொடாமலே கொடுத்தார் என்பதில் எந்த தப்புமில்லை. தாசிதொழில் தர்மத்திற்கு அது சரியானதுதான். அவர் நம்வீட்டிலேயே கால்வைக்காமல் கொடுத்தால்தான் அதர்மம். நான் சொல்லவந்தது தீட்சதரென்ற மனிதரே இனியில்லை என்று போய்விடுவாரோ என்கிற அச்சம். ஆமாமடி, அவருக்கு கோவிந்தராஜர் சன்னதி திருப்பணி தொடங்கக்கூடாது. செஞ்சி நாயக்கரின் முயற்சியை எப்படியேனும் தடுத்தாகவேண்டும். வைணைவர்களின் இம் முடிவு சைவகர்களுக்கு எதிரானதென்றும், தீட்சதர்கள் தங்களை மாய்த்துக்கொண்டேனும் அதைத் தடுத்து நிறுத்தவேண்டுமென்கிறார். நான் எவ்வளவோ சமாதானம் சொன்னேன் கேட்பதாக இல்லை.

– அதனாலென்ன? கிருஷ்ணப்ப நாயக்கர் இம்முறை பல்லக்கு அனுப்பினால் சீர் செனத்தியெல்லாம் ஒழுங்காக வந்தால்தான் ஆயிற்று என்று சொன்னால் போயிற்று. விடு கவலையை..

– என்ன? மீனாம்பாள் உடல்மட்டுமல்ல இதயமும் மரத்துபோனதென்று குத்திக்காட்டுக்கிறாய் இல்லையா? தாசிகுலபெண்களென்றால் அவ்வளவு மோசமானவர்களா. மனமென்று ஒன்று இருக்காதா என்ன? என்ன செய்வது சொல், சில விதிகளை நமக்காக எழுதிவைத்து அவ்விதிப்படி நடப்பதே உத்தமம் தர்மம் என ஊர்போதிக்கிறது. துறந்தவர்களே ஆசைக்குப்பலியாகிறபோது? இச்சைகளில் ஊறிய மட்டைகளுக்கு ஆசைகள் கனவுகள் இருக்காதா? நீ எங்கிருந்து முளைத்தாய்? இந்த மீனாம்பாள் உதிரம்தானே? உனக்கு தீட்சதர் அருமை புரிகிறபோது எனக்குப் புரியாதா? இங்கே வராவிடால் கூட பரவாயில்லை. அவர் மனைவி மக்களுக்குத் குறை நேர்ந்துவிடக்கூடாதென்பதுதான் கவலை.

– நாம் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? அவருடைய மனைவி மக்கள் பற்றி அவர்தான் யோசிக்கவேண்டும். நான் கேட்கிறேனென்று தப்பாக எடுத்துக்கொள்ளாதே, கோவிந்தராஜர் திருப்பணீயை எதிர்த்து ஓரு சைவர் என்றவகையில் உயிரைக்கொடுத்தும் தடுத்து நிறுத்துவேனென்கிற அவரது பிடிவாதத்தை சந்தேகிக்க எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் என்னிடத்திலுள்ள ஐயத்தை தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். அவர் தொப்புள்ளானுக்குப்பிறந்த ஆண் குழந்தையொன்றை பல வருடங்களுக்கு முன்பு வேறொரு ஆளின் மூலம் கொண்டுவரச்செய்து எங்கோ அனுப்பி வைத்ததாகவும், பிறகு விஜய நகர சாம்ராச்சியத்தை பழிவாங்கிவிட்டேனென்று தமக்கு மிகவும் வேண்டியவர்களிடம் சொல்லி சந்தோஷப்பட்டதாகவும், அச்செயலை நினைத்து பின்னர் வருத்தப்பட்டதாகவும் வதந்தியொன்று சிதம்பரம் முழுக்க உலாவருகிறதே தெரியுமா? அவர் உயிரைவிடுகிறேனென்று சொல்வதுகூட விஜய நகர சாம்ராச்சியத்திற்கு எதிராக செய்த இந்தத் தவற்றிர்க்கு கோவிந்தராஜர் சன்னதியில் உயிரைவிடுவதுதான் பிராயச்சித்தமாக இருக்குமோ என்னவோ?

– உனக்கு யார் சொன்னது? அவர் சொன்னாரா, உன்னிடத்தில் சொல்லியிருப்பாரென நான் நம்பவில்லை. ஒன்றிரண்டு பேரைதவிர பிறருக்குத் தெரிய வாய்ப்பே இல்லையே.

– செண்பகம் கூறினாள். உலகில் ரகசியம் என்பதுதான் முதலில் வெகுசுலபமாக எல்லோருக்குத் தெரிய வரும். ஆக நடந்தது உண்மை.

– சித்ராங்கி நீ சொல்வதுபோல ஊரறிந்த ரகசியமென்றும் அதுவும் உண்மையென்றும் வைத்துக்கொள்வோம். அதற்குப் பிராயசித்தம் தேடி கோவிந்தராஜர் சன்னதியில் எப்படியும் ஒருநாள் தீட்சதர் உயிர்விடுவார், அதுவரை பொறுத்திருப்போமென்றா விஜய நகர அரசாங்கம் காத்திருக்கும். அவர்களுக்கு எதிராக தீட்சதர் சதிசெய்திருந்தது உண்மையெனில் அடுத்தகணம் தீட்சதர் தலை தரையில் உருண்டிருக்கும்.

– தொப்புளான் மகன் ரகசியம் உனக்குத் தெரியும்?

– குடிகாரர்களின் பேச்சுக்கும், தாசிவீட்டிற்கு வரும் மனிதர்களின் பேச்சுக்கும் அதிக உத்தரவாதமெல்லாம் தரமுடியாது. நமக்கேன் ஊர் வம்பு. மனிதர்கள் கொண்டுவரும் பொன்னையும் பொருளையும்மட்டுமே தட்டித் தரமானவையா என்றுப்பார்க்கவேண்டுமே தவிர, அவர்களுடைய உளறல்களையல்ல. தீட்சதரென்ற ஒரு நல்ல மனிதர் இப்படி உயிரை விடப்போகிறேனென்கிறாரே என்றகவலையில் அம்மனிதரின் உதவிகளுக்கு நன்றிக்கடனாக அழுதது நிஜம். அதற்காக காலமுழுக்க அவருக்காக் கண்ணீர் சிந்த நாம் பிறந்தவர்களல்ல. எழுந்திரு. செண்பகமும் இல்லையென்றானபிறகு செய்வதற்கு வேலைகள் நிறைய இருக்கின்றன. அநேகமாக கொள்ளிடச் சோழகன் ஆள் யாரேனும் கிருஷ்ணப்ப நாயக்கருக்காக பல்லக்குடன் வரலாம். மாலை எதற்கும் தயாராகவிரு.

– – போம்மா அந்த மனிதருக்கு மைதுனம் செய்து எனக்கு அலுத்துவிட்டது..

-தொடரும்-

Series Navigationஎல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *