ஈக்கள் மொய்க்கும்

This entry is part 12 of 44 in the series 15 ஏப்ரல் 2012

”தூங்கிட்டு இருக்கான்னுல நெனச்சேன்; அட ஆளே செத்துட்டான்னா?” அவனுக்குத் துணுக்குறும். பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாய் நடந்து போகும் போது அவன் கால்கள் தடுக்கி விட்டது நினவுக்கு வரும். ‘பொணம் தடுக்கிச்சா” ;சிந்தையில் கலவரம் கூடும்.

கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னை நகரையே மலைப்பாம்பாய் உள் விழுங்கிக் கொண்டு மூச்சிரைப்பது போல கூட்டம் பிதுங்கிக் கொண்டிருக்கும். வித விதமாய் எத்தனை எத்தனை மனிதர்களையோ மாறி மாறி வரைந்து கொண்டிருக்கும் மாபெரும் உயிர்த் திரைச்சீலை போல பேருந்து நிலையம் அவன் கண்களுக்குத் தெரியும். அவரவர்க்கு அவரவர் ஊர் போய்ச் சேர வேண்டும். அதில் ஒரு நிம்மதி இருக்குமோ? வந்து போகும் யாருக்கும் அந்தப் பேருந்து நிலையத்தின் மேல் பிரியம் கொள்ள முடியுமா? பேருந்து நிலையத்துக்கும் வந்து போய்க் கொண்டிருக்கும் யாரிடமாவது பிரியம் கொள்ள முடியுமா? மரம் கூடப் பாசம் கொள்ளலாம் பறவைகளிடம். அதே போல பறவைகள் மரத்திடம் பாசம் கொள்ளலாம். பேருந்து நிலையம் பயணிகள் ஒவ்வொருவருடைய வீடாக ஒரு விநாடியிலாவது பிரக்ஞையில் நிலை கொள்ளுமா? இந்தப் பிரக்ஞையில் யாருக்காவது அந்தப் பேருந்து நிலையத்தின் மேல் பிடிப்பு ஏற்பட்டிருக்குமா? என்றெல்லாம் எண்ணங்கள் அவனுக்குள் ஒடிக் கொண்டிருந்தன.

செத்துப் போனவன் இந்தப் பேருந்து நிலையத்தை நேசித்திருக்க வேண்டும். இரவில் அவனுடைய மரமாக, வீடாக இந்தப் பேருந்து நிலையம் தான் இருந்திருக்க வேண்டும் என்று அவனுக்கு ஊகிக்க நேரமாகவில்லை. ஐந்து போலீஸ்காரர்கள் பிணத்தைச் சுற்றி இருப்பதை அவன் இப்போது கவனித்தான். சற்று தொலைவில் இருந்து சிலர் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் புதுச்சேரி பேருந்தைப் பிடிக்க வேண்டியது. பேருந்தில் அமர்ந்தவுடனே செல்பேசி அழைப்பு அவனுடைய மனைவியிடம் இருந்து தான். “ அம்மாவ ஜிப்மர்ல காஸுவால்ட்டியில சேத்துருக்காங்க; மயக்கமா இருக்காங்கலாம். ஃபோன் வந்துச்சு” என்றாள். கேட்டதும் “ நீயும் வா; சேர்ந்து போலாம்; இங்கயே காத்திருக்கேன்” என்று சொல்லி விட்டு ஆவின் பாலகத்தில் பால் சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று திரும்பி வந்த போது தான், பேருந்தைப் பிடிக்கப் போகும் போது அவசரத்தில் ‘ஆள் தடுக்க வில்லை; பிணம் தடுக்கியது’ என்று பிரக்ஞையாகியிருக்கும் அவனுக்கு.

அவனுக்குப் பிணத்துக்குப் பக்கம் கொஞ்சம் நெருங்கிப் போகவும் பயம். எங்கே சாவு வந்து அவனையும் பிடித்துக் கொண்டு போய் விடுமோ என்று பயம். சற்றுத் தொலைவிலிருந்தே அவன் உருவம் அறுதியாய்த் தெரியும். ஒல்லியாய் முகம் சிரைக்காமல் வெயிலில் வதங்கிப் போன செத்த செடி போல கிடப்பான். சுற்றும் ஒரே ஈரமாய் அசூயை கூடிக் கிடக்கும். செத்துப் போனவனின் மூத்திரமாக இருக்கலாம். செத்துப் போனவனைச் சுற்றி இத்தனை போலீஸ்காரர்களா? ’பிணம் என்ன அஞ்சு பேர் துரத்துற மாதிரியா ஓடிப் போயிறும்’ என்று அவனுக்கு அங்கலாய்ப்பாகவும் இருந்தது. போலீஸ்காரர் ஒருவர் டயரியில் எதையோ குறித்துக் கொண்டிருந்தார். இன்னொரு போலீஸ்காரர் அருகில் நின்றிருந்த ஒருவனிடம்- அவன் பேருந்து நிலையத்தின் ஒரு காவலாளி -ஏதோ சொல்லினார். காவலாளி தயக்கம் காட்டியது போல இருந்தது. போலீஸ்காரர் பிரம்பை நீட்டி ஒரு தட்டு தட்டினார். காவலாளி செத்துக் கிடந்தவனின் விலகின வேட்டியைச் சரி செய்து மெல்லத் தூக்கினான். மற்றொரு போலீஸ்காரர் அதை செல் பேசியின் காமிராவில் படம் எடுத்துக் கொண்டிருந்தார். முன்னும் பின்னுமாய் பல விதமான நிலைகளில் பிணத்தைப் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். என்னென்ன அடையாளங்கள் என்று வேறு ஒரு போலீஸ்காரர் குறித்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. ஒரு போலீஸ்காரர் சும்மா பிணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. செத்துப் போனவனுக்கு அவர் செலுத்தும் அஞ்சலியா அல்லது உதாசீனமா என்று அவனுக்கு நிச்சயமாகவில்லை.

அவனுக்குத் தனியாய் இந்தக் காட்சிகளை இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பது போல் இருந்தது. அவனைப் போலவே பார்த்துக் கொண்டிருக்கும் சிலர் பக்கத்தில் அவனும் போய்ச் சேர்ந்து கொண்டான். “பாவம்; அனாதயா செத்துட்டான்” என்று எல்லோருக்கும் தெரிந்ததை அவன் அவர்களிடம் சொல்லும் போது அவர்கள் தனக்குத் தெரியாத சில தகவல்களை அவர்களுக்குத் தெரிந்து சொல்லலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததை அவன் உணர முடிந்தது. ”நான் ஏன் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரக்கத்தலா? பச்சாதாபத்தலா? செத்துப் போனவன் உயிரோடு இருக்கும் போது, ஒரு வேளை அவன் என்னைப் பார்த்திருந்து ஏதாவது பிச்சை கேட்டிருந்தால் கூட நான் உதவியிருக்கும் சாத்தியம் என்ன? பிச்சையே போடாமல் அவனிடமிருந்து நான் விலகிப் போயிருக்கலாம்? அப்படியானால் , இப்போது என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது கூட என் மனைவி பேருந்து நிலையத்திற்கு வரும் வரை என்னை நெருக்கும் நேரத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளத் தானா” என்று அவனுக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் உள் தர்க்கத்தில் அவன் மேல் அவனுக்கு ஒரு விதமான வெறுப்பும் ஏற்பட்டது. எப்படி ஒருவனின் சாவு கூட மரியாதையில்லாமல் நிகழ்ந்து போய் மரியாதையில்லாமல் கையாளப்படுகிறது; நினைக்கப்படுகிறது என்பது சொரணை கொள்ளும் அவனுக்கு.

கையிலிருந்த ஆவினில் வாங்கிய பாலை குடித்துத் தீர்த்தான். அவனுக்கு ஏதோ குமட்டியது போல் இருந்தது. பிணத்தைச் சுற்றியிருந்த போலீஸ்காரர்களும் எதிரே இருந்த டீக்கடைக்குச் சென்றனர். தனது அலுவலகத்தில் இடை வேளையில் அவன் டீக்கடைக்குச் செல்வது போல போலீஸ்காரர்கள் டீக்கடைக்குச் சென்றது அவனுக்குப் பொட்டில் அடித்தது போலிருந்தது. எப்போதோ லாரி அடித்து செத்து நாறிப் போய்க் கிடந்த நாயின் சவம் நினைவு கொண்டு அவன் கண்களில் மிதந்து போகும். செத்துப் போனவனை நினைத்துப் பார்க்காமல் போனால், தான் வாழும் வாழ்வின் அவலம், செத்துப் போனவனின் அனாதைச் சாவின் அவலத்தை விட மோசமானது என்று அவனுக்கு மனத்தில் பட்டது.

டீ குடித்த போலீஸ்கார்கள் பிணம் இருந்த இடத்திற்குத் திரும்பி விட்டனர். பேருந்து நிலையத்தில் நெரிசல் கூடியிருக்கும். நெரிசல் கூடக் கூட பிணம் கிடக்கும் இடத்தைக் கடந்து போவோர்கள் காக்கா, குருவி செத்துக் கிடப்பது போல் கண்டும் காணாமலும் போவதாக அவனுக்குத் தோன்றியது. கடந்து போவோர்களைக் கடந்து போவோர்களும் கடந்து போவோர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.? அவரவர் வாழ்வின் வேகத்தில் அவரவர் சாவு தொலைவில் இருப்பது போலான மாயை அவனுக்குப் பிடிபடுவது போலிருந்தது. செத்துப் போனவனைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைத் தன்னோடு பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மேல் அவன் கவனம் தற்போது திரும்பியது..ஒருவனின் பார்வை எதையோ பற்றிச் சிக்கிக் கொண்டது போல் தன் அருகில் நிற்பவனிடம் ‘ டே; மச்சி, பாருடா அங்க; என்னா மாதிரி குட்டி’ என்று ஒரு திசையில் நோக்கினான். அவனும் அந்த திசையில் நோக்க, அரைக் கால்சட்டையும் முலைகள் துருத்திய பனியனுமாய் ஒரு வெள்ளைக்காரி அவளுடைய நண்பனோடு வந்து கொண்டிருப்பாள். பிணம் கிடந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவில் பிணத்தைப் பார்த்தபடி அவள் போய்க் கொண்டிருக்கும் போது அவள் போய்க் கொண்டிருப்பதைத் தொடரும் பிறரின் கண்களோடு அவனுடைய கண்களும் சேர்ந்திருக்கும். ” சீ, இது என்ன செத்த பொழப்பு?” என்று அவன் மனதே மனதைப் பற்றிய விசாரத்தில் இருக்கும்.

அந்த விசாரம் குடைச்சலாகி அவனுக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது. ஒரு விநாடியில் ஒரு நிழல் எழுந்து அவனைப் பேயறைந்தது போல் அறைந்து நிழலின் நிழலாகி மறைந்து போனது போல் அவன் திடுக்கென்று திரும்பினான். திகைத்துக் கொண்டிருந்த அவனின் தோளைத் தொட்டு “ ரொம்ப நேரமாச்சா” என்று கேட்கும் அவன் மனைவியை ஏற இறங்கப் பார்த்தான். திரும்பி பிணம் இருக்கும் இடத்தை அவன் நோக்க பிணம் அங்கில்லை. பிணமிருந்த இடத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். அவனுக்கு இது வரை அவை அவனை மொய்த்தவை என்பது போல் அடையாளம் தோன்றும்

Series Navigationபழந்தமிழரின் நிலவியல் பாகுபாடுதங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *