கவிதை

This entry is part 39 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஆயிரம் அர்த்தம்

தனிமையை
அருந்தும் போது
மனம் மனிதர்களைத்
தேடுகிறது
வாடிய பூக்களைக்
கண்டு
மொட்டுக்கள் சிரித்தன
பழுத்த இலை
மரத்தினிடையேயான
பிணைப்பை
முறித்துக் கொண்டது
கடல்
மானுட இனத்திற்கு
முடிவுரை எழுதப் பார்க்கின்றது
ஓர் மழை நாளில் தான்
என் முதல் முத்தம்
பரிமாறப்பட்டது
வெறுமையை நிவர்த்தி செய்யும்
குழந்தையின் மழலை
முகில் காற்றுக்கு எதிராக
பயணிக்க பிரயத்தனப்பட்டது
பிரியும் தருணங்களில்
அழுகையை விட
மெளனமே சிறந்தது.

———-

மச்சம்

ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு
மறுபக்கத்தைக் காண
ஏன் ஆவல் கொள்கிறாய்
கொட்டிக் கிடக்கும்
நட்சத்திரங்களில்
உனக்கான நட்சத்திரம்
எதுவென்று தேடு
உன்னைக் கண்டு
புட்டத்தை மறைக்கும்
நாயின் மீது கல்லெறியாதே
பூக்களின் அழகே
அது செடியை விட்டு
பிரிவதற்கு
காரணமாய் இருக்கிறது
தவழ்ந்து செல்லும் குழந்தை
கவிதை வரிகளை வி
எவ்வளவு அழகாயிருக்கிறது
மழைத் தூறலைப் போல்
பாந்தமாக தொட்டதுண்டா
யாரும்
முன்னேறிச் செல்லும்
அலையை யார்
கட்டியிழுப்பது
நிலத்தில் விழுந்த மீனை எடுத்து
நீரில் விட யார் கற்றுத்
தந்தது.

————–

ஆதிக் குயவன்

ஆகாயம்
கருமை சூழ்ந்திருந்தது
ஒரு சில நட்சத்திரங்களே
ஜொலித்தன
அலைகள் வானுயர
எழுந்தது
பேய்க் காற்று
மரங்களை
வேருடன் சாய்த்தது
தண்ணீரில் சடலங்கள்
மிதந்தன
பூமியின் இறுதி நாள் இன்று
எனத் தெரியாமல்
அன்றைய பொழுது விடிந்தது
பூலோக நிலையறிந்து
மும்மூர்த்திகள் விரைந்து
வந்தனர்
சிவன்
மண்டையோடுகளை மாலையாக்கிக்
கொண்டான்
விஷ்ணு
இனி இதெற்கென்ன வேலை என்று
சக்ராயுதத்தை தூக்கி எறிந்தான்
பிரம்மன்
தன் படைப்பு வேரறுக்கப்பட்டதை
நினைத்து பித்து பிடித்து
அலைந்தான்.

—————

புத்தனின் பூமி

வெறுமை, சிலந்தி வலையாய்
என்னைச் சுற்றி பின்னியிருந்தது
நான் தனியனாய்
சூரல் நாற்காலியில்
ஞாபக வண்ணத்துப்பூச்சிகள்
என்னைச் சுற்றி பறந்தன
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
திசையில் என்னை இழுத்தன
ஒரேயொரு வண்ணத்துப்பூச்சி
மட்டும் பறக்காமல்
ஓரிடத்தில் அமர்ந்திருந்தது
அதன் மோனம்
எனக்கு ஞானம் தந்தது
புத்தர் விழிப்புணர்வு பெற்ற
போதி மரம் என்னிடம் பேசியது
புத்தர் பிறந்த நாட்டில்
அவரது போதனைகள் என்ன ஆனது
என்று வினவியது
புத்தனுக்கு கதவடைத்தோம்
எத்தனுக்கு வாசற்கதவைத் திறந்து வைத்தோம்
அறிவினை அடகு வைத்தோம்
ஆற்றலை புதைத்து வைத்தோம்
அடிமைகளாய் இருந்து பார்த்தோம்
அடக்குமுறையை பொறுத்துப் பார்த்தோம்
அஹிம்சையை தூக்கி எறிந்தோம்
நித்தம் குருதிக் கடலில் நீந்துகின்றோம்
வன்முறையால் வழி பிறக்குமா
ஆயுதத்தால் தீர்வு கிடைக்குமா
களவு போனது பொக்கிஷங்கள்
மீதமிருந்ததை அதிகாரத்தில்
இருப்பவர்கள் பிரித்துக் கொண்டார்கள்
மக்கள் இதை அறிந்து கொண்டும்
தலையெழுத்தை நொந்து கொண்டு
தன்மானத்தை இழந்து தவிக்கின்றனர்
புத்தனின் பூமியில்
இரத்தத்தின் சுவடுகள்.

விஸ்வரூபம்

வாழ்வில்
வசந்தத்தை பார்த்ததில்லை
இதுவரை
ருசிக்காக சாப்பிட்டதில்லை
இதுவரை
உடுத்தி
அழகு பார்த்ததில்லை
இதுவரை
குளிர்சாதன அறையில்
படுத்துறங்கியதில்லை
இதுவரை
வாசனை திரவியங்களை
உபயோகப்படுத்தியதில்லை
இதுவரை
மொட்டை மாடியிலிருந்து
நிலா பார்த்ததில்லை
இதுவரை
காசுக்காக
பிச்சை எடுத்ததில்லை
இதுவரை
ஆனால் அம்பலத்தான்
விஸ்வரூபம் காட்டுகிறான்
வானம் வரை.

—————-

Series Navigationசருகாய் இருவந்தவர்கள்
author

ப மதியழகன்

Similar Posts

Comments

  1. Avatar
    சோமா says:

    தவழ்ந்து செல்லும் குழந்தை கவிதை வரிகளை விட எவ்வளவு அழகாயிருக்கிறது….மழைத் தூறலைப் போல் பாந்தமாக தொட்டதுண்டா…………….மதியழகனின் ரசிப்புக்குரிய வரிகள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *