சவக்குழி

This entry is part 33 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இருசக்கர வாகனத்தில்
செல்லும் போது
எதிர்ப்படும்
சவ ஊர்வலக் காட்சியைக்
காணும் போது
நாமும் ஒரு நாள்
என்று நினைக்கத் தவறுதில்லை
என்றோ ஒரு நாளுக்காக
எல்லா நாளும் துயரப்பட
என்னால் முடியாது
ஆனால் அந்த ஒரு நாள்
மிகச் சமீபமாய் இருந்தால்
விடைபெறுதல் எளிதல்ல
எப்போது மரணம் அழைத்தாலும்
செய்வதற்கு ஏதாவது வேலை
இருந்துகொண்டேதான் இருக்கும்
நமக்கு
என்றேனும் உயிர்த்தெழுவேனென்று
எனதுடலை பாதுகாக்காதீர்கள்
உயிர்த்தெழுதல் ஒரு முறையே
நிகழும்
தேவ காரியங்களுக்கு
நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பேன் என்பது
நிச்சயமற்ற ஒன்று.

காலநதி

நிறைவேறாத ஆசைகள்
குவியலாக
மனதில் நிரம்பிக் கிடந்தன
சவக்கிடங்கில்
உறங்கும் பிணமாக
என் வாழ்நாள் கழிந்தது
ஆயிரங்கால் மண்டபத்தில்
ஏறி விளையாடும்
அணிலாக நினைத்து
உலகம் என்னை கேலி செய்தது
முகவரியைத் தொலைத்து
நடுநிசியில் நடமாடிய என்னை
நாய்கள் துரத்தின
சித்ரவதைக் கூடமான
இவ்வுலகிலிருந்து
தப்பித்து ஓட நினைத்த நான்
தவறி விழுந்தேன்
நிரபராதியை
தூக்கு மேடையேற்றும்
நயவஞ்சக சமூகத்திடம்
சிக்கிக் கொண்டேன்
மாம்சத்தை விடுத்து
உதிரத்தை உறிஞ்சும்
சாத்தான் குஞ்சுகள்
சட்டம் இயற்றுகின்றன
இப்பூவுலகில்.

உயிர்த்தெழுதல்

ஒரு துர்சொப்பனத்தில்
கடவுள் கொல்லப்பட்டார்
சாத்தானுக்கு எந்த விதத்தில்
உதவியிருக்கக் கூடும் நான்
திடீரென்று விழித்த போது
வானம் கடவுளுக்காய்
கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது
இந்த ரகசியத்தை
சுமந்து கொண்டு
நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன்
வெளியே சொன்னால்
கடவுளற்ற உலகில்
வாழ ஆசைப்படாதவர்கள்
தற்கொலை செய்து கொள்ளக்கூடும்
மீண்டும் ஒரு நாள் கனவு
என்னை வசியப்படுத்தியது
சாத்தான் இவ்வுலகை
நிர்வகிக்க முடியாமல்
தவித்துக் கொண்டிருந்தான்
தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த
கடவுள் உயிர்த்தெழுந்தார்
சாத்தான் கடவுள் முகமூடியை
கழற்றி எறிந்தான்.

கடவுள் முகமூடி

அழைப்பு மணி ஒலித்தது
கதவைத் திறக்க மனமில்லாமல்
படுக்கையில் கிடந்தேன்
பிறரிடம் மன்னிப்பு
கேட்குமளவுக்கு
எந்தத் தவறும் இதுவரை
செய்ததில்லை
எதிர் நீச்சல் போடுபவர்கள்
கரை சேர முடியாது என
நான் இப்போது தான்
புரிந்து கொண்டேன்
சாக்கடையில் விழுந்த
மழைத்துளி சந்தன மணம்
கமழுமா
பசி மயக்கத்தில் விழுந்தவனுக்கு
ஆகாரம் தான் கடவுளல்லவா
பாவம் செய்யய பயப்படுபவர்களை
ஆண்டவன் சோதிப்பது ஏன்
இம்சை செய்து மகிழ்பவர்கள்
இறைவனின் குமாரரர்களாக
பூஜிக்கப்படுவது விநோதமல்லவா
அருளுக்கு பிரதிபலனாக
ஏதாவது எதிர்பார்த்தால்
அவன் கடவுளா
வாழ்விக்க உன்னிடம் வேண்டவில்லை
குப்பையாக வந்த உடம்பை
ஆராதனை செய்பவன்
பிரபஞ்சத் தலைவனா
மோகத்தை வெல்ல
முடியாதவனுக்கு பெயர்
தாயுமானவனா?

சொல்லப் போகும்

உடல் மட்டும்
படுக்கையில் கி்டக்கும்
மனம் எட்டு முறை
உலகைச் சுற்றி வந்திருக்கும்
மின்விசிறி சுழலும் வேகத்தில்
திரைச்சீலைகள் காற்றில் பறக்கும்
உறக்கமற்ற இரவுகள்
நரகத்தை ஞாபகப்படுத்தும்
சாளரத்தின் வழியே நிலா
படுக்கையறையை
குறும்புடன் எட்டிப் பார்க்கும்
அர்த்த ஜாமத்தில் யாரோ
கதவைத் தட்டுவது போன்ற பிரமை
திடுக்கிட வைக்கும்
பழிபாவத்துக்கு அஞ்சுபவன்
உறக்கத்தை வரவழைக்க
தூக்க மாத்திரைகயை நாட
வேண்டியிருக்கும்
பொய்யும், புரட்டும்
நிறைந்த உலகில்
கடவுள் கல்லாகாமல்
என்ன செய்வார்
மரணத்தை அச்சமின்றி
எதிர்கொள்ள
தனிமையில் இருந்து
பழக வேண்டும்
வாழ்க்கை நம்மை
எங்கு கொண்டு போய்
நிறுத்தும் என்று
யாருக்கும் தெரியாது.

நிராகரிப்பின் வலி

பலூனில்
உனது சுவாசக்காற்றை
பிடித்து வைத்திருக்கிறேன்
உனது காலடி மண்ணெடுத்து
பத்திரப்படுத்தி இருக்கிறேன்
நீ பயணம் செய்த
பேருந்து பயணச் சீட்டை
பாதுகாத்து வைத்திருக்கிறேன்
நான்கு வருட காலமாக
நிழல் போல உன்னை
பின்தொடர்ந்து வந்திருக்கிறேன்
நீ சூடின பூக்களை
காதலின் சின்னமாகக் கருதி
சேகரித்திருக்கிறேன்
அலமாரியை திறக்கும் போதெல்லாம்
கண்ணில் படுகிறது
உனது திருமண அழைப்பிதழ்
உன்னால் நிராகரிக்கப்பட்டதற்கான வலி
என் தோளில் சிலுவையென கனக்கிறது.

Series Navigationஅதுவே… போதிமரம்….!ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்
author

ப.மதியழகன்

Similar Posts

Comments

 1. Avatar
  சோமா says:

  எப்போது மரணம் அழைத்தாலும் செய்வதற்கு ஏதாவது வேலை
  இருந்துகொண்டேதான் இருக்கும் நமக்கு…..
  உதிரத்தை உறிஞ்சும் சாத்தான் குஞ்சுகள் சட்டம் இயற்றுகின்றன இப்பூவுலகில்…………
  சாத்தான் கடவுள் முகமூடியை கழற்றி எறிந்தான்….
  உன்னால் நிராகரிக்கப்பட்டதற்கான வலி என் தோளில் சிலுவையென கனக்கிறது……

  ஆழமான கருத்துகள்…அருமையான வரிகள்…சிக்கென்று இருக்கும் இளம் பெண்ணொருத்திக்கு பட்டுச்சேலை உடுத்துவது போல…மதியழகன் கவிதைகள்…என்றுமே தனி இரசம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *