மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23

This entry is part 19 of 28 in the series 29 ஏப்ரல் 2012

“மனிதர்கள் என்றால் கவலைகள் இல்லாமலா? கேள்விகள் இல்லாமலா? ஏராளமாக இருந்தன. கூண்டுவண்டியிலும், கட்டைவண்டியிலும் வைக்கோலை தெளித்து ஜமுக்காளத்தை விரித்து, பெண்கள் கால்களை துறட்டுகோல்போல மடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க ஆண்கள் வண்டிக்குப்பின்புறம் அமர்ந்து வார்த்தைகளைக் கோர்த்து கேள்விச் சரடை தயார்செய்துகொண்டுவருவார்கள்.”

25.     ‘கிருஷ்ணபுரத்தை காக்கவே மானுடவடிவில் வந்திருக்கிறேன்’ என்ற கமலக்கண்ணியின் வார்த்தைகளைகேட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மெய்யுருக கைகூப்பி தண்டமிட்டவர்களில் கிருஷ்ணப்ப நாயக்கரும் ஒருவர்.  கமலக்கண்ணியின் பேச்சு அவரைக் கட்டிபோட்டது. தம்மை தெய்வமென்று அவள் அறிவித்துக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில் கல்யாணமகாலில் அவளுக்கென்று அறையொன்றை ஒதுக்கி எட்டாவது மனைவியாகச் சேர்த்துக்கொண்டிருப்பார். ஒருமுறை கொள்ளிடத்திற்கு சோழகனார் அழைப்பின்பேரில் தமது பரிவாரங்களுடன் சென்றிருந்தபோது அங்கு உண்ணநேர்ந்த விறால் மீன்குழம்புக்காகவே ஒருத்தியை மனைவியாக்கிக்கொண்டது நினைனுக்கு வந்தது. அவரது மருமகனும் தஞ்சை நாயக்கருமான இரகுநாத நாயக்கருக்கு ஒரு ராமப்பத்ராம்பா வாய்த்ததுபோல கவிதாயிணியொருத்தி தமக்கும் பாரியாளாக அமைந்தால் சந்தோஷம்தான். கிருஷ்ணப்ப நாயக்கருக்கு இவர் புகழை இட்டுக்கட்டி பாடக்கூடிய ஆற்றல்வாய்ந்த புலவர்கள் ஒருவரும் அவையில் இல்லாதது பெருங்குறை. அக்குறை கமலக்கண்ணியின் வரவால் இல்லாதொழியக்கூடும்..

அன்றும் தலைநகரம் வழக்கம்போல மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தது மன்னர் போன பிறவியில் செய்த நல்வினைகளெல்லாம் திரண்டு கமலக்கண்ணியாக வடிவெடுத்திருக்கிறதென ஊர்மக்கள் பேசிக்கொண்டனர். நல்லவேளை அந்நியதேசத்து பரதேசி ஒருவர் இக் காவல்தெய்வத்தின் மகிமையை எடுத்துக்கூறி விளங்கவைத்திருக்கிறார். இல்லையெனில் அந்த மகிமையின் சாட்சியாக இருக்கக்கூடிய பாக்கியம் கிருஷ்ணபுரத்திற்கு கிட்டாமல் போயிருக்கக்கூடும். கிருஷ்ணபுரத்தில் மட்டுமல்ல வடக்கே காசிமுதல் தெற்கே ராமேஸ்வரம்வரை எத்தனை காதம் போனாலும் கமலக்கண்ணியைப்பற்றிய பேச்சுதான் காதில் விழுகிறதென தேசாந்திரியாய் சுற்றி ஊர் திரும்புகிறவர்கள் சத்தியம் செய்கிறார்கள்.

அரசர் கிருஷ்ணகிரியின் அடிவாரத்தில்  மண்டபமொன்றைக் கட்டித் தந்திருந்தார். அருகிலேயே கமலக்கண்ணியின் வாழ்விட வசதிகள் அவ்வளவும் யோசித்து யோசித்து செய்து தரப்பட்டிருந்தன. பாதுகாப்புக்கென மன்னரின் ஆபத்துதவிகளிலொருவன் தலைமையில் பன்னிரண்டு காவலர்கள் காற்றுகூட அவர்களின் அனுமதியின்றி உள்ளே புகாமல் துப்பாக்கிகளுடன் பாரா இருந்தனர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரவும், இடுகின்ற வேலைகளை தமாதமின்றி நிறைவேற்றவும் தமிழறிந்த சேடிப்பெண்கள் நியமிக்கபட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் தங்குமிடவசதிகள், சீரகச்சம்பா அரிசி, வேண்டிய அளவிற்கு காய்கறிகள், நவ தானியங்கள் ஏற்பாடு செய்திருந்னர். கூலவாணிரொருவரை அழைத்து மாதந்தோறும் அனுப்பவேண்டிய பொருட்களின் பட்டியலைக் கொடுத்திருந்தார்கள். அரசாங்க கருவூலத்திலிருந்து அவருக்குண்டான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

வாரத்தில் இருநாட்கள் கமலக்கண்ணிசொல்லும் அருள்வாக்கு அட்சரசுத்தமாக பலிக்கிறதென்று பேச்சு. புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அருள்வாக்கும் சொல்லும் நாட்கள் ஆனால் புரட்டாசிமாத விஜயதசமி முதல் ஐப்பசிமாத அமாவாசைத் திதிவரை 21நாட்களும் கூறுகின்ற அருள்வாக்குக்கு கூடுதல் பலனிருப்பதாக வதந்திகள் பரவ கடந்த இரண்டுவருடங்களாக மக்கள் கூட்டம் சொல்லி மாளாத அளவிற்கு வளர்ந்துகொண்டு போயிற்று. மனிதர் விக்கினங்களை பூர்த்திசெய்யவும், வேண்டியதை வேண்டியர்வர்க்குத் தந்து அருள்பாலிக்கவும் கமலக்கண்ணியால் முடிகிறதென்று மக்கள் கூட்டம் நம்புகிறது. மனிதர்கள் என்றால் கவலைகள் இல்லாமலா? கேள்விகள் இல்லாமலா? ஏராளமாக இருந்தன. கூண்டுவண்டியிலும், கட்டைவண்டியிலும் வைக்கோலை தெளித்து ஜமுக்காளத்தை விரித்து, பெண்கள் கால்களை துறட்டுகோல்போல மடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க ஆண்கள் வண்டிக்குப்பின்புறம் அமர்ந்து வார்த்தைகளைக் கோர்த்து கேள்விச் சரடை தயார்செய்துகொண்டுவருவார்கள்: தோட்டக்கால் பயிர் செய்ய, ஆண் வாரிசு வேண்டி, திருடுபோன பொன்வளைக்காக, மூத்த குமாரத்திக்கு நற்குணவான் மாங்கல்ய பிச்சை தருவானா? புருஷனுக்கு கூத்தி சகவாசமுண்டா, கொழுந்தியாளை இரண்டாம்தாரமாக மணமுடிக்கலாமா? என மனிதர்களின் நிறத்திற்கொப்ப கேள்விகள் இருந்தன.

பெரிய மனிதர்களின் கூண்டுவண்டிகளுக்காகவும், பல்லக்குகளை இறக்கிவைக்கவும் கொட்டாரப்பந்தல் தெற்கிலிருந்து கொண்டுவந்த கீற்றுகளை முடைந்து போட்டிருந்தனர். அதில் எவ்வளவுதான் நிறுத்த முடியும்? இடமில்லாதவர்கள் கம்மாளத் தெரு, குயவர் தெருவரை நிறுத்த அங்கிருந்த மக்கள் வாய் மூடியிருந்தனர். பிரச்சினை வண்டிகளாலல்ல. கூளத்தையும் புற்களையும் தின்றுவிட்டு நிலைநிலையாய் சாணத்தை எருதுகள் போட்டிருந்தன, வழிந்தோடும் மூத்திரம் வேறு. அவற்றை அகழிப்பக்கம் ஒதுக்கியிருந்தனர். மலை அடிவாரமுழுக்க மாட்டுமூத்திரம், சாணம், பெண்கள் சூட்டியிருந்த மலர்களின் வாசம், மஞ்சள் குங்குமம் காற்றில் கலந்து கதம்பத்தின் வாசனையை நினைவுபடுத்திற்று. .

எத்தனைமணிக்கு எந்த தேசத்தில் புறப்பட்டிருப்பார்களோ? நடந்தும், கூண்டு வண்டியிலும், கட்டைவண்டியிலும் ஆணும் பெண்ணுமாய் மனிதர்கள் தேனடையை மொய்ப்பதுபோல சூரிய உதயாதியில் கூடிவிடுகிறார்கள். மண்டபக் கதவு எப்போது திறக்குமென கூட்டம் அலைமோதத் தொடங்கிவிடும். வணடிக்காரர்களும் பல்லக்கு காவுவோர்களும் கும்பல் கும்பலாக நின்று சல்லாபித்தது சிங்கபுரம்வரை கேட்டது. மண்டப வாசலுக்கு போகும் வழி ஒரு சிறு பாதைபோல செப்பனிடப்பட்டு மெழுகியிருந்தது. இருபுறமும் கடைகள் இருந்தன. அக்கடைகளில் விசேடமாக செவ்வரளி, சாமந்தி பூக்கள், நைவேத்தியத்திற்காக தானியங்கள், பருப்பு வகைகள், வாசனாதிபொருகளும் கிடைத்தன. வாசலருகே அரசாங்கம் ஒரு தண்டல்காரனை பிரத்தியேகமாகப் போட்டிருந்தது. அவன் பேசிய தெலுங்கு குடியானவர்களுக்கும் அவர்கள் பேசிய தமிழ் அவனுக்கும் புரியாமலிருந்தபோதிலும் தலைக்கு 5 பணம் கொடுத்தால் உள்ளே விடுவேனென ஐந்துவிரல்களை விரித்துக்கட்டி கறாராக வசூலித்தான். முடிந்தவர்கள் தண்டப்பணத்தைக் கட்டி குறிகேட்க உள்ளே நுழைந்தார்கள். வேறு சிலரோ குடும்பத்தில் முக்கியானவர்களை உள்ளே அனுப்பிவிட்டு கள்ளுகடையை தேடிக்கொண்டு போனார்கள். மன்னரின் ராஜகுரு நியமித்திருந்த மணியக்காரர் சாமர்த்தியமாக செயல்படுவார். பூசையின் முடிவில், முன்னரே பதிவுசெய்துகொண்டவர்களை அழைத்து கமலக்கண்ணியின் தலை மயிரென்று சொல்லி வந்திருந்த பக்தர்களிடம் ரகசியமாக பேரம் நடக்கும். கைவிரல் மோதிரத்திலோ, வேறு வகை ஆபரணத்திலோ இத்தலைமையிரை முடிந்துகொண்டால் காற்று கருப்பு எதுவும் அண்டாதென்பார். கூடுதலாக இரண்டு மரக்கால் நெல்லோ, வேறு தானியமோ அவர் வீட்டிற்குத் தனியாக அளந்தால் கமலக்கண்ணியின் முலைப்பால் கூட தருவார். கர்ப்பமுண்டான பெண்கள் பருகினால் பிள்ளைப்பேறு சங்கடங்களின்றி நடக்குமென்று அதற்குக்காரணம் சொல்லப்பட்டது. குறிசொல்லிமுடித்ததும் ஆண்களும் பெண்களும் வரிசையில் நிற்கிறார்கள் கமலக்கண்ணியின் கைதொட்டு ஆசீர்வதிப்பாளா என்று காத்திருக்கிறார்கள். குறிகேட்க வாய்ப்பில்லாதவர்கள் தங்கள் குறைகளை சொல்லி அழுகிறார்கள்.

சித்ராங்கி ஓர் இடைய இளைஞனை துணைக்கு அழைத்துவந்திருந்தாள். கிருஷ்ணபுரம் வந்த முதல் நாள் ஏன் எதற்குகென்று கேட்காமல் உதவிக்கு வந்தவன். சிதம்பரத்திலிருந்து முதல் நாள் காலை புறப்பட்டது. தாய்க்கும் மகளுக்கும் ஒரு கூண்டுவண்டியையும் இல்லத்தில் மிச்சம் மீதியாக இருந்த தானியங்களுக்கும் சில பித்தளை வெண்கல பாத்திரங்களுக்கும் தனியாக ஒரு சத்தவண்டி வைத்திருந்தனர். நகைகளை மீனாம்பாள் ஒரு புடவையில் வைத்து கட்டி வண்டிக்குக்கீழே ஊசலாடிவந்த வைக்கோற் கந்துக்குள் ஒளித்துவைதிருந்தாள். அடிக்கடி மீனாம்பாள் கவனம் வைக்கோல் கந்தின்மேல் ஏன்போகிறதென தெரியாமல் சித்ராங்கியும் குழம்பினாள். அக்குழப்பத்திற்கான விடை கிருஷ்ணபுர காவற்காட்டில் கிடைத்தது. “இன்னும் ஒருகல் போனால் கிருஷ்ணபுரம் வந்துவிடுமென எருதுகளை தார்குச்சிபோட்ட வெருட்டிய வண்டிக்காரன், திடுதிப்பென்று வண்டியை நிறுத்திய காரணம் புரியாது தாயும் மகளும் திகைத்திருந்தனர். ஏர்காலில் ஒரு கையும், கைத்தடியில் ஒரு கையுமாக எதிரே கள்வன் ஒருவன் நிற்பதைபார்த்ததும், கைகளில் இருந்ததைக் கொடுத்தனர். கள்வன் அதன் பிறகு போய்விடுவானென தாயும் மகளும் எதுர்பார்த்தபோதுதான் அவன் மீசையை நீவிக்கொண்டே வைக்கோல் கந்தினை நோக்கி நடக்க மீனாம்பாள் காடே அதிரும்படி கூச்சலிட்டாள். அவள் கூச்சலுக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆடுமேய்த்துக்கொண்டிருந்த இரண்டொரு இடையர்கள் சிலம்பம் சுழற்றிபடி ஓடிவந்தார்கள். கள்வன் கையிலிருந்ததையும் போட்டுவிட்டு காட்டுக்குள் மறைந்தான்.

– நல்ல சமயத்தில் வந்தோம். வந்த கள்வனும் ஒருவனாக வந்திருக்கிறான். யார் செய்த புண்ணியமோ தப்பித்தீர்கள் – என்றான் காப்பாற்றிய இடையர்களில் ஒருவன். அவன் இளைஞனாகவுமிருந்தான்.

தாயும் மகளும் கையெடுத்து கும்பிட்டார்கள்.

– நீங்க எழேழு பிறப்பும் நல்லா இருக்கவேணும் தம்பி என்றாள்.

– கிருஷ்ணபுரத்திற்கு எங்கே போகணும்?

– எங்கள் உறவுக்கார பெண் இடக்கை சாதிகாரர்கள் தெருவில் இருக்கிறாள்.

– அப்படியா ஒரு நாழிகைநேரம்கூட ஆகாது நான் வேண்டுமானால் துணைக்கு வருகி§றென் -என்றான்

அன்றுமுதல் அவன்தான் துணை. ஆபத்து அவசரமென்றால் வீட்டில் அவன் தாய் ஜெகதாம்பாள் ஒத்தாசை செய்கிறாள்.   இன்றைக்குகூட மீனாம்பாளையும் ஜெகதீசனையும் இடைச்சியின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கிறாள்.

வரிசை மிக நீண்டதாக இருந்தது. கமலக் கண்ணிக்கு ராஜகுடும்பத்தினருக்கு உரிய மரியாதை நடந்துகொண்டிருந்தது.  இருபெண்கள் கவரி வீசிக்கொண்டிருந்தார்கள். கற்பூரம், சந்தணம், பூசுதைல புஷ்பங்களென்று எங்கும் நறுமனம் வீசியது. சிறு குடலைகளில் பூக்களை நிரப்பி பெண்ணின் காலடியில் கொட்டிக்கொண்டிருந்தார்க. சிவப்பு வண்ண வஸ்திரமணிந்திருந்தாள். அருகிலிருந்த பெண்மணியின் காதில் ஏதோ சொல்வதுபோல தெரிந்தது. அவளுக்கெதிரே இருந்த பந்தலில் மக்கள் அவர்கள் முறைக்காக காத்திருந்தார்கள். சித்ராங்கியும் இடைக்குடி வாலிபனும் உட்கார இடம் கிடைக்க அமர்ந்தனர். கமலக்கண்ணியின் முகம் இப்போது கூட்டத்தை நோக்கித் திரும்பியது. அப்பெண்ணின் பார்வைக்காக காத்திருந்தவர்களைப்போல கூட்டம் அரோகரா.. அரோகரா.வென்று உணர்ச்சிப் பெருக்கில் கூச்சலிட்டது. சித்ராங்கி கமலக்கண்ணியின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். மூர்ச்சையாகி சாய்ந்தாள்.
-(தொடரும்)

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்கடவுளும் கடவுளும்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *