சுணக்கம்

This entry is part 10 of 41 in the series 8 ஏப்ரல் 2012

வழக்கம் போல இன்றைக்கும் நான் ஆபீஸுக்கு லேட். என்ன பண்றது?.எனக்கு வாய்ச்ச மகராசி எட்டு மணிக்குத்தான் டிபன் தருவாள்.எட்டரை மணிக்குத்தான் லஞ்ச் பாக்ஸ் ரெடியாகும்.அதுக்கு மேல இந்தக் கூட்ட நெரிசலில் பஸ் பிடிக்கணும்.எங்கே?,கண்ணதாசன் நகரிலிருந்து வேளச்சேரி போவணும்.
ஆபீஸ் அமைதியாக இருந்தது.டைரக்டர் ஏற்கனவே வந்துவிட்டிருக்கிறார்,அறையில் ஃபேன் ஓடிக்கிட்டிருக்கு.
“ வாய்யா! எவர் லேட் ஏகாம்பரம்.”—இது ஏ4 ன் நக்கல்.
“டிராஃபிக்ஜாம்யா.”
“இது வழக்கமா சொல்றது. எதையாவது புதுசா சொல்லப்பா.நாங்க 8-30க்கே ஆஜர் தெரியுமில்லே?.”
“ அதிசயம்தான் சரீ அதனால என்ன நடந்திடும்?.,சுஜாதாவின் ’’பிரிவோம் சந்திப்போம்’ இரண்டாம் பாகத்தை முடிச்சிட்டிருப்ப. அதான?.”
“எஸ்! என்னா நடைய்யா.நாவலை விஷுவலைஸ் பண்றதில இவரை அடிச்சிக்க ஆளே கிடையாதுப்பா.”
“ஹும்! ”அவ்வப்போது அவன் பார்வை அவளுடைய மார்பின் மீது அலைந்தது”-திருப்பித் திருப்பி இதான?.நீ சுந்தரராமசாமியினுடையதை படிக்கணும்,ஜே.கே.,தி.ஜா.ரா.,லா.ச.ரா.,இவங்களுடையதைப் படிக்கணும். எழுத்தே ஒரு யாகம் மாதிரி,படிக்கும்போதே நாமளும் அதில கரைஞ்சிட்டமாதிரி,தோணும். எழுத்துக்களை முத்து போல என்ன அழகா கோர்க்கிறாங்கய்யா.”
“த்தூ! நீ ஒரு வேஸ்ட்டு. இலக்கியம் பேசி மறை கழண்டவன்.’ ஒரு சிறுகதையை முழுசா படிக்க முடியல, தூக்கம் வந்திடுது..எழுத்தில சுவாரஸ்யம் வெக்கத் தெரியணும்.”
“ஐயா சாமி! இலக்கியம் பரத நாட்டியம் மாதிரி.அதை ரசிக்க ஒரு ஞானம் வேணும், உனக்குப் புரியாது. விட்ரு.”
“உன்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் இது ஒரு மேனியா. புரியறதெல்லாம் குப்பைகள்,புரியாதவைகள் இலக்கியங்கள். சுஜாதா சாருடையது எவ்வளவு கதைகள்?,அறிவியல் கட்டுரைகள், கம்ப்யூட்டர் பத்தின புக் என்றால் கூட எடுத்தால் கீழே வைக்க முடியாது..அவர் சொன்ன எத்தனையோ விஷயங்கள்ல மாரு மட்டுந்தான் உன் புத்தியில இருக்கு. அதுக்கு அவரு என்ன பண்ணுவாரு?.”
இங்கே இதுபோன்ற இலக்கிய சர்ச்சைகள் அடிக்கடி நடக்கும் சில .சமயங்களில் சண்டையில் முடியறதும் உண்டு. ஏ4 ஐ நக்கல் அடித்து துரத்திவிட்டு என் சீட்டில் உட்கார்ந்தேன்.முந்தா நாள் கையெழுத்தான ஃபைல்களை ஒரு முறை செக் பண்ணி டெஸ்பேட்ச் செக்‌ஷனுக்கு அனுப்பினேன்.சே! ஏ.பி.சி ஸ்டேட்மெண்டை இன்னும் முடிக்கல. இன்னைக்காவது முடிக்கப் பார்க்கணும். .ஏ4 வந்து நின்றான். டீ டைம்.வெளியே கிளம்ப அக்கவுண்ட் செக்‌ஷன் பக்கம் கூச்சல் கேட்டது. வரதனிடம் ஒரு வாலிபன் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.முகத்தில் பதினைந்து நாள் தாடிமுள்.
”மாட்னாண்டா வரதன்.”—ஏ5 குஷியாய் சொன்னான். வரதன் மாட்டணும் என்பது இங்கே எங்க எல்லாருடைய எதிர்பார்ப்பு.,ஆசை. லஞ்சம் வாங்குவதே உத்தியோக லட்சணம் என்றிருப்பவன். அதுவும் இந்த ஆபீஸில் வேலை செய்பவர்களிடமும் கூட. சமயம் பார்த்து மற்றவர்களைப் பற்றி அதிகாரியிடம் போட்டுக் கொடுப்பது, அவனுடைய இன்னொரு பரிமாணம். ’வத்தி வரதன்’ இதுதான் அவனுடைய நிக்நேம். வரதன் ஒரு நிமிடம் இளைஞனை ஏற இறங்கப் பார்த்தான்.
“தம்பீ! இப்படி உட்காரு.என்னா கோவம்?.நீ சொல்ற மாதிரி ஒரு அரசு அலுவலர் பணிகாலத்தில செத்துப் போயிட்டால் எண்ணி 120 நாளுக்குள்ள கருணை அடிப்படையில அவருடைய வாரிசுக்கு வேலை தரணும். சட்டம் ஜீ.ஓ.நெம்பர்-480 அப்பிடித்தான் சொல்லுது.ஆனா சாராயம் காய்ச்சக் கூடாதுன்னு கூடத்தான் சட்டம் சொல்லுது, காச்சல?.ப்ராஸ்டிடியூஷன் கூடத்தான் தடை செய்யப் பட்டிருக்கு. . நடக்கல?. ராத்திரி பத்து மணிக்கு மேல பீச் பக்கம் போய் பாரு, வுடமாட்டாளுக. ஜனநாயக நாட்ல சட்டம் பேசாதப்பா. நடக்கிறது கூட நடக்காது.”
வரதன் பேசிக்கொண்டே தாடி இளைஞனை கேண்டீன் பக்கம் தள்ளிக் கொண்டுப் போனான். எங்களுக்கு புஸ்ஸென்று போய்விட்டது. உன் ஃபைலை செக்ரட்டரியேட்டிலிருந்து தள்ளிக்கிட்டு வரணும் என்று எப்படியும் இரண்டாயிரத்தைக் கறந்திடுவான். அவனும் கொடுத்துவிட்டு நம்பிக்கையுடன் போய் தாடியை வழிப்பான்.
எங்களுடையது எண்ணை வித்துத் துறையின் இயக்குனர் அலுவலகம்.நிர்வாகப் பிரிவில் நாங்கள் மொத்தம் இருபத்தெட்டுப் பேர். ப்ளஸ் மேலாளர், காளியண்ணன். இதில் லஞ்சப் பேர்வழிகளாய் வரதனும்,சுந்தரமும்.. மிச்சத்தில் நாங்கள் இருபது பேர் இலக்கியம் பேசும், கையூட்டு வாங்காத நேர்மையான அணி., மற்றவர்கள் வந்தான் போனான் என்று சீட்டைத் தேய்க்கும் ரகம்.
இந்த டைரக்டர் ஜாய்ன் பண்ணதிலிருந்துதான் பிரச்சினைகள் ஆரம்பித்தன. .மனுசன் டெரர்.யாரையும் கிட்ட நெருங்க விட்றதில்லை. நேர்க் கோட்டில் நடக்கிறேன் பேர்வழி என்று இதுவரை ஐந்தாறு பேரை சஸ்பெண்ட் பண்ணியிருக்கார்.,இரண்டு கிடங்கு பொறுப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தப் பட்டிருக்கு.இன்ஸ்பெக்‌ஷன் போற இடமெல்லாம் அதிரடியாய் ட்ரான்ஸ்ஃபர், மெமோ, வார்னிங், என்று அலற அடிக்கிறார். இவருடைய கரியரில் எப்பவும் இவர் இப்படித்தான், போகிற இடங்களில் எல்லாம் ருத்ர தாண்டவம்தான் .ஆனால் ஒரு விஷயம் மட்டும் எங்களுக்கெல்லாம் புதிராக இருக்கு. வரதனையும்,, சுந்தரத்தையும் மட்டும் இவர் எதுவும் கேட்டுக்கிறதேயில்லை. அவங்க மட்டும் இவருடைய பெட் அனிமல்களாக ஆனதெப்படி?. வாங்கறதில ஒரு கணிசமான ஷேர் அவருக்கும் போறதா அரசல் புரசலா ஒரு செய்தி உண்டு.அப்படியும் இருக்கலாமோ?..
” லாமோ? என்னய்யா லாம்தான். ஒரு அதிகாரி நேர்மை நேர்மையின்னு ஓவரா ஃபிலிம் காட்றான்னா உள்ள உதார் பார்ட்டின்னு அர்த்தம்ய்யா.. எத்தினி பார்த்திருக்கோம்?.” என்றது ஏ5
“ எங்க கழனியில விளைஞ்சது மேடம்னு மாசம் ஒரு மூட்டை பொன்னி அரிசியைக் கொண்டு போய் ஐயா வீட்ல இறக்கி, அம்மாவை கூல் பண்ணிட்றானாமே அதான்.. அம்மா எவ்வழி, அய்யன் அவ்வழி.”—என்றார் ஏ1 சீதாராமன்.
“ஆமாமா. வரதன் இதில சூரன். போன வருசம் தங்கராஜ் சார் இருந்தப்ப என்ன பண்ணான் தெரியுமா?.ஒரு பை நிறைய பழங்களை அவர் வீட்டு அம்மாகிட்ட கொடுத்துட்டு, எங்க தோட்டத்தில வெளைஞ்சது மேடம்னு வழிஞ்சிருக்கான்… என்ன பழம் தெரியுமா?. சிம்லா ஆப்பிள்.”—கொல்லென்று சிரித்துவிட்டோம்..
“காஞ்சிபுரத்தில் சிம்லா ஆப்பிள் காய்க்குதுன்னு அந்த அம்மா எப்படி நம்புச்சோ தெரியல.”
“ அதில்லை விசயம் குடுக்கிறதுக்கும் வாங்கறதுக்கும் ரெண்டு பேருக்கும் காரணம்னு ஒண்ணு வேணும், அவ்வளவுதான்.”
டீ டைம் முடிஞ்சி நாங்கள் செக்‌ஷனுக்குள் நுழையும்போது மேலாளர் காளியண்ணன் அவசர அவசரமாக ஆட்டோவில் வந்திறங்கினார். ஏ5 ரகசியமாக என்னிடம்
“பார்த்துக்கிட்டேயிரு மனுசன் இப்ப தாம் தூம்னு குதிப்பார். எவனாவது மாட்டுவான் பாரு. பி.ஆர்., டி.ஆர். லாம் பறக்கும். அப்பத்தான் தான் லேட்டாய் வந்தது அடி பட்டுப் போகும்..”
டைரக்டரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. போனேன். கடுகடுவென்றிருந்தார்.
“பில்டிங் ஃபைல் ரெடியாயிடுச்சா இல்லையா?”.
“நாளைக்கு ரெடியாயிடும் சார்.”
“யூஸ்லெஸ்! டி.ஆர் ஐப் பாருய்யா. ஃபைல் உன் டேபிளுக்கு அனுப்பி ஒரு மாசமாகுது.. இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்ல?.ஒரு மாசமா கிழிக்கிறதுக்கு அதில என்னய்யா இருக்கு?.நாளைக்குள்ள செக்ரட்டரியேட் போவலேன்னா ஃபண்டு சரண்டர் ஆயிடும். ஒவ்வொண்ணையும் நான் பார்த்து சொல்லணும் உனக்கு இல்லே?.”
மவுனமாக நின்றேன்.
“வரதன் கிட்டயும், சுந்தரம் கி!ட்டயும் போய் வேலையை கத்துக்குங்க”
எனக்குப் பொறுக்க வில்லை.யார் போய், யார் கிட்ட கத்துக்கிறது?.எப்படி எப்படி லஞ்சம் வாங்கறது என்றா?.
“சார்! நான் ஒண்ணும் சும்மா இல்ல. ஒரு நாளைக்கு என் டேபிளுக்கு மட்டும் கொறைஞ்சது இருவது லெட்டர் வருது. எவ்வளவுதான் செய்றது?. நானும் மனுசன் தானே.?.உங்களுக்கு ஃப்ராடுங்கள்லாம் நல்லவங்களவும், நாங்கள்லாம் கெட்டவங்களாவும் தெரியுது.”
டைரக்டர் விலுக்கென்று எழுந்துக் கொண்டார்.
“என்னய்யா அவங்களைப் பத்தி கோள் சொல்லப் போறியா? உங்களுக்கெல்லாம் இதே பொழப்பா போச்சு. திருந்துங்கய்யா. போங்க. ஆமா தினசரி உனக்கு வர்ற இருவது லெட்டர்ல, எத்தினி நடவடிக்கை முடிஞ்சி உன் டேபிளை விட்டுப் போவுதுன்னு சொல்லுங்களேன்.. உங்க பி.ஆர். ஐ செக் பண்ணலாமா?.”.
“சார்! என் சர்வீஸ்ல இதுவரைக்கும் ஒத்தை ரூபா கூட நான் லஞ்சம்னு வாங்கியதில்லை.. என் நேர்மையைப் பாராட்டலேன்னாலும் பரவாயில்லை, அவமானப் படுத்தாதீங்க.. என்னால முடியறதைத்தான் செய்யமுடியும்..”
பொரிந்து விட்டேன். டைரக்டர் ஆழமாகப் பார்த்தார்..
“ஓகே ஏகாம்பரம்! நீங்க போகலாம்.”
அவருடைய அமைதி, அழுத்தமான பார்வை, உள்ளே லேசாக பயம் வந்தது. இந்த பன்னிரெண்டு வருஷ சர்வீஸ்ல ஒரு திட்டு, ஒரு மெமோ, வாங்கியதில்லை. வரதன் கிட்டே கத்துக்கணுமாமே.எதிர் வரிசையில் ஏ1 ம்,ஏ3 ம், மும்முரமாக ஃபைல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆச்சர்யப்பட்ட நொடியில் ஃபைலுக்குள்ளே குமுதமும், விகடனும் ஒளிந்திருப்பது தெரிஞ்சிது.
பில்டிங் ஃபைலை எடுத்து எழுத ஆரம்பித்தேன். இன்னைக்குள்ள முடிச்சி அவர் டேபிள்ல விசிறியடிக்கணும்.. நிலம் ஆர்ஜிதம் பண்ணிய டாக்குமெண்ட்ஸ்,கலெக்டர் ப்ரொசீடிங்ஸ், கட்டட வரைபடம், எஸ்டிமேட், துறையின் செக்ரட்டரிக்கு ஒரு கடிதம், ஆபீசருக்கு சிறு குறிப்பு, சே! இந்த பதினாலு வருஷ வில்லங்க சான்று எங்க போச்சு?. இங்கதான வெச்சேன். ஒரு ஷெல்ஃப் ஃபுல்லா ஃபைலுங்க கிடக்கு இதில எங்கன்னு தேட்றது?. .உஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.. .ஏ4 ம்,ஏ5 ம் வந்து இழுத்தார்கள்.லஞ்ச் டைம். ரெஸ்ட் ரூமுக்குள் போனதும் ஆளாளுக்கு என் கையைப் பற்றி குலுக்கினார்கள்.
“என்ன ஏகாம்பரம் சார்! டைரக்டரை புடிச்சி காச்சியெடுத்திட்டீங்களாமே. கங்கிராஜுலேஷன்ஸ். எல்லோரும் என்னை சூழ்ந்துக் கொள்ள, கதாயகன் ரேஞ்சுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், உள்ளே ஒரு பக்கம் அலையடிக்கிறது.. மனுஷன் என்ன பண்ணுவானோ?.
மறுநாள் ஆபீஸுக்குள் நுழையும் போதே ரீயாக்‌ஷன் தெரிஞ்சிட்டது. ஆர்.சி. தபாலை நீட்டினார். கடலூர் விதைப் பண்ணைக்கு மாற்றப் பட்டிருந்தேன். நிமிஷத்தில் படபடப்பாகி தலை சுற்றியது. என்ன செய்யப் போகிறேன்?. எஸ்.பி.ஓ.ஏ. வில் படிக்கும் பிள்ளைகள்,ரெவின்யூவில் கிளார்க் ஆக இருக்கும் சங்கரி, யாரையும் நகர்த்த முடியாது. ஏ3 நாதமுனி வந்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார். நேற்று கை குலுக்கியவர்களேல்லாம் சாரி சொல்லிவிட்டு அவசர அவசரமாக விலகினார்கள். சர்க்கரை நோயாளியான நான் தனியனாய் கடலூரில் எப்படி காலந்தள்ளுவேன்?. சே! கொஞ்சம் தாழ்ந்துப் போயிருக்கணும், என் கோபம்தான் எனக்கு சத்ரு. காளியண்ணன் என்னை இழுத்துச் சென்றார்.
“ நமக்கெதுக்குய்யா வீராப்பு?. உமக்கு வாய் மீசரம் அதான் இந்த நெலமை.இதோ பாரும். போய் ஜாய்ன் பண்ணிட்டீயோ, அவ்வளவு லேசில இங்க வர முடியாது. குடும்பம் கெட்டுப் போயிரும். ஒரு சீனியரா சொல்றேன், சாயங்காலமாய் டைரக்டர் அறைக்குப் போயி பேசாம…பேசாம..படக்குன்னு அவர் கால்ல விழுந்துடு, தப்பில்ல.”
அடச்சீ! என்ன மனுஷன் இவரு?.எதுவும் பதில் சொல்லாமல் என் சீட்டில் வந்து விழுந்தேன்..தலைவலி இடித்தது.. ஏ4 தேடிக் கொண்டு வந்தான்.
“ என்னா ஏகாம்பரம் சார்! பயப்பட்றியா?.”
“பின்னே?.”
“டோ ண்ட் ஒர்ரி. இப்பத்தான் லோகு அண்ணனைப் பார்த்துட்டு வர்றேன். நாளைக்கு நாம தலைவரைப் பார்க்கிறோம். என்ன?, ஒரு கை பார்த்திட்றதே சரி. அப்பிடியென்ன சொல்லிட்டேன்னு இந்த ட்ரான்ஸ்ஃபர்?. கோர்ட்டுக்குப் போயி அந்தாளை கூண்டில ஏத்திடலாம்னு லோகு சொன்னார்பா.”
காளியண்ணன் குறுக்கிட்டார்.
“இருங்கப்பா.நிதானமா யோசிச்சி செய்யலாம். மாட்டிக்கக் கூடாது.”
“என்ன மாட்டிக்கிறது? வாழ்க்கையில .நேர்மையா வாழற இந்த மனுசனை அந்தாளு பழி வாங்கிட்டாரு சார். மொதல்ல லஞ்சப் பசங்களோட அவருக்கு இருக்கிற தொடர்பை ஆதாரத்தோட அம்பலப் படுத்தணும்.”
“ என்ன ஆதாரம் நம்மகிட்ட இருக்கு?.அவுக்கப் போயி முடி போட்டுக்கக் கூடாது. நாம தொடுக்கிற அம்பு யார் மேல தெரியுதா?. டைரக்டர் மேல. அதை மனசில வெச்சி ஜாக்கிறதையா இறங்கணும். இன்னொரு விஷயம் காலையிலதான் கேள்விப் பட்டேன். வரதனும், சுந்தரமும், டைரக்டரோட சாதியாமே/.”
”அப்படி போடு அரிவாளை.’
இந்த வார்த்தையைக் கேட்டதும் வரதனின் சாதியைச் சேர்ந்த சிலரின் முகங்கள் பிரகாசம் காட்டின. ஒருத்தருக்கொருத்தர் பார்வையை பரிமாறிக் கொண்டனர். சாதியை வெச்சி அவரிடம் ஒட்டிக்கவும், ஆபீஸில் அவருக்காக ஒற்றுவேலை செய்யவும், அவர்கள் இந்த நொடியே தயார். காளியண்ணன் குறுக்கிட்டார்.
“இதோ பாருங்கப்பா!. என்கொயரிக்கு அப்பீல் பண்றது, தலைவர்களை வெச்சி மோதிப் பார்க்கிறது, கோர்ட்டுக்குப் போறது, இதெல்லாம் வேண்டாம். விரோதம்தான் வளரும். கோர்ட்ல நாளைக்கே கூப்பிட்டு தீர்ப்பு சொல்லிட மாட்டான். வருஷக் கணக்கில இழுக்கும். ஒரு கட்டத்தில இப்ப ஆவேசமா பேசற நாமெல்லாம் ஏகாம்பரத்தை அம்போன்னு விட்டுட்டு ஒதுங்கிக்கிற நிலை வரும். அதனால. நாமெல்லாம் சேர்ந்துப் போயி டைரக்டரையே கேட்போம். நேர்மைக்கு இதுதான் பரிசான்னு சொல்லட்டுமே.”
. அன்று சாயங்காலம் டைரக்டர் கிளம்புகிற நேரம் கும்பலாய் உள்ளே புகுந்தோம். சங்கத்திலேயிருந்தும் கொஞ்சம் பேர் வந்திருந்தனர்.
“என்னய்யா குரூப்பா வந்திருக்கீங்க?. டைம் ஆயிடுச்சி. எதை சொல்றதானாலும் சுருக்கமா சொல்லுங்க. ஒருத்தர் மட்டும் பேசட்டும்.”
“காளியண்ணன் பவ்வியமாக ஆரம்பித்தார்.
“ ஏகாம்பரம் சாரை கடலூருக்கு மாத்தியிருக்கீங்க..”
“ ஆமா இங்க ரெண்டு போஸ்ட்டு எக்ஸஸ்ய்யா. என்ன பண்ணச் சொல்ற?.”
“அதுக்கு இருக்கிறதில ஜூனியர்மோஸ்ட் யாரையாவதைத் தானே நீங்க மாத்தியிருக்கணும்?.—ஏ4,எதிர்த்துக் கேட்டான்.
“யாரை,எங்கே,எப்போ மாத்தணுன்றதை நாந்தான் முடிவு பண்ணணும், புரிஞ்சிதா?.”
. “சார்! என் ஒய்ஃப் ரெவின்யூவில கிளார்க்காக ஒர்க் பண்றாங்க, பிள்ளைங்க எஸ்.பி.ஓ.ஏ. வில படிக்குதுங்க. ப்ளீஸ்!.”—ஏகாம்பரம் வேண்டினார். டைரக்டர் ஏகாம்பரம் பக்கமே திரும்ப வில்லை.
“காளியண்ணன்! இதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது. எப்பவும் அடுப்படியிலேயே வேலை கிடைக்குமா என்ன?.”
சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.ஏ4 கோபத்துடன் நகர்ந்து அவரை வழிமறித்தான். கோபத்தில் எதையும் யோசிச்சிப் பார்க்காமல் செய்கிறவன் அவன்.
“என்ன சார் உங்க நிர்வாகம்? ஏகாம்பரம் சார் நேர்மையான மனுசன். அவர் ஒரு வார்த்தை சொன்னதுக்கா இந்த ட்ரான்ஸ்ஃபர்?. வெளியே ரொம்ப நேர்மை மாதிரி காட்டிக்கிட்டு உள்ளே லஞ்சப் பயல்களோடு கூட்டு வெச்சிக்கிட்டு, வசூல்ல ஷேர் வாங்கிக்கிட்டு, இதான சார் நீங்க?..”
“ ஏ4! என்ன தைரியம்ய்யா உனக்கு? திஸ் ஈஸ் தி லிமிட். .கெட் அவுட்..ஆல் ஆஃப் யூ கெட் அவுட்!.”—டைரக்டர் கத்தினார்.. அங்கிருந்த எல்லோரும் டைரக்டரை எதிர்த்து கோஷம் போட ஆரம்பித்தனர். ஏ4 பயமின்றி பொரிந்தான்.
“என்ன சார்! என்னை சஸ்பெண்ட் பண்ணப் போறீங்களா?, இல்ல தண்ணியில்லாத காட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணப் போறீங்களா?. நான் பேச்சிலர். எங்க போ ட்டாலும் எனக்கு ஓகே. நேர்மையா வேலை செய்யறவங்களைத்தான் உங்களுக்குப் பிடிக்காதே. செய்யுங்க.”
டைரக்டர் சிறிது நேரம் அமைதியாக நின்றார். வழி விடாமல் வாயிற்படியை அடைத்தபடி கூட்டம் ஒழிக கோஷங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறது. கோபத்துடன் கையிலிருந்த ப்ரீஃப் கேஸை வீசியடித்துவிட்டு உட்கார்ந்தார்.
“என்னய்யா…நேர்மை..,நேர்மைன்னு சொல்லிக்கிட்டு துள்றீங்க?.. நான் சார்ஜ் எடுத்து இந்த எட்டு மாசத்தில, உங்களைப் பத்தியெல்லாம் நல்லா ஸ்டடி பண்ணாமலா இருக்கேன்?… நாம எத்தனை மணிக்கு ஆபீஸ் வர்றோம்?, வந்து என்ன செய்றோம்?., எட்டு மணி நேர டியூட்டியில எத்தனை மணி நேரம் சின்ஸியரா வேலை பாக்கறோம்?, அப்படீன்னு உங்க மனசாட்சிகளை நீங்களே ஒரு தடவை கேட்டுப் பார்த்துட்டு, அப்புறம் நேர்மை,நியாயத்தைப் பத்தி பேசுங்க.. என் சர்வீஸ்லயே ஒத்தை ரூபா கூட லஞ்சம் வாங்கியதில்லைன்னு ஜம்பம் பேசிட்டு, வேலை செய்யாம ஊர்வம்பு பேசிக்கிட்டு, டீக்கடையில காலத்தைப் போக்கிட்டு, எல்லா வீக்லி களையும் இங்கியே வெச்சிப் படிச்சிட்டு, சுஜாதா உசத்தியா?, சுந்தர ராமசாமி உசத்தியா?ன்னு பட்டிமன்றம் நடத்திக்கிட்டு இருக்கிறதுக்குப் பேரு நேர்மையில்லைய்யா வேலை செய்யணும்..”
“சார்!.”—ஏ4 கோபமாய் குறுக்கிட்டான்
“வெய்ட்! நான் என் தரப்பை முடிச்சிட்றேன். நாற்பது மூட்டை மணிலா வித்துக்கள். நாள் கடந்துப் போயி, முளைக்குந்திறனை இழந்து விட்டன. நேரத்தோட பார்த்து வேற மாவட்டத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்கணும். அந்த நேரம் சேலத்தில இந்த ரக பயறுக்கு ஏக டிமாண்ட். ஆனால் செய்யல. என்ன பண்ணீங்க? தரமானதுன்னு மறு முத்திரை குத்தி இருபத்தஞ்சி மூட்டைகளை அப்பாவி விவசாயிகளின் தலையில கட்டிட்டீங்க. பாவம் அவன் அதைக் கொண்டுபோய் கழனியில கொட்டிட்டு, காத்திருந்து காத்திருந்து, ஒண்ணுமே மொளைக்காம மண்ணாய்ப் போக, இது ஊழ்வினையோ, தெய்வக் குத்தமோ? என்று கலங்கி, வாயில்லா ஜீவனை பலி குடுத்து, குலதெய்வத்துக்குப் படையல் போட்டு,….இதெல்லாம் யாரால?.கிடங்கு பொறுப்பாளர், களப் பணியாளர்களின் பொறுப்பற்றத்தனம். கேட்டதற்கு பதில் சொல்லாமல் எதிர்வாதம் பண்ணால், அவங்களை சஸ்பெண்ட் பண்ணாமல் போனஸ் தரட்டுமா?.”
“வாணாம். போனஸ்ஸை வரதனுக்கும், சுந்தரத்துக்கும் குடுங்க. உண்மை ஊழியர்களாச்சே.”—அசரீரி. சிரிப்பொலி கிளம்பியது. கும்பலை ஒருதடவை தீர்க்கமாய் பார்த்தார்.
“ உண்மையிலே நீங்கள்லாம் லஞ்சத்துக்கு எதிரானவங்கதானா? இல்லே வரதனையும், சுந்தரத்தையும் பார்த்து பொறாமைப் பட்ற ரகமான்னு தெரியல. மொதல்ல அவங்களை மாதிரி வேலை செய்ய கத்துக்கோங்க.. உங்களுக்கே நல்லாத் தெரியும். நம்ம ஆபீஸிலேயே அதிகமான வேலைபளு உள்ள சீட்டு அக்கவுண்ட் செக்‌ஷன் தான்.. இருந்தும் அவங்க ஒரு ஃபைல் பெண்டிங் வைக்கல.. சம்பளக் கமிஷன் பில்லை,சுத்துப்பட்ட எல்லா ஆபீஸ்களிலும் இப்பத்தான் தயாரிக்கவே ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா நீங்கள்லாம் போன வாரமே கேஷ் வாங்கிட்டீங்க.”
“இதில என்ன சார் அதிசயம் இருக்கு?.. மாமூல் வாங்கறாங்க செய்யறாங்க..”—அசரீரி.அங்கங்கே சிரிப்பொலி கிளம்பியது.
“இதையே சொல்லிக்கிட்டிருக்காதீங்கய்யா. அதுக்காக அவங்களுக்கு நீங்க ஒண்ணும் எந்த விதத்திலும் உசத்தி இல்லை. அவங்க வாங்கறது லஞ்சம்னா, நீங்க வேலை செய்யாம வாங்கற உங்க சம்பளத்த என்னான்னு சொல்வீங்களாம்?.. ஒரு வகையில் இதுவும் லஞ்சம்தான். அதுக்காக லஞ்சத்தை நான் நியாயப் படுத்தல. அங்கே வேலையாவது ஒழுங்கா நடக்குதேன்னு சகிச்சிக்கிட்டிருக்கேன். இப்படி சொல்ல எனக்கு வெட்கமாத்தான் இருக்கு. என்ன செய்ய?. நீங்கள்லாம் ஒழுங்கா இருந்தா நான் ஏன் சகிக்கிறேன், சொல்லுங்க.”
எல்லோரும் மவுனமாக நின்றோம்..டைரக்டர் ஒரு நிமிடம் எங்களை ஊடுருவிப் பார்த்தார்.
“இங்க சட்டப்படி கிடைக்க வேண்டியவைகளுக்கே லஞ்சம் தரவேண்டியிருக்கு.. ஏன்? ஃபைல்கள் நகர்றதில்லை. உங்க மாதிரி ஆளுங்களுடைய சோபேறித்தனம், அசட்டைத்தனம், சுணக்கம். தாமதம்தான் லஞ்சமாகிறது. இல்லையா?. ஸோ லஞ்சத்தை ஒழிக்கிறதுக்கு முதல் படி வேலையில் சுணக்கத்தை ஒழிக்கிறதுதான். அதுக்கு நான் தான் நடவடிக்கை எடுத்தாவணும் இங்கே போதனைகளால எதையும் மாத்த முடியாது…”
” எங்க தவறுகளை திருத்திக்கிறோம் சார்.” –- எல்லோரும் கோரஸாக சொன்னார்கள்.
“அவர் இவர்கள் பேச்சை எந்த அளவு நம்பலாம் என்று ஒரு நொடி ஆழம் பார்த்துவிட்டு,
“தட்ஸ் குட்! ஓகே! இப்ப வரதனையும் சுந்தரத்தையும் வருவாய் இல்லாத பட்ஜெட் செக்‌ஷனுக்கு மாத்திட்றேன். அப்ப நம்ம ஆபீஸைப் பொறுத்த மட்டில் லஞ்சம் ஒழிஞ்சிடும் தானே?.எப்படி?. நீங்க எல்லாரும் லஞ்சத்துக்கு எதிரானவங்கதானே? .வாங்கமாட்டீங்க தானே?. ரொம்ப சந்தோஷம்..”
அவர் எங்கே வருகிறார் என்று எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது..
“இப்ப அந்த அக்கவுண்ட் செக்‌ஷன்ல யாரு ஜாய்ன் பண்ணப் போறது? யார் வர்றீங்க?., கமான்! வாங்க. இன்னிக்கே சார்ஜ் எடுத்துக்குங்க.. பட்..அவங்களை மாதிரி பெண்டிங் வைக்காம சின்ஸியரா ஒர்க் பண்ணணும்.சரியா?, விடமாட்டேன். சரி யார் வர்றது?..”
கும்பல் பம்மியது.. ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டிருந்தோமே யொழிய, ஒருத்தரும் முன் வரவில்லை. இது எதிர்பாராத ஏவுகணைத் தாக்குதல். நான் கையைத் தூக்க முயற்சித்த போது ஏ5 அடக்கினான்.
“ஒரு பைசாவுக்கு புண்ணியமில்லாம லீவு நாள்ல கூட போய் மாங்கு மாங்குன்னு வேலை செய்யணும்.. அந்த சீட்ல அப்பவும் மாளாது. ஆளாளுக்கு கேள்வி கேப்பான், பெட்டிஷன் போடுவான். போய் மாட்டிக்காத அடங்கு.”
ஏ4 அங்கிருந்தே போகாதே என்று எனக்கு சைகை காட்டினான்.. டைரக்டர் எங்களைப் பற்றி புரிந்தவராய் நமட்டு சிரிப்பு சிரிக்க, எனக்கு உள்ளே கூசியது. .

——————————————————————————————————-

Series Navigationகவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5
author

செய்யாறு தி.தா.நாராயணன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    ushadeepan says:

    ஒரு அதிகாரி தன்னுடைய தவறை மறைப்பதற்காக, அலுவலகத்தின் பணிச் சுணக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறார். ஆனால் நியாயமான முறையில் அதை எதிர்கொள்ளவேண்டுமென்றால் நாம் நம் கடமையில் சரியாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பணிச்சுமையைப் பற்றிப் பேச முடியும். அதிகாரிக்கும் தன் தவறை இக் கேள்விகள் நெருங்கி விடுமோ என்கிற அச்சம் இருக்கும். இவற்றை முறையே எதிர்நோக்குவதற்குத்தான் சங்கங்கள் இருக்கின்றன. முழுக்க முழுக்க சம்பாஷனை வழி இந்த விஷயங்கள் கதையில் சொல்லப்பட்டிருப்பது ஸ்வாரஸ்யம். விறுவிறுப்பு. உஷாதீபன்

  2. Avatar
    bandhu says:

    அந்த அதிகாரியின் பார்வையில் இருந்து பார்த்தால் அவர் செய்வது சரி என்றே தோன்றுகிறது. வேலை செய்யாதவர்களை எந்த விதத்திலும் தண்டிக்க முடியாமல், பொறுப்பு இருந்தும் பெயருக்கு அதிகாரம் இருக்கும் இது போன்ற ‘அதிகாரிகளுக்கு’ எப்படியாவது வேலை நடந்தால் போதும் என்ற எண்ணமே இருக்கும்.
    Responsibility without Authority என்பது நமது அரசு துறைகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு இருக்கும் ஒரு சாபம் !
    இதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்!

  3. Avatar
    ganesan says:

    The author narrates the attiude of the majority of the govt employees who want LIGHT SEAT means seat wthout work and responsibility….but always think that they have done lot to govt organisation…but failed to feel that they are being paid well wth job security and pension benefits etc when compared to some pvt organisations….well narrated…keep it up…

    1. Avatar
      தி.தா.நாராயணன் says:

      நன்றி கணேசன் சார். லஞ்சத்தை விலக்குவது மட்டுமே நேர்மையாகாது.இதை வறட்டு நேர்மையாளர்கள் உணரட்டும்.
      நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *