உருது மூலம்- இஸ்மத் சுக்தாய்
ஆங்கிலம் வழி தமிழில்-ராகவன் தம்பி
காட்சிரூபமான வகையில் என்னுடைய நினைவின் சுவடுகளைப் பின்னோக்கித் தேடிப் பயணிக்க வேண்டும். – எனக்கு எதிரே சிகப்பு நிறத்தில் கண்ணாடிகள் சுழன்று கொண்டிருக்கும் ஒரு வட்டமான அறை. அந்தக் கண்ணாடி அறையில் என் கைகளைத் தட்டி நான் களித்து விளையாடுவதை என் மனக்கண்களால் காண்கிறேன்.
அந்தக் கண்ணாடி அறையானது நான் சில மாதங்கள் வாசம் செய்த என் அம்மாவின் கருவறை. இன்று கூட, சில நேரங்களில் எங்கள் வீட்டில் இருக்கும் அந்தக் கண்ணாடி அறையை என்னுடைய கருவறையாகத்தான் காண்கிறேன். பிறகு, இன்னும் ஒரு வட்டத்தைக் காண்கிறேன். அந்த வட்டத்தின் மையத்தில் நான் நிற்கிறேன். அழகு மிளிரும் வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணமயமான ஆடையை நான் அணிந்திருக்கிறேன். என்னைச் சுற்றிச் சுற்றி எல்லோரும் வட்டமிட்டு நர்த்தனமாடுகின்றனர். மாமாவின் திருமணத்தில் நான் சுழன்று சுழன்று நடனமாடிக் கொண்டிருந்ததை என் நினைவுக்கு மீண்டும் கொண்டு வருகிறேன்.
சுற்றி நிறைய பேர் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனாலும் நின்று கொண்டிருக்கும் அவர்கள் என்னைச் சுற்றிச் சுற்றி வருவதுபோல எனக்குக் காட்சியளிக்கிறார்கள் ஏதோ நான் சிலையாக நடுவில் நின்றிருந்தபோது அவர்கள் எல்லாம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து நடனமாடியது போலத்தான் இன்று கூட என்னால் உணரமுடிகிறது.
எங்கள் வீட்டில் வெள்ளை நிறத்தில் ஒரு பெண் குதிரை இருந்தது. என்னுடைய சகோதரர்கள் அனைவரும் முறைபோட்டுக் கொண்டு அந்தக் குதிரையின் மீது சவாரி செய்தார்கள்.
மாப்பிள்ளை அவர்களை குதிரையின் மீது ஏற்றிக் கொண்டு அந்தத் தெருவைச் சுற்றி வருவதற்கு அழைத்துச் சென்றார். நான் பொறாமை கலந்த பார்வையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தக் குதிரையின் மீது ஏறி நானும் ஒரு வட்டமடித்து வரவேண்டும் என்று அவர்களிடம் மன்றாடுவேன். நான் கேட்பதைக் காது கொண்டு கேட்கமுடியவில்லை. அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. “பெண்கள் எப்படி குதிரை மீது ஏறிச் சவாரி செய்யலாம்? அந்தக் குதிரை மீது நீ ஏறினால் காலை முறித்து விடுவேன்” என்று கடுமையாக என்னை எச்சரித்தாள். என் சகோதரர்கள் மிகவும் பெருமையுடன் குதிரையின் மீது ஏறி வலம் வரும்போது கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் பொங்கி வரும்.
ஒருமுறை என்னுடைய சகோதரன் ஒருவன் குதிரை மீது மிகவும் கர்வமாக ஏறி உட்கார்ந்திருந்தான். அந்தச் சமயம் அப்பா நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பியிருந்தார். “இந்தப் பெண் ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாள்?” என்று கல்யாண மாப்பிள்ளையைக் கேட்டார்.
“அவளுக்குக் குதிரை மீது உட்கார்ந்து சவாரி செய்ய வேண்டுமாம்” என்றார் மாப்பிள்ளை.
“பிறகு ஏன் அவளை நீங்கள் உட்காரவிடவில்லை?” என்று அப்பா கேட்டார்.
“பேகம் அனுமதி தரவில்லை” என்று விளக்கினார் மாப்பிள்ளை.
“பாவம் குழந்தை. அவளும்தான் அதன் மீது சவாரி செய்யட்டுமே” என்றார் அப்பா.
இதற்குப் பிறகு. நான் தினமும் அந்த வெள்ளைக் குதிரை மீது ஏறி உட்காருவேன். அப்படி உட்கார்ந்ததால் ஏதோ கடுமையாகப் போராடி எதையோ வெற்றி கொண்டது போன்ற மகிழச்சி கலந்த உணர்வு இருந்தது எனக்கு.
அதுதான் இஸ்மத் –
இந்த குதிரைச் சவாரி, இஸ்மத் என்னும் கலகக்காரி அடைந்த முதல் வெற்றியாகும்.
என் சகோதரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பதற்கு வெளியே அழைத்துச் செல்லும்போது என்னுடய கையிலும் துப்பாக்கியைக் கொடுத்து எப்படிக் குறி பார்த்துச் சுடவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார் அப்பா.
பெற்றோர்களுக்குப் பத்தாவது குழந்தையாக நான் பிறந்தேன். நான் பிறந்த பிறகு என்னுடைய தாயாருக்கு குழந்தைகளின் மீது இருந்த ஆர்வம் சுத்தமாக மறைந்துவிட்டது. பாட்டியும் அக்கா பாஜியும் என்னைப் பார்த்துக்கொண்டது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டி போய்விட்டாள். தலையை ஒருபுறமாகத் திருப்பிக் கொண்டு அவள் உட்காரும் அந்த பாவனை இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. பச்சை நிறம் கலந்த நிழலுருவாக அவள் மடிந்து உட்கார்ந்து இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். பாஜி என் மீது பெரிதும் அக்கறை செலுத்தினாள். அவளுடைய கால்களையே எப்போதும் கட்டிக் கொண்டிருப்பேன். அந்த நேரங்களில் அது மிகவும் பாதுகாப்பாக இருந்தது போல உணர்ந்திருக்கிறேன்.
அம்மா என் மீது வெறுப்பு கொண்டதற்கு சாத்தியங்கள் நிறைய இருந்திருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவள் பிள்ளை பெற்றாள். ஆண்டவன் அந்தக் காலத்தில் மனிதர்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதற்கு சில விநோமான வழிவகைகளையும் வைத்திருந்தார் என்று நினைக்கிறேன். குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள மனிதர்களுக்கு உதவி புரிவதற்கு சில நேரங்களில் குரங்குகளையும் ஆசீர்வதித்து பூமிக்கு அனுப்பி இருக்கிறார் ஆண்டவன் என்று தோன்றுகிறது.
ஒருமுறை, எங்கள் வீட்டு முற்றத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அடியில் சாய்ந்து படுத்திருந்தாள் அம்மா. கிண்ணம் ஒன்றில் வேர்க்கடலையோ வேறு ஏதோ தானியம் ஒன்றைப் படுத்தவாறே கொறித்துக் கொண்டிருந்தாள். வேர்க்கடலை இருந்த அந்தக் கிண்ணத்தை தன்னுடைய கர்ப்பம் தரித்த வயிற்றின் மீது வைத்துக் கொண்டு மல்லாந்து படுத்து கொறித்துக் கொண்டிருந்தாள். மரத்தின் மீது உட்கார்ந்திருந்த குரங்கு ஒன்றுக்கு தானும் அந்த வேர்க்கடலையில் கொஞ்சம் சாப்பிடலாமே என்று தோன்றியிருக்கிறது. தான் உட்கார்ந்திருந்த அதி உயரமான கிளையில் இருந்து நேராக அம்மாவின் வயிற்றின் மீது அந்தக் குரங்கு குதித்திருக்கிறது. குரங்கு குதித்த அதிர்ச்சியில் அம்மாவின் வயிறு கலங்கி, கர்ப்பம் கலைந்து போனது. அதன் பிறகு அம்மா எப்போதும் கர்ப்பம் தரிக்கவில்லை.
எனக்கு நான்கு வயதானபோது பாஜிக்கு திருமணம் நடந்தது. நெடுநெடுவெனக் கெச்சலாக இருந்த அந்த மாப்பிள்ளை அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். கல்யாணத்தின் போது அவர் அணிந்திருந்த ஆடம்பரமான மாலைகளைப் பிய்த்து எறிய வேண்டும் என்று எனக்குள் வெறி வந்தது. அவர் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரியாம். வீட்டில் இருந்த எல்லாக் குஞ்சு குளுவான்களும் என்னை சீண்டும் வகையில் எதையோ உரத்துப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
“பாஜியின் கால்விரல் மோதிரம்
கன்றிக் கனத்துப்போனதால்
போலீஸ்காரன் அவளை
பிடித்துக் கொண்டு போய்விட்டான்”
என்று கூச்சலிட்டுப் பாடினார்கள். எரிச்சலாக இருந்தது எனக்கு. பாஜி என்னை அப்படித் தனியாக விட்டுப் போவதை நான் வெறுத்தேன்.
கல்யாண வீட்டின் வாத்திய இரைச்சலுக்கு இடையில் என்னுடைய அழுகை சத்தம் அடங்கிப் போனது. பாஜி எங்கள் வீட்டை விட்டுத் தன் கணவனுடைய வீட்டுக்குக் கிளம்பிப் போனாள் இந்தக் களேபரத்தில் ஒரு சிறுமியின் அழுகையை யார் சீந்தப் போகிறார்கள்? இருண்டு போன நீளமான சாலை ஒன்றில் வழி தெரியாமல் கண்ணீரைச் சிந்தி அழுது கொண்டே போகும் ஒரு பெண்ணை பல முறை என் கனவுகளில் பார்த்து இருக்கிறேன். அது வேறு யாருமில்லை. நான்தான்.
எனக்கும் மற்ற மூத்த சகோதரிகளுக்கும் இடையே பெரிய அளவில் வயது வித்தியாசம் இருந்தது. அவர்கள் எல்லோரும் ஒரு மூலையில் வட்டமாகக் கூடி உட்கார்ந்து கொண்டு எப்போதும் தங்கள் வருங்காலக் கணவர்களைப் பற்றிய வம்புகளைத் தங்களுக்குள் குசுகுசுவென்று பரிமாறிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அருகில் நான் நெருங்கிப் போகும்போதெல்லாம் என்னை விரட்டிவிடுவார்கள். கூட விளையாடுவதற்கு எனக்குத் துணை யாரும் கிடையாது. நான் தனிமைப் படுத்தப் பட்டேன். தங்கள் வட்டத்தின் அருகில் நெருங்குவதற்குக் கூட யாரும் என்னை எப்போதும் அனுமதித்தது இல்லை.
என்னுடைய சகோதரிகளைப் போல, அர்த்தம் ஏதுமின்றி முட்டாள்தனமாக ஏதாவது அரட்டை அடித்துக்கொண்டிருப்பதை விட ஒரு கொய்யா மரத்தின் மீது ஏறுவது எத்தனையோ பரவாயில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் புரிய ஆரம்பித்தது. வேலைக்காரர்கள் சமைக்கும் போது அவர்கள் தலைமீது ஏறி நிற்பதை விட, மரங்களின் மீது அங்குமிங்கும் ஓடியாடி சேஷ்டைகள் புரியும் குரங்குகளை வேடிக்கை பார்ப்பது இன்னும் சுவாரசியமாக இருந்தது. ஏதாவது ஒரு வம்புக்கு அலைவதை விட கோழிகளைப் பிடிப்பதற்கு அவற்றின் பின்னால் ஓடித் துரத்திச் செல்வது எளிதாக இருந்தது. நான் எப்போதுமே வித்தியாசமான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் வழியே நடப்பதை அதிகம் விரும்புவேன். இப்போதும் அதுபோன்ற பாதையில் நடப்பதைத்தான் விரும்புகிறேன். நான் எப்படி வளருகிறேன் என்பதில் அக்கறை காட்ட இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்? என்னுடைய சகோதரர்களுடன், ஆண்பிள்ளைகள் விளையாடும் அத்தனை விளையாட்டையும் விளையாடி இருக்கிறேன். கில்லி விளையாடியும் பட்டங்கள் பறக்கவிட்டும், கால்பந்தை உதைத்து கொண்டும் என்னுடைய பன்னிரெண்டாவது வயதில் காலெடுத்து வைத்தேன். அதே நேரத்தில் குர்ரான் முழுவதும் வாசித்து முடித்திருந்தேன். என்னைப் பாராட்டுவதற்கு பதிலாக எல்லோரும் என்மீது குறைகண்டார்கள். “எத்தனை தாமதமாகக் குர்ரானை முடித்து இருக்கிறாள் என்று பாருங்கள். இந்த வயதிலா முடிப்பது? அவளுடைய அக்கா மகளுக்கு வெறும் ஐந்தே வயதாகிறது. அந்தப் பெண் அத்தனையும் வாசித்து முடித்து விட்டாள். அவளுக்குத் துணிகள் தைக்கவும் தெரிந்திருக்கிறது”. அந்தப் பெண் எனக்கு மிகவும் பிரியமான விதவை சகோதரி ஒருத்தியின் மகள். ஒரு தந்தி வீட்டுக்கு வந்ததால் வீடே எப்படி அமர்க்களப் பட்டது என்று இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. என்னுடைய சகோதரியின் கணவர் இறந்துவிட்டார். என்னுடைய பாஜி வீட்டுக்குத் திரும்பி வருவாள் என்பதால் நான் சந்தோஷமாக இருந்தேன். இருள் சூழ்ந்த தெருவில் பாதை தெரியாமல் நடந்து செல்லும் பெண் என் கனவில் வருவது நின்றிருந்தது. இறந்தது பாஜியின் கணவர் அல்ல. அதுவேறு ஒரு சகோதரியின் கணவர் என்பதை அறிந்தபோது, கடவுள் என் மீது எந்தவகையிலும் கருணை வைக்கவில்லை என்பது புரிந்தது.
எனக்கு பன்னிரெண்டு வயதான போது அம்மா ஒரு பெரிய வர்ணமயமான அலங்காரப் பாவாடையை என்னிடம் கொடுத்து அதற்கு நாடா தைக்கச் சொன்னாள். “இந்த வேலை உனக்கு சீக்கிரமாகப் பழகிவிடும் என்றாள். எனக்கு எதிரில் உட்கார்ந்து நான் ஊசி நூல் கொண்டு நாடாவைத் தைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கென்னமோ மூச்சுத் திணறுவது போல இருந்தது. என்னுடைய சகோதரர்கள் கோழியை விரட்டிச் செல்வதையும் மரங்களின் மீது ஏறுவதையும் ஏக்கத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே நாடாவைத் தைக்கும்போது பல நேரங்களில் ஊசி கைதவறி என் விரல்களில் வலுவாகக் குத்தி ரத்தம் வந்திருக்கிறது. நல்லவேளை அம்மாவை வேறு ஏதாவது வேலைகளுக்காக யாராவது கூப்பிடுவார்கள். அம்மா அந்தப் பக்கம் நகர்ந்ததும் நான் செய்து கொண்டிருக்கும் தையல் வேலையை அரைகுறையாக நிறுத்தி அந்தப் பாவாடையை சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் ரஜாய் போர்வைகளில் யாருக்கும் தெரியாமல் செருகி வைத்துவிடுவேன். குளிர்காலத்தில் யாராவது அந்த ரஜாய் போர்வைகளை வெளியே எடுத்தால் ஊசி நூலுடன் பாவாடை கீழே விழுந்து என்னைக் காட்டிக் கொடுத்துவிடும்.
பிறகு நான் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டாள். “நான் கற்றுக் கொள்ளமாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தேன்.
“ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது என்று அம்மா கேட்டாள்.
இந்த சமையலை ஷஹனாஸ் பாய் ஏன் கற்றுக் கொள்ளக் கூடாது?” என்று எதிர்க்கேள்வி கேட்டேன்.
“அவன் தன்னோட மனைவியை வீட்டுக்கு அழைத்து வரும்போது அவனுக்காக அவள் சமைத்துப் போடுவாள்” என்றாள் அம்மா.
“அவள் செத்துப்போய்விட்டாலோ அல்லது ஓடிப்போய்விட்டாலோ அவனுக்காக யார் சமைத்துப்போடுவார்கள்?” என்று கேட்டேன்.
அவனுடைய மனைவி ஓடிப்போய்விட்டால் என்று நான் கேட்ட கேள்வியைத் தாங்கமுடியாமல் ஷஹனாஸ் கண்ணீர் விட்டு அழத்துவங்கினான். அந்த நேரம் பார்த்து அப்பா வீட்டுக்குள் நுழைந்தார்.
பெண்கள்தான் சமைக்க வேண்டும் இஸ்மத். உன்னுடைய புருஷன் வீட்டுக்குப் போனால் அங்கே நீ என்ன சமைத்துப் போடுவாய்? என்று மிகவும் மென்மையாகக் கேட்டார்.
“என்னுடைய கணவன் ஏழையாக இருந்தால் வெறும் கிச்சடி சமைப்பேன். பணக்காரனாக இருந்தால் ஒரு சமையல்காரனை வேலைக்கு வைத்துக் கொள்வேன்” என்றேன்.
“அப்புறம் நீ என்ன செய்வாய்?” என்று அப்பா கேட்டார்.
“என்னுடைய எல்லா சகோதரர்களும் படிக்கிறார்கள். அவர்களைப் போலவே நானும் படிப்பேன்” என்றேன்.
எனக்குப் படிப்பு கற்பிக்கும் வேலை என் மாமாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு மாதம் தொடர்ச்சியாகக் கடும் முயற்சி எடுத்து இரவு பகலாகத் தயார் செய்த பின்னர் உள்ளூர் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப் பட்டேன். பிறகு எனக்கு இரட்டை உயர்வு கிடைத்து ஆறாம் வகுப்புக்குப் போனேன். முற்றிலும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். கல்வியறிவு இல்லாமல் ஒரு பெண்ணால் சுதந்திரமாக இருக்க முடியாது. படிப்பறிவு இல்லாத பெண் ஒருத்தி திருமணம் செய்து கொண்டால் அவளுடைய கணவன் அவளை “முட்டாள்” என்றோ படிப்பறிவு இல்லாத ஜடம் என்றோ அழைப்பான். அவன் வேலைக்குப் போனால் அவள் அவன் திரும்பி வரும்வரை அவனுக்காக வீட்டில் காத்து இருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும் சரி. மற்றவர்கள் என்னை அதிகாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று நினைத்தேன். அதனால் எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.
திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால் அண்டை வீட்டில் உள்ள ஒரு பையனைப் பற்றி என் கற்பனைகளை வளர்த்துக் கொண்டேன். அவனுடன் கற்பனையில் உலாவி வந்தேன். அப்போது எனக்கு பனிரெண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கும். ஒரு பெண்ணின் மனதில் காதல் உணர்வுகள் குடிபுகத் துவங்கும் வயது அது. அப்போது அவனுக்கு சுமார் இருபத்தாறு வயதிருக்கும். எங்களுடைய பங்களாவுக்குப் பக்கத்தில் குடியிருந்தான். காலையில் எங்கள் வீட்டின் வழியாக குதிரையில் ஏறிச் செல்வான். அவன் அப்படி குதிரை மீது ஏறி சவாரி செய்வதை தினமும் காலையில் உட்கார்ந்து பார்ப்பது என்னுடைய தினசரி சடங்கு போல ஆகிப்போனது. தன்மீது இப்படிப் பைத்தியம் கொண்டு ஒரு சின்னப்பெண் இப்படி அலைவாள் என்று அவன் நினைத்துப் பார்த்திருக்க மாட்டான். அவன் மிகவும் அழகாக இருந்தான். ஆனால் அவன் எதற்கு என்னைப் பார்க்க வேண்டும்? அவனுடைய சமவயது இருக்கும் யார் மீதாவது அவனுடைய பார்வை விழுந்திருக்க வேண்டும். நான் செய்த ஒரே காரியம் –அவன் தன் குதிரை மீது ஏறி கம்பீரமாக சவாரி போவதை தினமும் வைத்த கண் வாங்காமல் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதுதான். ஷஹீத் லத்தீஃப் சினிமா செட்டில் முப்பது ஆண்டுகள் கழித்து அவனை அப்படித்தான் பார்த்தேன். என்னை அடையாளம் கண்டு கொண்டதும் விரைந்து என்னைக் கட்டியணைத்துக் கொண்டான். “அயோக்கியப் பயலே” என்று என் உள்மனத்தில் அவனைத் திட்டினேன். இப்போது வந்து இப்படிக் கட்டிப் பிடிப்பதால் யாருக்கு என்ன பயன்? முப்பது வருடங்களுக்கு முன்பு இப்படி என்னை நெருக்கி அணைத்திருந்தால் என்னுடைய உலகத்தில் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும்? அப்போது என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. என்னுடைய முப்பது ஆண்டு வாழ்க்கையை காதல் உணர்ச்சியால் நிரப்பி அந்தக் காதல் அனைத்தையும் உன்மீது பொழிந்தேனே என்னைக் காதல்வயப்பட வைத்த அந்த அழகிய ராஜகுமாரனை, என் உதடுகளை உலர வைத்த வைத்த அந்த அயோக்கியனை இப்போது கூட என்னுடைய மனதில் வைத்திருக்கிறேன்.
பள்ளியில் மனதைக் கவர்ந்திருழுக்கும் வகையில் சில பையன்கள் இருந்தார்கள். அழகான தோற்றம் உடையவர்கள் மற்றும் திறமையான பையன்களின் பின்னால் பெண்கள் அலைந்து கொண்டிருப்பார்கள். ஒல்லிப்பிச்சான்களாக, பிணக்களையுடன் சோம்பேறித்தனமாக எதற்கும் லாயக்கில்லாத பையன்கள் பெண்களைத் துரத்திக் கொண்டிருப்பார்கள், இந்த இரு அதீதங்களுக்கு இடையில் உண்மையிலேயே பார்க்க மிகவும் களையான முகம் கொண்ட கிறிஸ்துவப் பையன் ஒருவன் அனைவரின் கவனத்தைக் கவர்ந்து கொண்டிருந்தான். நான் அவனிடமும் நட்பு வைத்திருந்தேன். எல்லாப் பெண்களும் அவனுடைய வீட்டு விருந்துகளுக்குப் போய் போவார்கள். கேக், பட்சணங்கள் எல்லாம் சாப்பிட்டு வருவார்கள்.
அந்த நாட்களில் எங்கள் கல்லூரியில் பெண்கள் குறைந்த அளவில் மட்டுமே இருந்தார்கள். மௌலானா ஆஸாத், நேருஜி, விஜயலக்ஷ்மி பண்டிட் போன்ற தலைவர்கள் எல்லாம் எங்கள் பல்கலைக்கழகத்துக்கு சொற்பொழிவாற்ற வருவார்கள். அவர்களின் சொற்பொழிவைக் கேட்க நாங்கள் பையன்களின் விடுதிக்கு செல்லுவோம். அந்தக் கூட்டங்களின் போது பையன்கள் எல்லாம் ஏதோ பெரிய பிரமுகர்கள் போல கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமரிக்கையாக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். கூட்டம் முடிந்து தெருவில் இறங்கிய மறுகணம் ரவுடிகளைப் போல அமளியில் ஈடுபடுவார்கள். பல்கலைக் கழகக் கட்டடத்துக்கு எதிராக ஓடும் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி நடந்து செல்லும்போது உரத்த குரலில் கெட்ட வார்த்தைகளாகப் பேசுவார்கள். ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் உரக்க சிரிப்பார்கள். காரணமே இல்லாமல் ஒருவர் மீது இன்னொருவர் சரிந்து விழுந்து சிரிப்பார்கள். இதையெல்லாம் கண்டும் காணாதது போல பெண்கள் தலையைக் குனிந்தும் பார்வையைத் தாழ்த்திக் கொண்டும் வேகமாக நடந்து அவர்கள் இடத்துக்குப் போய் சேரவேண்டியிருக்கும். இந்த நாடகம் எனக்குப் பெரும் கொதிப்பை ஏற்படுத்தும்.
பெண்கள் தங்களிடம் பேசுவதால் இந்தப் பையன்களுக்கு ஏதோ போதை ஏறிப்போகிறது என்ற அபிப்ராயத்தில் எங்கள் ஆசிரியர்கள் இருந்தார்கள். நான் பெண்களிடம் சொல்வேன்-”இந்தப் பையன்கள் நம்மோடு நட்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நம்மை அவர்கள் விழுங்கி விடமாட்டார்கள். அவர்களுடன் நாம் ஏன் நட்பினை வளர்த்துக் கொள்ளக் கூடாது? ஆனால் எந்தப் பெண்ணும் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒருநாள் வகுப்பு முடிந்த பிறகு ரயில் தண்டவாளத்தின் இந்தப் பக்கம் பெண்களும் அந்தப் பக்கம் ஆண்களுமாக நடந்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு பையன் ஒரு கவிதையை உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான். அவனை நோக்கி கேள்வி கேட்க வேண்டும் என்னும் உந்துதலை என்னால் அடக்கிக் கொள்ள முடியவில்லை.
“இது ஜிகர் எழுதிய கவிதைதானே?”
அந்தப் பையன் தன் கழுத்தை இடமிருந்து வலமாகத் திருப்பிக் குரல் வரும் திசையைத் தேடினான். தன்னைக் கேள்வி கேட்கும் குரல் ஒரு பெண்ணுடையது என்பதைத் தெரிந்து கொண்டதும் அதிர்ச்சி அடைந்தான். நான் மீண்டும் என் கேள்வியைத் திரும்பக் கேட்டேன்.
“எனக்குத் தெரியாது” என்று அவன் திக்கித் தடுமாறினான்.
“பிறகு இருட்டில் ஏன் அம்புகளைத் தொடுக்கிறாய்? இந்தக் கவிதையை எழுதியது கவிஞர் தாக்” என்று சொன்னேன். பிறகு பெண்கள் பக்கம் திரும்பி, “பாருங்கள். என்னை யாராவது விழுங்கி விட்டார்களா? நான் இன்னும் உயிரோடுதானே இருக்கிறேன்?” என்று கேட்டேன்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு சில பையன்களுடன் எங்கள் நட்பு துவங்கியது. புத்தகங்கள் பற்றியும் கவிதைகள் பற்றியும் நாங்கள் ஒன்றாகக் கூடி விவாதித்தோம். எங்களில் மூன்று அல்லது நான்கு பெண்கள், சில பையன்களை விட்டு தேனீர் வாங்கி வரச் செய்தார்கள். பையன்களை நாங்கள் சந்திப்பதற்கு முன்பே உணவு விடுதியில் அன்று அவர்களை என்ன வாங்கித் தரச் சொல்லவேண்டும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது. சோடா, சமோஸா மற்றும் உருக்கிழங்கு கட்லட்டுகள் என மாறி மாறித் தொடர்ந்தன பையன்களுக்கு அவர்களுடைய வீடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் மாம்பழங்கள், இனிப்பு வகைகள் போன்ற எல்லா நல்ல விஷயங்களையும் அவர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். சில நேரங்களில் ஆசிரியர்கள் இவர்களிடம் மாம்பழங்களைக் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.
நாங்கள் விடுமுறைகளில் எங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகும்போது பையன்களும் எங்களுடன் அதே ரயிலில் வருவார்கள். ரயில் வண்டி ஸ்டேஷன்களில் நிற்கும்போதெல்லாம் பையன்கள் எங்கள் பெட்டியின் அருகில் வந்து நிற்பார்கள். பயந்துபோன பெண்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கிப் போவார்கள். வெளியில் பிளாட்பாரத்தில் விற்கும் அனைத்துப் பொருட்களையும் உள்ளிருந்தபடியே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். வெளியில் இறங்கிப் போய் அவற்றை வாங்கி வரும் தைரியம் யாருக்கும் இருந்ததில்லை. நாங்கள் தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தோம். இந்தப் பயணம் மிகவும் அசௌகரியமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். அடுத்த நிறுத்தத்தில் எங்கள் பெட்டிக்கு அருகில் நின்றிருந்த பையன் ஒருவனை சத்தம் போட்டு அழைத்தேன். “ஏய் ஒரு நிமிஷம் இங்கே வா”
அவனுக்குப் புரியவில்லை. நான் சைகையால் மீண்டும் அவனைக் கூப்பிட்டேன்.
அவன் ஜன்னலுக்கு அருகில் வந்தான். பதட்டமாக இருந்தான்.
“எனக்கு ஒரு சோடா வாங்கித் தர முடியுமா?” என்று கேட்டேன்.
“தாராளமாக” என்றான் அந்தப் பையன்.
கண் சிமிட்டும் நேரத்தில் என் கையில் ஒரு சோடா பாட்டில் இருந்தது. அந்தப் பையனுக்கு நான் பணம் கொடுத்தேன். வாங்க மறுத்து விட்டான்.
“எனக்காக கடையில் இருந்து சோடா வாங்கித் தந்து உதவி செய்திருக்கிறாய். ஆனால் நான் குடிக்கும் சோடாவுக்காக நீ ஏன் பணம் தரவேண்டும்? என்று பணத்தை நீட்டியபடியே அவனிடம் கேட்டேன்
ரயில் கிளம்பியது. ஒரு பையனிடம் சோடா கேட்டு வாங்கிக் குடித்ததற்காக என்னுடைய டீச்சர் என்னிடம் வெறி பிடித்தது போலக் கூச்சல் போட்டார்.
“அவன் திரும்ப வந்தால் எனக்கு சாப்பிடவும் ஏதாவது வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவேன். அவனிடம் வெறுமனே பேசினேன். இதில் தவறு என்ன இருக்கிறது. அடுத்த ஸ்டேஷனில் அவனை உங்களுக்கும் ஒரு சோடா வாங்கி வரச் சொல்கிறேன்” என்று என் டீச்சரிடம் பதிலுக்குச் சொன்னேன்.
டீச்சர் இதனை நல்ல விதத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றபோது சில பையன்கள் எங்கள் பெட்டிக்கு அருகில் வந்து நின்றார்கள். வண்டி எப்போதெல்லாம் பிளாட்பாரத்தில் நின்றதோ அப்போதெல்லாம் அந்தப் பையன்களை எங்களுக்காக ஏதாவது வாங்கி வரச் சொன்னோம். அவர்களுடன் நாங்கள் மிகவும் சகஜமாகப் பழகினோம். ரயில் பயண அனுபவம் மிகவும் இனிமையாக அமைந்தது.
குழந்தையைப் போல தூக்கத்தில் நடக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. என்னுடைய பத்து, பன்னிரெண்டு வயது வரை இந்தப் பழக்கம் தொடர்ந்தது. ஒருமுறை தூக்கத்தில் நடந்து சென்று கதவின் தாழ்ப்பாளை விலக்கி தோட்டத்துக்குப் போய்விட்டேன். விழித்துப் பார்த்தபோது நான் ஒரு மரத்தின் அடியில் நின்றிருந்தேன். அந்த மரத்தை நாங்கள் பேய் மரம் என்று பெயரிட்டிருந்தோம். நான் பேய், பிசாசு, பூதம் எவற்றையும் பார்த்தது கிடையாது. ஆனால் என் மீது இவற்றில் ஏதோ ஒன்று பிடித்திருக்கிறது என்று அம்மா நம்பினாள். தர்காக்களுக்குச் சென்று ஃபாத்திஹா ஓதினாள். அங்கிருந்து ஒரு குச்சியை வாங்கி வந்தாள். அந்தக் குச்சியை என் தலைமீது அடித்து என்னைப் பிடித்திருக்கும் பேயை ஓட்ட முயற்சிப்பாள். அங்கு எந்தப் பேயும் இல்லை. பேய் விட்டு விலகவில்லை. என்னைப் பிடித்துக் கொள்வதை விட உருப்படியான வேறு காரியத்தைத் தங்களால் செய்யமுடியும் என்பதைப் பேய்களும் உணர்ந்திருந்தன.
நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது என்னைப் பெண் கேட்டு வரத் துவங்கினார்கள். தன்னுடைய கடைக்குட்டி மகளை ஒரு டெபுடி கலெக்டருக்குத்தான் தருவேன் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். தையல்காரர்களும் நகைக்கடைக்காரர்களும் எங்கள் வீட்டில் உட்கார்ந்திருந்தார்கள். ஒருநாள் பள்ளியில் இருந்து திரும்பி வந்தபோது வீட்டில் நிலவும் சூழல் புரிந்தது. அப்போது கல்யாணம் ஆகாது இருந்த சகோதரிகள் யாரும் எனக்குக் கிடையாது. பிறகு ஏன் இந்தக் களேபரம்? சற்று தீவிரமாக விசாரித்தபோது புரிந்தது. எனக்குத்தான் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். எனக்குக் கவலையாக இருந்தது.
“நான் கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன். எனக்குப் படிக்க வேண்டும்” என்று அப்பா அம்மாவிடம் அடம் பிடித்தேன்.
“இது ஒரு பைத்தியம்” என்றாள் அம்மா.
“உன்னை யார் படிக்க வேண்டாம் என்று சொன்னது? உன்னுடைய புருஷன் வீட்டுக்குப் போய் நீ படித்துக் கொள்ளலாம்” என்று அப்பா நிதானமாகச் சொன்னார். “ஆமாம். எல்லோரும் புருஷன் வீட்டுக்குப் போய்ப் படித்துக் கிழித்து விட்டார்கள்” என்று நினைத்துக் கொண்டேன். “அந்தக் கலெக்டர் என்னுடைய அப்பா போல இருந்தால் என்ன செய்வது? வருஷத்துக்கு ஒரு பிள்ளை பெற்றுத் தள்ளிக் கொண்டிருப்பேனா அல்லது பரீட்சைக்குப் படிப்பேனா?”
மண்டையைக் குடைந்து யோசித்த பிறகு ஒரு தீர்வு எனக்குக் கிட்டியது. என்னுடைய மாமாவின் மகன்தான் அந்தத் தீர்வு. அவன் பம்பாயில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
“நீ ஒருவன்தான் இந்தப் பிரச்னையில் இருந்து என்னை விடுவிக்க முடியும். இதற்காக பெரிய காரியம் எல்லாம் நீ செய்ய வேண்டாம். நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றேதான். நீ என்னை மிகவும் விரும்புவதாகவும் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் உன்னுடைய அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுது. இது ஒன்றுதான் இப்போதைக்கு என்னுடைய கல்யாணத்தை நிறுத்த ஒரே வழி. குர்ரான் மீதும் அல்லா மீதும் என்னுடைய படிப்பின் மீதும் உனக்கு சத்தியம் செய்கிறேன். உன்னை சத்தியமாக நான் கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன். இப்போதைக்கு இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதற்காக நீ செய்யும் உதவியாக நினைத்து இதை செய்தால் உனக்குப் பெரும் புண்ணியம் உண்டு”
மாமா மகன் என்னுடைய இந்தத் திட்டத்துக்கு ஒத்துக் கொண்டான். சில நாட்கள் கழித்து அம்மா, வெள்ளை அடிப்பவர்களிடம் கூலிக்காக பேரம் செய்து கொண்டிருந்தபோது என்னுடைய மாமா வேகமாகவும் பதட்டத்துடனும் வீட்டுக்குள் நுழைந்தார்.
‘ஷௌகத், இஸ்மத்தை விரும்புகிறான். அவளை வெளியாட்கள் யாருக்கும் நீ கொடுக்கக் கூடாது. இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்” என்று முணுமுணுத்தார்.‘
அம்மாவுக்கு வாயெல்லாம் பல்லானது. தையல்காரர்கள் தைக்கத் துவங்கிய துணிகளை அறைகுறையாக விட்டுச் சென்றார்கள். பொற்கொல்லர்கள் உருக்கி வைத்த தங்கத்தை அப்படியே வைத்து விட்டு வெளியேறினார்கள். ஒருவழியாக என்னுடைய திருமணம் காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டது.
என்னுடைய சிறுவயதில் பெண்பிள்ளைகளாகிய நாங்கள் சன்னல்களில் திரைச்சீலைகளால் முடப்பட்ட ஓட்டைக் கார் ஒன்றில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவோம். என்னுடைய மெட்ரிக் படிப்பு வரை நாங்கள் அலிகரில் தங்கியிருந்தோம். பிறகு நான் லக்னோவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தங்கிப் படித்தேன்.
நான் குழந்தையாக இருந்தபோது எப்போதும் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டி ஒன்றில் அம்மா எங்களை வெளியில் அழைத்துச் செல்வாள். அந்தக் காலத்தில் எல்லா வாகனங்களின் சன்னல்களும் திரைச்சீலையால் மூடப்பட்டு இருக்கும். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது புர்க்கா அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள்.
இப்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நாங்கள் ஒரு ரயில் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தோம். வண்டி சேருமிடத்துக்குச் செல்லும் முன்பு எல்லாப் பெண்களும் புர்காக்களைக் களைந்து தங்கள் பக்கத்தில் வைத்திருந்தார்கள். வண்டி நின்றதும் புர்க்கா அணிந்து கொண்டுதான் இறங்கவேண்டும் என்று எனக்குத் தெரியும். பணியாட்கள் படுக்கைகளை சுருட்டிக் கொண்டிருந்தபோது ஒரு படுக்கையினுள் என்னுடைய புர்க்காவை ஒளித்து வைத்து விட்டேன். நன்றாக சுருட்டிக் கட்டப்பட்ட எட்டு மெத்தைகளில் ஏதோ ஒன்றில் என்னுடைய புர்க்கா ஒளிந்து கொண்டது. ரயில் நின்றதும் நான் மிகவும் பரபரப்புடன் புர்க்காவைத் தேடுவது போல பாவனை செய்து கொண்டிருந்தேன்.
“திருட்டுப்பெண்ணே, நீ புர்க்காவை ரயிலுக்கு வெளியே விட்டு எறியவில்லையே?” என்று அம்மா கேட்டாள்.
எல்லோரும் என் முதுகில் நாலு சாத்து சாத்தினார்கள். எல்லா அடிகளையும் வாங்கிக் கொண்டு தீர யோசிப்பது போன்ற பாவனையில் இருந்துவிட்டு பிறகு சொன்னேன். “ . நான் புர்க்காவை ஒரு தலையணையின் மீது வைத்திருந்த ஞாபகம் எனக்கு. ஒருவேளை அந்த மெத்தைகளில் ஏதாவது ஒன்றில் அது இருக்க வாய்ப்பு இருக்கிறது” என்றேன்.
இப்போது ஒன்றும் செய்ய முடியாது. அந்த மெத்தைகளை சுருட்டிக் கட்டுவதற்கு ஏறத்தாழ ஒருமணி நேரம் பிடித்தது. அவிழ்த்து மீண்டும் கட்ட வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு மணிநேரம் எடுக்கும். அதனால் புர்க்கா அணிந்து கொள்ளாமலேயே நான் ரயிலை விட்டுக் கீழே இறங்கினேன். பெரிய மனுஷி போல புர்க்கா மறைக்காத முகத்துடன் வெளியில் நடக்கத் துவங்கினேன்.
ஒருமுறை அப்பா கேட்டார், ’பள்ளிக்கூடத்தில் நீ முக்காடு போட்டுக் கொள்கிறாயோ?”
“இல்லை. தலைமீது துணியைப் போட்டுக் கொண்டால் நான் ஏதோ முட்டாள் போலத் தெரிகிறேன்” என்றேன்.
அப்பா ஆச்சரியமாகத் தனக்குள் எதையோ முணுமுணுத்துக் கொண்டார்.
நான் முகத்திரையை விலக்கிவிட்டேன். நான் உண்மையாகவே எதற்காவது என்னை மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேரிட்டால் வயதான பெண்மணிகள் யாரிடமிருந்தாவது புர்க்காவை இரவல் வாங்கிக் கொள்வேன். எது எப்படியோ, அப்பா பணியில் இருந்து ஓய்வு பெற்று லக்னோவுக்கு இடம் பெயர்ந்த போது எல்லாப் பெண்களும் தங்கள் புர்க்காக்களை ஒதுக்கி வைக்க வேண்டியதாயிற்று. என்ன நடந்தது என்றால், ஜோத்பூரின் இந்துப் பெண்கள் ‘சத்தர்’ எனப்படும் முக்காட்டை அணிந்து கொள்வார்கள். புர்க்கா அணிந்த முஸ்லீம் பெண்கள் தனித்துத் தெரிவார்கள். கிராமத்து சாவடியில் வெட்டியாக உட்கார்ந்து இருக்கும் அயோக்கியர்கள் அந்தப் பெண்கள் மீது கண் வைத்திருப்பார்கள். அவர்களின் பின்னால் அலைந்து அவர்கள் தொடர்பான எல்லா சங்கதிகளையும் அறிந்து வைத்திருப்பார்கள். இதனால் அக்கம்பக்கத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு முஸ்லிம் பெண்களும் இந்துப் பெண்களைப் போல சத்தர் என்னும் முக்காட்டை அணிந்து கொள்ளலாம் என்று பொதுவில் தீர்மானிக்கப்பட்டது. அப்போதுதான் இந்துப் பெண்களுக்கும் முஸ்லீம் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியாது. பிரச்சினை எளிதாகத் தீர்ந்தது. இந்தத் தீர்மானத்துக்குப் பிறகு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் புர்க்காவைத் துறந்து சத்தர் அணியத் துவங்கினார்கள். நான் கல்லூரியில் அடியெடுத்த வேளையில் புர்க்காவைத் தூக்கி எறிந்தேன். பல்கலைக் கழகத்துக்குச் சென்றபோது எப்போதாவது புர்க்காவை இரவல் வாங்கி அணிந்து சென்றிருக்கிறேன். பிறகு கதர் அணியத் துவங்கினேன்.
காந்திஜியின் லக்னோ விஜயத்துக்குப் பிறகு கதர் அங்கு புழக்கத்துக்கு வந்தது. எங்களில் சில பெண்கள் அவரை சந்திக்கச் சென்றோம். அவரிடம் நாங்கள் ஆட்டோகிராஃப் கேட்டபோது “நீங்கள் எல்லோரும் கதராடை அணிந்து கொண்டு என்னிடம் வாருங்கள். உங்களுக்கு நான் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன்” என்றார் காந்திஜி. அன்று மாலையே நாங்கள் அனைவரும் கதராடைகளை விலைக்கு வாங்கினோம். மறுநாள் நாங்கள் சுமார் முப்பது பெண்கள், ஒருமாதிரி விநோதமான வாடையடிக்கும், கஞ்சி போட்ட முரட்டுக் கதர் வேஷ்டிகளை அணிந்து கொண்டு காந்திஜியை தரிசிக்கச் சென்றோம். “இதோ பார், நான் முப்பது பெண்களை கதராடை அணியச் செய்து விட்டேன்” என்ற அர்த்தத்தில் காந்திஜியின் பொக்கை வாய்ச்சிரிப்பு சொல்வது போலத் தோன்றியது. புன்சிரிப்புடன் எங்களைத் தன்னருகில் உட்காரச் சொல்லி எங்கள் எல்லோருக்கும் நோட்டுப் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தார் காந்திஜி. என்னுடைய கதராடை வெறியால் ஒருமுறை நான் ஏறத்தாழ கைதாகும் நிலை ஏற்பட்டது.
அப்போது நான் வேலையில் இருந்தேன். அம்மாவைப் பார்ப்பதற்காக ஜோத்பூர் செல்லும் பயணத்தை மேற்கொண்டேன். பகல்நேரத்தை மூன்றாம் வகுப்பிலும் இரவில் தூங்குவதற்கு முதல் வகுப்பு கேபினையும் பதிவு செய்திருந்தேன். அப்போது ஒரு கதர் வேஷ்டியை நான் புடவை போல சுற்றி உடுத்தி இருந்தேன்.
ஜோத்பூருக்கு இரு ஸ்டேஷன்களுக்கு முன்பு, புலேரா என்னுமிடத்தில் இந்த ரயிலில் யாரோ ஒரு காங்கிரஸ் தலைவர் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்னும் செய்தி தீயாகப் பரவியது. அப்போது ஜோத்பூரில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தடை விதிக்கப்ட்டிருந்தது. முரட்டுக் கதர் வெள்ளை தோத்தியை அணிந்து கொண்டு கண் கண்ணாடியும் தோளில் தொங்கும் ஜோல்னாப்பையுடன் ஜோத்பூர் ஸ்டேஷனில் நான் இறங்கிய போது என்னை வரவேற்க போலீஸ் பிளாட்பாரத்தில் காத்துக் கொண்டிருந்தது. யதேச்சையாக அங்கு நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் என்னுடைய மாமா. ஒரு காங்கிரஸ் தலைவரை எதிர்பார்த்து நின்றிருந்த அவருக்கு அங்கு என்னைப் பார்த்ததும் ஆச்சரியம்.
“அட இது என் மருமகளப்பா… என்று ஆச்சரியத்தில் கூச்சலிட்டார். வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தார். ஆனால் வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும் என்னைப் பார்த்துக் கத்தத் துவங்கினார். அட மானங்கெட்ட மூதி… என்ன இதெல்லாம் என்று கர்ஜித்தார்.
அந்த அவமதிப்பு என்னைக் கொதிப்படையச் செய்தது. “என்ன செய்துவிட்டேன்? கதராடையைத்தானே அணிந்து கொண்டிருக்கிறேன். இதில் என்ன மானக்கேடு நேர்ந்து விட்டது?” என்று கேட்டேன். எனக்கென்று ஒரு வேலை இருந்தது. நான் பொருளாதார ரீதியாக சுதந்திரமானவள் இவரிடம் எதற்குப் பேச்சுக் கேட்க வேண்டும் என்று எனக்கு எரிச்சலாக இருந்தது.
ஜோத்பூர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியை பதவி காலியாக இருந்தது. பி.ஏ.பிடி படித்த ஒரே முஸ்லீம் பெண் நான் ஒருத்திதான். முஸ்லீம்களுக்கான உரிமைகள் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கை அப்போது வலுத்திருந்தது. என்னுடைய உரிமை எனக்குக் கிடைத்து விட்டது. அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். அந்தப் பள்ளிக்குச் சென்ற போது சத்தர் முக்காடு அணிந்து சென்றேன்.
“நீ புர்க்கா அணிய வேண்டும்” என்று ஒரு மாமா சொன்னார்
“என்ன விளையாடுகிறீர்களா? புர்க்கா அணியச் சொல்லி என்னை வற்புறுத்தினால் நான் வேலையை ராஜிநாமா செய்து விடுவேன்” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.
என்னுடைய பிடிவாதம் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். மெட்ரிக் வகுப்புக்குப் பிறகு நான் படிக்கக் கூடாது என்று அப்பா தடைவிதித்த போது அவரை நான் மிரட்டினேன்.
என்னை மேலும் படிக்க அனுமதிக்கவில்லை என்றால் ஏதாவது கிறிஸ்துவ மடத்துக்குச் சென்று கன்னியாஸ்த்ரீ ஆகிவிடுவேன்” என்றேன்.
“அங்கு எப்படிப் போவாய்?” என்று கேட்டார் அப்பா.
ரயில் தண்டவாளம் வழியாக நடந்து செல்வேன். எனக்கு வழி தெரியும். அவர்கள் என்னை கிறிஸ்துவளாக மதமாற்றம் செய்து தங்களுடைய பள்ளி ஏதாகிலும் ஒன்றில் சேர்த்துக் கொள்வார்கள்” என்றேன்.
அப்பா கொஞ்சம் இறங்கி வந்தார். என்னுடைய மேல்படிப்புக்கு பணம் செலுத்த ஒப்புக் கொண்டார். படிப்பில் தான் எனக்கு அதிக ஆர்வம் என்றும் திருமணம் செய்துகொள்வதில் எனக்கு சுத்தமாக ஆர்வம் இல்லை என்றும் தெரிந்து கொண்டார். ஆக்ராவில் என்னுடைய பெயரில் ஒரு சிறிய வீட்டை வாங்கினார். அது அப்போது சுமார் மூன்றாயிரம் அல்லது நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ளதாக இருந்திருக்கும். அந்த வீட்டை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி என் சகோதரனை அங்கு குடியிருக்கச் செய்தேன்.
அந்த வீட்டை விற்று விட்டு இங்கிலாந்துக்கு சென்று அங்கு ஏதாவது வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தேன். எனவே என் சகோதரனைப் பார்க்க ஆக்ரா சென்றேன். “தயவு செய்து அந்த வீட்டை விற்பதற்கு எனக்கு உதவி செய்யமுடியுமா? எனக்கு இங்கிலாந்து செல்வதற்குப் பணம் வேண்டும்” என்று அவனைக் கேட்டேன். “எந்த விடு?” என்று கேட்டான் சகோதரன். கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்த அந்த வீடா? ரொம்ப நாளைக்கு முன்பே உன்னுடைய கையெழுத்தை நாங்களே நகல் செய்து அந்த வீட்டை விற்றாகிவிட்டது. மிஞ்சிய கொஞ்ச நஞ்சப் பணத்தையும் உன்னுடைய அண்ணிக்கு நகை செய்வதற்காக செலவு செய்தாகிவிட்டது” என்றான்.
“ஐயோ, என்னை எதற்கு இழுக்க வேண்டும்? அந்தப் பணம் என்ன ஆனது என்று யாருக்குத் தெரியும்?” என்று இழுத்தாள் அண்ணி.
நான் கோபத்தில் புகைந்தேன். “பாய்ஜான், உன் மீது நான் வழக்குத் தொடுக்க முடியும் தெரியுமா?” என்றேன்.
“தாராளமாகத் தொடுத்துக் கொள். நான் ஜெயிலுக்குப் போனலும் போவேன். உன் பணம் மட்டும் உனக்குக் கிடைக்கும் என்று நினைக்காதே” என்றான் அண்ணன்.
“நீயே ஒரு வக்கீல்தானே. உன் மீது வழக்குத் தொடுக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று நீயே சொல்” என்று கேட்டேன்.
உனக்காக நான் வழக்காட முடியும். ஆனால் அதற்காக நீ எனக்கு முன்பணம் கொடுக்க வேண்டியிருக்கும்” என்றான்.
இதைக்கேட்டதும் அண்ணி மிரண்டுவிட்டாள். அவளைப் பொருட்படுத்தாது என்னிடம், ”நீ உண்மையாகவே இங்கிலாந்துக்குப் போக ஆசைப்படுகிறாயா?” என்று கேட்டான்.
“ஆமாம். உண்மையிலேயே ஆசைப்படுகிறேன்” என்றேன்.
சரி. நீச்சல் அடித்துக் கொண்டே போ” என்றான்.
பம்பாயில் இருந்து எப்படிச் செல்ல வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். இங்கு இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொள். அப்புறம் பம்பாயில் இருந்து நீந்திச் செல். சில நாட்களில் இங்கிலாந்து சென்றுவிடலாம்” என்றான்.
நாங்கள் பேசுவதை அவனுடைய மனைவி ஆர்வத்துடன் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். “அவ்வளவு தூரம் நீச்சல் அடித்துக் கொண்டு போனால் அவளுடைய உடைகளின் கதி என்ன?” என்றாள்.
எண்ணெயில் தோய்த்த ஆடைகளை அணிந்து கொண்டால் நனைய மாட்டாள். பிறகு என்ன?” என்றான் அண்ணன்.
அண்ணி பிறகு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினாள். “கடலில் பெரிய பெரிய மீன்கள் இருக்குமே. அவை எல்லாம் இவளைக் கடிக்காதா?”
கையில் பெரிய மூங்கில் கழியை வைத்துக் கொண்டு அந்த மீன்களை எல்லாம் விரட்டி விட்டால் போச்சு” என்றான் அண்ணன்.
என்னுடைய அண்ணன் மகனும் நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
ஃபூஃபூ.. உன்னுடன் நானும் வருகிறேனே” என்றான்.
அந்தப் பையன் எங்கள் உரையாடலில் பிரவேசித்ததும் என்னுடைய இங்கிலாந்து பயணம் முடிவுற்றது.
என்னுடைய வழியில் எதிர்ப்பட்ட எல்லா விலங்குகளையும் முறித்து எறிந்தேன். எதிரிகள் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பினார்கள். ஆனால் சொர்க்கம் எப்போது என்வசமே இருந்தது.
ஷஹீத் லத்தீஃபை முதன்முதலில் அலிகரில் சந்தித்தேன். நான் பி.டி. படித்துக் கொண்டிருந்தபோது அவன் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் என்னுடைய மனப்பரப்பில் அவனை நான் குறித்துக் கொண்டேன். பிறகு அவன் பம்பாய் போனான். அங்கு பம்பாய் டாக்கீஸில் 225 ரூபாய் சம்மளத்தில் கதைவசனம் எழுதுகிற வேலைக்கு சேர்ந்து கொண்டான். நான் பம்பாயில் பள்ளிகளுக்கான இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்ந்து என்னுடைய அண்ணன் வீட்டில் வசித்து வந்தபோது அவனை மீண்டும் சந்தித்தேன். எங்கள் வீட்டுக்கு வருகை தரத்துவங்கினான் அவன். அவனுடன் வெளியில் போனேன். நாங்கள் இருவரும் சேர்ந்து சினிமா பார்த்தோம். கடற்கரை மணலில் வெறுங்காலில் நடந்தோம். வேறு இலக்கிய நண்பர்களையும் ஒன்றாக சந்தித்தோம்.
ஒருமுறை ஷஹீத் என்னுடைய கதை ஒன்றை பம்பாய் டாக்கீஸ் நிறுவனத்துக்கு விற்பதற்காக எடுத்துச் சென்றான். யாரோ இதை என் சகோதரனிடம் சொல்ல அவன் மிகவும் கோபம் கொண்டான். மாதம் முன்னூறு ரூபாய் சம்பாதிக்கும் தன்னுடைய சகோதரி கண்டிப்பாக மாதம் 1500 சம்பளமாகப் பெறும் யாரையாவது திருமணம் செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும். வெறும் 225 ரூபாய் சம்பளமாகப் பெறும் ஒரு திரைக்கதை வசனகர்த்தாவுடன் நான் அலைவது என் சகோதரனுக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய சுதந்திரம் கட்டுப்படுத்தப் படுகிறது என்பதை நான் உணர்ந்தபோது சகோதரன் வீட்டை விட்டு வெளியேறினேன். மகளிர் தங்கும் விடுதி ஒன்றில் வாடகைக்கு சென்றேன். அதற்குப் பிறகு ஒருமுறை என் திருமணத்தை நிறுவத்துவற்காக எனக்கு உதவிய மாமா மகனைத் தூண்டிவிடத் துவங்கினான் என் சகோதரன். “நீயும் தனியாக இருக்கிறாய். உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளச்சொல்லி இஸ்மத்திடம் கேள். அவள் ஒருவேளை சம்மதித்தாலும் சம்மதிக்கலாம். ஒருநாள் என்னுடைய மாமா மகன் என்னை சந்திக்க வீட்டுக்கு வந்தான்.
என்னுடன் சௌபாத்தி வரை வருவாயா” என்று என்னைக் கேட்டான்.
கொஞ்சம் திடுக்கிட்டாலும் சமாளித்துக் கொண்டு, “தாராளமாக” என்றேன்.
சௌபாத்தி முழுக்க அலைந்து விட்டு, என்னை ஒரு நிமிஷம் நிற்குமாறு ஜாடை காட்டினான். “உனக்கு சம்மதம் என்றால் நீ என்னைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று பாய் என்னிடம் சொன்னார்” என்றான்.
எனக்காக நீ எவ்வளவு நல்லது செய்திருக்கிறாய்? உன்னைக் கல்யாணம் செய்து கொண்டு உன்னுடைய பகையை எதற்கு நான் சம்பாதிக்க வேண்டும்? உனக்கு எப்படிப்பட்ட மனைவி வரவேண்டும் என்று நான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன். அது நானல்ல. மிகவும் அழகான, தூய்மையான, எளிமையான, அப்பாவித்தனம் நிரம்பிய இளம்பெண் உனக்கு மனைவியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று சொன்னேன்.
நாங்கள் இருவரும் வீடு திரும்பினோம். ஷஹீத்துக்கு முதலில் தோழியாக மட்டுமே இருந்தேன். எங்கள் திருமணம் பெரும் குழப்பத்தில் நடந்தது. க்வாஜா அஹ்மத் அப்பாஸ் தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு வீட்டைப் பார்த்துக் கொடுத்தார். மோஹ்ஸின் ஒரு காஜியை அழைத்து வந்தார். திருமணம் முடிந்தது. நான் ஒரு தொல்லை பிடித்த பெண்மணி என்று திருமணத்துக்கு முன்பே ஷஹீத்திடம் சொல்லி இருந்தேன். என் வாழ்க்கையில் எல்லாத் தடைகளையும் விலங்குகளையும் முறித்து எறிந்தவள் என்றும் எதுவும் என்னைக் கட்டுப் படுத்த முடியாது என்றும் சொன்னேன். அப்பழுக்கற்ற, அடக்கமான பெண்ணின் பாத்திரம் எனக்கு ஏற்றது அல்ல என்றும் சொல்லியிருந்தேன். நான் சொன்னதை ஷஹீத் கேட்கவில்லை. நாங்கள் நண்பர்களாக இருந்தபோதே என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இதைக் கேட்டு எல்லோரும் உரக்கச் சிரித்தார்கள். அது அவனுடைய தீர்மானத்தை மேலும் உறுதியாக்கி இருக்கிறது.
எங்கள் திருமணத்துக்கு முன்பு, இறுதி முறையாக அவனை நான் எச்சரித்தேன். “இன்னும் நேரம் இருக்கிறது. நான் சொல்வதைக் கேள். நாம் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம். ஒரு தோழியாக உன்னிடம் இதைச் சொல்கிறேன்”. அவன் கேட்கவில்லை. என்னுடைய மனத்தின் அடியாழத்தில் மானசீகமாக நான் நினைத்தேன், “ஒரு தோழி உனக்குத் தந்த நல்ல ஆலோசனையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை” எங்களுக்குத் திருமணமான பிறகும் இதனை நான் அவனிடம் ஒருமுறை சொன்னேன்.
கட்டாயம் ஒன்றும் இல்லை. சரிவரவில்லை என்றால் என்னை விவாகரத்து செய்துவிடு” என்றான் ஷஹீத். தான் எப்போதாவது என்னை விவாகரத்து செய்தால், நான்தான் அவனை விட்டு ஓடிப்போய்விட்டேன் என்று எல்லோரும் சொல்வார்கள் என்று நினைத்தான் ஷஹீத். என்னுடைய மூத்த அண்ணன் திருமணத்துக்கு வரவில்லை. அவர் இறக்கும்வரை என்னுடைய முகத்தைப் பார்க்கவில்லை. என்னுடைய அம்மாவுக்கு விஷயம் தெரிந்தபோது எப்போதும் தொல்லை தந்து வரும் தன்னுடைய அருமை மகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுவரச் சொல்லி என்னுடைய இன்னொரு அண்ணனை பம்பாய்க்கு அனுப்பி வைத்தாள்
ஆறு அடி மூன்று அங்குலம் இருந்த என்னுடைய அண்ணன், ஷஹீத்தை ஆலிங்கம் செய்து தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தான். பிறகு என்னைத் தனியாக அழைத்தான். “என்ன செய்யப்போகிறாய் நீ? பாவம். அந்த மனிதன் நல்லவனாக இருக்கிறான். அப்பாவியாக இருக்கிறான். அவன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானா? உனக்கு ஏதாவது புத்தி கெட்டுவிட்டதா? என்று கேட்டான். “அவனிடம் சொல்லிப் பார்த்தேன். என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறான். நீ வேண்டுமானால் அவனிடம் சொல்லிப் பாரேன்” என்று சொன்னேன்.
ஷஹீத் என்னை மிகவும் சந்தோஷமாக வைத்திருந்தான். நிறைய புத்தகங்கள் வாங்கும் பழக்கம் அவனுக்கு இருந்தது. மிகவும் நல்ல தரமான இலக்கியப் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வருவான் எப்போது புதிதாக நாவல் ஏதாவது வந்திருந்தாலும் அதனை விலைக்கு வாங்குவான். வீட்டுக்கும் எடுத்து வருவான். இன்று வரை என்னிடம் இருக்கும் நூல்கள் எல்லாமே ஷஹீத் வாங்கியவைதான்.
தேவதையாக மாற்றி வழிபடும் அளவுக்கு ஒரு ஆண் பெண்ணை வழிபடுவதற்குத் தயார் ஆகிறான். அவளை நேசிக்கிறான்.
அவளுக்கு மரியாதை அளிக்கிறான். மதிக்கிறான். ஆனால் தனக்கு சமமானவள் என்று சொல்வதற்கு அவளிடம் காரணம் எதையும் சொல்ல முடிவதில்லை அவனால். எத்தனை அழகாக ஆண் இதனைப் புரிந்து கொள்கிறான்? படிப்பறிவு இல்லாத ஒரு பெண்ணிடம் ஆண் எப்படி நட்பாக இருக்க முடியும்? ஆனால், நட்புக்கு நேசம்தான் தேவைப்படுகிறது. படிப்பறிவு தேவையில்லை. அல்லது ஒருவேளை தேவைப்படுகிறதோ?
ஷஹீத் என்னை சரிசமாக நடத்தினான். அதனால்தான் நாங்கள் மிகவும் சந்தோஷமானதொரு திருமண வாழ்க்கையை வாழ்ந்து காட்டினோம்.
உருது மூலம்- இஸ்மத் சுக்தாய்
ஆங்கிலம் வழி தமிழில் – ராகவன் தம்பி
- காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
- முள்வெளி அத்தியாயம் -11
- தங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்
- தடயம்
- நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..
- காத்திருப்பு
- சந்தோஷ்சிவனின் “ உருமி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15
- தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
- நான் செத்தான்
- நச்சுச் சொல்
- மாறியது நெஞ்சம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)
- ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!
- எஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “
- பஞ்சதந்திரம் தொடர் 46
- காத்திருப்பு
- இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை
- சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு
- 2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28
- கேரளாவின் வன்முறை அரசியல்
- துருக்கி பயணம்-4
- அத்திப்பழம்
- கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?