செல்வராஜா
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில்Dugdale Centre மண்டபத்தில் அவை நிறைந்த நிகழ்வாகவும் நல்லதொரு குடும்ப நிகழ்வாகவும் சந்திரா இரவீந்திரனின் “நிலவுக்குத் தெரியும்” சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தேறியது.
வடமராட்சி-பருத்தித்துறையில் மேலைப் புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரா. 1991இல் பிரித்தானியாவுக்கு இடம்பெயரும்வரை யாழ்ப்பாண அரச செயலகத்தில் பணியாற்றியவர். இவர் 1981இல் (செல்வி) சந்திரா தியாகராஜா என்ற பெயரில் தனது கன்னிப்படைப்பான ஒரு கல் விக்கிரகமாகிறது என்ற சிறுகதையை எழுதி எழுத்துலகில் நுழைந்தவர். வடமராட்சியில், பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினால் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான “நிழல்கள்” 1988இல் வெளியிடப்பட்டது. ஈழமுரசு, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த 5 சிறுகதைகளினதும் 1984-85 இரசிகமணி கனக. செந்திநாதன் நினைவுக்குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் என்ற குறுநாவலினதும் தொகுப்பாக நிழல்கள் முன்னர் வெளிவந்திருந்தது. லண்டன், ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2009வரை இவர் ஏழாண்டுக் காலமாக இலக்கிய நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார்.
“நிலவுக்குத் தெரியும்” என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு, காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக நவம்பர் 2011இல் வெளிவந்துள்ளது. இதில் பால்யம், தரிசு நிலத்து அரும்பு, அவர்கள் இல்லாத தேசம், என் மண்ணும் என் வீடும் என் உறவும், முறியாத பனை, நெய்தல் நினைவுகள், வல்லை வெளி தாண்டி, யாசகம், காற்று, கண்ணில் தெரியும் ஓவியங்கள் ஆகிய பத்துக் கதைகள், உமா வரதராஜனின் துயரத்தின் நெடும்பயணம் என்ற விரிவான முன்னுரையுடன் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
லண்டனில் “நிலவுக்குத் தெரியும்” நூல்வெளியீடு லண்டன் நூல்வெளியீட்டு நிகழ்வுகளின் தாமதப் பாரம்பரியத்தை மீறி-குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மங்கள விளக்கேற்றலை அடுத்து, செல்வி தர்ஷியா இரவீந்திரகுமாரன் அவர்களின் வீணை இசைநிகழ்வுடன் நிகழ்ச்சி களைகட்டத்தொடங்கியது. அவருடன் இணைந்து குமரன் இரவீந்திரதாஸ் மிருதங்கம் வாசித்தார். இனிய இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆசியுரையை என்பீல்ட் நாகபூஷணி அம்மன் ஆலய பிரதம குருவான சிவஸ்ரீ கமலநாதக் குருக்கள் வழங்கினார். ஆசியுரையைத் தொடர்ந்து வரவேற்புரையை செல்வி தர்ஷியா இரவீந்திரகுமாரன் நிகழ்த்தினார்.
நிகழ்வின் தiலைமையை மாதவி சிவலீலன் ஏற்று மிக நேர்த்தியாகவும் கட்டுக்கோப்பாகவும் அதனைக் கொண்டுநடத்தினார். வரவேற்புரையையடுத்து, மாதவியின் தலைமையுரை இடம்பெற்றது. தனது உரையில் நிலவுக்குத் தெரியும் கதைத் தொகுதியில் சில கதைகளை மேலோட்டமாகஅறிமுகம் செய்ததுடன் தனது மனதுக்குப் பிடித்த கதைகளாக முறியாத பனை, பால்யம் ஆகிய கதைகள் பற்றிய தன் இலக்கியப் பார்வையை தெளிவுபடுத்தினார். தொகுதியில் இடம்பெற்ற ஏழு கதைகள் போராட்டகால ஈழத்துத் தமிழரின் வாழ்நிலையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சந்திராவின் மிக நுணுக்கமானதும் கவித்துவமானதுமான வர்ணனைகளை விதந்து பாராட்டினார். போராட்ட காலத்தில் பெண்களினால் வெளிப்படுத்தமுடியாத பல மெல்லுணர்வுகளையும், சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கியிருந்த சவால்களையும் துல்லியமாக ஒரு உள்வீட்டுப்பார்வையுடன் தனது கதைகளில் வெளிக்காட்டியிருப்பதை அவர் குறிப்பிட்டார். மேலும் கண்ணில் தெரியும் ஓவியங்கள் என்ற கதையில் மற்றவர்கள் பெரிதும் தொடாத ஒரு கோணத்தில் சந்திரா தன் பார்வையை பதித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
அறிமுக உரையை இலக்கிய ஆர்வலர்.ச.ச.முத்து அவர்கள் வழங்கினார். ச.ச.முத்து ஈழமுரசு பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளை எழுதுபவர். குறிப்பாக ஈழவிடுதலைப் போராளிகளின் வாழ்க்கை வரலாறுகளை தொடர்ச்சியாக ஒரு வரலாற்றுப் பதிவாக பத்திரிகையில் எழுதிவருபவர். ச.ச.முத்து, விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் வடபுலத்துக் களத்தில் இயங்கியவர் என்ற வகையில் அவரது பார்வையில் சந்திராவின் சிறுகதைகளின் களப்பின்னணி பற்றியும் பாத்திரங்களின் பின்புலம் பற்றியும் சுவையானதொரு அறிமுகத்தை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. முதலாவது ஆய்வுரையை நளாயினி இந்திரன் வழங்கியிருந்தார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செல்வி நளாயினி கணபதிப்பிள்ளையாக தமிழ்த்துறையில் பயின்றவர். கொழும்பு சுவடிகள் காப்பகத்தில் சிலகாலம் பணியாற்றித் தற்போது லண்டனில் பார்னட் பிரதேச நூலகமொன்றில் நூலகராகப் பணியாற்றுகின்றார். நளாயினி இந்திரன் தனது உரையில் சந்திராவின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, அதனதன் இயல்புகள் பற்றிய தனது கருத்தை அழகான விமர்சனமாக முன்வைத்தார். சந்திரா தன் கதாபாத்திரங்களினூடாக மானசீகமாக வாழ முற்பட்டிருப்பதாகத் தெரிவதை நளாயினி சுட்டிக்காட்டத்தவறவில்லை.
நளாயினியைத் தொடர்ந்து செல்வி துரைச்செல்வி பொன்னுத்துரை ஆய்வுரையை நிகழ்த்தினார். தமிழகத்தில் பட்டப்பின்கல்வியைப்பெற்ற துரைச்செல்வி, வேர்முகங்கள், ஏழாவது ஊழி ஆகிய நூல்களின் ஆசிரியரான பொ.ஐங்கரநேசனின் சகோதரியாவார். அவரது உரை பெரும்பாலும் சாதியக் கண்ணோட்டத்தில் நிலவுக்குத் தெரியும் கதைகளைப் பார்ப்பதாகவே அமைந்திருந்தது. அக்கதைகளின் அடிநாதமாக அமைந்திருந்த போர்க்கால வாழ்வியல்பற்றி அவர் குறிப்பிடுவதைத் தவிர்த்துக்கொண்டதாக உணரமுடிந்தது. அவரது பார்வைக்கோணம் வறுமையே பெண்களின் பாலியல் துன்புறுத்தலுக்குக் காரணியாகின்றது என்ற போக்கில் அமைந்திருந்தது.
அவரைத் தொடர்ந்து ஒருபேப்பர் பத்திரிகையின் ஊடகவியலாளரும், 2003இல் காலம் ஆகிவந்த கதை என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட இலக்கியப் படைப்பாளியுமான அருணாசலம் இரவி தனது கருத்துரையை வழங்கினார். ஈழத்தின் குறிப்பிடத்தக்கதொரு தரமான பெண் எழுத்தாளராக சந்திராவை இனம்கண்ட அவர், சக படைப்பாளியாக நின்று நூலிலுள்ள கதைகளுள் தனது மனதுக்கு நெருக்கமான சிலவற்றைப்பற்றிய சில கருத்துக்களைத் தெரிவித்தார். அ.இரவி, தமிழகப் படைப்பாளிகளின் கதைகளுடன் இவரது கதைகளை ஒப்பிட்டு, சிறுகதை இலக்கண வரம்பிற்குள் அமையாது சில கதைகள் செல்வதாகக் குறிப்பிட்டார். கதைகளின் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் அக்கறை செலுத்தவேண்டும் என்ற அவர் சந்திராவின் முறியாத பனை என்ற கதையின் தலைப்பினை சிலாகித்துப் பேசியது முன்னுக்குப் பின் முரணாக அமைந்திருந்தது.
அ.இரவியின் உரையைத் தொடர்ந்து சம்பிரதாயமான நூல் வெளியீடு இடம்பெற்றது. திரு பத்மநாப ஐயர் வெளியீட்டுரை நிகழ்த்தினார். அவர் தனதுரையில் இந்நூலில் இடம்பெற்ற சில கதைகள் தனது “யுகம்மாறும்” தொகுப்பிலும் பிற வுறுயுN வெளியீடுகளிலும் இடம்பெற்றதாகத் தெரிவித்தார். முதற்பிரதியை அவர் வோல்த்தம்ஸ்ரோ தமிழ்ப்பள்ளி அதிபர் குகச்சந்திரனுக்கு வழங்கியபின், சிறப்புப் பிரதிகளை வழங்கும் பணியை சந்திராவின் தாயார் சிவகாமசுந்தரி தியாகராஜா ஏற்றுக்கொண்டார். முக்கிய வர்த்தக, சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு சிறப்புப் பிரதிகள் திருமதி சிவா தியாகராஜாவால் வழங்கப்பட்டன.
நூல்வெளியீட்டைத் தொடர்ந்து திரைப்பட, கலைஇலக்கிய விமர்சகரும், புடழடியட வுயஅடை நேறள இணைய வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுள் ஒருவருமான ஊடகவியலாளர் ஜமுனா இராஜேந்திரன் விமர்சன உரை நிகழ்த்தினார். சந்திராவின் கதைகளில்- பால்யம் என்ற கதையைத் தேர்ந்து அதனை மிக அழகாக விமர்சனம் செய்தார். பால்யப் பருவத்தை எட்டும் இரு சிறுமிகளின் பேசா மொழியாக அமைந்த மன உணர்வுகளை மிக அழகாகக் கதையில் பெண்மையுணர்வுடன் வடித்திருப்பதாக அவர் கூறினார். திரு. ஜமுனா இராஜேந்திரன் பால்யம் என்ற அக்கதையின் காட்சிப்படிமங்களை ஒரு குறும் திரைப்பட வர்ணனைபோன்று கச்சிதமாக எடுத்துரைத்தார்.
ஜமுனா ராஜேந்திரனும் முன்னதாகப் பேசிய அ.இரவியின் பாதையிலேயே பயணித்து, புனைகதையின் வரைவிலக்கணம் பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்தார். மண்ணையும், மக்களையும், மண்ணின் மணத்தையும் விபரிப்பது கதைகளாகிவிடா என்பதே ஜமுனாவின் வாதமாக இருந்தது. மேலும் வரலாறுகள் விபரிக்கப்படுவது கதைகளில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் அவரது கருத்தாக இருந்தது.
ஈழத்துப் புனைகதை இலக்கியம் தனியானதொரு பரிணாம வளர்ச்சியைக் கண்டிருப்பதாகவும், தனித்துவமான அதன் போக்கு- தமிழகப் பாரம்பரியச் சிறுகதைகளின் இலக்கண வரம்புகளுக்கு அப்பாற்பட்டு தனித்துவம் மிக்கதாக, இரத்தமும் சதையுமான அனுபவவயப்பட்ட உணர்வு வெளிப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் நிலவும் கருத்து இன்று தமிழகத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகிவிட்டது. இதை ஈழத்தின் முக்கிய படைப்பாளியான எஸ் பொ. தனது அண்மைக்கால நூல்களில் விபரமாகவே ஆராய்ந்துள்ளார். ஈழத்தமிழர்களின் புதியதான புலப்பெயர்வுகளின் விளைவாக முகிழ்த்துவரும் தமிழ் இலக்கிய வகையான புலம்பெயர்ந்தோர் இலக்கியம் தொடர்பாக எஸ்.பொ. தமிழ்நாட்டில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்திலே 22.3.2006 அன்று நிகழ்த்திய பேருரை, பின்னாளில் பனிக்குள் நெருப்பு என்ற நூலாகவும் வெளியிடப்பட்டது. (பார்க்க: பனிக்குள் நெருப்பு: புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஒரு வரலாற்றுப் பார்வை. எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32ஃ9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஜுன் 2006. ஐளுடீN: 81-89748-17-3.)
மலேசிய, தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் தனியானதொரு பாடமாக (ஆழனரடந) ஆய்வுசெய்யப்படுகின்ற இன்றைய நிலையில், பாரம்பரிய புனைகதை இலக்கண வரம்புகளுக்குள் நவீன ஈழத்துத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் நீட்சியாகக் காணும் புலம்பெயர் படைப்பிலக்கியங்களை மீண்டும் இந்த புனைகதை இலக்கண வரம்புக்குள் வலிந்து இழுத்துச்சென்று சேர்க்கும் தமிழகக் கனவின் ஒரு முயற்சியாகவே இவ்விரு உரைகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.
ஜமுனா இராஜேந்திரனைத் தொடர்ந்து தனது விரிவான விமர்சனத்தை முன்வைத்தவர் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான சூ.யோ.பற்றிமாகரன் அவர்கள். அன்னையர் தினமான அன்று இரு மாவீரர்களின் அன்னையான திருமதி சிவா தியாகராஜாவை வாழ்த்தித் தன் உரையைத் தொடர்ந்த பற்றிமாகரன், சந்திரா இரவீந்திரனின் எழுத்துத்துறை வரலாற்றை அவரது ஆரம்பகாலப் படைப்புகளிலிருந்து அண்மைக்கால அறுவடைகள் வரை விபரமாக எடுத்துரைத்தார்.
கருத்துரை வழங்கியோருக்கான பதிலுரையை நிகழ்வின் நாயகியான சந்திரா இரவீந்திரன் வழங்கினார். அவரது சகோதரர்கள் இருவர் (மொரிஸ், மயூரன்) ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியானவர்கள். தமையன் பிறேமராஜன் வற்றாப்பளை மகா வித்தியாலயத்தின் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். இராணுவ எறிகணைகளால் அவயவங்களை இழந்த ஒரு சாதாரண தமிழ்மகன். 1990இலிருந்து தீட்சண்யன் என்ற புனைபெயருடன் உலகெலாம் பரந்திருந்த விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களித்தவர். இயல்பாகவே கவிதையில் ஆற்றல் மிக்க இவர் புலிகளின் குரல் வானொலியில் 1990இலிருந்து கவிதைகளை அரங்கேற்றியிருந்தார். தீட்சண்யம் என்ற கவிதைத் தொகுப்பில் இவை பதிவுக்குள்ளாகியுள்ளன. (பார்க்க: தீட்சண்யம்: கவிதைகள். எஸ்.ரி.பிறேமராஜன் (மூலம்), சந்திரவதனா செல்வகுமாரன் (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: மனஓசை, ஆயயெழளயi எநசடயபஇ 74523 ளுஉhறயநடிளைஉh ர்யடடஇ 1வது பதிப்பு, மே 2009).
இத்தகையதொரு ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்புலத்தில் வளர்ந்த ஒருவராக, மாவீரர்களான தன் சகோதரர்களின் கண்களும், வாயுமாகச் செயற்படவிளையும் சந்திராவின் உணர்வுக் குவியல்களே நிலவுக்குத் தெரியும் நூலில் இடம்பெற்றுள்ள படைப்புகள் என்பது எனது கருத்தாகும். இவை சத்திய தரிசனமானவை. மேற்பூச்சற்றவை. யாவும் கற்பனை என்று முடித்து வைக்கும் நவரசக் கதைகள் அல்ல இவை. போராட்ட வாழ்வின் அனுபவங்களை, அழிவுகளை, ஏக்கங்களை மட்டுமே அவை மொழிகின்றன. இயல்பு வாழ்வோடு ஒட்டாத கற்பனையில் வார்க்கப்பட்ட பாத்திரங்கள் எதுவும் அவரது கதைகளில் இல்லை. ஈழத்துப் போர்க்கால இலக்கியங்களாகக் கச்சிதமாகப் பொருந்துபவை இவை. தனித்துவமான ஈழத்துப் படைப்பிலக்கியங்கள் இவை. இவற்றுக்கான வரைவிலக்கண வரம்புகளை எதிர்காலம் தீர்மானிக்கட்டும். பாரம்பரிய இலக்கணச் சட்டங்களுக்குள் இவர்களைச் சிறைப்படுத்துவது சரியல்ல.
நிகழ்வின் இறுதியாக செல்வன் ரிஷியன் இரவீந்திரகுமாரன் நன்றியுரையை வழங்கி நிகழ்வினை நிறைவுசெய்தார்.
மே 2009இன் மௌனத்தின் பின்னர் அதிர்ச்சியில் உறைந்திருந்த புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகம் சற்றே சுதாரித்துக்கொண்டுள்ள ஆண்டாக 2011இன் பின்னரைப்பகுதி விளங்கியது. ஆங்காங்கே இலக்கிய நிகழ்வுகள் மிக அமைதியான முறையில் ஏற்பாடுசெய்யப்பட்டு வந்தன. 2012இன் ஆரம்ப நிலைமை சற்று வழமைக்குத் திரும்புவதாக உணரமுடிகின்றது. நீறுபூத்த நெருப்பாக நிகழ்ந்த இந்நிகழ்வும் இலக்கியச் சுவைஞர்களுக்கு ஒரு நல்ல சந்திப்பாக அமைந்திருந்தது. லண்டனில் திக்கெட்டும் சிதறிவாழும் இலக்கியவாதிகள் பரஸ்பரம் சந்தித்து மகிழும் ஒரு நிகழ்வாக அமைந்தமையும் மனதுக்கு இதமாக இருந்தது.
(20.03.2012)
- அன்புத் தம்பி புனைப் பெயருக்கு
- முள்வெளி – அத்தியாயம் -3
- சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
- ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்
- தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்
- தங்கம்
- தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு
- கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
- கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்
- சுணக்கம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5
- ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா
- சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘
- பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி
- Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து
- சோபனம்
- குதிரை வீரன்
- கடைசித் திருத்தம்
- தூக்கணாங் குருவிகள்…!
- யானைமலை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18
- அரிமா விருதுகள் 2012
- விளையாட்டு
- புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
- மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !
- “சூ ழ ல்”
- வார்த்தைகள்
- ஓ… (TIN Oo) ………….!
- உங்களில் யார் அடுத்த பிரபுதேவா
- அதுவே… போதிமரம்….!
- சவக்குழி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு
- தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.
- பழமொழிகளில் கிழவனும் கிழவியும்
- “சமரசம் உலாவும்……..”
- எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7
- Ku.Cinnappa Bharathy Award 2011