“பெண் ” ஒரு மாதிரி……………!

This entry is part 11 of 40 in the series 6 மே 2012

 (     ஆண்கள் படிக்க வேண்டிய கதை.)

  
மாதவ் ராவ், சென்னைவாசியாக இருந்தாலும், தஞ்சாவூர் ஞாகபமாகவே
இருப்பார். அவர், சக்கா நாய்க்கன் தெருவில் சுற்றியதும், திரு.வி.க. பள்ளியில்
படித்ததையும், நீடா மங்கலத்தில், பெண் பார்த்து, ஜமுனா பாயை கட்டியதையும்,
பெண் வீட்டில், மாமியார் செய்து போட்ட* கோளா குழம்பைப் பற்றியும்தான்
அவர் வேலை செய்யும் இடத்தில் பேசிக் கொண்டே யிருப்பார்.
அவரின் மகன், சுப்புராவ், பீஇ படித்துவிட்டு, தற்போது, ஒரு சாப்ட்வேர்
வேலையாக இருப்பதிலும் அவருக்கு பெருமை.

பையனுக்கு வயது ஏறிக் கொண்டு போவதைப் பற்றி, அடிக்கடி, ஜமுனா
சொல்லிக் கொண்டிருந்தாள். பக்கத்துவீட்டு பெண்களிடமும். இதைப்பற்றி
பேச்சு தான், அடிக்கடி ஓடிக்கொண்டிருக்கும். பையனுக்கு, வேறு ஏதாவது,
பெண் சிநேகம் உண்டோ என்றுக்கூட யோசித்துப்பார்த்தாள். அப்படி ஒன்றும்
இருப்பதாக தெரியவில்லை.

மாதவ் ராவின், தாத்தா, பிரிட்டிஷ் காலத்தில், தாஞ்சாவூர் சமஸ்தானத்தில், சால்ட் சப்-இன்ஸ்பெக்டராக, வேலை செய்தவர். மராட்டியர்களுக்கான பெரிய பாரதியார்
மீசை உள்ளவர். தெருவில் செல்லும் போது, குதிரையில்தான் செல்வார்கள்.
கருத்தாட்டான்குடியில், தெருவே, அவர் வந்தால் நடுங்கிக் கொண்டேதான் பார்பார்கள்.

டபீர் குளத்தில் பிடித்து வரும், பெரிய மண்டைக் கொண்ட, இரண்டு கிலோ
எடையுள்ள, விரால் மீனை, ஒரு சட்டிமீன் குழம்போடு, ஒரு கிலோ,
சாப்பாட்டோடு, வாழை இலைப்போட்டு, பக்கத்தில், பெண்டாட்டியோடுதான்
சாப்பிடுவார். மங்களா பாயும், பர்தாவுக்கு, விசிறி போட்டுக் கொண்டு,
பயத்தோடு அமர்ந்திருப்பார்.

குழம்பில், கொஞ்சம் உப்பு- காரம்- புளிப்பு குறைந்தாலும், தண்ணி லோட்ட பறக்கும்.
மங்களா பாயின், மண்டை, பலமுறை உடைந்து, தையல் போட்டக் கதையெல்லாம்
பற்றி, மாதவ் ராவ், பலமுறை, அவருடைய மனவியிடம் சொல்லியதுண்டு.

மகன் சுப்புராவுக்கு, கண்டிப்பாக, தஞ்சாவூரில் தான் , பெண் எடுப்பேன் என்று, மாதவ்
ராவ் கண்டிப்பாக கூறிவிட்டார். பட்டணத்து பெண்கள் மேல், அவருக்கு நம்பிக்கை
இல்லை. கழுத்தில், தாலி, ஏறியவுடன், டாட்டா சொல்கின்ற, மருமகள், கதையெல்லாம்,
சீரியலில் பார்த்து.அவர்களுக்கு, ஒருவித பயம் ஓடிக்கொண்டிருந்தது.

பையனின் ஜாதகக் கட்டை எடுத்துக்கொண்டு, மயிலாப்பூர், சர்மா சோதிடரிடம்
சென்றார்.
பையனுக்கு, ஜாதகத்தில் கோளாறு.பெண் கிடைப்பது கொஞ்சம் சிரமம் என்று,
சர்மா ஒரு குண்டைப் போட்டார். மாதவ் ராவ் கொஞ்சம் கலங்கித்தான் போனார்.

முதலில், கும்போகோணத்தில், டமால் ராவ் காண்பித்த பெண் பிடிக்கவில்லை.
கொஞ்சம் குட்டை என்று கூறிவிட்டனர். பிறகு, ஒரு ஜாதகம், திருவையாறுலிருந்து
வந்தது. படையெடுத்தார்கள். பெண்ணின் நிறம் கொஞ்சம் கம்மி என்று கூறிவிட்டார்கள்.
அம்மா பேட்டையில், நில-புலத்தோடு, ஒரு பெரிய இடத்துப் பெண்ணை பார்க்க,
சென்னையிலிருந்து, கார் எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

ஆனால், பெண்ணொட அப்பாவிற்கு, யாரோ ஒரு பட்டு நூல்காரியோடு தொடர்பு
என்று வெட்டி விட்டார்கள். சுப்பு ராவ் ஒரு மாதிரியாக ஆகிவிட்டான்.
பெண் பார்க்க தாஞ்சாவூர் என்றாலே, ஜன்னிகண்டு ஓடினான்.

கடைசியில், ஒரு முடிவிற்கு வந்தார்கள். தாஞ்சாவூரில், ஏதாவது, ஒரு
ஏழை மராட்டியக் குடும்ப பெண்ணாககிடைத்தால் போதும் என்று புரோக்கரிடம்
கூறிவிட்டார்கள்

அடுத்து, சோலையூர் நாராயன சாஸ்திரிகள், கல்யாண தோஷ-நிவாரண
வல்லுநனர் என்று, யாரோ கூற, மாதவ் ராவ் படையெடுத்தார்.

பையனுக்கு செவ்வாய் தோசம் என நாராயன குரு ,விளக்கம் அளித்தார்.
செவ்வாய் தோஷம் என்பது பரவலாக ,எல்லோரும் அச்சப்படும் ஜாதகம்தான்.
அவை வெறும் வதந்திகள் தான். செவ்வாய் லக்கனத்திற்கு 2,4,7,8,12ல்
இருந்தால் தோஷம். இப்படி தோஷமுள்ள, ஜாதக்கத்துடன், அதே
தோஷமுள்ள, பெண் ஜாதகத்தை இணைத்தால், வாழ்க்கை
செம்மையாகுமென, சோதிடர் கூறினார். மேலும், பெண், தாஞ்சாவூருக்கு,
தெற்கேதான் கிடைக்கும், அதுவும், ஏழைப் பெண்ணாகதான் அமையுமென
கூறிவிட்டார்.

கீழ வாசல், அரி ராவிடம், ஒரு ஜாதகம் இருப்பதாக, மீசை ரகுராவ் கூறினார்.
பெண், வலங்கை மான். ஏழையான குடும்பம்தான் என்றும் கூறிவிட்டார்.

குடும்பத்தோடு, வலங்கைமான் நோக்கி மாதவ் ராவ் படையெடுத்தார்.
சின்ன ஊர்தான், மாரியம்மன் கோவில் பெயர் பெற்றது. *பாடை கவடியும்
காண மக்கள், கூட்டம்கூட்டமாக பல சுற்று வட்டாரங்களிருந்தும் வருவர்.
அம்மன் ரத ஊர்வலமும் அவ்வூர் மக்களின் பெயர் சொல்லுமென,
மாதவ்ராவை அழைத்து சென்ற கோவிந்த ராவ் கூறினார்.

மாப்பிள்ளை சுப்புராவும், பெண் பார்க்க வந்துவிட்டான். அடிக்கடி, லீவு
எடுக்க முடியாது. இந்த இடம் அமைந்துவிட்டால், ஒரு வழியாக ,
வெத்திலை மாத்திக்கலாம் என்ற முடிவோடுதான் வந்தார்கள்.

ஓட்டு வீடுதான். வாய் நிறைய வரவேற்றார்கள். அவர்களின் அன்பில்
ஒரு உண்மை இருந்த்தை, சுப்புராவ் கண்டு கொண்டான்.

பெண் சுமரான உயரத்துடன், மராட்டிய கலையோடு காணபட்டடாள்.
ஜமுனாவிற்கு பிடித்து விட்டது. பெண்ணின் தந்தை, ஏதோ, தனியார் பஸ்ஸில்
கண்ட்டக்கராக , வேலை செய்து, இரண்டு பெண்கள், ஒரு பையனையும்
பி.ஏ. வரை படிக்கவும் வைத்தார்.

பெண்ணிற்கு, குடும்ப பொறுப்பு அத்துப்படி. சமையல் எல்லாம், அவள்
கைவண்ணம்தான்.

காபி, பலகாரம் வைத்தார்கள். பெண்ணை பாடச்சொன்னார்கள்.
முடிந்த வரை, பெண் சரஸ்வதிபாய் பாடிவிட்டாள். இது, அவள் பாடும்
பத்தாவது முறை. இந்தப் பாட்டுதான், கொஞ்சம் சுமாராகத்தெரியும்.
இந்த வரனாவது, கை பிடிப்பாரா ..? என்ற கவலையோடுதான் உள்ளே சென்றாள்.

மாதவ் ராவிற்கு, மனதில் கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது.
கையில் ஒரு பத்து சவரன் கூட தேறாதெ என்ற நினைப்பு வேறு ஒரு பாதையில்
கணக்குப் போட்டுக்கொண்டிருந்தது. மேலும்,குடும்ப யோக்கிதைப்பற்றி
அறிய வேண்டுமென நினைத்தார்.

மாதவ் ராவ், கோவிந்தராவின் காதைக் கடித்தார். அதற்கு, ஏற்பாடு
செய்யலாம் என  சமாதானம் கூறினார்.

மாப்பிள்ளை தோழனுக்கு, பாத்ரும் போக, பெண்ணின் தம்பி, பக்கத்து பஞ்சாயத்து
ஆபிஸில், அனுமதி வாங்கி பாத்ரூம் சாவி வாங்கி வந்தான்.
தோழன், ஒரு மாதிரி துவண்டு போனான். கடைசியாக, ஒரு வ்ழியாக
கரையேற்றினார்கள்.

சென்னை சென்று, வீட்டு பெரியவர்களிடமும் பேசி, ஒரு நல்ல முடிவு எடுத்து,
தெரிவிப்போம் என , மாதவ் கூறி, எல்லோரிடமும் விடை பெற்றார். சரஸ்வதிபாய்,
மெல்ல உள் ரூமிலிருந்த சன்னல் வழியாக பையனை பார்க்க ஆசைப்பட்டாள்.
சுப்புராவும், அந்த பெண்ணைப் பார்க்க முயற்சி செய்தான். எப்படியோ, இருவரும்
ஒரக்கண்ணால், பார்த்துவிட்டார்கள். சுப்புராவ் சிரித்துக் கொண்டான்.

வலங்கைமானிலேயெ, ஒரு நபரை ஏற்பாடு செய்து, பெண்ணையும்,பெண் வீட்டார்
பற்றியும், தமக்கு, தொலை பேசியில் செய்தி கொடுக்க, மாதவ் ராவ் ஏற்பாடு
செய்துவிட்டுதான், அங்கிருந்து கிளம்பினார்.

ஒரு வாரம் கழித்து, மாதவ் ராவிற்கு கிடைத்த செய்தி, மிகுந்த வருத்தத்தை
கொடுத்தது.

பெண்ணின் குடும்பம் தங்கமாம் , பெண்,ஒரு மாதிரியாகத்தான் தெரிகிறாள்

அவள், நான் பார்த்த சில நேரங்களில், பக்கத்து புதர் மறைவில் சென்று
வருவதும், அங்கிருந்து சில ஆண்கள் வந்து செல்வதுமாக தெரிகின்றது”
என்ற அணுகுண்டை, மாதவ் ராவ், நண்பர் போட்டார்.

பையனுக்கு, இதில் நன்பிக்கை இல்லை. அவன் அந்த பெண்ணை நம்பினான்.
இறுதியில், அவனே, வலங்கைமான் சென்று, யாருக்கும் தெரியாமல், பார்த்து
வருவதாக மனதில் முடிவு செய்துக்கொண்டான்.

மாதவ் ராவும், பெண் பிடிக்கவில்லை, என்று ஒரு கார்டு எழுதி போட்டுவிட்டார்.

சுப்புராவ், கம்பனி விசயமாக வெளியூர் சென்று வருவதாக கூறிவிட்டு,
வலங்கை நோக்கி பயணப்பட்டான்.

சரசுவதி பாய், அன்று இரவு முழுவதும், தூங்காமல், கண்ணீரோடு போராடிக்
கொண்டிருந்தாள். காசு பணம் இல்லாவிட்டால், ஒரு பெண்ணின்
வாழ்க்கை, குட்டிச்சுவர்தானா ? என்று பலவிதமான கேள்விகளை
கேட்டுக்கொண்டே, அந்த இரவை போக்கினாள்.தினமும், வணங்கும்,
அந்த மாரியம்மா தான், காப்பாற்றுவாள்,என்ற நம்பிக்கையோடு,
தூங்கிப்போனாள் .

சுப்புராவ், வலங்கைமான் வந்து சேர்ந்தான். பெண் வீட்டைக் கண்டு
பிடித்துவிட்டான். மாலை நேரத்திற்காக காத்துக்கிடந்தான்.

சரசு, தீடீரென்று வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றும்முற்றும் பார்த்தாள்.
கொஞ்ச தூரத்தில் தெரியும் முற்காட்டுகுள் நுழைந்துவிட்டாள்.
சுப்பு வெலவெலத்துப் போனான். அப்பா சொன்னது உண்மைதானா ?
அவள் அப்படியா இருப்பாள். அவனால், நம்ப முடியவில்லை.

சரி, ஒரு முடிவிற்கு வந்து விட்டான். அவள், எப்படியும், அந்த மாரியம்ம
கோவிலுக்கு வருவாள் என்றும், அங்கே கேட்டுவிட துணிந்துவிட்டான்.

சரசும், கையில் என்னெண்னெய் பாட்டிலோடு, மாரியம்மன் கோவிலுக்கு வந்து,
விளக்கு ஏற்றி, மனதார, அம்மனை வணங்கி , ஒரு இடத்தில் அமர்ந்தாள்.

அவள் பக்கத்தில், சுப்பு வந்தான். சரசுவிற்கு தூக்கி வாரி போட்டது.
மெல்ல எழுந்து, அங்கிருந்து போக எழுந்தாள். அவளோடு, கொஞ்சம்
பேசவேண்டுமென , சுப்பு கேட்டுக்கொண்டான்.

“உங்களுக்கு, என்னை பிடிச்சிருக்கா. நீங்க நேரடிய பதில் சொல்லணும்”

“உங்களுக்குதான் எனனை, பிடிக்கவில்லையே, அந்த கடிதாசியே ஒரு சாட்சிதானே”
என்றாள்.

“அது, எங்க அப்பா செய்த வேலை. எனக்கு அதில் உடன்பாடில்லை.”

“சரி, நீங்க என்ன விசயமா எனனை பார்க்க வந்திங்க…,”

நீங்க, தப்பா நினைக்கிலன்னா…., எனறு இழுத்தான் சுப்பு.

பரவில்லை, சொல்லுங்க, எல்லாத்தையும் கேட்கத்தான், ஏழையா
போறந்திருக்கேமே’ என்றாள்.
அந்த புதர் பக்கம், சில சமயங்களில், நீங்கள் ஏன் செல்கின்றீர்கள் ?

சரசு, கடகடவென், கண்ணீர் விட்டாள்.

மன்னிக்கவும், நான், ஏதாவது தப்பா கேட்டுடேனா ? அது உங்க
ரகசியம்னா, நான் கேட்க விரும்பல…”

வெட்கத்தை விட்டு சொல்றேன். எங்க வீட்ல, பாத்ரூம் வசதி கிடையாது.
“எங்களுக்கு கிடைத்த, ஒரே வச்தி, பக்கத்து சந்திலே இருக்கும் புட்புதர்தான்.
இயற்கை உபாதைக்கு, அது உள்ளே சென்றுதான் வரவேண்டும்.
அங்கு மேயும் பன்னிகளுக்கும், நாய்களுக்கும் பயந்துதான், இந்த
உபாதைய போக்குறோம். இடப்பக்கம், ஆண்கள் செல்வார்கள். வலப்பக்கம்
பெண்க்ள் செல்லவேண்டும். இது எழுதப்படாதச் சட்டம்’ என்று கண்ணீர் வடித்துக்
கொண்டே, சரசு சொல்லி முடித்தாள்.

சுப்புவுக்கு தூக்கி வாரிப் போட்டது. அவன், நண்பன் அன்று சொன்னதும்
நினைவிற்கு வந்தது. பக்கத்து பாஞ்சாயாத்து ஆபிசில் சாவி வாங்கிக்கொண்டு,
சரசுவின் அண்ணன், பெண் பார்க்க வந்த அன்று கூட்டிக்கொண்டு போனது
அவனுக்கு நினைவிற்கு வந்தது.

“சரசு, நீ இனி கவலயே படவேண்டாம். நீ தான் என் மனைவி.
குடும்பத்தோடு அடுத்த வாரம், வருவேன்’ என்று கூறிக்கொண்டு,
மலைக்கோட்டை ரயிலை பிடிக்க ஓடினான்.

சரசு, மாரியம்மன் காலில் விழுந்து ஆனந்தக்கண்ணிரோடு எழுந்து,
அம்பாளை பார்த்தாள்.

வலங்கை மாரியம்மன் , லேசாக சரசுவை பார்த்து , புன்னகைப்பதுப்போல்
தோன்றியது.

இரா. ஜெயானந்தன்.


NOTE;
;

* கோளா – மராட்டியர்கள், ஆட்டுக்கறி கைமாவில் செய்யும் கறி உருண்டை.

* பாடை  கவடி – வலங்கைமானில் , உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்
நோயாளிகள் , உயிர் பிச்சைக்கேட்டு, மாரியம்மனிடம் வேண்டி, பிழைத்தால்,
உயிரோடு பாடையில் படுத்து, சவ ஊர்வலமாக, கோவிலைச் சுற்றி வருவர்.

Series Navigationமுள்வெளி – அத்தியாயம் -7அகஸ்டோவின் “ அச்சு அசல் “
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *