நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..

This entry is part 5 of 28 in the series 3 ஜூன் 2012

அமைதிச்சாரல்

சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று பெரியோர்கள் ஆராய்ந்து அறியாமலா சொல்லியிருப்பார்கள்?.. நோய் மட்டுமல்ல கவலைகள் வருத்தங்கள் என்று எதுவாக இருந்தாலும் காற்றிலகப்பட்ட சருகாய்ப் பறந்து விடும். மகிழ்ச்சியான பொழுதுகளில் மட்டுமல்ல துன்பம் வரும்போதும் மனம் தளராமல், கலங்காமல் அதைப்பார்த்து நகைக்கும் லேசான மனம் இருந்தால் எத்தகைய சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மன உறுதி தானே வந்துவிடும். இதைத்தான் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொல்லியிருக்கிறார் நம் வள்ளுவர்.

 

அதெப்படி எல்லாப் பொழுதுகளிலும் சிரித்துக்கொண்டே இருக்க முடியும் என்பதாய்,

“துன்பம் வரும் வேளையில் சிரிங்க..

என்று சொல்லி வெச்சார் வள்ளுவரும்.. சரிங்க.

பாம்பு வந்து கடிக்கையில், பாழும் உடல் துடிக்கையில்

யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு.. இது

பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு” என்று கேட்ட கண்ணதாசனைப்போல் நாமும் கேள்வி கேட்கிறோம்.

 

ஒரு சின்ன தலைவலி வந்தாலே அமர்க்களப்படுத்தி வீட்டையே இரண்டாக்கி விடும் ஆட்களும் உண்டு. உயிர் போகும் வாதையிலும் அமைதியாக அதை எதிர்கொள்ளும் நபர்களும் உண்டு. ஆனால், தான் நோய் வாய்ப்பட்ட நிலையிலும் அதை ரசித்து நகைச்சுவையுடன் வெளிப்படுத்துபவர்கள் நம் நாஞ்சில் கவிஞர் கவிமணி தேசிக விநாயகரைப்போன்று ஒரு சிலரே இருக்க முடியும்.

 

கவிமணியாருக்கு ஒரு சமயம் ‘சிரங்கு’ நோய் வந்து மிகவும் அவதிப்பட்டார். உடல் முழுவதும் ஏற்பட்ட சிரங்குப்புண்களின் நமைச்சல் பாடாய்ப்படுத்திற்று. தாங்காமல் தன்னையறியாமல் சொரிந்து விடவே, ஆறத்தொடங்கியிருந்த புண்களிலிருந்து மறுபடியும் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. வலியும் வேதனையும் தாங்காமல் இரவுத்தூக்கத்தையும் பறி கொடுத்தார். இந்நிலையில் கவிமணி முருகப்பெருமானிடம் வேண்டுகிறார். இங்கே, மனிதர் வேண்டுவதைப்பாருங்கள்..

 

செந்தில்குமரா திருமால் மருகா என்
சிந்தை குடிகொண்ட தேசிகா – நொந்த இம்
மெய்யிற் சிரங்கை விடியுமட்டுஞ் சொரிய
கையிரண்டும் போதாது காண்.

‘இன்னும் நாலைந்து கைகளைக்கொடு’ என்று வேண்டுவதைப்போல் தொனிக்கிறது அல்லவா!.

 

தற்பொழுது தொலைக்காட்சிகளில் வரும் நிறைய விளம்பரங்களை ஊன்றிக் கவனித்தால், அதில் முகப்பருக்களை ஒழிக்கும், மற்றும் சிகப்பழகு க்ரீம்களுக்கானவை முன்னிலை வகிப்பதைக் காணலாம். இளம்பிராயத்தினரின் முகத்தில் ஒரு சிறிய பரு வந்தாலே, ‘ஐயோ.. உன் வாழ்க்கையே போச்சு, இனிமே இந்த உலகத்திற்கு உன் முகத்தை எப்படிக் காட்டுவே” என்று அலறி அவர்களின் தன்னம்பிக்கையை தங்களுடைய பொருட்களுக்கான விலையாக வாங்கும் சந்தையை அங்கே விரித்திருக்கிறார்கள். மாசுமருவற்ற அழகு என்பது வரவேற்கப்படக் கூடிய ஒன்றுதான். ஆனால், அது ஒன்றுதான் வாழ்க்கை என்பது போல் ஒரு மாயத்தோற்றத்தை இங்கே உருவாக்கி

வைத்திருக்கிறார்கள்.

 

இங்கே கவிமணியாருக்கோ தன்னுடைய உடம்பில் இருக்கும் சிரங்குகள் எப்படித் தோற்றமளிக்கின்றன என்று அவரே சொல்லுகிறார் பாருங்கள்.

 

முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம் 
பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் – சித்தன்
சிரங்கப்பராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம். 

 

முத்து,பவளம், வைரம்,மாணிக்கம் என்று சிரங்குகளை வர்ணித்தது போதாதென்று அவற்றையெல்லாம் தந்த வள்ளலுக்கு “சிரங்கப்பராயர்” என்று மேடை போடாமல், பொற்கிழி கொடுக்காமல், மாலை மரியாதை எதுவும் செய்யாமல், விழா நடத்தி பட்டமே சூட்டி விட்டார். இப்படியொரு பெரிய மனம் இவரைப்போன்ற பெரியவர்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. நாமாக இருந்தால் என்னவெல்லாம் சொல்லி அரற்றுவோம் என்பது நம் மனசாட்சிக்கு மட்டுமே வெளிச்சம்.

 

ஆரியக்கூத்தாடியானாலும் காரியத்தில் கண்ணாயிரு என்பது போல், தன்னுடைய வேதனையை ஒரு பக்கம் நகைச்சுவையால் மறக்க நினைத்திட்டாலும், தன் நோய்க்கான வைத்தியத்தையும் ஒரு பக்கம் செய்து கொண்டு வந்தார். தைல சிகிச்சை, மருந்துகள் என்று எல்லா வகையிலும் முயன்றார். ஆனாலும், பயனில்லாமல் போகவே முருகனிடம் முறையிடுகிறார்.

 

வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்
சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் – வீரம்
குறைந்திடக் காணேன் குமரா சிரங்கு
மறைந்திடத் தா நீ வரம்.

 

ஞானப்பழத்துக்கான பஞ்சாயத்தில் மும்முரமாக இருந்து விட்ட காரணத்தாலோ, அல்லது இவருடைய தீந்தமிழை இன்னும் சுவைக்க எண்ணியோ, முருகப்பெருமான் இவருடைய வேண்டுதலுக்குச் செவி சாய்க்க காலம் தாழ்த்துகிறார். கவிமணியாரோ நாளொரு வேதனையும் பொழுதொரு வலியுமாகத் தவிக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார். திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று சொல்வார்கள், ஆனால், முருகன் இப்படிக் கை விட்டு விட்டானே என்று வருந்துகிறார். இறுதியில்,

 

உண்ட மருந்தாலும் உடல் முழுவதும் பூசிக்
கொண்ட மருந்தாலும் குணமிலையே – மண்டு 
சிரங்கப்பராயா சினம் மாறிக் கொஞ்சம்
இரங்கப்பா ஏழை எனக்கு.

 

என்று சண்டைக்காரனிடமே சரணடைந்து விடுகிறார். சாட்சிக்காரன் காலில் விழுவது போதாதென்று காரியமும் கை கூடாமல் தவிப்பதை விட இது மேலானதல்லவா. மட்டுமல்லாமல்

சண்டைக்காரனையும் சும்மா விட்டு விடவில்லை.

 

“சிரங்கப்பராயர்” என்று எத்தனை பெரிய பட்டமெல்லாம் கொடுத்து தாஜா செய்திருந்தார். அந்தப் பட்டத்தையெல்லாம் ஒரு பக்கம் வாங்கி வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் தன்னை வாட்டியும் வதைத்த நோய்க்கு ‘மண்டு’ என்று ஒரு குட்டும் வைத்து விட்டுத்தான் விட்டார்.

 

பாயில் படுத்தாலும் நோயின் வேதனையை நகைச்சுவையால் வென்ற கவிமணியாருக்கு, நல்ல உடல் நலம் இருக்கும் நிலையில் மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லாமல் போய் விடுமா என்ன!!

 

ஒரு சமயம் ம.பொ.சியார் அவர்கள் கவிமணியாரைச் சந்திக்க வந்தார். சந்திப்பு முடிந்து விடைபெறும் போது, ‘என்னை மறந்து விடாதீர்கள்’ என்று ம.பொ.சி வேண்டுகோள் விடுக்க, “உங்களை மறக்க முடியுமா?.. எல்லோருக்கும் முகத்தில் மீசை இருக்கிறது என்றால், உங்களுக்கு மீசையில் அல்லவா முகம் இருக்கிறது” என்று புன்சிரிப்புடன் பதில் கூறினார். இந்த இனிய சம்பவத்துக்குப்பின் ம.பொ.சியாரும் கவிமணியாரை மறக்க வாய்ப்பிருந்திருக்காது.

 

இன்னொரு முறை, நாதஸ்வர வித்வான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் கவிமணியாரைச் சந்திக்கச்சென்றார். வந்தவருக்கு குளிர்பானம் தருவித்து உபசாரம் செய்த கவிமணியார், அதைக் குடிப்பதற்காக வைத்திருந்த ஸ்ட்ராவைக்காட்டி, “எப்போதும் நாதஸ்வரத்தை ஊதுவீர்கள் அல்லவா?. இன்று ஒரு மாறுதலுக்காக இதை ஊதுங்கள்” என்று கூறி கூடியிருந்தவர்களைச் சிரிக்க வைத்தார்.

 

கடுகத்தனை துன்பத்தையும் மலையளவு பெருக்கிப்பார்த்து மன அமைதி இழந்து வாடும் தற்கால வாழ்க்கை முறையையும் மக்களையும் எண்ணுகையில், எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய நகைச்சுவை உணர்வை இழக்காமல், அதனை எதிர் கொண்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது அல்லவா?..

Series Navigationதடயம்காத்திருப்பு
author

அமைதிச்சாரல்

Similar Posts

4 Comments

  1. Avatar
    ராமலக்ஷ்மி says:

    ஆம், /கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்/.

    மிக அருமையாகப் பதிந்திருக்கிறீர்கள் அவரது நகைச்சுவை உணர்வை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *